ஜனநாயகன் சிக்கலின் முழு பின்னணி - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஜனநாயகன் சான்றிதழ் விவகாரம் - நீதிமன்ற வாதங்களின் முழு விவரம்

பட மூலாதாரம், KVN PRODUCTIONS

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (சிபிஎஃப்சி) சான்று வழங்க வேண்டுமென தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், முதலில் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், மேல் முறையீட்டில் இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை முழுவதும் என்ன நடந்தது? முழு விவரம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடிக்க, எச். வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' படத்துக்கு சான்றிதழ் சான்றிதழ் வழங்க சிபிஎஃப்சிக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவிற்கு சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் படம் பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறின.

'ஜனநாயகன்' படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் பொங்கல் திருநாளை ஒட்டி ஜனவரி 9ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படுவதில் தாமதம் நீடித்துவந்தது. படம் வெளியாகும் தேதி நெருங்கிய நிலையில், தயாரிப்பு நிறுவனம் ஜனவரி ஆறாம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.

ஜனநாயகன் சான்றிதழ் விவகாரம் - நீதிமன்ற வாதங்களின் முழு விவரம்

பட மூலாதாரம், KVN PRODUCTIONS

மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு

இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்பாக விசாரணைக்கு வந்தது.

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் சார்பாக கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜரானார். தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சதீஷ் பராசரன் ஆஜரானார்.

செவ்வாய்க் கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது படத்தின் வெளியீட்டில் ஏற்பட்டிருக்கும் தாமதம் நிதி இழப்பையும் மன அழுத்ததையும் தயாரிப்பு நிறுவனத்திற்கு கெட்ட பெயரையும் ஏற்படுத்துவதாக சதீஷ் பராசரன் குறிப்பிட்டார்.

சுமார் 500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை உலகம் முழுவதும் 5,000 திரைகளில் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

"இந்தப் படத்தின் பணிகள் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதி முடிவடைந்த நிலையில், டிசம்பர் 18ஆம் தேதி தணிக்கை வாரியத்தில் படம் கொடுக்கப்பட்டது என்றும் படத்தை பார்த்த தணிக்கை வாரியக் குழுவினர் படத்திற்கு 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் வகையிலான U/A சான்றிதழை வழங்க பரிந்துரைத்தனர்; படத்தில் சில மாறுதல்களைச் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. அந்த மாறுதல்களைச் செய்ய படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர்.

படத்தின் திருத்தம் செய்யப்பட்ட பிரதி டிசம்பர் 24ஆம் தேதி தணிக்கை வாரியத்திடம் அளிக்கப்பட்டது. தணிக்கை வாரியம் சொன்னதையெல்லாம் செய்தும், அடுத்த பத்து நாட்களுக்கு தணிக்கை வாரியம் எந்த பதிலையும் அளிக்கவில்லை. ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகவிருந்ததால் பல முறை தணிக்கை வாரியத்திற்கு நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில், படத்தை மேல் முறையீட்டிற்கு (ரிவைசிங் கமிட்டி) அனுப்ப முடிவெடுத்திருப்பதாக தணிக்கை வாரியத்தின் சென்னை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. இந்தப் படத்தில் ராணுவம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்தும், மத உணர்வுகளை சில காட்சிகள் புண்படுத்துவதாகவும் வந்த புகாரை அடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அந்தக் கடிதம் கூறியது. ஆனால், புகார் அளித்தவர் யார் என்ற விவரம் தயாரிப்புத் தரப்புக்கு அளிக்கப்படவில்லை. படத்தில் பணியாற்றிய கலைஞர்கள், தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் படத்தைப் பார்த்திராத நிலையில் வெளியிலிருக்கும் ஒரு நபருக்கு படத்தைப் பற்றி எவ்விதமான தகவலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என தயாரிப்புத் தரப்பு வாதிட்டது.

ஜன நாயகன் திரைப்படத்தில் நடிகர் விஜய்

பட மூலாதாரம், KVN PRODUCTIONS

27 திருத்தங்கள் செய்தும் சான்றிதழ் தரப்படவில்லை – தயாரிப்பு நிறுவனம்

இதற்குப் பிறகு இந்தப் படம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையும் ஆவணங்களையும் புதன்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதன்கிழமையன்று புகார் அளித்தவர் விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் இந்த விவரங்களைத் தாக்கல் செய்தார்.

அதாவது படத்தைப் பார்த்த தணிக்கை வாரியத்தைச் சேர்ந்த ஒருவர் தனது ஆட்சேபங்களை சொல்லியும், படத்திற்கு சான்றிதழ் அளிப்பதற்கு முன்பாக அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லையென மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் தலைவருக்கு புகார் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்தப் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப வாரியத்தின் தலைவர் முடிவுசெய்திருப்பதாகவும் அப்படி முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் உண்டு எனவும் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி உத்தரவைப் பெறுவது என்பது, சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு, தன் கடமைகளைச் செய்வதைத் தடுப்பதாக இருக்கும் எனவும் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு வாரியம் சான்றிதழை வழங்க வேண்டுமென்று மட்டுமே நீதிமன்றத்தால் உத்தரவிட முடியும் எனவும் தணிக்கை வாரியத்தின் சார்பில் வாதிடப்பட்டது.

ஆனால், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தில் இருந்த நான்கு உறுப்பினர்கள் ஆமோதித்துவிட்ட நிலையில் ஒரு உறுப்பினரின் கருத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என சதீஷ் பராசரன் வாதிட்டார்.

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் குறிப்பிட்ட 27 திருத்தங்களையும் தயாரிப்பு நிறுவனம் செய்துவிட்ட நிலையில், படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பாமல், U/A சான்றிதழை வழங்க வேண்டும் என தயாரிப்பு தரப்பின் சார்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமையன்று வழங்கப்படும் என அறிவித்தார்.

"தணிக்கை வாரியம் கூறிய திருத்தங்களைச் செய்த பிறகு சான்றிதழை வழங்க முடிவுசெய்யப்பட்டும், அதற்குப் பிறகு படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்தது சட்டத்திற்கு அப்பாற்பட்டது. ஆகவே தணிக்கை வாரியத் தலைவரின் முடிவைத் தள்ளிவைத்துவிட்டு, இந்தப் படத்திற்கு சான்றிதழை வழங்க வேண்டும்" என வெள்ளிக்கிழமையன்று நீதிபதி பி.டி. ஆஷா உத்தரவிட்டார்.

நடிகர் விஜய்

பட மூலாதாரம், KVN PRODUCTIONS

'அவசர அவசரமாக விசாரணை'

இந்தத் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே தலைமை நீதிபதி அமர்வு முன்பாக ஆஜரான கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல், இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். அதனை மனுவாகத் தாக்கல்செய்யும்படி அந்த அமர்வு கூறியது. இந்த மனு வெள்ளிக்கிழமையன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீ்வத்ஸவாவும் நீதிபதி ஜி. அருள் முருகனும் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமென்ன என தலைமை நீதிபதி அமர்வு கேள்வியெழுப்பியது. தனி நீதிபதி முன்பாக நடந்த விசாரணை அவசர அவசரமாக நடந்ததாகவும் தங்கள் தரப்பு வாதங்களைச் சொல்ல போதுமான அவகாசம் கிடைக்கவில்லையென்று தணிக்கை வாரியத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"ஜனவரி 5ஆம் தேதி மனு தாக்கல்செய்யப்பட்டு, ஆறாம் தேதியே விசாரணைக்கு வந்துவிட்டது. மறு தணிக்கை தொடர்பான கடிதத்தை சமர்ப்பிக்க எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதனை நாங்கள் 7ஆம் தேதி சமர்ப்பித்தோம். இது தொடர்பான புகாரையும் ஏழாம் தேதியே அளித்தோம். அன்று மதியமே வழக்கு விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது" என மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நீதிமன்றத்திற்கு அழுத்தம் தரக்கூடாது - தலைமை நீதிபதி அமர்வு

தணிக்கை வாரியத்தின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் காணொலிக் காட்சி மூலம் ஆஜரானார். தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி காணொளிக் காட்சி மூலம் ஆஜரானார்.

"இந்த வழக்கு இவ்வளவு அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?" என நீதிபதிகள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த முகுல் ரோஹத்கி, படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக வேண்டியிருக்கிறது எனப் பதிலளித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "தயாரிப்பாளர்கள் சான்றிதழுக்காக காத்திருந்திருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டனர்.

"ஒரு நெருக்கடியை உருவாக்கி நீதிமன்றத்திற்கு அழுத்தம் அளிக்கிறீர்கள். படத்தை இந்தத் தேதியில் வெளியிட வேண்டுமெனக் கூறி, ஒரு நெருக்கடி நிலையை ஏற்படுத்துகிறீர்கள். சிபிஎஃப்சி சான்றிதழ் இல்லாமல் எப்படி படத்தின் ரிலீஸை முடிவு செய்தீர்கள்? ஒரு தேதியை நிர்ணயித்துவிட்டு, அமைப்பின் மீது அழுத்தம் கொடுக்கக்கூடாது" என நீதிபதிகள் கூறினர்.

இந்தத் தருணத்தில் தயாரிப்புத் தரப்பின் சார்பில் ஆஜரான சதீஷ் பராசரன், திருத்தங்களைச் செய்தால் சான்றிதழ் வழங்கப்படும் என்ற மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் உத்தரவை வாசித்தார்.

"நீங்கள் இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாம். இதில் நெருக்கடி ஒன்றும் இல்லையே" என்று கூறிய நீதிபதிகள், "நாங்கள் இந்த வழக்கில் உத்தரவிடுவோம். அதுவரை இந்த ஆணையைச் செயல்படுத்த அனுமதிக்க முடியாது" என்று கூறினர். மேலும், தணிக்கை வாரியம் தன் தரப்பை தெரிவிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தயாரிப்புத் தரப்பின் சார்பில் ஆஜரான முகுல் ரோஹத்கி, "தணிக்கை வாரியத்தின் உறுப்பினரே புகார் செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக" தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த சொலிஸிட்டர் ஜெனரல், அவர்கள் மட்டும்தான் படத்தைப் பார்த்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்திவைப்பதாகவும் வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அறிவித்தனர் (நீதிமன்ற ஆணையில் ஜனவரி 20ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது).

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு