''ஓமக சீயா'' : புரியாத வார்த்தைகளுடன் பிரபலமடைந்த ஹாரிஸ் ஜெயராஜின் 10 பாடல்கள்

ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள்

பட மூலாதாரம், Facebook/HarrisJayaraj

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் திரை இசை உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அறிமுகப் படமான மின்னலே மூலமே பெரும் வரவேற்பைப் பெற்றார் ஹாரிஸ்.

அவரது துள்ளலான இசை இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. அது ரசிகர்களுக்குப் புதுமையாகவும் இருந்தது. 'லேசா லேசா' போன்ற மெலடியாகட்டும், 'டங்கா மாரி' போன்ற குத்துப்பாட்டாகட்டும், ஹாரிஸ் அனைத்து ஜானர்களிலும் வெற்றிப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன், ஜீவா, கே.வி.ஆனந்த், முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குநர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கினார் அவர்.

ஹாரிஸ் என்றால் பலருக்கும் நினைவுக்கு வரும் ஒரு விஷயம் அவரது பாடல்களில் இருக்கும் 'அர்த்தம் புரியாத', 'தனித்துவமான' அந்த வார்த்தைகள். அதுவே அவரது அடையாளமாகவும் கூடக் கருதப்படுகிறது. பின்னாள்களில் அது தமிழ் சினிமா படங்களிலும், பாடல்களிலுமே கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது. இளைஞர்களால் மீம்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.

ஜனவரி 8 பிறந்த நாள் கொண்டாடும் ஹாரிஸ் இசையமைப்பில் வந்த புரியாத வார்த்தைகளைக் கொண்ட 10 பாடல்களின் தொகுப்பு இங்கே...

ஓமக சீயா - காக்க காக்க

ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள்

பட மூலாதாரம், Kalaippuli S Thanu

உயிரின் உயிரே பாடலுக்கு முதல் வார்த்தை 'ஓமக சீயா' தான். தாமரை எழுதிய இந்தப் பாடல், வில்லன்களால் அடித்து தண்ணீருக்குள் வீசப்பட்ட நாயகன், நாயகியை நினைத்து குழப்பத்தில் இருக்கும்போது வரும். நாயகனின் மனநிலை போலவே பாடல் வரியும் ரசிகர்களைக் குழப்புவது போலத்தான் தொடங்கியது.

ஆனால், அதிலிருந்த புதுமையால் புரியாத அந்த வார்த்தையையும் அனைவரும் முணுமுணுத்தார்கள். கேகே மற்றும் சுசித்ரா இந்தப் பாடலைப் பாடியிருப்பார்கள். ஹாரிஸின் இசையமைப்பில் மிகப் பெரிய ஹிட் அடித்த பாடல்களுள் ஒன்று. அதேபோல், புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என்ற அடையாளம் இதன்பிறகு தான் ஹாரிஸுக்குக் கொடுக்கப்பட்டது.

ஹசிலி ஃபிசிலி - ஆதவன்

பா.விஜய் எழுதிய இந்தப் பாடலில் பல இடங்களில் ஹாரிஸின் டச் இருக்கும். நாயகன், நாயகியின் காதல் உறுதியானதும் முழுமையான சந்தோஷத்துடன் வரும் பாடல். அதே உற்சாகத்தோடு 'அன்பே உன்னால் மனம் ஃப்ரீஸிங்' என்று தொடங்கும். அதன் பின் வழக்கமான ஹாரிஸ் டச்சில் பெண் குரலில் 'உல்லாலே லெல்லெல்லே லூமா லூமா' என்பதுபோல் சில புரியாத வரிகள் வரும். அதன் பின்னர் 'ஹசிலி ஃபிசிலி' என்ற வார்த்தையோடு பாடல் தொடங்கும்.

ஹலெனா - இருமுகன்

மதன் கார்கியின் அழகிய தமிழ் வார்த்தைகளுக்கு நடுவே ஹாரிஸின் இந்த வார்த்தைகள் வருவது ஒரு பெரும் முரணாகத் தெரியும். ஆனால், அவை ஒன்றுக்கொன்று இடம் கொடுத்து பாடலை அழகாக்கியிருக்கும். இருமுகன் படத்தில் வரும் இந்தப் பாடல் அதற்கு ஒரு உதாரணம்.

துகிரே இளம் துகிரே என்று மெல்லத் தொடங்கும் பாடல், ஹலெனா என்று துடிப்போடு தாளம் போட வைக்கும். நாயகனின் இன்னொரு முகத்தை ஃப்ளாஷ்பேக்கில் காட்டும் இந்தப் பாடலுக்குமே, அதேபோல் இரு முகங்கள் இருப்பதுபோலத்தான் தோன்றும். இந்தப் பாடலை அபய் ஜோத்கபூர், உஜ்ஜெய்னி ராய், கிறிஸ்டோஃபர் ஸ்டான்லி ஆகியோர் பாடியிருப்பார்கள்.

ரண்டக்க ரண்டக்க - அந்நியன்

'அண்டாக்காக்க கொண்டக்காரி' பாடலில் வரும் இந்த 'ரண்டக்க ரண்டக்க' பகுதியை ஒட்டுமொத்த தமிழ்நாடுமே அப்போது முணுமுணுத்தது. ஜஸி கிஃப்ட், கேகே, ஷ்ரேயா கோஷல், சைந்தவி ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியிருப்பார்கள்.

'ஹஸ்கி' குரலுக்குப் பெயர் போன சைந்தவியை இந்தப் பாடலில் பயன்படுத்தியிருப்பார் ஹாரிஸ். வைரமுத்து இப்பாடலை எழுதியிருப்பார். பாறைகள், வீடுகள், லாரிகளுக்கெல்லாம் வண்ணம் பூசி, இயக்குநர் ஷங்கர் இந்தப் பாடலைக் காட்சிப் படுத்திய விதம் இன்னும் இந்தப் பாடலை பெருமளவு பிரபலமாக்கியது.

ஏலேலமா ஏலே ஏலமா - ஏழாம் அறிவு

நாயகிக்கும் தன் மேல் கொஞ்சம் நேசம் உள்ளது என்று நாயகன் தெரிந்துகொள்ளும்போது வரும் பாடல். எல்லே லாமா ஏலே ஏலமா, சொல்லாமலே உள்ளம் துள்ளுமா, நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா, வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா? என்று நா.முத்துக்குமாரின் வரிகளில் அந்த காதல் உணர்வைக் கொட்டும் விதம் இருக்கும் இந்தப் பாடல்.

விஜய் பிரகாஷ், கார்த்திக், ஷாலினி மற்றும் ஷ்ருதி ஹாசன் இதைப் பாடியிருப்பார்கள். ஏழாம் அறிவு படத்தில் வேறு சில பாடல்களிலும் இதுபோன்ற வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

ஹே லம்பா லம்பா - யான்

ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள்

பட மூலாதாரம், SonyMusicSouthVEVO

ஹாரிஸின் இந்த வித்தியாச வார்த்தைகள் கொண்ட பாடல்களின் பட்டியலில் வாலிபக் கவிஞர் என அழைக்கப்படும் வாலி எழுதிய பாடலும் இடம்பெறுகிறது. நாயகன் முதல் முறையாக நாயகியைப் பார்த்ததும், அவளை வர்ணித்துப் பாடும் பாடல். ஹாரிஸ் துள்ளல் இசையும், வாலியின் துள்ளல் எழுத்தும் சேரும் இந்தப் பாட்டை தேவன் ஏகாம்பரம், கிருஷ்ணா ஐயர் மற்றும் திவ்யா விஜய் ஆகியோர் பாடியிருப்பார்கள்.

ரங்கோலா ஹோலா ஹோலா - கஜினி

ஷங்கர் மஹாதேவன், சுஜாதா, சுசித்ரா, ரஞ்சித் என பல முன்னணி பாடகர்கள் பாடிய பாடல் இது. சுட்டும் விழிச் சுடரே, ஒரு மாலை என முழுமையான மெலடியாக இரு காதல் பாடல்களை அந்தப் படத்தில் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ் சற்று வித்தியாசமாக இந்தப் பாடலைப் படைத்திருப்பார். மற்ற பாடல்களின் வெற்றியால் இந்தப் பாடல் அதிகம் பேசப்படாமல் போய்விட்டது. இந்தப் பாடலை கபிலன் எழுதியிருந்தார்.

அலைக்க லைக்கா - துப்பாக்கி

பார்ட்டி செய்யும் இடத்தில் வரும் பாடல். 'அலைக்க லைக்கா ஆப்பிளின் மேக்கா' என்று தொடங்கும் இந்தப் பாடல் வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலும் தமிழமும் சரிபாதி கலந்து இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இருந்தது. ஸ்டைலான வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடலில் விஜயையும் ஸ்டைலாகக் காட்டியிருப்பார்கள். அவரது நடனத்துக்கு ஏற்ற வேகம் ஹாரிஸின் இசையிலும் இருக்கும். பா.விஜய் எழுதிய இப்பாடலை ஜாவேத் அலி, ஷர்மிளா, சயனோரா ஃபிலிப் ஆகியோர் பாடியிருந்தார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள்

பட மூலாதாரம், Facebook/HarrisJayaraj

மக்காமிஷி - பிரதர்

மில்லினியல்களைத் தன் பாடல் வரிகளை முணுமுணுக்க வைத்த ஹாரிஸ் ஜெயராஜ் 'மக்காமிஷி' மூலம் ஜென் ஸி தலைமுறையையும் கட்டிப்போட்டார். பால் டப்பா எழுதிப் பாடிய இந்தப் பாடல் மிகவும் புதுமையாக இருந்ததோடு அனைத்து தலைமுறைக்குமே பிடிக்கும் வகையில் இருந்தது. நீண்ட நாள்கள் ஹாரிஸிடம் எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கும் இந்தப் பாடல் திருப்தியளிப்பதாக அமைந்தது. பிரதர் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்றாலும், மக்காமிஷி அந்தப் படத்துக்கு ஒரு நல்ல விளம்பரமாக அமைந்திருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நானி கோனி - மாற்றான்

பெரும்பாலான சூர்யா படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை என்பதால், இந்தப் பட்டியலில் பல சூர்யா படப் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலரும்போது வரும் பாடல். வெளிநாட்டு பின்னணியில் இந்தப் பாடலை விவேகா எழுதியிருப்பார். 'யே நானி கோனி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்' என்று இயல்பாக விவேகாவின் தமிழும் அந்த வரிகளில் அமர்ந்திருக்கும். விஜய் பிரகாஷ், கார்த்திக், ஷ்ரேயா கோஷல் ஆகியோர் இதைப் பாடியிருப்பார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு