ஜன நாயகன் பொங்கல் ரிலீஸுக்கு சிக்கல் - சான்று வழங்க கூறும் உத்தரவுக்கு தடை

பட மூலாதாரம், KVN PRODUCTIONS
ஜன நாயகன் படத்துக்கு 'யூ/ஏ' சான்றிதழ் வழங்க சிபிஎஃப்சிக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவைச் சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தற்காலிகமாக இடைநிறுத்தியது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஹச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள ஜன நாயகன் திரைப்படத்திற்கு உடனே யு/ஏ சான்று வழங்க மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி இன்று காலை உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கு விசாரணை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படம் பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜன நாயகன் திரைப்படம் முதலில் 2025-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பொங்கல் வெளியீடாக படம் வர இருந்தது. ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்திற்கான முன்பதிவும் சில இடங்களில் தொடங்கின.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், ஜன நாயகன் திரைப்படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என அறிவித்திருந்தார்.
ஆனால் படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்று கிடைப்பதற்கு தாமதமானதால் படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

பட மூலாதாரம், KVN PRODUCTIONS
தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை
விஜயின் ஜன நாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று பிற்பகல் விசாரித்தது.
அந்த விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மேல்முறையீடு இப்போதே தாக்கல் செய்யப்பட்டதற்கான அவசரம் குறித்து கேள்வி எழுப்பியது.
இதற்குப் பதிலளித்த கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் மேல்முறையீட்டிற்கு வழிவகுத்த நிகழ்வுகளின் தொடர்ச்சியை விளக்கினார். மனு 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டதாகவும், 6ஆம் தேதி விசாரணைக்கு வந்ததாகவும், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தேவையான கடிதம் 7ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஜனவரி 6ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் அதிகார வரம்பற்றது என்று தனி நீதிபதி தீர்ப்பளித்ததாக கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். ஆனால், அந்தக் கடிதமே நீதிமன்றத்தில் ஒருபோதும் சவாலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்று வாதிட்ட அவர், "எதிர் மனு தாக்கல் செய்வதன் மூலம் தனது நிலைப்பாட்டைப் பாதுகாக்க தணிக்கை வாரியத்திற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவை ஆராய்ந்த தலைமை நீதிபதி அமர்வு, "மனுதாரரின் மனுவுக்கு பதிலளிக்குமாறு எதிர் தரப்பினரான தணிக்கை வாரியத்திடம் கேட்கப்பட்டு, இரண்டு நாட்களுக்குள் இந்த விவகாரம் தீர்மானிக்கப்படும் அளவுக்கு அப்படி என்ன அவசரம் இருந்தது?" என கேட்டது.
மேலும், "போலியான அவசர நிலை உருவாக்கப்படுவதாகவும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும்" கூறிய நீதிபதி, "சான்றிதழைப் பெறாமல் வெளியீட்டுத் தேதியை எப்படி முடிவு செய்ய முடியும்? வெளியீட்டுத் தேதியை முடிவு செய்துவிட்டு, நீதி அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது," என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியது.
படத் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில், "அழுத்தம் எதையும் கொடுக்கவில்லை" என்றும் "ஏற்கெனவே அனைத்து கூறப்பட்டுவிட்டது, ஆனால் சான்றிதழ் மட்டும் வழங்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, படத்திற்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க வேண்டுமென்று தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்குத் தடை விதித்து, ஜனவரி 21ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

பட மூலாதாரம், KVN PRODUCTIONS
கட்டுப்பாட்டை மீறிய தவிர்க்க முடியாத காரணங்கள் - கேவிஎன் புரொடக்ஷன்ஸ்
இதற்கிடையே ஜன நாயகன் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கேவிஎன் புரொடக்ஷன்ஸ் ஜனவரி 7-ஆம் தேதி இரவு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தது.
அதில், "கனத்த இதயத்துடன் இந்த தகவலை பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9-ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜன நாயகன் திரைப்பட வெளியீடு நமது கட்டுப்பாட்டை மீறிய தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தைச் சுற்றிய எதிர்பார்ப்பு, ஆர்வம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாக புரிந்துகொள்கிறோம். இந்த முடிவு நம் யாருக்குமே எளிதான ஒன்று அல்ல. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
அது வரை உங்களுடைய பொறுமையையும், நீடித்த அன்பையும் கோருகிறோம். உங்களின் ஆதரவு தான் எங்களுக்கும், ஒட்டுமொத்த ஜனநாயகன் படக்குழுவுக்கும் மிகப்பெரிய பலம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












