உடனடி எடை குறைப்பும் உளவியல் பின்னணியும் - ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என்ன?

எடைக் குறைப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இரா.சிவா
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் உடல் எடையைக் குறைப்பது தொடர்பாக இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான மருத்துவர் அருண்குமார் 100 கிலோவுக்கும் அதிகமாக இருந்த தன்னுடைய உடல் எடையைக் குறைக்க கடந்த ஓராண்டுக்கும் மேலாக மருந்துகள் எடுத்து வந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி கல்லீரல் செயலிழந்து உயிரிழந்தார்.

மற்றொரு சம்பவத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா என்ற 21 வயது இளைஞர் உடல் எடையைக் குறைக்க கடந்த 10 நாட்களாக மருந்து எடுத்து வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி சூர்யா உயிரிழந்தார்.

உடல் எடையைக் குறைப்பது தொடர்பாக பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் வலம்வரும் நிலையில், அதை நம்பி முறைப்படுத்தப்படாத மருந்துகளை உட்கொண்டு பலரும் இது போன்று மரணமடைவது தொடர்கதையாகி வருகிறது.

கல்லீரல் செயலிழக்கும் அபாயம்

கல்லீரல் செயலிழப்பு

பட மூலாதாரம், Getty Images

உடல் எடையைக் குறைக்க முறைப்படுத்தப்படாத மருந்துகளை எடுத்துக்கொள்வது கல்லீரல் செயலிழப்பு முதல் உயிரிழப்பு வரை கொண்டு செல்லக்கூடும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் பிரபு மனோகரன்.

''உடல் எடையைக் குறைப்பதற்காக முறைப்படுத்தப்படாத மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது லிவர் என்சைம் எனப்படும் கல்லீரல் நொதிகளில் மாற்றம் ஏற்படும்.

கல்லீரல்தான் நம் உடலின் சுத்திகரிப்பு நிலையம். இத்தகைய மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது நம்முடைய கல்லீரல் படிப்படியாக பாதிப்படைய ஆரம்பிக்கும். கல்லீரல் சரியாகச் செயல்படவில்லை என்றால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து, ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்,'' என்கிறார் மருத்துவர் பிரபு மனோகரன்.

10 நாளில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா, ஒரு மாதத்தில் இத்தனை கிலோ குறைக்க வேண்டுமா என்பது போன்ற பல விளம்பரங்களை அண்மைக் காலங்களில் அதிகம் பார்க்க முடியும் நிலையில், அதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்கிறார் மருத்துவர் பிரபு மனோகரன்.

''10 நாளில் குறைக்க முடியும், 30 நாளில் குறைக்க முடியும் என்பதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. சீரான நடைபயிற்சியும் சீரான உணவுப்பழக்கமும்தான் உடல் எடையைக் குறைப்பதற்கான சரியான வழி.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தினசரி நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். முடிந்தவரை மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையை வாழ வேண்டும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால் சீரான உடற்பயிற்சியுடன் அதிகபட்சம் 5 கிலோவரை ஒரு மாதத்தில் குறைக்கலாம். அதற்கு அதிகமாகக் குறைக்க நினைத்தால் அதில் அபாயங்கள் இருக்கலாம்," என்கிறார் பிரபு மனோகரன்.

உடல் எடையைக் குறைப்பதற்கு இன்று நவீன சிகிச்சை முறைகள் இருந்தாலும், அதிலும் பக்க விளைவுகள் உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

எடைக் குறைப்பு நல்ல நோக்கம்தான், ஆனால்...

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பது நல்ல நோக்கம்தான். ஆனால், அது உடனடியாக நடக்க வேண்டும் என்று நினைப்பதில்தான் ஆபத்து உள்ளது என்கிறார் உளவியலாளர் சில்வினா மேரி.

இதன் பின்னணியில் உள்ள உளவியல் நோக்கம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சில்வினா மேரி, "சிலர் எப்போதுமே தன்னைப் பற்றி குறைவாகவே எண்ணி, மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்ப்பார்கள், இந்த சமூகம் நம்மை ஏற்குமா என்று நினைத்து தன்னைத் தானே ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்குச் சென்றுவிடுவார்கள்.

இதன் உச்சகட்ட நிலையை மருத்துவ மொழியில் பாடி டிஸ்மார்ஃபிக் டிஸ்ஆர்டர் (Body dysmorphic disorder) என்று குறிப்பிடுவோம். உடல் எடை என்று வரும்போது இவர்கள் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு, அவர் உடல் எடையை வேகமாகக் குறைத்தார், என்னால் ஏன் குறைக்க முடியவில்லை என்று நினைக்க ஆரம்பிப்பார்கள்.

இதற்கு அவர்களின் மரபியலும் காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த உண்மையை அவர்களால் ஏற்க முடியாது. இந்த மாதிரியான உளவியல் சிக்கல் நம் அன்றாட வாழ்க்கையையே பாதித்துவிடும்," என்றார்.

உளவியலாளர் சில்வினா மேரி
படக்குறிப்பு, உளவியலாளர் சில்வினா மேரி

"நம்முடைய உடல் ஆரோக்கியமாக உள்ளதா என்பதைப் பொறுத்துதான் உடல் எடையைக் குறைப்பதற்கான தேவை உள்ளதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். உடனடியாகக் குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்குவது ஆபத்தான காரியம்.

ஒரு வேகத்தில் பல கிலோ உடல் எடையைக் குறைத்துவிட்டு மீண்டும் பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்பும்போது உடல் எடை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அது ஒருவித மனச்சோர்வுக்கு வழிவகுக்கலாம்," என்றும் சில்வினா மேரி கூறுகிறார்.

சரிவிகித உணவுமுறை

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சரியான ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையோடு அதைச் செய்வதுதான் நல்லது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி பஜாஜ்.

"உங்களுக்கு எவ்வளவு கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து தேவைப்படுகிறது என்பதைக் கண்டறிந்து ஊட்டச்சத்து நிபுணர்கள் வழிகாட்டுவார்கள். உங்களுக்கு ஏற்கெனவே ஏதேனும் நோய்கள் உள்ளதா, குறிப்பிட்ட நோய்கள் இருந்தால் எந்த உணவு முறையைப் பின்பற்ற வேண்டும், எதைப் பின்பற்றக்கூடாது என்று அவர்களால்தான் வழிகாட்ட முடியும். பேலியோ டயட், கீட்டோ டயட் என்று பலவித உணவுமுறைகள் இருந்தாலும் சரிவிகித உணவுமுறைதான் மிகச் சிறந்தது" என்கிறார் மீனாக்ஷி பஜாஜ்.

ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி பஜாஜ்
படக்குறிப்பு, ஊட்டச்சத்து நிபுணர் மீனாக்ஷி பஜாஜ்

நம்முடைய வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்த உடலும் மனமும் ஒத்துப்போகும் தருணத்தில்தான் உடல் எடைக் குறைப்பு முயற்சியிலேயே இறங்க வேண்டும் என்கிறார் உளவியலாளர் சில்வினா மேரி.

"உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சியில் இறங்கும்போது நம்முடைய மனதையும் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் அந்த முயற்சி தோல்வியடைந்தாலும் மனம் தளராமல் மீண்டும் தயாராக முடியும். வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்திவிட்டு செய்யும் எடைக் குறைப்பு முயற்சிதான் ஆபத்து மற்றும் பக்க விளைவு இல்லாதது," என்கிறார் அவர்.

"உங்கள் உடலில் இருந்து ஒரு கிலோ எடை குறைய வேண்டுமென்றால் உங்கள் உணவில் 7,000 கலோரி குறைக்க வேண்டும் . எனவே உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று வருவர்களுக்கு நாங்கள் சொல்வது ஒன்றுதான்: `zip your Lip, move your Hip`.

நீங்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் கலோரியில் இருந்து 500 கலோரி குறைத்து, தினசரி 30 முதல் 40 நிமிடம் நடைப்பயிற்சி செய்தாலே போதும். ஒரு மாதத்திற்கு 4 கிலோவரை உங்களால் ஆரோக்கியமாகவே குறைக்க முடியும்" என்கிறார் மீனாக்ஷி பஜாஜ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: