மூளையில் உள்ள கெட்ட நினைவுகளை மட்டும் நம்மால் அழிக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
நம்முடைய மூளையில் பல்வேறு நினைவுகள் பதிவாகும் நிலையில், அதிலிருந்து கெட்ட நினைவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து நம்மால் நீக்க முடியுமா? பகலில் நடக்கும் பல விஷயங்களை நம் மூளை சேமித்து வைக்கிறது. ஆனால் அதில் பெரும்பாலானவை மறந்துவிடும். எனினும், கெட்ட நினைவுகளைச் சேமிக்க ஒரு குறிப்பிட்ட வசதி உள்ளது. நினைவுகளைச் சேமிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் நிச்சயம் நமக்கு உளவியல்ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், சில மோசமான சூழலில் மன உளைச்சல் சீர்கேட்டையும் ஏற்படுத்தும். அதற்கான காரணம் என்ன?
எதிர்மறை அனுபவங்கள் உணர்ச்சிகளுடன் வலுவான தொடர்பு கொண்டிருப்பதும் இதற்கு முக்கியக் காரணம். உணர்வுகளுடன் இணைக்கப்பட்ட நினைவுகள் நாம் உயிர் வாழ்வதற்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதி, நினைவுகளை அவற்றின் பயன்களின் அடிப்படையில் நம் மூளை வகைப்படுத்திச் சேமிக்கிறது.
நகரத்தின் ஆபத்தான பகுதியைக் கடக்கும்போது நாம் மிகவும் பயந்திருந்தால், அதை மூளை சேமித்து வைக்கும். அதனால் நாம் மீண்டும் பயம் கொள்ளமாட்டோம்.
எதிர்கொள்ளும் சூழல் உண்மையிலேயே அதிர்ச்சிகரமானதாக இருக்கும்போது நிலைமை மேலும் சிக்கலாக இருக்கும். அந்த சந்தர்பத்தில் நம் மூளை அந்த அனுபவங்களை மறைக்க முயலும். ஆனால், கெட்ட நினைவுகள் மீண்டும் எழும்போது சிக்கல் உருவாகிறது.
அதிர்ச்சிகரமான அனுபவங்களை நீக்க ஒளி மற்றும் ஒலி
நரம்பியல் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு நினைவை நாம் சேமிக்கிறோமா அல்லது நீக்குகிறோமா என்பதைத் தீர்மானிப்பதில் சிறிய காரணிகூட பங்கு வகிக்கமுடியும்.
எடுத்துக்காட்டாக, ஒளி. இருட்டில் இருக்கும்போது அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை மறக்க வைக்கும் திறன் கொண்டது. அதாவது நினைவக பராமரிப்பு உட்பட மூளை செயல்பாடுகளின் பண்பேற்றும் காரணியாக ஒளி செயல்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
மற்றொரு முக்கியமான காரணி ஒலி.
பகலில் நமது மூளை நினைவுகளைச் சேமித்து அவற்றை இரவில் புதுப்பிக்கிறது. அந்த வகையில், புதிய நினைவுகள் இரவு ஓய்வு நேரத்தில் நீண்ட கால நினைவுகளாக மாற்றப்படும்.
சமீபத்திய ஓர் ஆய்வில் யார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட எதிர்மறை அனுபவங்களை நீக்க செவிவழி தூண்டுதல்களைப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் சோதனை கட்டத்தில் இருந்தாலும், நாம் தூங்கும்போது கேட்கும் ஒலிகளின் அடிப்படையில் அதிர்ச்சிகரமான நினைவுகளை பலவீனப்படுத்துவதற்கான எதிர்கால சிகிச்சைகளை உருவாக்க இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நினைவுகளை மறக்க உதவும் மருந்துகள்
எதிர்காலத்தில் மோசமான நினைவுகளை மறக்க உதவும் மாத்திரைகள் சந்தையில் விற்கப்படுமா என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்குரிய சரியான பதில் இல்லாவிட்டாலும்கூட, தற்போதுள்ள சில மருந்துகள் அதிர்ச்சிகரமான நினைவுகளை அழிக்க உதவும் என்பதற்கான அறிவியல் சான்றுகள் உள்ளன.
சான்றாக ப்ராப்ரானோலோல். தமனி சார்ந்த உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் இந்த மருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட உயிரினங்களின் அதிர்ச்சியை மறக்க உதவியது.
நினைவுகள் மாற்றப்பட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் நியூரான்களில் உள்ள புரதம் முக்கியமானது. இந்தப் புரதம் உடைந்தால், நினைவுகள் மாற்றியமைக்கப்படும். அது இருந்தால் நினைவுகள் பராமரிக்கப்படும்.

பட மூலாதாரம், iStock
இந்தச் சோதனை விலங்குகள் மீது நடத்தப்பட்டவையாக இருந்தாலும், நரம்பு மண்டலம் குறித்து ஆராய்வதற்கு சிறந்த மாதிரியாக உள்ளது. மனித மூளை அதற்கு ஒத்ததாகவே இருந்தாலும் மிகவும் சிக்கலானது.
அதிர்ச்சிகரமான அனுபவங்கள் மறப்பதற்கு மிகவும் கடினமானவை. அவை நம்மை வெகுவாகப் பாதிக்கவும் கூடும்.
லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள், பொதுவாக மூட்டு வலி சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரோகார்ட்டிசோன் என்ற மருந்தை அதிர்ச்சிகரமான ஒரு நிகழ்விற்குப் பிறகு எடுத்துக்கொண்டால் அவை ஊடுருவும் நினைவுகளை மறக்கச் செய்ய உதவும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளனர்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அவர்களின் உடலிலுள்ள பாலியல் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து இதன் விளைவு வேறுபட்டது.
சான்றாக, அதிக ஈஸ்ட்ரோஜன் அளவைக் கொண்ட ஆண்களுக்கு குறைவான அதிர்ச்சிகரமான நினைவுகள் இருந்தன.
பெண்களில் இது நேர்மாறாக இருந்தது. ஹைட்ரோகார்டிசோன் சிகிச்சைக்குப் பிறகு, ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்ததால், அவர்கள் மோசமான நினைவுகளுக்கு எளிதில் பாதிக்கப்பட்டனர். அதே மருந்து சிலருக்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதால் இந்த ஆய்வு பாலினக் கண்ணோட்டத்துடன் அவசியமாகிறது.
தற்சமயத்தில் அதிர்ச்சி ஏற்பட்ட உடனேயே அல்லது தூக்கத்திற்கு முன் நினைவாற்றல் ஒருங்கிணைக்கப்பட்ட சில மணிநேரங்களில் ஹைட்ரோகார்டிசோன் எடுக்கப்படும்போது மட்டுமே பயனுள்ளதாக உள்ளது. எனினும், நீண்டகால உளவியல் துயரங்களை மறத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் இயற்கையான செயல்முறையில் அறிவியல் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இந்த வகையான ஆய்வுக்குச் சில வரம்புகள் உள்ளன என்பது உண்மைதான். சோதனை ரீதியாக அதிர்ச்சிகர தூண்டுதல்கள் தூண்டப்படும் விதம் நிஜ வாழ்க்கையில் மோசமான அனுபவத்திற்குப் பிறகு ஏற்படும் நினைவுகளின் தீவிரத்தைப் பிரதிபலிக்காமலும் இருக்கலாம்.
எனினும், மோசமான நிகழ்வுக்குப் பிந்தைய மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கான புதிய சிகிச்சைகள் பற்றிய ஆய்வில் இது புதிய கதவுகளைத் திறக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












