போதைப்பொருள் கூடாரம் ஆகிறதா பெங்களூரு? எளிதில் இலக்காகும் இளைஞர்கள்

போதைப்பொருள் - பெங்களூரு

பட மூலாதாரம், Huw Evans picture agency

    • எழுதியவர், ஷகில் அக்தர்
    • பதவி, பிபிசி உருது, பெங்களூரு

"நான் பள்ளியில் நண்பர்களுடன் சிகரெட், மது, கஞ்சா குடிப்பேன். அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக நான் பழக்கப்பட்டு விட்டேன். அதன் பிறகு, மிகுந்த மன அழுத்தத்தில் வாழ ஆரம்பித்தேன். நான் போதைப் பழக்கத்திற்கு அதிகம் அடிமையாகவில்லை. ஆனால், என்னால் பயன்படுத்த முடிந்தால், நான் பயன்படுத்துவேன். எனக்கு மன அழுத்தம் இருக்கும்போது, நான் போதைக்கு அடிமையானதை உணர்ந்தேன்."

பெங்களூருவைச் சேர்ந்த மாணவி நம்ரதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தற்போது அங்கு புறநகர்ப் பகுதியில் உள்ள 'ஸ்ரீ கேந்திரா' மறுவாழ்வு மையத்தில் போதைப் பழக்கத்திலிருந்து விடுபட சிகிச்சை பெற்று வருகிறார்.

கர்நாடக தலைநகரான பெங்களூரு நகரம், இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருளின் முகமை போல மிக குறுகிய காலத்திலேயே பெயர் பெற்றது. அதே போல், அங்கு போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதற்கும் பிரபலமடைந்து வருகிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருவில் உள்ள கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களில் 25 சதவீதம் பேர் ஏதாவது ஒரு போதைப்பொருளைப் பயன்படுத்துவதாகவும், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் போதைப்பொருள் குறித்த ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு

கடந்த 2015-16ஆம் ஆண்டின் தேசிய மனநல ஆய்வு கணக்கெடுப்பின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 22.25 சதவீதம் பேர் மது, புகையிலை மற்றும் பிற சட்டவிரோத போதைப் பொருட்களைப் பயன்படுத்தி உள்ளனர். போதைப்பொருளால் அதிகம் பாதிக்கப்படுபவர்களை மட்டும் இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மக்கள்தொகை மற்றும் தொழில்துறை விரிவாக்கம் காரணமாக பெங்களூரூ நகரம் வளர்ந்துள்ளது. இங்கு வேலை செய்ய பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், லட்சக்கணக்கானவர்கள் வருகின்றனர்.

இங்கு வருபவர்களுக்கு தனிமையும் நகர்ப்புற வாழ்க்கையில் உள்ள சிக்கல்களும் புதிய மனச் சிக்கல்களை உருவாக்கியுள்ளன. பெருநகரத்தின் சுதந்திரமான வாழ்க்கை, இளைஞர்களை மது மற்றும் போதைப்பொருளை நோக்கி இட்டுச் செல்கிறது என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

காவல்துறை கூற்றுப்படி, கர்நாடகாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 'கொக்கெய்ன்' (cocaine) பயன்பாடு இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பெங்களூரு 'புதிய போதைப்பொருளின் கூடாரமாக' மாறியுள்ளது.

போதைப்பொருள் - பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

இங்கு கடந்த 2015-16ஆம் ஆண்டு ஹெராயின், ஒபியன், கஞ்சா, ஹாஷிஸ், மார்ஃபின், எபிட்ரின் உள்ளிட்ட 500 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு 2,000 கிலோவுக்கு மேல் உள்ளது.

பெங்களூருவில் மட்டும், 2021ஆம் ஆண்டில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காகவும், விற்பனை செய்ததற்காகவும் 8,505 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் உட்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நம்ரதா இருக்கும் அதே மறுவாழ்வு மையத்தில் தான், நடாஷாவும் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

நடாஷா தனது சொந்த இடத்தில் இருந்து மேற்படிப்பு படிக்க பெங்களூரு வந்த போது, மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். சில சமயங்களில், 'கஞ்சா' (weed) போதைப்பொருளை புகைப்பதற்கும் பழக்கப்பட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இங்கு எனக்கு சுதந்திரம் கிடைத்தது. என்னைத் தடுக்க என் பெற்றோர் இங்கு இல்லை நண்பர்களுடன் சேர்ந்து அதிகமாக குடிக்க ஆரம்பித்து அதற்கு அடிமையானேன். புகைப்பிடிக்கும் பழக்கமும் எனக்கு இருந்தது. என் ஆண் நண்பர் அதற்கு என்னை அடிமையாக்க பழக்கப்படுத்தினார். எல்லா பெண்களும் மது அருந்துவார்கள். போதைப்பொருள் உட்கொள்கிறார்கள். நீயும் எடுத்துக்கொள் என்று அவர் கூறுவார்," என்றார்.

போதைப்பொருள் - பெங்களூரு

பட மூலாதாரம், AFP

பெங்களூருவின் 'ஸ்ரீ கேந்திரா' மறுவாழ்வு மையத்தின் தலைவர் அமிர்தா ராஜ் பிபிசியிடம் பேசுகையில், "போதைப்பொருள் உட்கொள்ளும் 100 பேர்களில் 40 பேர் பெண்கள் என்றும், அவர்களில் 10 சதவீதத்திற்கு குறைவானவர்களே சிகிச்சை பெறுகின்றனர் என்றும் பல ஆய்வுகள் காட்டுகின்றன," என்று கூறினார். இத்தகைய போதைப் பழக்கத்திலிருந்து விடுபட ஒரு சிகிச்சை இருக்கிறது என்பது கூட பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.

போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும், சமூகமும் இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அமிர்தா கூறுகிறார்.

மறுவாழ்வு மையத்திற்கு செல்ல ஏற்படும் தயக்கம்

மறுவாழ்வு மையத்திற்கு சென்றால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்கள் உள்ளனர். இத்தகைய மையத்தில் இருந்து ஒரு பெண்ணை அழைத்து வந்த பிறகு, அவரின் மதிப்பு எப்படி இருக்கும். அவர் அதை எப்படி எதிர்கொள்வார் என்ற பயம் பெற்றோர்களுக்கு உண்டு.

ஆனால் ஒருமுறை சிகிச்சை பெற்று அந்த பெண், இந்த போதைப்பழக்கத்தில் இருந்து வெளியே வந்தால், அவருக்கு அழகான எதிர்காலம் உண்டு என்று அவர்கள் நினைக்கவில்லை. அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களை மறுவாழ்வு மையத்தில் இருந்து கொண்டுவருவது அவர்கள் கண்ணியத்தை இழந்துவிடுவார்கள் என்பதே மட்டுமே அவர்களின் கவலை.

போதைப்பொருள் - பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தைச் சேர்ந்த (NIMHNS) இஷா ஷர்மா கூறுகையில், "டீன் ஏஜ் பருவத்தில் இருப்பவர்கள் போதைப்பொருள் மீது ஈர்ப்பு ஏற்படுவது புதிதல்ல. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகத்தில் அதீத தகவல்கள் உள்ளன. ஆகவே, போதைப்பொருளுக்கு அவர்கள் அடிமையாகும் வாய்ப்பு முன்பை விட அதிகமாக உள்ளது. அதனால் குழந்தைகள் இந்த போதை பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

மேலும் மருத்துவர் இஷா கூறுகையில்,அனைத்திலும் ஆர்வத்துடன் இருப்பது சில குழந்தைகளின் இயல்பு. அவர்கள் புதிய விஷயங்களை முயற்சிக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு ஏதோ ஒன்றை சோதிக்கவும், அபாயங்களை எதிர்கொள்ளும் பிடிக்கும். இத்தகைய மனப்பான்மை அவர்கள் குறிப்பிட்ட சமூக மற்றும் குடும்ப சூழ்நிலைகளில் போதைப்பொருட்களை எடுத்துக் கொள்ள வழிவகுக்கும்.

மிகவும் இளம் வயதிலேயே போதைப் பொருளுக்கு அடிமையாகும் குழந்தைகள்

சமீர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 'சைஃப் மற்றும் செரீன்' (safe and serene) என்ற மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீர் கூறுகையில், "என்னுடன் இருந்த ஐந்து குழந்தைகள் என்னை போதைப்பொருள் உட்கொள்ள வைத்தனர். என் பக்கத்து வீட்டில் உள்ள சில சிறுவர்கள் கஞ்சா எடுத்துகொள்வார்கள். நானும் அவர்களுடன் அதை உட்கொள்ள ஆரம்பித்தேன். நானும் அதற்கு அடிமையாகிவிட்டேன். இதுகுறித்து என் தந்தைக்கு தெரிந்ததும், என்னை அடித்தார். பின்னர் இங்கு என்னை சேர்த்தார்." என்றார்.

தற்போது அவரது மையத்தில் 40 முதல் 50 குழந்தைகள் உள்ளனர் என்று 'சைஃப் அண்ட் செரீன் ரிஹாப் சென்டரின்' தலைவர் சையத் சைஃப் ஷா கூறுகிறார்.

"இது மூன்று மாத மறுவாழ்வு திட்டம். போதைப்பொருளும் அதற்கு அடிமையாவதும் மிகவும் தீவிரமான பிரச்னை. பத்து வருடங்களுக்கு முன்பு இந்த நிலை இல்லை. இப்போது இந்த பிரச்னை மிகவும் அதிகரித்துள்ளது. இப்போது 11 வயதில் இருந்து தொடங்கி 70 வயது நிரம்பியவர்கள் கூட போதைக்கு அடிமையாகி வருகின்றனர்."

போதைப்பொருள் - பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

டாக்டர் ருக்சனா ஹாசன் பெங்களூருவில் போதை மருந்துக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான நிபுணராக இருக்கிறார்.

அவர் கூறுகையில், "இது ஓர் ஆபத்தான சூழ்நிலை. போதைப்பொருள் கட்டுப்பாட்டு வரம்பிற்குள் வராத பல போதைப்பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஃபார்மா போதைப்பொருள், மூலிகை போதைப்பொருள், பிளான்ட்டேஷன் போதைப்பொருள் உள்ளன. மூக்கு வழியாக உறிஞ்சும் போதைப்பொருள் உள்ளது. இவையனைத்தும் எளிதாக கிடைக்கின்றன," என்றார்.

மேலும் அவர் கூறுகையில் , "முதல் மற்றும் இரண்டாவது டோஸ் இலவசமாகக் கிடைக்கும். இதன்மூலம் போதைக்கு அடிமையாகுபவர் பணத்தை புரட்டுகிறார். அவர்களின் பெற்றோரில் ஒருவர் ஏற்கனவே அதற்கு பழக்கமாக இருந்தால், அவரது பிள்ளையும் அதே வழியில் செல்கிறது." என்கிறார்.

மேலும் மருத்துவர் ருக்சானா, "நாங்கள் கையாளும் நோயாளிகள் ஏழு, எட்டு, ஒன்பது வயது குழந்தைகள். பெண் குழந்தைகளைப் பார்த்தால், 11 வயதுக்குட்பட்ட குழந்தைகூட போதைக்கு அடிமையாகிறது. போதைப் பழக்கம் பள்ளியிலும் ஏற்படலாம். பெரும்பாலான குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ளது. ஆனால் போதைக்கு அடிமையான பெரும்பாலான குழந்தைகள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்," என்று கூறுகிறார்.

குழந்தைகளைப் பாதுகாப்பதில் பெற்றோரின் பங்கு என்ன?

பெங்களூருவைச் சேர்ந்த சையத் ஜாகிர் கூறும்போது, ''முன்பெல்லாம் 18, 19 வயதுக்கு பிறகுதான் போதைப் பொருட்களை உட்கொண்டனர். இப்போது எட்டு, ஒன்பது வயது சிறுவர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். 11, 12 வயதில் கஞ்சாவும், 14 வயதில் மதுவும் எடுத்துகொள்கிறார்கள். இப்போது நம் இளம் தலைமுறையை காப்பாற்றவில்லை எனில், இனி வரும் நாட்கள் மிகவும் மோசமாக இருக்கும்.

குழந்தைகள் வளரும் போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் எப்படிப் பேசுகிறார்கள், அவர்களுடன் எப்படிப் பழகுகிறார்கள் என்பது முக்கியமான விஷயம் என்று டாக்டர் இஷா கூறுகிறார்.

"போதைப்பொருள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. பள்ளிச் சூழல் எப்படி இருக்கிறது, ஆசிரியர்கள் குழந்தைகளை எப்படி வழிநடத்துகிறார்கள், மாணவர்களுடன் நட்புடன் இருக்கிறார்களா ஆகியவை முக்கியம். அவர்களின் சூழல் சரியில்லாத இடங்களில், மாணவர்கள் போதைப்பொருள் பக்கம் திரும்புவது எளிதாகிறது."

"குழந்தைகள் ஏற்றுக்கொள்ளாத, பெற்றோர்கள் பேச விரும்பாத மறைமுக பிரச்னை இது. ஆனால் இது சமூகத்தின் மிகவும் சிக்கலான பிரச்னை," என்கிறார் மருத்துவர் இஷா.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: