இரட்டைக் குழந்தைகளில் ஒரு கருவை மட்டும் கலைக்க கோரும் சிக்கலான வழக்கு - உண்மையில் சாத்தியமா?

மாதிரி படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரி படம்
    • எழுதியவர், சுஷீலா சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தனது வயிற்றில் வளரும் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைக் கலைக்க அனுமதி கோரி பெண் ஒருவர் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவில் 2021ஆம் ஆண்டின் மெடிக்கல் டெர்மினேஷன் ஆஃப் ப்ரெக்னென்ஸி (மருத்துவ காரணங்களுக்கான கரு கலைப்பு) சட்ட திருத்தம் ஒரு பெண்ணுக்கு 24 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கிறது.

1971ஆம் ஆண்டின் MTP சட்டத்தை திருத்தியதன் மூலம், சில அசாதாரண சூழல்களில் கருக்கலைப்புக்கான செல்லுபடியாக்க காலம் 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது.

மனு தாக்கல் செய்துள்ள இந்தப் பெண்ணின் கர்ப்பத்திற்கு 25 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

”இது தொடர்பாக, பம்பாய் உயர்நீதிமன்றம் மருத்துவக் குழுவை அமைத்து, 25 வார கர்ப்பிணிப் பெண்ணின் கருவைக் குறைப்பது அதாவது இரண்டு கருக்களில் ஒன்றை அகற்ற முடியுமா என்றும் இது தாய் மற்றும் அவரது வயிற்றில் வளரும் இன்னொரு கரு மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கேட்டுள்ளது,” என்று இந்த வழக்கில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அதிதி சக்ஸேனா கூறினார்.

இந்தியாவில் இதுபோன்ற இரண்டாவது வழக்கு இது என்றும் இரண்டுக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

"முதல் வழக்கு 2020இல் வந்தது. இரண்டுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால், ஒரு கருவில் அசாதாரண குறைபாடுகள் இருந்தன. மற்றொன்று ஆரோக்கியமாக இருந்தது.

ஆரோக்கியமான கருவைக் காப்பாற்றுவது மற்றும் , மற்றொரு கருவைக் கலைப்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. முதல் வழக்கில் பம்பாய் உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதிக்கவில்லை.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. கருவைக் குறைக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.

"நீதிமன்ற உத்தரவின்படி ஜே.ஜே. மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கருவில் குறைபாடு இருப்பதாகவும் கருவைக் குறைக்க முடியும் என்றும் கூறிய மருத்துவர்கள், ஆனால் உடனடியாக அதைச் செய்யாமல் சிறிது காலம் கழித்துச் செய்யுமாறும் இந்தக் குழு யோசனை தெரிவித்துள்ளது,” என்று வழக்கறிஞர் சமீபத்திய வழக்கைப் பற்றிக் கூறினார்.

இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைக் கலைப்பது எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம், ANKIT SAH/GETTY IMAGES

படக்குறிப்பு, மாதிரி படம்

முழு விவகாரம் என்ன?

மும்பையைச் சேர்ந்த இந்தப் பெண் செயற்கை கருத்தரித்தல் மூலம் கர்ப்பமானார்.

செயற்கை கருத்தரித்தல் முறையில் கருமுட்டை மற்றும் விந்து, ஆய்வகத்தில் சோதனைக் குழாய்க்குள் கலக்கப்படுகின்றன. அதன் பிறகு உருவாகும் கரு தாயின் வயிற்றில் பொருத்தப்படுகிறது.

இந்தப் பெண்ணின் கணவர் அமெரிக்காவில் வசிக்கிறார். செயற்கை கருத்தரித்தல் முயற்சிக்குப் பிறகு அந்தப் பெண் அங்கு சென்றுவிட்டார். இரட்டைக் குழந்தைகளுக்கு அவர் தாயாகப் போகிறார் என்பது ஆகஸ்ட் மாதத்தில் தெரிய வந்தது.

”நவம்பர் மாதம் பரிசோதனை செய்தபோது, ​​இரட்டைக் கருவில் ஒன்றுக்கு மரபணு குரோமோசோமல் அனாமலி இருப்பது கண்டறியப்பட்டது,” என்று அந்தப் பெண் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நபரின் மொத்த குரோமோசோம்களின் எண்ணிக்கை 46. ஒரு குழந்தையின் மரபணுக்கள் பாதி தாயிடமிருந்தும் பாதி தந்தையிடமிருந்தும் வருகின்றன.

இந்த மரபணுக்கள் மற்றும் குரோமோசோம்களில் ஏதேனும் கோளாறு இருந்தால், அது மருத்துவ மொழியில் மரபணு குரோமோசோமல் அனாமலி அல்லது குரோமோசோம் குறைபாடு என்று அழைக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அந்தத் தம்பதி மருத்துவர்களை அணுகினர். கருவைக் குறைக்க மருத்துவர்கள் யோசனை தெரிவித்தனர்.

இந்நிலையில் கர்ப்பமாகி 25 வாரங்கள் ஆகிவிட்டதால் தம்பதி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

"மாநிலத்தில் மருத்துவ வாரியம் இல்லை. எனவே இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றது. மருத்துவக் குழுவை அமைத்து அதில் கருவுறுதல் நிபுணர்களைச் சேர்க்குமாறு நீதிமன்றம் ஜேஜே மருத்துவமனையை கேட்டுக் கொண்டது,” என்று வழக்கறிஞர் அதிதி சக்ஸேனா கூறினார்.

கருக்கலைப்பு தாய்க்கும் மற்ற குழந்தைக்கும் பாதுகாப்பானது என்று மருத்துவக் குழு கருதுகிறதா, அதை எப்போது செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் வினவியது.

இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைக் கலைப்பது எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம், ANAND FERNANDO / EYEEM

படக்குறிப்பு, மாதிரி படம்

இந்த கோளாறின் விளைவு என்னவாக இருக்கும்?

வயிற்றில் வளரும் கருவில் இதுபோன்ற கோளாறு கண்டறியப்பட்டால், குழந்தைக்கு

  • டவுன் சிண்ட்ரோம் (மரபணுக் கோளாறு)
  • இதய நோய் அபாயம்
  • பிளவுபட்ட உதடு மற்றும் மேல் வாய்
  • சிந்தனை மற்றும் புரிந்து கொள்வதில் சிரமம்
  • இது தவிர, ரத்தத்தில் கால்சியம் குறைபாடு
  • காது கேளாமை
  • சிறுநீரகத்தின் செயல்பாட்டில் பிரச்னைகள் போன்றவை ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைக் கலைப்பது எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம், ANINDAM GHOSH / EYEEM

படக்குறிப்பு, மாதிரி படம்

கரு குறைப்பு என்றால் என்ன?

"24 வாரங்களில் கருவைக் குறைப்பது மிகவும் பொதுவானது அல்ல. மேலும் கரு பெரியதாக இருக்கும். ஆகவே கரு ​​குறைப்பின்போது பிரச்னைகள் ஏற்படலாம்.

சில நேரங்களில் ஒரே பையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் இருக்கும். அப்போது இத்தகைய குறைப்பு மேலும் கடினமாகிறது. ஏனெனில் இது ஆரோக்கியமான கருவையும் பாதிக்கக்கூடும்.

எனினும் இந்த வழக்கில் இரண்டு கருக்களும் வெவ்வேறு பைகளில் இருப்பது தெரிய வந்துள்ளது,” என்று ஆசியா சேஃப் அபார்ஷன் பார்ட்னர்ஷிப் என்ற பெயரில் செயல்படும் நெட்வொர்க்கின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுசித்ரா தல்வி தெரிவித்தார்.

குழந்தையின்மைக்கான சிகிச்சையின் போது, ​​ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் உருவாகின்றன என்று குஜராத்தின் ஆனந்தில் பல ஆண்டுகளாக ஐவிஎஃப் கிளினிக்கை நடத்தி வரும் டாக்டர் நயனா படேல், பிபிசியிடம் கூறினார்.

இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைக் கலைப்பது எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம், RASI BHADRAMANI/GETTYIMAGES

படக்குறிப்பு, மாதிரி படம்

கருவைக் குறைக்கும் செயல்முறை

கருவை குறைக்கும் செயல்முறையை விளக்கிய அவர், ”தாயுடைய வயிற்றின் வழியாக குழந்தையின் இதயத்தில் பொட்டாசியம் குளோரைடு ஊசி போடப்படுகிறது. இதனால் அதன் இதயத்துடிப்பு நின்றுவிடும். இந்த ஊசி நீளமானது.

பின்னர் பெண் 24 வாரங்கள் கண்காணிப்பில் வைக்கப்படுகிறார். இதற்குப் பிறகு கருவின் வளர்ச்சி நின்று அது அமினோடிக் திரவத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது.

மறுபுறம் கருவுக்கு ஆறு அல்லது ஏழு வாரங்கள் மட்டுமே ஆகியிருந்தால் அதை vagainal suction ஊசி மூலமாகவும் வெளியே எடுத்துவிடலாம்,” என்று குறிப்பிட்டார்.

ஆனால் 25 வாரங்களுக்கு மேலான கர்ப்பத்தில் பிரசவம் நடக்குமா?

இதற்குப் பதிலளித்த டாக்டர் சுசித்ரா தல்வி, ”பல நேரங்களில் குழந்தை நேரத்திற்கு முன்பே பிறந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

ஆனால் அத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளின் நுரையீரலுக்கு காற்றை சுவாசிக்கப் போதுமான திறன் இருக்காது. ஏனெனில் அவற்றின் நுரையீரல் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. அத்தகைய சூழ்நிலையில் குழந்தைக்கு NICUஇல் ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது.

குழந்தையின் ஆக்ஸிஜன் அளவு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் மற்றும் சீரான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்றால் அது குழந்தையின் அறிவுத்திறன்(IQ) அல்லது கண்பார்வையையும் பாதிக்கலாம்,” என்று கூறினார்.

முன்கூட்டிய பிரசவம் குழந்தைக்கு ஆபத்தானது என்று அவர் கூறுகிறார். இது ஓர் அசாதாரண சூழ்நிலை என்பதால் இந்த விஷயத்தில் மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 16ஆம் தேதி நடைபெற உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: