உலக அல்சைமர் நாள்: முதியவரை மழலையாக மாற்றிய பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
(செப்டெம்பர் 21ஆம் தேதி உலக அல்சைமர் நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி பிபிசி தமிழ் வெளியிடும் சிறப்புக் கட்டுரை இது.)
ஒரு தாய், சாப்பிட முடியாது என்று தனது மகனிடம் அடம் பிடிக்கிறார். இது வித்தியாசமான காட்சியாக இருக்கலாம். ஆனால், அல்சைமர் என்ற நாள்பட்ட மறதி நோயால் பாதிக்கப்பட்ட சுமதியின் குடும்பத்தில் நடப்பது இதுதான்.
இளங்கோவின் தாயார் சுமதி கணித ஆசிரியராக 30 ஆண்டுகள் வேலைபார்த்தவர். கடந்த ஏழு ஆண்டுகளாக அல்சைமர் (Alzheimer) என்ற நாள்பட்ட மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் வேலையில் இருந்ததை தவிர மற்ற எல்லாவற்றையும் சுமதி மறந்துவிட்டார்.
ஐ.டி. ஊழியரான இளங்கோ, தனது தாயை ஒரு குழந்தை போல கவனித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
''நான் தினமும் பள்ளி மாணவனை போல அவரிடம் வாய்ப்பாடு சொல்வது அவருக்கு பிடித்திருக்கிறது. அவர் என் பெயரை கூட மறந்துவிட்டார். அவருக்கு நினைவில் இருப்பதெல்லாம் தான் ஓர் ஆசிரியர் என்பதுதான். அதற்காக என் அலுவலக வேலையை நிரந்தர இரவுப் பணியாக மாற்றிக்கொண்டேன். அவர் தூங்கும் நேரத்தில் என் மனைவியை அவருக்கு உதவியாக விட்டுச்செல்கிறேன். நான் இரவில் தூங்கியே ஏழு ஆண்டுகள் ஆகின்றன,''என்கிறார் இளங்கோ.
''அம்மாவை குளிப்பாட்டுவது, சாப்பாடு ஊட்டி விடுவது, பகல் பொழுதில் கழிவறைவரை அடிக்கடி அழைத்துச் செல்வது, அவருக்கு விருப்பமான பூஜை செய்வது, வாய்ப்பாடு சொல்வது, வண்ண புத்தகங்களை கொடுத்து அவரை வரையச் சொல்வது என பகல் பொழுது கழிந்து விடும். இரவு 7மணிக்கு என் வேலைக்கு நான் புறப்படுவேன்,''என்கிறார் இளங்கோ.

பட மூலாதாரம், Getty Images
அல்சைமர் நோயையும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதியையும் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ஆம் நாள் உலக அல்சைமர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நோயின் கடுமையைக் கருத்தில் கொண்டு சில நாடுகள் அல்சைமர் விழிப்புணர்வு மாதமாக, மாதம் முழுவதும் கடைப்பிடிக்கின்றன.
அல்சைமர் நோயே முதுமை மறதியின் மிகவும் பொதுவான வடிவமாகும். அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த மூளை நோயால் நினைவாற்றலையும் சிந்தனைத் திறனையும் இழக்க நேரிடும். இந்நோயால் மூளை உயிரணுக்கள் சிதைவடைவதால் ஞாபக மறதி, நினைவாற்றல் மாற்றம். தாறுமாறான நடத்தைகள், உடல் செயலிழப்பு ஆகியவை ஏற்படுகின்றன.
இந்நோய் பொதுவாக, மெதுவாக ஆரம்பித்து நாட்பட மோசமாகும். சமீபத்திய நிகழ்வுகளையும் நினைவில் வைத்துக்கொள்ளச் சிரமப்படுவது ஆரம்பக் கட்ட அறிகுறிகளில் ஒன்றாகும். அல்சைமர் நோயாளிகள் நீண்ட நாள் நண்பர்கள் போன்றோரின் பெயர்களையும், முகவரிகளையும், சாலைகளின் பெயர்களையும் பிறவற்றை கூட மறந்து விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையைத்தான் இளங்கோவின் தாயான சுமதி எதிர்கொண்டு வருகிறார்.


ஆரம்பத்தில் செவிலியர் ஒருவரை கொண்டு தனது தாயை கவனித்துவந்த இளங்கோ, ஒரு கட்டத்தில் தானே அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக கூறுகிறார்.
''மறதி காரணமாக, அவர் சாப்பிடாமல் இருப்பார். செவிலியர் உதவினால் கூட குளிப்பதற்கு மறுத்துவிடுவார். சில சமயம் செவிலியரை அடித்துவிடுவார். அதனால், மூன்று செவிலியர்களை மாற்றினோம்.
அம்மாவுக்கு யாருடைய பெயரும் ஞாபகம் இல்லை. ஆனால் என்னுடன் இருக்கும்போது அமைதியாக இருக்கிறார் என்பதால், நானே அவரை பார்த்துக் கொள்ள முடிவுசெய்தேன். தொடக்கத்தில் அம்மாவை பார்த்துக்கொள்கிறோம் என்று தோன்றியது. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல, நான் என் வாழ்வை வாழவில்லை என்ற எண்ணமும், அம்மாவை நான் சரியாக பார்த்துக் கொள்ளவில்லையோ என்ற குற்ற உணர்வும் தினமும் என்னை துரத்தின,''என்கிறார் இளங்கோ.
அல்சைமர் தாக்கம் பற்றி இளங்கோ அறிந்துகொண்டபோது, அதிர்ச்சியாக இருந்தது என்கிறார்.
''ஆரம்பத்தில் வீட்டில் அடிக்கடி சண்டை போடுவார், எங்களை திட்டுவார். அதனால் என் மனைவி, மகளிடம் அவருக்கு பிணைப்பு இல்லாமல் போனது. ஒரு கட்டத்தில் அல்சைமர் தாக்கம் இருப்பதை மருத்துவர் சொன்ன பிறகு, பல உறவினர்கள் எங்களை தவிர்த்து விட்டனர். நாங்கள் இருக்கும் வாடகை குடியிருப்பை அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. பொருளாதார சிக்கலும் ஏற்பட்டது. மனசுமையும் கூடிவிட்டது,'' என்கிறார் இளங்கோ.
மன அழுத்தத்துக்கு ஆளான நேரங்களில், மன நல ஆலோசகரிடம் அவ்வப்போது பேசி வருவதாக கூறுகிறார் இவர்.

பட மூலாதாரம், Getty Images
''என் அம்மா, வீட்டு சுவற்றில் வாய்ப்பாடு, கணக்கு எழுதிப்போடுவார். அதற்கு பதில் சொல்வது போல நான் நடந்து கொள்வேன். அதுமட்டும்தான் அவருக்கு ஆறுதல். அவரை வெளியில் அழைத்து செல்வது பெரிய சிரமம். சமீபத்தில் நாங்கள் கடற்கரைக்குக் கூட்டிச் சென்றோம். நான் காரை நிறுத்திவிட்டு வருவதற்குள், என் மகளை அடித்துவிட்டார். திடீரென என் மனைவி, மகளை 'யார் இவர்கள்?" என கேட்டார். பொது இடம் என்பதால் அவமானமாகி விட்டது. பெரும்பாலும், குடும்பமாக நாங்கள் வெளியில் செல்வதில்லை. எங்களையும் நாங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதால், மனநல ஆலோசகரிடம் எங்களுக்கு ஏற்படும் சிக்கல்களை பற்றிப் பேசுகிறோம்," என்கிறார் இளங்கோ.

அல்சைமர் நோய்: சில உண்மைகள்
- அதிகரித்துச் செல்லும் ஒரு மூளை நோயே அல்சைமர் நோயாகும். அது சிலவற்றை மறந்து போவதில் இருந்து ஆரம்பித்து, சமீபத்திய நிகழ்ச்சிகளையும் மறந்து போகும் ஞாபக இழப்பில் சென்று முடியும். இறுதியாக, அன்றாடக செயல்களையும் அடிப்படைக் கடமைகளையும் ஆற்ற முடியாத நிலை உண்டாகும்.
- அல்சைமர் நோய் பெரும்பாலும் முதியவர்களையே பாதிக்கிறது. இந்தியாவில் முதியோர் தொகை அதிகரித்து வருவதால் இது கவலை தரும் ஒன்றாகும்.
- அல்சைமர் நோய்க்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மூளையில் உண்டாகும் சில சிக்கலான நிகழ்வுகளால் இது ஏற்படலாம் என்று தோன்றுகிறது.
- அல்சைமர் நோய் குணமடைய வாய்ப்பில்லை. ஆரம்பத்தில் நோயைக் கண்டறிவதின் மூலம் நோயாளிக்குப் பலன்தரும் வகையில் சிகிச்சை அளிக்க முடியும்.
- மருந்து, உளவியல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- குடும்ப மற்றும் சமுதாய ஆதரவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

மாமியாருக்காக தாயாக மாறிய மருமகள்!
இளங்கோவை போல வலி மிகுந்த அனுபவங்களை கொண்டவர், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட தனது மாமியார் சுகுணாவை (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) பார்த்துக்கொள்ளும் அரசு மருத்துவர் சுலோச்சனா. சேலத்தைச் சேர்ந்த சுலோச்சனா, உறவினர் சந்திப்புகள், வெளியூர் பயணங்களை தவிர்த்துவிட்டதாக கூறுகிறார்.
''அல்சைமர் பாதிப்பால், தனது சொந்த மகள்களை கூட நம்ப மறுப்பதால், வேலை காரணமாக கூட வெளியூர் செல்வதை தவிர்க்கிறேன். 85 வயதான என் மாமியார் ஒரு வயது குழந்தை போல செயல்படுகிறார். என்னையும், என் கணவரை மட்டும்தான் நம்புகிறார். பிற சொந்தங்களிடம் பேசக்கூட அவர் மறுக்கிறார். யாரிடமும் அவரை ஒரு முழுநாள் விட்டுச்செல்வது என்பது முடியாத காரியமாகிவிட்டது. அதனால், நானும் என் கணவரும், மீண்டும் ஒரு குழந்தையை வளர்ப்பதுபோல கருதி அவரை கவனித்துவருகிறோம். என் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நான் அரசு வேலை என்பதால், ஒருவரின் பணி நேரத்திற்கு மற்றவர் வீட்டில் இருப்பதை உறுதிப்படுத்துகிறோம்,''என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
தனிப்பட்ட வாழ்க்கை என்பதை இழந்துவிட்டதாக கூறுகிறார் சுலோச்சனா. ''நான் சாப்பாடு கொடுத்திருந்தாலும், தான் சாப்பிடவில்லை என கோபித்துக்கொள்வார். நாங்கள் வெளியில் சென்றால், பால்கனியில் நின்று சத்தம் போட்டு பலரையும் கூப்பிடுவார். கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் பொது இடங்களுக்கு செல்வது முற்றிலும் குறைந்துவிட்டது. நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் என பலரிடம் அல்சைமர் பற்றி பேசி, புரியவைப்போம். ஆனால் எல்லோரும் எங்களை புரிந்துகொள்வார்களா என தெரியவில்லை,''என்கிறார் சுலோச்சனா.
''அடிக்கடி டிவி ரிமோட், கார் சாவி, மாஸ்க், புத்தகங்களை எடுத்து ஒளித்துவைத்துவிடுவார். நாங்கள் கேட்டாலும், எங்களை திட்டி மோசமாக பேசுவார். ஒரு சில சமயம் அவற்றை தாங்கிக்கொள்வது கஷ்டமாக இருக்கிறது. வலி மாத்திரைகளை எடுத்து முழுங்கிவிடுவார். பல நேரம், நான் மருத்துவமனையில் இருந்தாலும், வீட்டில் அவர் என்ன செய்கிறார் என்ற யோசனை மேலோங்கி இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது,''என்கிறார்.
''நான் அவரை அவசரப்படுத்தமுடியாது. அதனால் நாங்கள் திட்டமிட்டு எங்கும் செல்வது என்பது முடியாது. ஒரு சில நேரம், மனக்கசப்பை அது ஏற்படுத்திவிடுகிறது. வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர்கள் வீட்டுக்கு கூட செல்வதற்கு யோசிப்போம். சில நேரம், உறவினர் வீடுகளில் கழிவறைக்கு செல்ல மறுப்பார். இருந்த இடத்திலேயே சிறுநீர் கழித்துவிடுவார். இதை நாங்கள் புரிந்துகொண்டாலும், ஒரு சிலர் சிரமமாக எண்ணுவார்கள். அதனால், வேலை முடிந்ததும், வீடு, மீண்டும் வேலை என்றாகிவிட்டது எங்கள் வாழ்க்கை,''என்கிறார் சுலோச்சனா.

அல்சைமர்: எச்சரிக்கை அறிகுறிகள்
- மனநிலை மாற்றங்கள்
- சமீபத்தியத் தகவலை மறந்துபோதல்
- பிரச்னைகளைத் தீர்ப்பது சவலாக மாறும்
- வீட்டிலும் பணியிலும் பழக்கமான வேலைகளை முடிப்பதில் சிரமம்
- நேர இடக் குழப்பம்
- வாசிப்பதில், தூரத்தைக் கணிப்பதில் மற்றும் நிறம் அறிதலில் சிரமம்
- தேதி மற்றும் நேரத்தை மறந்து போதல்
- பொருட்களை இடமாற்றி வைத்தல்
- சமூக மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்குதல்

தடுப்பதற்கு உதவும் குறிப்புகள்
- உடல், உள்ளம், சமூக மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் ஈடுபடுதல்
- வாசித்தல்
- மகிழ்ச்சிக்காக எழுதுதல்
- இசைக் கருவிகளை வாசித்தல்
- முதியோர் கல்வியில் சேருதல்
- குறுக்கெழுத்து, புதிர், சதுரங்கம் ஆகிய உள்ளரங்க விளையாட்டுக்கள்
- நீச்சல்
- பந்து வீசுதல் போன்ற குழு விளையாட்டுக்கள்
- நடை பயிற்சி
- யோகா மற்றும் தியானம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













