தனிமை என்பது மன வியாதியா? என்ன காரணம்? தீர்வு என்ன?

தனிமை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம். மணிகண்டன்
    • பதவி, பிபிசி தமிழ்

சுற்றி நிறைய பேர் இருந்தாலும், பேசுவதற்கு நண்பர்கள் இருந்தாலும் தனிமையில் இருப்பது போல சிலருக்குத் தோன்றும். இப்படி ஏற்படுவது ஏன்? இது மனோ வியாதியா? இதற்குத் தீர்வு என்ன?

சென்னையில் வசிக்கும் பள்ளி மாணவர் குமார். அவரது குடும்பத்தில் அவர் ஒரே குழந்தை. 9ஆம் வகுப்பு வரை முதல்நிலை மாணவராக இருந்த அவரது படிப்பு அதன் பிறகு மோசமடைந்தது.

தனிமையில் இருப்பது போன்ற உணர்வு அவருக்கு எப்போதும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது அவருக்கு கல்லூரி செல்லும் வயது. இன்னும் அவருக்குத் தனிமை உணர்வு மாறவில்லை.

குமாரைப் போன்று தனிமை உணர்வு எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்கிறார் மனநல ஆலோசகர் வந்தனா.

அண்மையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனிமை குறித்துப் பேசியிருந்தார். அறை முழுவதும் ஆட்கள் இருக்கும்போதுகூட தனியாக இருப்பது போன்று தோன்றியது என்று தனக்கு ஏற்பட்ட உளவியல் சிக்கல் குறித்து அவர் வெளிப்படையாக விவாதித்திருந்தார்.

நீண்ட காலமாக உலகின் முதல்நிலையில் இருந்த அவரால் சமீப காலமாக பெரிய அளவில் ரன்களைக் குவிக்க முடியவில்லை. கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலக வேண்டியிருந்தது. இந்தச் சறுக்கல்கள் அவருக்கு தனிமை உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம் என்கிறார் வந்தனா.

விராட் கோலி மாத்திரமல்ல ஏராளமான பிரபலங்கள் இப்போது தங்களுடைய மனநலம் குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருந்தபோது அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் தனது மன அழுத்தம் குறித்துப் பேசியிருந்தது கவனம் பெற்றது.

தனிமை என்பது என்ன?

தனிமை என்பதும் மனதுடன் தொடர்புடைய, தனித்து இருப்பதாகத் தோன்றும் உணர்வு என்கிறார் வந்தனா. இது மனதின் ஒரு நிலை என்கிறார் அவர். நாம் இந்த உலகத்துக்கும் சுற்றி இருப்போருக்கும் குடும்பத்துக்கும் தேவையற்றவராகி விட்டோமோ என்ற உணர்வே தனிமை என்று வந்தனா விளக்குகிறார்.

உண்மையில் தனிமையில் இருப்போர் உறவுகளைத் தேடுகிறார்கள். ஆனால் அவர்களால் மன ரீதியாகத் தொடர்பு கொள்ள முடிவதில்லை. சமூக ரீதியாகத் தனிமைப்படுத்தப்படுவது, உள்முக உணர்வு, மன அழுத்தம், பிறருடன் தொடர்பு கொள்ளும் ஆளுமை குறைவாக இருப்பது ஆகியவற்றுடன் தனிமை உணர்வு தொடர்பு கொண்டிருக்கிறது.

கோலி

பட மூலாதாரம், Getty Images

தனிமையில் இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று தனிமைப்படுத்தப்படுவதாக உணர்வது. இதை Loneliness என்று கூறுகிறார்கள். வேறு சிலர் தாமாகவே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு அதில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் பழைய நிலைமைக்குத் திரும்பும்போது அவர்கள் எல்லோருடனும் சஜகமாகப் பழகத் தொடங்கிவிடுவார்கள்.

தனிமை உணர்வு தோன்றுவதற்கு என்ன காரணம்?

தனிமை உணர்வு தோன்றுவதற்கு பலவகையான காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் வெளிப்படையான எந்தக் காரணமும் தெரியாமலும் தனிமையாக இருப்பது போன்ற மனநிலைக்கு சிலர் செல்லக்கூடும் என மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உதாரணத்துக்கு குமாரின் வீடு முதலில் சென்னையின் செல்வந்தர்கள் வாழும் பகுதியில் இருந்திருக்கிறது. பின்னர் வேறொரு பகுதிக்கு அவர்கள் வீட்டை மாற்றிச் சென்றிருக்கிறார்கள். அதன் பிறகு மற்றவர்களுடன் நெருங்கிப் பழக முடியாமல் அவர் தவித்திருக்கிறார்.

தனிமை என்பது ஒருவர் தனியாக இருந்தால் மட்டுமே வரக்கூடிய உணர்வு அன்று; பெருங்கூட்டத்தில் இருக்கும்போது, நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும்கூட உங்களுக்கு தனிமை உணர்வு வரலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தனிமை

பட மூலாதாரம், Getty Images

புதிய பள்ளியில் சேரும் ஒரு மாணவருக்கும், புதிய அலுவலகத்தில் பணிக்குச் சேரும் ஊழியருக்கும் ஏராளமானோர் சூழ்ந்திருக்கும்போதுகூட தனிமை உணர்வு வரக்கூடும். வெளிநாடுகளுக்குச் செல்வோர், மொழி புரியாத இடத்துக்குச் செல்லும்போது இந்த நிலை ஏற்படும்.

நெருங்கிய உறவுகளின் இறப்பு, விவாகரத்து, கொடிய நோய் ஏற்படுவது போன்றவற்றால் சமூகத்தில் இருந்து தனித்துவிடப்பட்டதாக கருதும்போது தனிமை உணர்வு ஆட்கொண்டு விடுகிறது. தனியாக வாழ்வதும், தனியாக வேலை செய்வதும்கூட தனிமை உணர்வு ஏற்படுவதற்கான அடிப்படையான காரணங்கள்.

தனிமை

பட மூலாதாரம், Getty Images

தன்னம்பிக்கை, ஆளுமை குறைவாக இருப்பவர்களுக்கும் இந்த உணர்வு ஏற்படுகிறது. அதுவே நிரந்தரமாக மாறிவிடுகிறது.

சிலருக்கு திருவிழாக்கள், பண்டிகைகள், சுபநிகழ்வுகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றின்போது தனிமை உணர்வு ஏற்படுகிறது. இதை சோஷியல்ஃபோபியா அல்லது சமூகப் பதற்றம் என்கிறார்கள். தனிமை என்பது மனச் சோர்வுடன் மிக நெருக்கமான தொடர்புடையது என்கிறார் வந்தனா.

வேலை இழப்பு, பண நெருக்கடி ஆகியவற்றால் கூட சிலருக்கு தனிமை உணர்வு தோன்றலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

தனிமை உணர்வின் அறிகுறிகள் என்னென்ன?

எப்போதும் உடல் சோர்வாக இருக்கும், சிலருக்கு வழக்கத்துக்கு மாறாக தூக்கம் வரும், வேறு சிலருக்கு தூக்கமே வராது, எந்தப் பொது விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டாம் என்று தோன்றுவது, நம்மை யாரும் மதிக்கவில்லை என்ற எண்ணம் போன்றவை தனிமை உணர்வு நமக்கு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் என்று வரையறுக்கப்படுகிறது.

வந்தனா

பட மூலாதாரம், VANDANA

படக்குறிப்பு, மனநல ஆலோசகர் வந்தனா

வழக்கத்துக்கு மாறாகச் செலவு செய்வது, பசி இல்லாதது அல்லது அதிகமாகப் பசியெடுப்பது, எப்போதும் நம்மை யாரோ விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார்கள் என்பது போன்ற உணர்வு போன்றவையும் தனிமை உணர்வு நமக்கு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

தனிமை உணர்வால் ஏற்படும் உடல், மன பாதிப்புகள் என்னென்ன?

தனிமை உணர்வால் பல்வேறு வகையான உடல்நல மற்றும் மனநலப் பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறுகிறார் வந்தனா.

தனிமையால் மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்புகள், உடல் பருமன், பதற்றம், அல்சைமர் போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகள் தனிமையால் ஏற்படுகின்றன என்று அமெரிக்க சுகாதாரத்துறை குறிப்பிடுகிறது.

தனிமை

பட மூலாதாரம், Getty Images

பிற நோய்களுக்கு தனிமை உணர்வு உரம் போடுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உதாரணத்துக்கு தனிமை உணர்வால் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலின் உள்ளேயும் வெளியேயும் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நாளாகிறது. இது நீடித்த நோய்களுக்கு காரணமாக அமைகிறது என்று அமெரிக்க சுகாதாரத்துறை கூறுகிறது.

தனிமை உணர்வைப் போக்குவதற்கான தீர்வு என்ன?

பிறருடன் பழகுவதுதான் தனிமை உணர்வைப் போக்குவதற்கான அடிப்படையான தீர்வு என்கிறார் வந்தனா. தங்களைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அவரவருடையை மன நிலையை ஒப்புக் கொள்ள வேண்டும். எனினும் நீண்ட நாள்களாக தனிமை உணர்வு நீடித்திருக்கிறது என்றால் உரிய வகையில் மருத்துவ மன நல ஆலோசகர் அல்லது மன நல மருத்துவரை நாட வேண்டும்.

1px transparent line

கீழ்க்கண்ட கட்டுரைகளும் உங்களுக்குப் பிடிக்கும்

கொசு நம்மில் சிலரை மட்டுமே கடிக்கும் - ஏன் தெரியுமா?

கொசுக்கள் எல்லோரையும் ஒன்றுபோலவே கடிப்பதில்லை. சிலரை அதிகமாக கடிக்கும் கொசுக்கள், வேறு சிலரை கடிப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன?

கன்னித்திரை பற்றிய உண்மையும் கட்டுக்கதைகளும்

பெண்களைத் தொடர்புபடுத்தி நீண்ட காலமாகப் பேசப்படும் கன்னித்திரை பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக் கதைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்தக் கட்டுரை உதவும்

மனிதர்கள் இறப்பது ஏன்?

சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி.

மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?

இது மாதிரி எகிப்தின் மக்கள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே வலிமையான பிரமிடை அமைத்துப் பதப்படுத்தப்பட்ட இறந்த உடலைப் பாதுகாத்து வைத்துள்ளனர். இது மட்டுமல்ல நம் ஊர் தாழிகளிலும் பிரமிடுகளிலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துவைத்துள்ளனர். பண்டையகால மக்கள் ஏன் இப்படி இறந்தவர்கள் உடலைப் பாதுகாக்க வேண்டும்? உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இதற்கான காரணம் சுவாரஸ்யமானது. அவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். இதுபற்றிய சுவாரஸ்யமான கட்டுரை.

அதிசயக் கிணறு; தோண்டத் தோண்ட மர்மம்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை காலங்களில் நொடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. அந்த கிணற்றுக்குள் பல நாட்களாக தண்ணீர் சென்றபோதும் அது நிரம்பவில்லை. இதையடுத்து அந்த இடத்தை 'அதிசய கிணறு' என உள்ளூர்வாசிகள் அழைத்தனர். அந்த கிணறு குறித்து ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர். இந்தக் கிணறு பற்றித் தெரிந்து கொள்ள

மனிதர்கள் ஏன் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்?

மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

முத்தமிடுவது பற்றி, ஒருவர் மூன்று விஷயங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். அவை என்னென்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ள

உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்?

ஜப்பானில் நூறு வயதைக் கடந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அங்கு வயதானவர்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலகில் எல்லோராலும் நூறு ஆண்டுகள் வாழ முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும். இந்தக் கட்டுரையைப் படியுங்கள்

1px transparent line
காணொளிக் குறிப்பு, தேனீக்களின் எண்ணிக்கை குறைவால் சூரியகாந்திக்கு கைமுறை மகரந்த சேர்க்கை: விவசாயிகள் மகிழ்ச்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :