கோவையில் தோல் அம்மை நோயால் பாதிக்கப்படும் மாடுகள் - பால் மூலம் மனிதர்களுக்கும் பரவுமா?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 40க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தோல் அம்மை நோய் ஏற்பட்டுள்ளது.
இந்த பாதிப்பின் காரணமாக பொள்ளாச்சியில் 4 மாத கன்று சிகிச்சை பலனின்றி இறந்தது. இந்நிலையில் கால்நடை வளர்ப்புத்துறை அதிகாரிகள், மாடுகளுக்கு ஏற்படும் தோல் அம்மை தொற்றை தடுக்க கோவை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி மூகாம் நடத்தி வருகின்றனர்.
தோல் அம்மை தொற்று என்றால் என்ன?
தோல் அம்மைத் தொற்று(Lumpy Skin Disorder), கால்நடைகளில் மாடு, எருமை ஆகிய இனங்களுக்கு ஏற்படும் வைரஸ் தொற்று ஆகும். இந்தத் தொற்று இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்தத் தொற்று முதலில் பரவியது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, கேரளா உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களிலும் இந்த தோல் அம்மை தொற்று பரவி மாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலும் இந்தத் தொற்று தற்போது பரவத் தொடங்கியிருக்கும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள மாடுகளுக்கு இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தோல் அம்மைத் தொற்றால் பாதிக்கப்படும் மாடுகளுக்கு, அதன் தோல் பகுதியில் 5 செ.மீ அளவில் கட்டிகள் உருவாகின்றன.
இந்த பாதிப்பு மாடுகளுக்கு ஏற்படுவதால், மாடுகளின் பால் சுரக்கும் அளவு குறைகிறது. மேலும் சினையாக இருக்கும் ஒரு சில மாடுகளுக்கு கரு கலைந்து விடும் பாதிப்பும் ஏற்படுகிறது.
தோல் அம்மைக்கு தடுப்பூசி

பட மூலாதாரம், ANI
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தோல் அம்மைத் தொற்று பாதிப்பை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் மாடுகளுக்கு தோல் அம்மைத் தொற்று ஏற்படுவது குறைகிறது.
தடுப்பூசிகள் மூலமாக தோல் அம்மைத் தொற்றுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி மாடுகளுக்கு ஏற்படுவதால், தமிழ்நாட்டில் இதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்று காலநடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு துறையின் கோவை மாவட்ட இணை இயக்குநர் பெருமாள்சாமி தெரிவித்தார்.
தோல் அம்மை நோயால் பாதிப்பு
கோவை மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர், பொள்ளாச்சி, மதுக்கரை சுற்றுவட்டாரங்களில் இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு மாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான கிஷோர் குமார் பிபிசி தமிழிடம் பேசிய போது, "கோவை மாவட்டத்தில் தோல் அம்மைத் தொற்று பாதிப்பு மாடுகளுக்குப் பரவி வருகிறது. ஆனால் நாட்டு மாடுகளுக்கு இந்த தொற்று பரவுவது கிடையாது. மாறாக ஜெர்சி மாடுகளுக்குத்தான் இந்தத் தொற்றின் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது," எனத் தெரிவித்தார். பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த மாட்டு சந்தை வியாபாரி கண்ணன், "தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் முன்கூட்டியே தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கியிருந்தால் தோல் அம்மையால் ஒரு சில மாடுகள் இறக்கும் நிலை ஏற்பட்டு இருக்காது," எனக் கூறினார்.
பொள்ளாச்சி ஜெயராமன் கடிதம்

பட மூலாதாரம், ANI
கோவை மாவட்டத்தில் பரவி வரும் தோல் அம்மை தொற்றைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்புத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், தோல் அம்மைத் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு உண்மையான எண்ணிக்கையை வெளியே சொல்ல மறுப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். பொள்ளாச்சி தாலுகாவில் மட்டும் தோல் அம்மைத் தொற்று பாதிப்பு காரணமாக 50 மாடுகள் வரை இறந்திருப்பதாகவும், தனக்கு சொந்தமான மாடு ஒன்றும் கடந்த வாரம் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இறந்து விட்டதாகவும் தெரிவித்தார். பால் மாடு, சினை மாடுகளின் இறப்பு என்பது பொருளாதார ரீதியாகயும் உளவியல் ரீதியாகவும் விவசாயிகளைப் பாதிப்புக்கு உள்ளாக்கும். எனவே இந்தப் பகுதியில் உள்ள மாடுகளுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
மாவட்டம் முழுவதும் தடுப்பூசி மூகாம்

பட மூலாதாரம், ANI
தோல் அம்மைத் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த கோவை மாவட்டம் முழுவதும் உள்ள இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கால்நடைத்துறையின் கையிருப்பில் 1.9 லட்சம் தடுப்பூசிகள் இருப்பதாகவும், தோல் அம்மைத் தொற்று பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்தத் துறையின் கோவை மாவட்ட இணை இயக்குநர் பெருமாள்சாமி தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைவாக இருப்பதாகக் கூறிய அவர், இதுவரை 3 மாடுகள் மட்டுமே இந்த பாதிப்பினால் இறந்துள்ளன என்றார்.
மேலும் இறந்த மாடுகளிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி இருப்பதாகவும், வைரஸ் தொற்றின் புதிய திரிபுகள் குறித்து அங்கு ஆய்வு செய்யப்படும் என்று விளக்கமளித்தார்.
மனிதர்களுக்கு வைரஸ் பரவுமா?

பட மூலாதாரம், Getty Images
’தோல் அம்மைத் தொற்று பரவக்கூடிய நோய் என்பதால், இது மாடுகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுமா,’ என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திலகரிடம் கேட்ட போது, தோல் அம்மைத் தொற்று பரவும் நோய் என்பது உண்மை தான். ஆனால் இது மாடுகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது எனக் கூறினார்.
"இந்தத் தொற்று மாடுகளின் ரத்தத்தை உறிஞ்சும் கொசு, ஒட்டுண்ணிகள் மூலமாக ஒரு மாட்டில் இருந்து மற்றொரு மாட்டுக்குப் பரவுகிறது," என விளக்கினார். இந்தத் தொற்றினால் பாதிக்கப்படும் மாடுகளிடம் இருந்து பெறப்படும் பால் பாதுக்காப்பானது எனவும் அவர் கூறினார். "மனிதர்களுக்கு இயல்பிலேயே பாலை காய்ச்சி குடிக்கும் பழக்கம் இருப்பதால், பாலை சூடாக்கும் போது வைரஸ் கிருமிகள் அழிந்து விடுகின்றன," எனவும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













