நீட் தேர்வு: அரசுப் பள்ளியில் படித்த இருளர் பழங்குடி மாணவி நீட் தேர்வில் வென்றது எப்படி?

பூஜா

பட மூலாதாரம், Pooja

படக்குறிப்பு, பூஜா
    • எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வான நீட் தேர்வு தமிழ்நாட்டில் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ள நிலையில் அரசுப் பள்ளியில் படித்த இருளர் பழங்குடி மாணவி பூஜா நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

தாம் படித்தது எப்படி, வெற்றி பெற தாம் எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பவை குறித்து அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

தந்தையை இழந்தும் கனவை இழக்கவில்லை

எந்தவொரு பொருளாதார வசதியும் இல்லாமல் தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் ஓலைக் குடிசையில் வசித்து வந்த இருளர் பழங்குடியின மாணவி பூஜா, தொடர்ந்து மூன்று முறை நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிக்குச் செலுத்துவதற்குக்கூட போதிய வசதி இல்லாமல் இருந்தார். அப்போது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டு தற்போது மருத்துவக் கல்வி பயின்று வருகிறார்.

தோல்வி அனுபவமாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, தோல்வி காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களைப் பார்த்து தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவதாக பிபிசி தமிழிடம் கூறுகிறார் மூன்று முறை போராடி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவி பூஜா.

"செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில், ஓலைக் குடிசை வீட்டில்தான் நான் வளர்ந்தேன். என் பெற்றோருக்கு நாங்கள் மூன்று பிள்ளைகள். நான் 3 முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். அதேபோல், என் தங்கை இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். என் தம்பி கார்த்திக் மருத்துவராக வேண்டுமென கனவோடு இருக்கிறார். என் தந்தை பார்த்தசாரதி கூலித் தொழிலாளியாக இருந்தார். தினசரி கிடைக்கும். சொற்ப கூலியை வைத்துக்கொண்டுதான் என்னையும் என் தங்கையையும் மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்தார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

நான் 12ஆம் வகுப்பில் 963 மதிப்பெண் பெற்றேன். மருத்துவராக வேண்டும் என்று கனவோடு இருந்தேன். பன்னிரண்டாம் வகுப்பை முடித்த பிறகு, சிபிஎஸ்சி பிரிவிலுள்ள 11, 12ஆம் வகுப்பு வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடநூல்களை மட்டும் தொடர்ச்சியாகப் படித்து நீட் தேர்வு எழுதி, 276 மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றேன்.

ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படிக்க போதிய வசதியில்லாததால், கூடுதலாக மதிப்பெண் பெற வேண்டுமென்று மீண்டும் இரண்டு முறை தேர்வெழுதினேன். இறுதியில் 334 மதிப்பெண் எடுத்து, அரசு கல்லூரியில் இடம் கிடைத்தது. இதற்கிடையே என் தந்தை பார்த்தசாரதியும் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார்," என்கிறார் பூஜா.

அரசு கல்லூரியில் இடம் கிடைத்தும், கட்டணம் கட்ட வசதியில்லாத காரணத்தால் செய்வதறியாது இருந்த பூஜாவுக்கு, மலைவாழ் மக்கள் சங்கம் போன்ற அமைப்புகளின் உதவி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உதவி கிடைத்தது. அவர்களின் உதவியோடு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டணம் செலுத்தப்பட்டு, தற்போது மருத்துவம் படித்து வருகிறார்.

எந்த பயிற்சி நிலையத்திற்கும் செல்லாமல் முதல் தேர்ச்சி

"முதன்முறையாக நீட் தேர்வுக்காக படிக்கும்போது எந்தவித பயிற்சி நிலையத்திற்கும் செல்லவில்லை. அப்போது உயிரியல் பாடப்பிரிவில் முழு கவனம் செலுத்தி படித்தேன்," என்கிறார் பூஜா.

கல்லூரியில் சேர்வதற்கு நிதி அளித்த மலைவாழ் மக்கள் சங்கத்தினர்
படக்குறிப்பு, கல்லூரியில் சேர்வதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் நிதியுதவி அளித்து பூஜாவுக்கு உதவினர்

"11, 12ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்சி பாடநூல்களைத் தெளிவாகப் படித்தேன். இந்த புத்தகங்களை எத்தனை தடவை படித்தாலும் முதல் முறையாகப் படிப்பதைப் போலவே இருக்கும். புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்யாமல் அதிலுள்ளதைப் புரிந்து படிக்க முயன்றேன். இதேபோல், புரிந்து படித்தால் நீட் தேர்வை எளிமையாக எழுத முடியும்.

இயற்பியல் பாடப்பிரிவை பொறுத்தவரை, நடந்து முடிந்த நீட் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளில் இருந்து குறைந்தபட்சம் 500 கணக்குகளையாவது நாம் பயிற்சி என்ற பெயரில் எழுதிப் பார்க்க வேண்டும்.

அரசுக் கல்லூரிகளில் சேர 300 மதிப்பெண்களாவது பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் நாம் தனித்தனியாக நேரம் ஒதுக்கிப் படித்தேன். வேதியியல் பாடப்பிரிவுக்கு மட்டும் அதிக நேரம் ஒதுக்க வேண்டும். படிப்பதை எப்படிப் புரிந்துகொள்கிறேன் என்று எழுதிப் பார்ப்பேன்," என்கிறார்.

"தேர்ச்சி பெற முடியவில்லை என்று தற்கொலை செய்வது மன அழுத்தத்தை ஏற்படுகிறது. நீட் தேர்வில் தோல்வியடைந்தால், அடுத்த ஆண்டில் மீண்டும் படித்து நிச்சயம் தேர்ச்சி பெற முடியும். தோல்வி நமக்கு அனுபவமாக இருக்கும்," என்ற பூஜா, "தேர்வில் தோல்வியடையும் மாணவர்களின் பெற்றோரும் உறவினரும் அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டு வருவதற்கான நம்பிக்கை கிடைக்கும்," என்கிறார்.

மேலும் அவர், நீட் தேர்வுக்குத் தயாராகும்போதும் அதற்குப் பிறகும் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்கிறார்.

"மருத்துவ சேவை எளிதானதல்ல. அதற்கான கல்வியைப் பயிலும்போது சிரமப்படாமல் கவனமாகப் படிக்க வேண்டும். இதில் தோல்வி என்பதைப் பெரிதாகக் கருதாமல் மீண்டும் தேர்ச்சி பெற முடியுமென்ற நம்பிக்கையோடு கவனமாகப் படிக்க வேண்டும்," என்றார் அவர்.

சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, சென்னை மாணவர் கண்டுபிடித்த ரோபோட் மன்னிப்பு கேட்கச் சொன்னது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: