அல்சைமர் நோய் என்பது என்ன? பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பது எப்படி?

முதியவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்திரிப்புப்படம்
    • எழுதியவர், எம். மணிகண்டன்
    • பதவி, பிபிசி தமிழ்

70 வயதான முத்துசாமிக்கு பல பேரக்குழந்தைகள். ஆனால் அவர்களில் பெயர்கள் அவருக்கு நினைவில் இருப்பதில்லை. காலையில் உணவு சாப்பிட்டோமோ என்பதுகூட அவருக்கு மறந்துவிட்டது.

எந்த ஊரில் எந்த முகவரியில் வசிக்கிறோம் என்றும் அவருக்கு நினைவில்லை. ஒவ்வொரு நாள் அவர் வெளியே சென்றுவிட்டால் வீட்டுக்கு வரும் வழி மறந்துபோகும். யாராவது வழியில் கண்ட ஒருவர்தான் அவரை வீட்டுக்கு கொண்டுவந்து விட நேரிடுகிறது.

முத்துசாமிக்கு ஏற்பட்டிருப்பது மறதிதான். ஆனால் அது தீவிரமானது. அதுவே மனித குலத்துக்கு அதிகச் சவாலாக இருக்கும் நோய்களில் ஒன்று. அதன் பெயர் 'அல்சைமர்'. டிமென்ஷியா எனப்படும் மறதி நோய்களுள் பொதுவானது இது.

"அல்சைமர் வயதானவர்களை அதிகமாகப் பாதிக்கிறது. வயதாகும்போது தீவிரமாகிறது," என்கிறார் அல்சைமர் நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவரான சதீஷ் குமார்.

அல்சைமர் என்பது என்ன?

மனித மூளை பல நூறு கோடி நரம்பு செல்களால் ஆனது. அவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. நாம் பேசுவது, காண்பது, நடப்பது என நமது அனைத்துச் செயல்களுக்கும் இந்தத் தொடர்புதான் முக்கியம்.

மருத்துவர் சதீஷ் குமார்
படக்குறிப்பு, மருத்துவர் சதீஷ் குமார்

இந்தத் தொடர்பில் ஒன்று துண்டிக்கப்பட்டாலும் நமது செயல்கள் மாறிப்போகும் அல்லது இல்லாமல் போகும். அப்படி வருவதுதான் அல்சைமர் எனப்படும் தீவிரமான மறதி நோய்.

நமது மூளைக்கு சிக்னல்களைக் கொண்டு சேர்ப்பதற்கும் மூளையின் கட்டளைகளை உடலெங்கும் பரப்புவதற்கும் சில வேதிப் பொருள்கள் அவசியம். இந்த வேதிப்பொருள்கள்தான் மூளையின் தூதர்கள். அல்சைமர் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வேதிப் பொருள்கள் போதிய அளவுக்கு இருக்காது.

அல்சைமர் - டிமென்ஷியா என்ன வேறுபாடு?

டிமென்ஷியா என்பது ஒரேயொரு நோயைக் குறிப்பது அல்ல. பல வகையான மறதி, மூளை தொடர்புடைய நோய்களை மொத்தமாகக் குறிக்கும் ஒரு சொல்தான் டிமென்ஷியா. அதில் பொதுவான வகை அல்சைமர். டிமென்ஷியாவில் பல்வேறு வகையான நோய்கள் இருக்கின்றன. சில நேரங்களில் அவை அல்சைமர் என தவறாகக் கண்டறியப்படுவதும் உண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உதாரணத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு டிமென்ஷியாவில் கண்டறியப்பட்ட ஒரு வகையான நோய் நீண்ட காலமாக அல்சைமர் என கருதப்பட்டு வந்ததாக "பிரைன்" இதழ் குறிப்பிடுகிறது.

டிமென்ஷியா என்பதை 1906-ஆம் ஆண்டு ஜெர்மன் மருத்துவ நிபுணரான அலோய்ஸ் அல்சைமர் என்பவர் விளக்கினார். நீண்ட நாள்களாக மறதியால் அவதிப்பட்டு வந்த ஒரு பெண்ணை உடற்கூராய்வு செய்து இதற்கான ஆதாரங்களை அவர் வெளியிட்டார். அவரது பெயரே அல்சைமர் நோய்க்கு வைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் தேதி அல்சைமர் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி சுமார் டிமென்ஷியா வகையில் 70 சதவிகிதம் பேர் அல்சைமர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

கோடு

அல்சைமர் நோய் முக்கியக் குறிப்புகள்

  • மூளை செல்களில் உள்ள தொடர்புகள் துண்டிக்கப்படுவதால் அல்ஸைமர் நோய் வருகிறது.
  • வயதாகும்போது அல்ஸைமர் பாதிப்பு தீவிரமடைகிறது
  • ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் அல்சைமரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • அல்சைமருக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. அதன் பாதிப்புகளைகளை சிகிச்சைகள் மூலமாகக் குறைக்கலாம்.
கோடு

அல்சைமர் பாதிப்பு யாருக்கு அதிகமாக இருக்கும்?

அல்சைமர் நோய் தொடர்ச்சியாகத் தீவிரமடையும் வகையைச் சேர்ந்த நோய். அதாவது நோய் பாதிப்பு சிறிய அளவில் தொடங்கி படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும். ஒருமனிதனின் செயல்படும் அளவு குறைந்த கொண்டே இருக்கும். வயதாகும்போது பாதிப்பு அதிகரிப்பதால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை மோசமடைந்து கொண்டேயிருக்கும்.

"அல்சைமர் நோய் பாதிப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களிடம் அதிகமாக இருக்கும் " என்கிறார் மருத்துவர் சதீஷ் குமார்.

அல்சைமரின் அறிகுறிகள் என்னென்ன?

எளிதில் மறந்துபோவது, புதியவற்றைக் கற்றுக் கொள்வதில் சிக்கல் போன்றவைதான் அல்சைமர் நோயின் தொடக்கநிலை அறிகுறிகள். ஆனால் எல்லோருக்கும் ஒருமாதிரியான அறிகுறிகள் இருக்க வேண்டும் என்பதில்லை.

முதியவர்

பட மூலாதாரம், Getty Images

உதாரணத்துக்கு வீட்டில் சாவியை ஒரு இடத்தில் வைத்து வீட்டு தேடுவது, சமையல் செய்யும்போது அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது நினைவில் இல்லாமல் போவது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

திருமண நாள், பிறந்தநாள் போன்றவை மறந்துபோவதும், நண்பர்களின் பெயர்களை நினைவுபடுத்த முடியாமல் போவதும்கூட அல்சைமரின் அறிகுறிகளாக இருக்கலாம்.

'ஹிப்போகேம்பஸ்' எனப்படும் மூளையின் ஒரு பகுதிதான், அல்சைமர் நோயின்போது பாதிக்கப்படுகிறது. இது வாழ்க்கையில் அன்றாடம் நடக்கக்கூடியவற்றை நினைவில் கொள்ளும் பகுதி. ஆனால் நீண்ட காலத்துக்கு முன்பு நடந்தவை எதுவும் அல்ஸைமரின்போது பாதிக்கப்படுவதில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கோடு

பேச்சும் பார்வையும் குறையும்

  • அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வார்கள். என்ன பேசத் தொடங்கினோம் என்பது தெரியாமல் தடுமாறுவார்கள்.
  • ஒருபொருள் இருக்கும் தூரத்தையோ, உயரத்தையோ, ஆழத்தையோ சரியாகக் கணிக்க முடியாது. அதனால் படிக்கட்டுகளில் ஏறுவது, நடமாடுவது போன்றவை பாதிக்கப்படலாம்.
  • செயல்களை தொடர்ச்சியாகச் செய்ய முடியாது. உதாரணத்துக்கு சமையல் செய்வதற்கு அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது மறந்துபோகும்.
  • தேதியும் கிழமையும் மறந்து போகும்.
கோடு

அல்சைமரை எப்படி கண்டறிவது?

அல்சைமர் என்பது ஒருவரைத் திடீரென பாதிப்புக்குள்ளாக்கும் நோயல்ல. அதன் பாதிப்புகள் மிகவும் படிப்படியாகவே வெளியே தெரியவரும். அதனால் அதைக் கண்டறிவது மிகவும் கடினமாகவே இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

"அல்சைமர் மூளை தொடர்பான நோய் என்பதால் மூளையில் சி.டி. மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதன் மூலம் அதில் உள்ள பாதிப்புகளை கண்டுபிடித்துவிடலாம்" என்கிறார் மருத்துவர் சதீஷ் குமார்.

அல்சைமர் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவது ஏன்?

உலகம் முழுவதும் சுமார் 5 கோடி பேர் டிமென்ஷியா எனப்படும் அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. 2050-ஆம் ஆண்டுக்குள் 13 கோடிக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்படக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.

முதியவர்

பட மூலாதாரம், Getty Images

ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் அல்சைமர் நோயால் பாதிக்கப்படுவதற்கு அடிப்படையான காரணம் வயதுதான் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் வாழ்கிறார்கள். அதனால் அல்சைமரால் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

எனினும் ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம், பிறரை பராமரிக்கும் பணிகள் உள்ளிட்டவை அதிகமாக இருப்பதும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.

கோடு

அல்ஸைமரின்போது என்னவெல்லாம் மறந்து போகலாம்?

  • வீட்டில் சாவியை எங்கு வைத்தோம், பர்ஸை எங்கு வைத்தோம் என்பதை மறக்கலாம்
  • நண்பர் அல்லது அலுவலகத்தில் வேலை செய்பவரின் பெயர் மறந்து போகலாம்.
  • அண்மையில் நடந்த சம்பவம் அல்லது உரையாடலை மறந்து போகலாம்.
  • திருமண நாள், பிறந்தநாள் போன்ற முக்கிய நாள்கள் நினைவில் இருக்காது
  • சந்திக்க வேண்டிய நபர்கள், போக வேண்டிய இடம் போன்றவை மறந்துவிடும்.
கோடு

அல்சைமருக்கு என்ன சிகிச்சை?

அல்சைமர் நோய்க்கு முழுமையான சிகிச்சை ஏதும் இல்லை என்று பிரிட்டனின் தேசிய சுகாதாரத்துறை கூறுகிறது. எனினும் அதன் அறிகுறிகள் சிலவற்றை சிகிச்சைகள் மருந்துகள் மூலமாக கட்டுப்படுத்த முடியும்.

மூளை

பட மூலாதாரம், Getty Images

"அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவரை எப்படி பராமரிப்பது, எப்படி பாதுகாப்பது என்பது தொடர்பாக அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் உரிய பயிற்சி வழங்குவது சிகிச்சையில் முக்கிய அங்கமாகும். துணை நோய்களான உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்றவையும் அவசியம். இவை தவிர சில மருந்துகளும் தீவிரமான அறிகுறிகளைக் குறைக்கப் பயன்படுகின்றன," என்கிறார் மருத்துவர் சதீஷ் குமார்.

அல்சைமர் வராமல் தடுக்க முடியுமா?

இது தொடர்பாக மருத்துவ உலகில் தெளிவான விளக்கம் இல்லை என்கிறது பிரிட்டனின் சுகாதாரத்துறை. ஆனால் மிக முக்கியமாக சில அம்சங்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

"புகைப்பிடிப்பதை உடனடியாக நிறுத்துவது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், நீரிழிவு - ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்றவை அல்சைமர் அபாயத்தை குறைக்கலாம்," என்கிறார் மருத்துவர் சதீஷ் குமார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: