இருண்ட சிறிய குகைக்குள் 150 பசு, 10 எருமை மற்றும் ஆடுகளுடன் 3 குடும்பங்கள் வாழ்வது எப்படி?

- எழுதியவர், பிராச்சி குல்கர்னி
- பதவி, பிபிசி மராத்திக்காக
மாலை வேளை சாய்ந்து இருள் சூழத் தொடங்கும் போது, ஃபோஃப்சாண்டி மலைகளில் கால்நடைகளின் மணி சத்தம் கேட்கத் தொடங்குகிறது.
பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் ஒரு குறிப்பிட்ட பாதையில் நடந்து செல்கின்றன.
அவற்றின் உரிமையாளர் பின்னால் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இருள் சூழும் அந்த குறிப்பிட்ட நேரத்தில், அனைத்து விலங்குகளும் குகை வாசலை வந்தடைகின்றன.
பின் ஒவ்வொன்றாக குகைக்குள் சென்று, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போய் நிற்கின்றன.
அஹில்யானா நகரின் ஃபோஃப்சாண்டியில் உள்ள இந்த சிறிய குகையில் சுமார் 150 பசுக்கள், 10 எருமைகள், ஆடுகள் மற்றும் 3 குடும்பங்கள் உள்ளன.
பசுக்களும் எருமைகளும் உள்ளே நுழையும் போது, அந்த இடம் அவ்வளவு இருட்டாக இருக்கும். கண்கள் இருளுக்கு பழகிய பிறகும் கூட உங்களால் எதையும் பார்க்க முடியாது. ஆனால், அந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் இருட்டிலேயே அவற்றைத் தேடிச் சென்று அவற்றின் அருகில் நிற்கிறார்கள்.
அந்த கால்நடைகளின் வரவை உணர்ந்ததும், குகைக்குள்ளேயே இருந்த கன்றுகளும் ஆட்டுக்குட்டிகளும் கத்தத் தொடங்குகின்றன. விலங்குகள் குகைக்குத் திரும்பும் அதே நேரத்தில், அந்த குடும்பத்தினர் வசிக்கும் சிறிய இடத்தின் ஒரு மூலையில் விளக்கு ஏற்றப்பட்டு சமையல் தொடங்குகிறது.
இங்குள்ள வீடுகளில் ஒன்று குஷாபா மகாதே என்பவருக்குச் சொந்தமானது. குகைக்குள் நுழைந்ததும் வலதுபுறம் கடைசியில் இருக்கும் இடம் மகாதே குடும்பத்தினருடையது. இவர்களது நான்காவது தலைமுறை இந்தக் குகையில் வசித்து வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலம் தொடங்கும் போது, இந்த குடும்பத்தினர் தங்கள் விலங்குகளுடன் தங்குவதற்காக இங்கு வருகின்றனர். ஒரு பெரிய குகைக்குள், மீண்டும் ஒரு சிறிய குகை போன்ற அமைப்பை இவர்கள் உருவாக்குகிறார்கள்.
செங்கற்கள் மற்றும் கற்களைக் கொண்டு ஒரு தடுப்புச் சுவர் கட்டி, அதை பசுஞ்சாணத்தால் பூசி மனிதர்கள் வாழ்வதற்கான இடத்தை உருவாக்குகிறார்கள். மற்ற இடங்கள் அனைத்தும் விலங்குகளுக்காக ஒதுக்கப்படுகிறது.
மிகவும் சிறிய இடத்தில், ஒரு அடுப்பு மற்றும் சில பாத்திரங்களுடன் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் கொண்டு வரும் ஒரு மூட்டை துணிகள் மற்றும் சில பாத்திரங்களைத் தவிர, வாழ்வதற்குத் தேவையான வேறு எந்த பொருட்களும் அவர்களிடம் இல்லை.
குகைகளில் வாழ்வதற்கு காரணம் கால்நடைகளே
குகைகளில் தாங்கள் வாழ்வதற்கு இந்த வீட்டு விலங்குகளும் காரணமாக இருந்தன என்று மகாதே கூறுகிறார். "ஆரம்பத்தில், எங்கள் கிராமத்தில் 'லட்சுமி' (பசு) இருந்தது, அதுதான் இங்கே தோண்டியது. அது மண்ணைத் தோண்டி எடுத்தது. அதன் பிறகு கிராம மக்கள் உள்ளே தோண்டி மண்ணை வெளியே எடுத்தார்கள். அதன் பின்னரே நாங்கள் இங்கே வசிக்கத் தொடங்கினோம்" என்று அவர் விவரித்தார்.
குகையின் மறுபுறம் வசிக்கும் முதியவர் நாம்தேவ் முத்தே கூறுகையில், "இங்கே அதிகமாக மழை பெய்யும். மழையினால் பசுக்களும் எருமைகளும் மேய்ந்துவிட்டு இங்கே வந்து ஒதுங்கும். காலையில் அவற்றை மேய்ச்சலுக்கு விடும்போது, அவை சுற்றித் திரிந்துவிட்டு இந்தக் குகை இருக்கும் இடத்திலேயே வந்து அமரும். அந்தச் சமயத்தில் மழை மிகக் கடுமையாக இருக்கும்"என்றார்.

இப்போதும் கூட, இந்த கால்நடைகளே அவர்கள் இங்கு வசிப்பதற்குக் காரணமாக இருக்கின்றன. உண்மையில், இவர்கள் ஒவ்வொருவருக்கும் கிராமத்தில் சொந்தமாக வீடு உள்ளது.
இருப்பினும், அவர்கள் வளர்க்கும் பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது, கிராமத்தில் உள்ள சிறிய வீட்டில் இவ்வளவு விலங்குகளுக்குப் போதுமான இடம் இருப்பதில்லை. அங்கு ஒரு மாட்டுத் தொழுவம் கட்டுவதும் சாத்தியமில்லை.
எனவே, பருவமழை நெருங்கும் போது, அருகிலுள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த இந்த மக்கள் குகையில் வாழும் முடிவைத் தேர்வு செய்கிறார்கள்.
"விலங்குகளுக்காகவே நாங்கள் குகையில் வாழ்கிறோம். கிராமத்தில் கால்நடைகளை மேய விட்டால், அவை ஒருவருடைய நிலத்திற்குள் அல்லது இன்னொருவருடைய நிலத்திற்குள் புகுந்துவிடும். இது தேவையற்ற வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும். ஆனால் மலைகளில் அவற்றை சுதந்திரமாக மேய விடலாம். அதனால் தான் நாங்கள் நான்கு மாதங்கள் இங்கே தங்கியிருக்கிறோம்"என்று முத்தே கூறுகிறார்.
குகையில் ஒரு நாள் வாழ்க்கை எப்படிப்பட்டது?
குகையில் வாழும் இந்தக் குடும்பங்களின் நாள் அதிகாலை நான்கு மணிக்கே தொடங்கிவிடுகிறது. காலையில் சாப்பாடு தயாரானதும், அவர்கள் தண்ணீர் பிடிக்கச் செல்கிறார்கள்.
பின்னர், குடும்பத்தில் ஒருவர் பாலை எடுத்துக்கொண்டு கிராமத்திற்குச் செல்கிறார். கிராமத்திலிருந்து வரும் ஒரு வாகனத்தின் மூலம் பால் பண்ணைக்கு அனுப்பப்படுகிறது. இதுவே இந்த குடும்பங்களின் ஒரே வருமான ஆதாரமாகும்.
ஒரு நபர் பால் கேனுடன் வெளியே செல்லும் அதே நேரத்தில், மற்றவர்கள் விலங்குகளை மேய்ச்சலுக்காகக் குகையிலிருந்து விடுவிக்கிறார்கள்.
பசுக்கள் மற்றும் எருமைகள் மலையில் தங்களுக்கு என வகுக்கப்பட்ட பாதையைப் பின்பற்றி மேய்ச்சலுக்குச் செல்கின்றன. எருமைகளுடன் பசுக்கள் செல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவை தானாகவே சென்றுவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த விலங்குகள் மலையில் உள்ள ஒரு கோயிலுக்கு அருகே இருக்கும் மேய்ச்சல் நிலத்திற்குச் செல்கின்றன. ஆனால், ஆடுகளுக்குப் பின்னால் மட்டும் ஒரு மனிதர் கண்டிப்பாகச் செல்ல வேண்டியிருக்கிறது.

விலங்குகள் வெளியே சென்றதும், குகையில் இருப்பவர்கள் சமைக்கத் தொடங்குகிறார்கள். ஒருபுறம் சமையல், மறுபுறம் தண்ணீரை நிரப்பும் அவசரம் என காலை நேரம் கழிகிறது.
இரவு நேரத்தில், அடர்ந்த இருளில் நெருப்பு மூட்டி, அந்த நெருப்பின் வெளிச்சத்தில் உணவு சமைக்கிறார்கள். சமையலுக்கும் குடிப்பதற்கும் தேவையான தண்ணீரை எடுக்க இங்கிருக்கும் பெண்கள் மீண்டும் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கிறது.
பிபிசி மராத்தியிடம் பேசிய வனிதா கூறுகையில், "நாங்கள் இங்கே 6 மாதங்களாக வசிக்கிறோம், பிறகு வீட்டிற்குச் செல்கிறோம். பகல் முழுவதும் சுத்தம் செய்வதிலேயே நேரத்தை செலவிடுகிறோம். இருட்டியதும் விளக்கை ஏற்றிவிட்டு வேலைகளைத் தொடங்குவோம். இரவில் சமைத்துவிட்டு, மாடுகளைச் சுத்தம் செய்வோம். காலையில் எழுந்ததும் சாணத்தை அகற்றிவிட்டு மாடுகளைத் தூய்மைப்படுத்துவோம்" என்றார்.
குகையில் உள்ள இருட்டில் வேலை செய்வது பற்றிக் கேட்டபோது, தனக்கு அது பழகிவிட்டதாக வனிதா கூறுகிறார்.
இந்தக் குகையில் மின்சாரம் இல்லை என்றாலும், சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேல் குடும்பத்தின் வீட்டில் மட்டும் ஒரு விளக்கு எரிகிறது. இந்தக் குடும்பத்திற்காகவே மலையில் மின்சாரக் கம்பிகள் இழுக்கப்பட்டுள்ளன.
மகாதே மற்றும் முத்தே குடும்பத்தினர் ஆறு மாதங்களுக்குப் பிறகு வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்கள். ஆனால், வேல் குடும்பத்தினருக்கு இந்தக் குகைதான் நிரந்தர வீடு. குகைக்கு கீழே உள்ள மலைச்சரிவில் வேல் குடும்பத்திற்கு விவசாய நிலம் உள்ளது, குகைக்குள் கால்நடைகளும் உள்ளன.
இவர்கள் நிரந்தரமாக இங்கு வசிப்பதால், தீவனங்களைச் சேமிக்கவும் விலங்குகளைப் பாதுகாக்கவும் குடிசைகளில் இடங்களை உருவாக்கியுள்ளனர்.

இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால், விலங்குகளை அடைத்து வைப்பதற்கான பாதுகாப்பான இடம் அவசியம் என்று வேல் கூறுகிறார்.
அருகிலுள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்து, திருமணத்திற்குப் பிறகு இந்த குடும்பத்திற்கு வந்த சங்கீதா, தான் முழுநேரமாக குகையில் வாழ வேண்டியிருக்கும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்று கூறுகிறார்.
இந்தக் குகை வாழ்க்கைக்குத் தான் பழகிக்கொள்ள வேண்டியிருந்தது என்று சங்கீதா குறிப்பிடுகிறார்.
இதுகுறித்துப் பேசியபோது, "எனக்குக் குகையைப் பற்றித் தெரியும். ஆனால் இத்தனை பேர் இங்கே வசிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. திருமணத்திற்குப் பிறகு என்னை இங்கு அழைத்து வந்தபோதுதான் அதைத் தெரிந்துகொண்டேன். இருப்பினும், அவர்களது குடும்பம் நீண்ட காலமாக இங்கு வசித்து வருகிறது. இது அவர்களின் நான்காவது தலைமுறை" என்று சங்கீதா கூறினார்.
'நாங்கள் வீடு கொடுக்கவில்லை என்று அதிகாரிகள் நினைக்கிறார்கள்'
குகையில் வாழ்வது என்பது ஏதோ ஆதி காலத்து வாழ்க்கை போலத் தோன்றினாலும், இவர்களுக்கு அது பழமையும் நவீனமும் இணைந்த ஒரு கலவையாகவே இருக்கிறது.
இருளில் நாட்களைக் கழிக்கும் இந்த மக்களிடமும் மொபைல் போன்கள் உள்ளன. அவற்றை சார்ஜ் செய்வதற்காக மலையடிவாரத்தில் உள்ள கிராமத்து வீடுகளுக்கு அவர்கள் அடிக்கடி சென்று வருகிறார்கள்.
கிராமத்தில் உள்ள வீடுகளில் விலங்குகளுக்குப் போதுமான இடவசதி இல்லாததால், மழைக்காலத்தைக் கழிக்க இந்தக் குகையைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இவர்களின் அடுத்த தலைமுறையினர் கீழே உள்ள கிராமத்தில் வசிக்கிறார்கள். குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காகக் குடும்பத்தில் ஒருவர் மட்டும் கிராமத்து வீட்டில் தங்கியிருக்கிறார்.
குகையில் மக்கள் வசிப்பதைக் கேள்விப்பட்டு அரசு அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து வந்ததை கிராம மக்கள் நினைவு கூர்ந்தனர்.

உயர்மட்ட அதிகாரிகள் கூட இந்தக் குகைகளைப் பார்வையிட வந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது குறித்து அஹில்யாநகரில் உள்ள போப்சாண்டி கிராம பஞ்சாயத்துத் தலைவர் (சர்பஞ்ச்) சுரேஷ் வேலிடம் நாங்கள் கேட்டோம்.
பிபிசி மராத்தியிடம் பேசிய வேல், "அதிகாரிகள் நாங்கள் அவர்களுக்கு வீடு வழங்கவில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. அவர்களுக்கு வீடுகள் உள்ளன. அவர்களைப் பொறுத்தவரை, இது அவர்களின் கால்நடைகள் மற்றும் அவற்றிற்கான தீவனம் தொடர்பான விஷயம்" என்று கூறினார்.

இந்தக் குடும்பங்கள் பல தலைமுறைகளாக இந்தக் குகைகளில் தங்கள் வாழ்க்கையின் பாதியைச் செலவழித்துள்ளன.
மிகக் குறைவான தேவைகளுடன், பழங்காலத்து வாழ்க்கை முறையை இன்றும் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர்.
தங்களிடம் உள்ள மிகக் குறைந்த பொருட்களைக் கொண்டு, இந்தக் குகைவாசிகள் இன்றுவரை உயிர்வாழ்ந்து வருகிறார்கள். அடுத்த தலைமுறையை வழிநடத்தத் தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை வழங்கியபடி இவர்களின் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












