வலிப்பு நிற்க இரும்பை கையில் கொடுப்பது சரியா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மரிய மைக்கேல்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ் நாட்டில் சமீபத்தில் வலிப்பு தொடர்பாக நிகழ்ந்த இரு நிகழ்வுகள், கவனத்தைப் பெரும் வகையில் உள்ளன.
நிகழ்வு 01
மதுரையில் பழங்கானந்தம் மேலத்தெரு பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் கோவிலின் அருகே ஜூலை 29ஆம் தேதி பல அண்டாக்களில் கூழ் காய்ச்சி கொண்டிருந்தனர். அப்பணியில் ஈடுபட்டிருந்த அந்த பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு திடீரென வலிப்பு உண்டாக கொதித்து கொண்டிருந்த கூழ் பாத்திரத்திற்குள் விழுந்தார். துடிதுடித்த அவரை மீட்டு, அரசு மருந்துவமனைக்கு அனுப்பிய நிலையில் 65 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நிகழ்வு 02
கடந்த மாதம் 22ஆம் தேதி உடுமலைப்பேட்டை அருகே வலிப்பு வந்த 28 வயது மதிக்கத்தக்க பெண்ணில் கையில் கம்பியை கொடுத்திருக்கிறார்கள். அதன் கூர்மையான பகுதி அவரது கழுத்தில் குத்த, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அந்த கம்பி அகற்றப்பட்டுள்ளது.
ஆங்காங்கு நடைபெறும் இத்தகைய திடீர் சம்பவங்களை, வலிப்பு நோய் பற்றிய தெளிவும், புரிதலும் இருந்தால் எளிதாக எதிர்கொள்ள முடியும். அதனால் பாதிக்கப்படுவோரை காப்பாற்றவும் முடியும்.
எனவே, வலிப்பு நோய், அந்நோய் பாதிக்கப்படுவோருக்க முதலுதவி அளித்தல் போன்ற விவரங்களை சென்னையை சேர்ந்த மூத்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் வி. சதீஷ் குமாரை தொடர்பு கொண்டு கேட்டேன்.
வலிப்பு மற்றும் வலிப்பு நோய் என்றால் என்ன?
மூளையின் ஒரு பக்கத்திலேயோ அல்லது முழுவதிலும் திடீரென தோன்றுகிற எலெக்ட்ரிக்கல் டிஸ்சார்ஜால் வலிப்பு உண்டாகிறது.

பட மூலாதாரம், Getty Images
தெளிவாக சொல்ல வேண்டுமானால், மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும்போது அவற்றுக்கு இடையே இயல்பாக சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதோ ஒரு காரணத்தாலோ, அதீத அழுத்தத்தாலோ, மூளையில் உருவாகிற இந்த மின்சாரம், அதிகமாக உருவாகி, நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அந்நேரத்தில் உறுப்புகளின் செயல்பாடு மாறுபட்டு, கை, கால்கள் இழுக்க தொடங்குவதை வலிப்பு என்கிறோம்.
இரண்டு முறைக்கு மேலாக எதாவது ஒரு காரணத்தால் வலிப்பு அடிக்கடி வர தொடங்குமானால், அதனை வலிப்பு நோய் என்போம்.
வலிப்பு என்பது ஒரு நோய்தான். ஆனால், முதல் முறையாக வலிப்பு வருகிறபோது, அது வேறு பிரச்னைகளின் வெளிப்பாடா என்று பார்க்க வேண்டியது அவசியம்.
வலிப்பு யாரை பாதிக்கும்?
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் வலிப்பு பாதிக்கும்.
பொதுவாக சிறுவர்களுக்கும், முதியோருக்கும் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு அதிகம். அப்போது மூளையின் முதிர்ச்சி குறைவாக இருப்பதே காரணமாகும்.
வலிப்பு நோயை எப்படிக் கண்டுபிடிப்பது?
கை மற்றும் கால் வெட்டி இழுத்து, வாயில் நுரை வருவதுதான் வலிப்பு என்று மக்கள் பலரும் எண்ணுகிறார்கள்.
வலிப்பில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மூளையின் ஒரு பகுதியில் ஏற்படும் வலிப்பு. இரண்டு, மூளை முழுவதும் ஏற்படும் வலிப்பு.

பட மூலாதாரம், Getty Images
மேலும், மூளை முழுவதும் ஏற்படாமல், ஒரு பகுதியில் தோன்றி, அதிலேயே முடிவுடைந்துவிடும் வலிப்பை ஃபோக்கல் என்கிறோம். இது உடலில் எந்த பகுதியை வேண்டுமானலும் பாதிக்கலாம்.
எடுத்துக்காட்டாக, திடீரென கண் சிமிட்டுவது. முகம் சுளித்து இழுப்பது, முறைத்து பார்த்து கொண்டே இருப்பது போன்ற சிறிய அறிகுறிகள் முப்பது வினாடிகளோ, ஒரு நிமிடமோ வந்துவிட்டு அகன்றுவிடும்.
இவ்வாறு தொடர்ந்து இரண்டு மூன்று முறை வந்து போகிறது என்றால், அதுவும் வலிப்பு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உடனே, மருத்துவ சிகிச்சை பெறுவதும் மிகவும் முக்கியம்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது. இரண்டு அல்லது மூன்று முறை வலிப்பு வந்தவர்கள் மருத்துவரிடம் சென்று எம்.ஆர்.ஐ ஸ்கேன், இ.இ.ஜி போன்ற பரிசோதனைகள் மேற்கொண்டு மருந்து உட்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு மருந்துகளை எடுத்து கொள்வது பெரிய பலன் தராது.
- தூக்கமின்மை இந்த வலிப்பு நோய்க்கு மிகப் பெரிய விரோதி.
- பழக்கவழக்கங்கள் முக்கியம். மது அருந்துதல், புகைப் பிடித்தல் போன்றவையும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
- மரபணு காரணங்களும் உள்ளன. நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றினாலும், மரபணு சிக்கல்களால் இது வருகிறபோது, சரியான மருத்துவ சிகிச்சைதான் உதவும்.
- முன்கூட்டியே கண்டறிந்து தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் விரைவில் கட்டுப்படுத்தி விட முடியும். ஆன்மிக ரீதியில், மாந்திரிக ரீதியில் இதை அணுகுவது தேவையில்லை. எந்த பலனையும் தராது.

வலிப்பை முற்றிலும் குணப்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
இதனை சின்ட்ரோம் (syndrome) என்கிறோம். அதாவது நீரிழிவு போன்றது. ஒரு சிலருக்கு ஒரு முறை இரண்டு முறை மட்டுமே வரும். அவர்களுக்கு ஆறு மாதம் அல்லது ஒராண்டு மருந்து கொடுத்தால் 80 சதவீதம் குணமாக வாய்ப்பு அதிகம் உள்ளது.
மூளையில் வீக்கம், கட்டி போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லாமல், வேறு பழக்கவழக்கங்களால் (மதுப்பழக்கம், புகைப் பிடித்தல்) இந்த சிக்கல் வந்ததவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
மூன்று நான்கு முறை வந்தவர்களுக்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் மருந்து கொடுத்த பின்பு, கட்டுபாடு ஏற்பட்டிருந்தால், மருந்துகளை குறைத்து இயல்பாக இருக்க முடிகிறதா என்று பார்க்கலாம். சுமார் 95 சதவீத மக்களுக்கு திருப்பி வராது.
ஆனால், இருபது அல்லது முப்பது சதவீத மக்களுக்கு மருந்துகளை நிறுத்த முடியாது. மூளையில் தழும்பு, தலையில் அடி, மூளை காய்ச்சல் வந்தது, மூளையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றியிருப்பது போன்ற ஏதாவது பாதிப்புள்ளவர்களுக்கு மருந்துகளை நிறுத்தினாலும், மீண்டும் வலிப்பு வரத்தான் செய்யும்.
மேலும், வலிப்பு நோய் மட்டுமல்லாமல், அதோடு சேர்ந்து கைக்கால் வீக்கம், வாய் பேச முடியாமல் இருப்பது, சிறுவர்களுக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருப்பது போன்றோருக்கு திரும்ப திரும்ப வலிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இவர்களை பரிசோதிக்கும்போது, முடிவுகள் அசாதாரணமாக இருந்தால், மருந்துகளை தொடர்ந்து எடுக்க வேண்டியது அவசியம்.
எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்?
பொதுவாக, உணவு காரணமாக வலிப்பு நோய் வராது. குறிப்பிட்ட உணவை சாப்பிட்டால் வலிப்பு வரும். வலிப்பு வராமல் இருக்க இந்த உணவை தவிர்க்க வேண்டும் என்று எதுவும் இல்லை.
ஆனால், இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒரு சிலருக்கு உணவு முறை இருக்கிறது. அதாவது சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு பத்து முறை வலிப்பு வருவதாக இருந்தால், மூளை சேதமடைந்து கொண்டே இருக்கும். எனவே, அவர்களுக்கு மிக குறைவான கார்போஹைட்ரேட் ஆனால், அதிக கொழுப்பு அதிகமுள்ள உணவு முறையை பரிந்துரைக்கிறோம்.


ஆனால், இதனை நீண்ட காலமாக குழந்தைகளுக்கு வழங்க முடியாத நிலை உள்ளது. இயல்பாக, அவர்கள் இனிப்புகளை வாங்கி சாப்பிட்டுவிடுவதுதான் வழக்கம்.
ஒருவருக்கு வலிப்பு வந்தால்அருகில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
- ஃபோக்கல் பாதிப்பாக இருந்தால், உடம்பில் ஏதாவது ஒரு பகுதியில் வலிப்பு வருவதை அவர்களே உணர்ந்து, கட்டுபாடோடு செயல்பட்டு, சமாளித்து பாதுகாப்பாக இருந்து விடுவார்கள்.
- மூளை முழுவதும் அதிக மின்சக்தி வரும்போது, சுயநினைவிழந்து விடுவார்கள். கீழே விழுவார்கள். கை, கால், தசைகள் இழுக்கும். பற்களை கடிப்பார்கள். இதனால், அவர்களுக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
- இதனை பார்த்ததும் பலரும் பயப்படுவார்கள். அவர்களின் பக்கத்தில் செல்வதற்கே அஞ்சுவார்கள்.

பட மூலாதாரம், Getty Images
- ஆனால், அத்தகைய நேரங்களில் அவர்களோடு இருக்க வேண்டும். வழக்கமாக ஒன்றிரண்டு நிமிடங்களில் அந்த வலிப்பு நின்று விடும்.
- அது எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்று உற்று கவனிக்க வேண்டும். அவருடைய உறுப்புகள் எப்படி செயல்படுகின்றன? எப்போது தொடங்கியது? எப்போது முடிகிறது? என்கிற விவரங்களை மருத்துவரிடம் சொன்னால், அதன் தீவிர தன்மையை அளவிட மிகவும் உதவியாக இருக்கும். அதன் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதை மருத்துவர் முடிவு செய்ய முடியும்.
- ஆனால், வலிப்பு வருகின்ற நேரத்தில் பாதுகாப்பற்ற இடத்தில் அவர் இருந்தால், பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற முயற்சி செய்வது அவசியம்.
- வலிப்பு நின்றவுடன், அவர்கள் மயங்கி விடுவார்கள். தொண்டையில் இருக்கும் சளியை கையாள முடியாமல், விழுங்க தொடங்குவதால் நிமோனியா வந்து, பக்கவாதம் வரலாம்.
- எனவே, வலிப்பு நீங்கி இவர்கள் மயங்கி இருக்கும்போது, மெதுவாக அவர்களை ஒருபுறமாக சாய்த்து படுக்க வைத்து, அவர்களின் தொண்டையில் இருக்கும் சளியை வெளியேற்ற உதவலாம். இந்நேரத்தில், வாய்க்குள் கையை இட்டு, அந்த சளியை வெளியே கொண்டு வரலாம். அதற்கு முன்னால், கையை வாய்க்குள் கொடுக்க கூடாது.

பட மூலாதாரம், Getty Images
- சுமார் நான்கு நிமிடத்தில் அவர்கள் எழுந்து விட்டால், பழச்சாறு கொடுக்கலாம். ஆனால், பல நிமிடங்களுக்கு பின்னரும், அவர்கள் எழுந்திருக்காவிட்டால், மருத்துவ அவசர ஊர்தியை அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பயனுள்ளதாக இருக்கும்.
அருகில் இருப்பவர்கள் செய்ய கூடாதவை?
- நாக்கு கடிக்கிறார்கள் என்று யாராவது கையை உள்ளே விட்டால், அந்த கையை கடித்து துண்டாக்கும் வலிமை அவர்களிடம் இருக்கும். எனவே, அப்போது கையை வாய்க்குள் நுழைக்க வேண்டாம்.
- கரண்டி கொடுப்பதும் மிகவும் ஆபத்தானது.
- வெட்டி இழுக்கிற கை, கால்களை அமுக்க பார்ப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்வதால், எலும்பு உடைதல், மூட்டு விலகுதல் மற்றும் காயம் ஏற்படலாம்.
- வாயில் கைக்குட்டை வைப்பதும் அவசியமில்லாதது.
- இரும்பு கொடுப்பது பொதுவாக அனைவரும் செய்கிற தவறு. இது மூட நம்பிக்கை. அதனால் வலிப்பு நிற்காது. அதனால், அந்த நபர் உடலில் காயம் ஏற்படுத்தி கொள்ள நேரிடலாம்.
- முதலுதவி கொடுப்பதாக கூறி, கை கால்களை பிடித்து விடுவது, செருப்பு மற்றும் சாக்ஸ் கொடுப்பது எல்லாமே மூடப் பழக்கவழக்கம்தான்.
நீண்ட நாட்கள் மருந்து உட்கொள்ள வேண்டியிருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
இது ரத்த அழுத்தம், நீரிழிவுக்கு மருந்து எடுப்பதை போலத்தான். மருந்து எடுக்கும்போது, கட்டுப்பாட்டில் இருக்கும். மருந்து எடுப்பதை விட்டுவிட்டால், பழைய நிலை திரும்பிவிடும். எனவே, நீண்ட காலமாக மருந்து எடுப்பது அவசியப்படும்.
சிலருக்கு வாழ்க்கை முழுவதும் மருந்து தேவையானதாக இருக்கும்.
அதிக மாத்திரைகள் சாப்பிடுவதால், நோயாளிகள் விரக்தி அடையத்தான் செய்வார்கள். ஆனால், வலிப்பு நோயை விட்டு மீள அவர்களுக்கு வேறு வழியில்லை.
நடுவில், வேறு சிகிச்சைகள் என்று திசைமாறி சென்றால், நோய் கட்டுப்பாடு ஏற்பட நீண்ட நாட்களாகலாம். அதனாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













