தூய்மை பணியாளர்களின் மாதாந்திர சம்பளத்தில் முறைகேடு? என்ன நடக்கிறது?

துப்புரவு பணியாளர்
    • எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
    • பதவி, பிபிசி தமிழ்

"மாதந்தோறும் கொடுக்கப்பட வேண்டிய சம்பளத் தொகை ரூபாய் 12,720-க்குப் பதிலாக, 8000 ரூபாய் தான் தர முடியும். விருப்பமுள்ளவர்கள் வேலை செய்யுங்கள், இல்லையெனில் வேலையை விட்டு போய் விடுங்கள்" என்று ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகம் அச்சுறுத்துவதாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

"பொதுமக்களுக்கு நோய் அண்டாமல் இருப்பதற்கு சுற்றுப்புறத்தை தினதோறும் நாங்கள் அல்லும் பகலமாக அயராது உழைத்து தூய்மைப்படுத்துகிறோம். ஆனால் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதாளத்தில் சென்றுகொண்டிருப்பதுதான் எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது" என பிபிசி தமிழிடம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தூய்மை பணியாளர் சுப்பிரமணி தெரிவித்தார்.

"ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பள தொகை ரூ.12,720 ஆனால் பேரூராட்சி நிர்வாகம் இடைத்தரகர் மூலம் கொடுக்கும் சம்பளத்தொகை வெறும் 8000 ரூபாய் மட்டுமே. இதுகுறித்து கேள்வி கேட்டால் வேலையை விட்டு நீக்கி விடுவதாக நாங்கள் அச்சுறுத்தப்படுகிறோம். இதனால் மனம் உடைந்து சம்பளத்தை பெற்றுக் கொள்ளாமல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம்" என்கிறார் சுப்ரமணியன்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 10 வருடங்களாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் 61 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தூய்மை பணியாளருக்கு எவ்வளவு சம்பளம் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எந்தவித தகவலும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். மாத சம்பளமாக 7,750 மட்டுமே கொடுக்கப்பட்டு வந்ததாகவும், உண்மையில் மாத சம்பளம் 12,720 ரூபாய் அரசு நிர்ணயித்து உள்ளது என்பதே தெரியவந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

"பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்கும் பொழுது இதை பெரிது படுத்த வேண்டாம் எனக்கூறி, வெறும் 250 ரூபாய் மட்டுமே உயர்த்தி தற்போது மாத சம்பளமாக எட்டாயிரம் ரூபாய் எங்கள் கைகளில் கொடுக்கிறார்கள்" என்கிறார் தூய்மை பணியாளர் செல்வி.

"விடுமுறை இன்றி தினசரி விடியற்காலை குப்பைகளை சேகரிக்க பணியில் ஈடுபடுவோம். குப்பை அள்ளுவதற்காக எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் எங்களுக்கு வழங்கவில்லை என கூறும் செல்வி, "கையுறை ஏதும் இன்றி குப்பைகளை தரம் பிரிக்கும் பொழுது உடைந்த மது பாட்டில் குப்பிகள், துருப்பிடித்த இரும்பு கம்பிகள், ஊசிகள் போன்ற பொருட்கள் எங்கள் கையில் குத்தி பதம் பார்த்து விடுகிறது" என்றார்.

மேலும் பணியின் போது ஏற்படும் மருத்துவ செலவு, பேரூராட்சி தூய்மை பணிக்காக வழங்கப்பட்ட வாகனங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதன் செலவுகளையும் நாங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறோம் என்கிறார் செல்வி.

"பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் தான் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். அப்படி இருக்கும் பட்சத்தில் நடுவில் இடைத்தரகர் ஏன் எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் நேரடியாக பேரூராட்சியே எங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று கூறுகிறார் மற்றொரு தூய்மைப் பணியாளர் சாந்தி.

துப்புரவு பணியாளர்
படக்குறிப்பு, சாந்தி

தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு, நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தூய்மை பணியாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த அரண் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பாலா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்

தற்பொழுது அரசு நிர்ணயித்த தொகை முழுமையாக கிடைக்கப்பெறவில்லை என தூய்மை பணியாளர்களின் புகார் குறித்து மேல அதிகாரிகள் முறையாக விசாரித்து வருவதாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களின் சூப்பர்வைசர் ஜான் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஆனால் உரிய அளவில் ஊதியம் கொடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தூய்மைப் பணியின் ஒப்பந்ததாரர் ஹரி கூறுகிறார்.

"தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தில் இருந்து காப்பீட்டுத் தொகை,பணியாளர் சேமநல நிதி மற்றும் பிஎஃப் போன்றவை முறையாக பிடித்தம் செய்யப்படுகிறது இதுபோக பணியாளர்களுக்கு என்ன சம்பளம் வழங்க வேண்டுமோ அதை நாங்கள் வழங்குகிறோம் என்றார்" அவர்.

"ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் இருந்து நாள் ஒன்றுக்கு ஏழு டன் குப்பை சேகரிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அழுத்தம் தருகிறது. இந்த நிலையில் தற்போது பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பலரும் 60 வயதை கடந்து இருக்கிறார்கள். இவர்களால் தொடர்ச்சியாக பணி செய்ய முடியாத நிலையில் ஏற்படுகிறது. வயதான தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களை பணியில் இருந்து நிறுத்தவும் முடியவில்லை இதுதான் தற்போது எதார்த்த நிலை" என்கிறார். இந்த பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது விரைவில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றார்.

துப்புரவு பணியாளர்

இது குறித்துப் பேசிய ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செல்வ பெருந்தகை , "தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. சம வேலை சம உரிமை சட்டம் காற்றில் பறக்கிறது" என்கிறார்

"தமிழகத்தில் தொழில் முதலீடை ஈர்க்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் பல வெளிநாடுகளில் சென்று தொழில் முனைவோர்களை ஈர்த்து வருகிறார். பல முதலாளிகளும் லாபம் ஈட்டுவதற்காக இங்கு முதலீடு செய்கிறார்கள். எந்த முதலாளிகளும் தங்களது நேரடி பார்வையில் தொழிற்சாலையை இயக்குவது கிடையாது. இதனால் தொழிலாளர் அடிப்படை உரிமைகள் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகிறது. மீறி கேள்வி கேட்டால் குண்டர்களால் மிரட்டப்படுவது போன்ற அட்டூழியங்கள் இப்போது தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது இது சம்பந்தமாக சட்டசபையில் விரிவாக பேச உள்ளேன்" என்றார்.

காணொளிக் குறிப்பு, முடிந்துபோன வாழ்க்கையை தூக்கிய நிறுத்திய GBS நோயாளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: