காதலும் காமமும்: நீண்ட கால உறவை இளைய தலைமுறையினர் விரும்பாதது ஏன்?

திருமண வாழ்க்கை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கேசி நோனிக்ஸ்
    • பதவி, பிபிசி ஃபியூச்சர்

உறவுகளில் தன் துணையுடன் மிக மிக உறுதியாக இருப்பதற்கும் சாதாரணமாக இருப்பதற்கும் இடையே உள்ள நடுப்பகுதியை மக்கள் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள். ஆனால் இளவயதினர் அதைத் தேர்வு செய்கிறார்கள்.

ஒரு ஜோடி தங்கள் உறவை இன்னும் உறுதியாக்க ஒன்றாக இணைந்து திரைப்படத்தைப் பார்ப்பது, உணவைப் பகிர்வது ஆகியவை மட்டுமே தேவைப்பட்ட நாட்கள் சென்றுவிட்டன. அதற்கு மாறாக, தற்போது டேட்டிங் செய்யும் நிகழ்கால இளம் வயதினருக்கான நுட்பமான - சில நேரங்களில் சிக்கலான- படிநிலைகள் தற்போது உருவாகியுள்ளன.

டேட்டிங் மற்றும் பாலுறவு தொடர்பாக 'ஜெனரேஷன் 'ஸீ' (Gen Z) இன் மனப்பான்மை அவர்களுக்கு முந்தைய தலைமுறையிலிருந்து உருவானது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. 1990-களின் பிற்பகுதிக்கும் புதிய நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடையே பிறந்தவர்கள் ஜென் ஸீ என்கிறார்கள். அவர்கள் காதல் மற்றும் பாலுறவுக்கான வழியைத் தேடுகிறார்கள். ஆனால், முந்தைய தலைமுறை செய்தது போல, உறுதியான காதல் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள அவர்கள் முன்னுரிமை கொடுப்பதில்லை.

இருப்பினும் அவர்கள் காதல் மற்றும் நெருக்கத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பது இதற்கு அர்த்தமல்ல. மாறாக, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பாகப் பொருந்தக்கூடிய விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்ற புதிய வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மாற்றம் 'சிச்சுவேஷன்ஷிப்' (Situationship) என்ற கருத்தை உருவாக்கியுள்ளது . இது நட்புக்கும் உறவுக்கும் இடையிலான பகுதியை விவரிக்கிறது.

சிச்சுவேஷன்ஷிப் என்பது என்ன?

டேட்டிங்கின் வரையறுக்க முடியாத கட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள 'சிச்சுவேஷன்ஷிப்' என்ற பெயர், ஜெனரேஷன் ஸீ தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

"இப்போது, இது செக்ஸ், நெருக்கம், தோழமை - அது எதுவாக இருந்தாலும் - சில வகையான தேவைகளை தீர்க்கிறது. இது நீண்ட காலம் நீடித்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை" என்கிறார் அமெரிக்காவின் மிஷிகன் பல்கலைக்கழகத்தின், பாலியல் மற்றும் சிச்சுவேஷன்ஷிப் குறித்த ஆராய்ச்சி செய்துள்ள சமூகவியல் பேராசிரியரான எலிசபெத் ஆம்ஸ்ட்ராங்.

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெறத் தொடங்கிய பிறகு, இந்த ஆண்டு கூகுள் தேடலில் இந்த வார்த்தை எப்போதும் இல்லாத உயர் அளவிற்கு தேடப்பட்டதாக ஆம்ஸ்ட்ராங் கூறுகிறார். இனங்கள், பாலினம் என்ற எல்லாவற்றையும் கடந்து இந்த வார்த்தை மீது உலகளாவிய ஆர்வம் உள்ளது என்று ஆம்ஸ்ட்ராங் கூறுகிறார்.

கோப்புப்டம

பட மூலாதாரம், Getty Images

இந்த வார்த்தையின் உருவாக்கம் மற்றும் அதன் தொடர்ச்சியான எழுச்சியானது, இளம் டேட்டர்கள் மத்தியில், ஜெனரேஷன் ஸீ தங்கள் முந்தைய தலைமுறைகளை விட எத்தனை வித்தியாசமாக உள்ளனர் என்பதை சுட்டிகாட்டுகிறது. காதல் மற்றும் செக்ஸ் என்றால் என்ன என்பதை எப்படி அவர்கள் மறுவடிவமைக்கிறார்கள் என்பதைப் பற்றியும் இது நிறையவே வெளிப்படுத்துகிறது.

இந்த உறவு 'எங்காவது போக' வேண்டிய அவசியமில்லை

சிச்சுவேஷன்ஷிப் என்பது பொதுவாக இரண்டு நபர்களுக்கிடையேயான ஒரு முறைசாரா ஏற்பாட்டாகும். இது உணர்ச்சிபூர்வமான மற்றும் உடல் ரீதியான தொடர்பின் கூறுகளைக் கொண்டுள்ளது. ஆனால் ஒரு பிரத்யேக, உறுதியான உறவிற்குள் இருப்பது என்ற வழக்கமான கருத்துக்கு வெளியே இது செயல்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில், சிச்சுவேஷன்ஷிப் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமான ஒரு சாதாரண ஏற்பாடாக உள்ளது. உதாரணமாக, உறுதியான காதல் உறவுக்கு முன்னேற விரும்பாத இரண்டு இறுதியாண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இது பொருந்தலாம். ஏனென்றால் பட்டம் பெற்ற பிறகு புதிய வேலைகள் அவர்களை புதிய நகரங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.

"சிச்சுவேஷன்ஷிப் என்பது, பிரபலமாக உள்ளது. ஏனெனில் அவை 'உறவைத் தூண்டும் பண்புகளுக்கு' சவால் விடுகின்றன," என்கிறார் ஆம்ஸ்ட்ராங். நெருக்கமான உறவு என்பது இணை வாழ்வு, நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் போன்ற வழக்கமான உறவின் மைல்கற்களை தாண்டும் குறிக்கோள்களுடன் நேரடிப் பயணமாக இருக்க வேண்டும்.

"சிச்சுவேஷன்ஷிப் என்ற கருத்து உறுதியான உறவாக மாறவாய்ப்பில்லாத ஒருவருடன் இருப்பது 'நேரத்தை வீணடிப்பதாகும்' என்ற சிந்தனைக்கு எதிரானது" என்று அவர் கூறுகிறார். இதை ஜெனரேஷன் ஸீ பெருமளவு விரும்புகிறார்கள். மாறாக இந்த ஏற்பாடுகளில் உள்ளவர்கள் வரையறுக்கப்படாத உறவின் இந்த தெளிவற்ற நிலையை சொந்த விருப்பத்துடன் தேர்வு செய்கிறார்கள். சிச்சுவேஷன்ஷிப் தற்போதைய சூழலுக்கு ஏற்றதாக உள்ளது. உறவு எங்கு செல்கிறது என்ற கவலை இதில் இல்லை.

சில ஆய்வுகள் இதை ஒப்புக்கொள்கின்றன. 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் 150 இளங்கலை மாணவர்களுடன் தான் நடத்திய நேர்காணல்களில், ஜெனரேஷன் ஸீ உறவை வரையறுக்க மிகவும் தயங்குகின்றனர் அல்லது உறவு முன்னேறும் விருப்பத்தை ஒப்புக்கொள்ளவும் விரும்புவதில்லை என்கிறார் அமெரிக்காவின் துலேன் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் இணைப் பேராசிரியர் லிசா வேட்.

"தங்கள் எண்ணங்களையும், விருப்பங்களையும் ரகசியமாக வைத்திருப்பது என்பது மக்களுக்கு புதிதல்ல. ஆனால் இன்றைய தலைமுறை ஒருவருக்கொருவர் தங்கள் உணர்வுகளைக்கூட பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்று தனது ஆராய்ச்சி காட்டுகிறது," என்று அவர் கூறுகிறார்.

கோப்புப்டம

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில், TikTokers மற்றும் Tweeters, குறிப்பாக Gen Zers, சிச்சுவேஷன்ஷிப் பற்றிய கதைகளை பரவலாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். TikTok இல், #situationship எனக் குறிக்கப்பட்ட வீடியோக்கள் 83 கோடியே 90 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளன. மேலும் #situationship மற்றும் #situationships ஆகியவற்றின் கீழ் உள்ள வீடியோக்களும் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன.

பாப் கலாச்சாரத்திலும் இதன் குறிப்புகள் ஏராளமாக உள்ளன. லவ் ஐலேண்ட் யுகே போன்ற பிரபலமான டேட்டிங் நிகழ்ச்சிகளிலும், மில்லினியல் ஸ்வீடிஷ் பாடகர் ஸ்னோ அலெக்ராவின் சிச்சுவேஷன்ஷிப் போன்ற பாடல்களிலும் இந்த வார்த்தை காணப்படுகிறது.

தானும் தன் நண்பர்களும் சிச்சுவேஷன்ஷிப் பற்றிய குறிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போதெல்லாம், "நானும் என் நண்பர்களும், நாங்கள் அனைவரும் ஒரே போன்ற வாழ்க்கையை வாழ்கிறோம்," என்று தோன்றுகிறது என்கிறார் 26 வயதான அமண்டா ஹூமன். டெக்சாஸை தளமாகக் கொண்ட ஹூமன், TikTok இல் சிச்சுவேஷன்ஷிப் அனுபவத்தை ஆவணப்படுத்தியுள்ளார்.

தன் சொந்த தொடர்புகள் மற்றும் தன் வட்டத்தை பார்க்கும்போது இந்த ஏற்பாடு பொதுவாக இருப்பதாக அவர் கூறுகிறார். "இது டேட்டிங் கலாச்சாரத்தின் மிகவும் பிரபலமான பகுதியாக மாறியுள்ளது என்று நான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் ஜெனரேஷன் இசட் மற்றும் இளம் மில்லினியலில் இதை பார்க்கமுடிகிறது."

ஹூமன் ஒரு வருடத்திற்கும் மேலாக சிச்சுவேஷன்ஷிப்பில் இருந்ததாக தெரிவிக்கிறார். அவர் தனது அனுபவத்தைப் பற்றி டிக்டாக்கில் எழுதியபோது, அது 80 லட்சம் பார்வைகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கருத்துகளைப் பெற்றது பலவற்றில் மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தை விவரித்தனர்.

ஹூமன் சுகாதார ஆலோசகராக வீட்டில் இருந்தபடி பணிபுரிகிறார்.அடிக்கடி பயணம் செய்கிறார் மற்றும் புதிய நகரங்களில் சில மாதங்கள் தங்குகிறார். சிச்சுவேஷன்ஷிப்பில் இருப்பது தனக்கு அதிக சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் அளிக்கிறது என்கிறார் அவர். "இன்று நமது டேட்டிங் கலாச்சாரம் மிகவும் குழப்பமானதாகவும் சிக்கலானதாகவும் உள்ளது" என்று ஹுமன் கருதுகிறார். "[ஜெனரேஷன் ஸீ] பிஸியான வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர். அதற்குப் பொருத்தமாக டேட்டிங்கை நாங்கள் மாற்றிக் கொண்டுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்."

சிச்சுவேஷன்ஷிப் ஏன் அதிகரிக்கிறது?

திருமண வாழ்க்கை

பட மூலாதாரம், Getty Images

'ஜெனரேஷன் ஸீ' டேட்டிங் உலகில் நுழையும் போது, அன்பைக் கண்டுபிடிப்பதில் நவீன சவால்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கொரோனா காலம் மக்கள் இணையரைச் சந்தித்து டேட் செய்யும் முறையை முற்றிலும் மாற்றியுள்ளது. மேலும் ஆன்லைன் டேட்டிங் நோக்கிய பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதலாக பல இளைஞர்கள் கடந்த காலத்தில் இருந்ததைப் போல டேட்டிங் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்வது, அதிகரித்து வரும் பணவீக்கம் , அரசியல் மற்றும் சமூக எழுச்சி,ஒரு நிலையற்ற பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையே இளைஞர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியிலான வளர்ச்சி, நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றை அடைவதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர்.

"உறவுகள் தங்களுடைய கல்வி மற்றும் தொழில் இலக்குகளிலிருந்து தங்களை திசைதிருப்புவதாக இளைஞர்கள் கூறுகின்றனர். மேலும் அதிக ஈடுபாடு இல்லாமல் இருப்பதே சிறந்தது. ஏனென்றால் நீங்கள் வாழ்க்கையில் உங்கள் சொந்தப் பாதையை வேறொருவருக்காக தியாகம் செய்யவேண்டி இருக்காது" என்று வேட் கூறுகிறார்.

இதன் விளைவாக சிச்சுவேஷன்ஷிப் என்பது இவர்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. தங்கள் காதல் மற்றும் பாலியல் தேடல்களுக்காக, மற்ற இலக்குகளை கைவிடாமல் இருக்க இது அனுமதிக்கிறது. இந்த நிகழ்வு "மக்களின் விருப்பத்தேர்வுகளை விரிவுபடுத்துகிறது," என்று ஆம்ஸ்ட்ராங் கூறுகிறார். அதைத் தவிர்ப்பதற்கு பதிலாக பெரும்பாலானோர் இதைத்தேர்வு செய்கின்றனர்.

கோப்புப்டம

பட மூலாதாரம், Getty Images

சிச்சுவேஷன்ஷிப்பில் என்ன ஆபத்து இருக்கிறது?

தெளிவற்றது என்று கூறப்படும் இந்த ஏற்பாட்டில் ஆபத்து இல்லை என்று சொல்லமுடியாது. கோட்பாட்டளவில் "தீவிர நேர்மைக்கான" கொள்கலனாக சிச்சுவேஷன்ஷிப் செயல்பட முடியும் என்று வேட் கூறுகிறார். இரண்டு பேர் உண்மையில் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி வெளிப்படையாகப்பேசி, சிச்சுவேஷன்ஷிப் விதிமுறைகளை ஒப்புக்கொண்டால் இது சாத்தியம். ஆனால் நடைமுறையில் இரண்டு நபர்களின் முன்னுரிமைகளை ஒன்றிணைப்பது கடினமாக இருக்கலாம்.

என்ன வேண்டும் என்பதில் இரு தரப்பிற்கும் கருத்தொற்றுமை இல்லையென்றால், சிச்சுவேஷன்ஷிப் மோசமாக முடியலாம். ஒரு நபர் உறுதியான உறவுக்கு முன்னேறத் தயாராக இருக்கும்நிலையில், ஆனால் மாற்றம் குறித்த பயம் இருவரையும் இதைப் பற்றி விவாதிக்காமல் இருக்கச்செய்யும் சூழலில் பொதுவாக இது நிகழக்கூடும் என்கிறார் அவர்.

இன்றைய டேட்டிங் உலகில் சிச்சுவேஷன்ஷிப் மீதான அதிகரித்து வரும் ஆர்வமானது, இளைஞர்கள் காதலையும் பாலுறவையும் முன்னோக்கி கொண்டுசெல்லும் விதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது. முந்தைய தலைமுறையின் பல டேட்டர்கள் தவிர்த்த பாதையை இன்றைய இளம்தலைமுறை தனதாக்கிக்கொண்டுள்ளது.

இந்த வாழ்க்கைமுறையில் தான் திருப்தியாக இருப்பதாக ஹூமன் கூறுகிறார்."இது என் தேர்வு. இது நான் எடுக்கும் முடிவு. இது எனக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,"என்று அவர் கூறுகிறார். "மக்கள் வசதியாக இருக்கும் வரை மற்றும் அது சரி என்று அவர்கள் கருதும்வரை, எதிர்பார்ப்புகள் என்ன என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை."என்று அவர் மேலும் கூறினார்.

1px transparent line

கீழ்க்கண்ட கட்டுரைகளும் உங்களுக்குப் பிடிக்கும்

தூக்கமின்மை நோயா? உறக்கத்துக்கும் பணத்துக்கும் தொடர்பு உண்டா?

நீங்கள் எவ்வளவு நன்றாக உறங்குகிறீர்கள் என்பதை பொருத்தே, மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய எவ்வளவு தயாராக இருக்கிறீர்கள் என்பது தெரியும் என்று யுசி பெர்கலியின் புதிய ஆய்வு கூறுகிறது.

இதயத்தை பாதிக்கும் இரவுப்பணிகள் - எப்படி சமாளிப்பது?

இரவுப்பணி நம்மை சோம்பலாகவும் விரக்தியாகவும் மாற்றக்கூடியது என்பது நமக்கு தெரியும். ஆனால், இது இதயத்துக்கும் கேடு விளைவிக்கும் என்பது பற்றித் தெரியுமா?

மனிதர்கள் இறப்பது ஏன்?

சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி.

தனிமை என்பது மன வியாதியா? என்ன காரணம்? தீர்வு என்ன?

சுற்றி நிறைய பேர் இருந்தாலும், பேசுவதற்கு நண்பர்கள் இருந்தாலும் தனிமையில் இருப்பது போல சிலருக்குத் தோன்றும். இப்படி ஏற்படுவது ஏன்? இது மனோ வியாதியா? இதற்குத் தீர்வு என்ன?

தூக்கத்திலேயே மாரடைப்பு எப்படி ஏற்படும்?

தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்? எவ்வித முன் அறிகுறிகளும் இன்றி தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படுமா, அதைத் தடுப்பது எப்படி?

மனிதர்கள் ஏன் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்?

மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

முத்தமிடுவது பற்றி, ஒருவர் மூன்று விஷயங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். அவை என்னென்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ள

உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்?

ஜப்பானில் நூறு வயதைக் கடந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அங்கு வயதானவர்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலகில் எல்லோராலும் நூறு ஆண்டுகள் வாழ முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும். இந்தக் கட்டுரையைப் படியுங்கள்

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: