மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

toilet health

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மார்ட்டின் வெய்ஸி
    • பதவி, தி கான்வர்சேஷன்

ஒருவர் எத்தனை மணிநேரத்திற்கு ஒருமுறை மலம் கழிக்க வேண்டும்? இந்த கேள்வியை கூகுளில் தேடினால் ஒரு நாளுக்கு மூன்று முறை முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை என பலவிதமான பதில்கள் கிடைக்கும்.

ஆனால், இதற்கு உண்மையான பதில்: உங்களுக்கு அதற்கான உந்துதல் ஏற்படும் போதெல்லாம் மலம் கழிக்க வேண்டும் என்பதுதான்.

மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்போது அதனை செய்யாமல் அடக்குவது, காலம் தாழ்த்துவதால் குடல் புற்றுநோய், செரிமான மண்டலத்தில் சிறிய மற்றும் பெரிதளவிலான புடைப்புகள் ஏற்படுவது, மூலநோய், ஆசனவாயிலிருந்து நீர் வெளியேறுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும். 

மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலை தூண்டுதல்

உணவு உண்பது, மலம் கழிக்கும் எண்ணத்தைத் தூண்டுவதாக, 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உடலியல் நிபுணர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக, காலை உணவுக்குப் பிறகு அந்தத் தூண்டுதல் அதிகரிக்கிறது. 

குழந்தைகளுக்கு மலம் கழிக்கும் உந்துதல் ஏற்படும்போது அதனை தாமதிக்காமல் செய்கின்றனர். ஆனால், நடக்கத் தொடங்கிய அதே வயதில், மலம் கழிப்பதை அடக்குவதையும் கற்றுக்கொள்கிறோம். 

மலம் கழிப்பதை சிறிது நேரம் அடக்கும்போது அந்த உந்துதல் தற்காலிகமாக நீங்கிவிடும். ஆனால், நீண்ட நேரத்திற்கு மலத்தை அடக்குவது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

அதாவது,

  • மலச் சிக்கல்

  • வயிற்று வலி 

  • வயிறு உப்புவது 

  • வாயுத் தொல்லை 

  • மெதுவாக மலம் வெளியேறுதல் 

ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

மலம் வெளியேறும் நேரத்தைக் கண்டறிதல்

நீங்கள் உண்ணும் உணவு மலமாக வெளியேற எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தெரிந்துவைத்திருப்பது அவசியம். 

ஏனெனில், உணவு உண்டபின் அது மலமாக வெளியேறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலுடன் தொடர்புடையது. 

இந்த நேரத்தைக் கணக்கிடகு மிக எளிய வழி உள்ளது. கையளவு சமைக்காத இனிப்பு சோளத்தை விழுங்கிவிட்டு, பின்னர் மலத்தில் சோளக்கரு தெரிகிறதா என்பதைக் கவனியுங்கள். இனிப்பு சோளத்தை விழுங்கிய எட்டு முதல் 24 மணிநேரத்தில் இது நிகழ வேண்டும். 

நீண்ட நேரம் கழித்து மலத்தை வெளியேற்றினால் என்ன நிகழும்?

வயிற்றுக்குள் மலத்தை அடக்குவது என்பது நீங்கள் உண்ணும் உணவின் எச்சம், உங்கள் உடலில் தேவையானதை விட நீண்ட நேரம் தங்கியிருக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. இதனால், உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

நீர், பாக்டீரியா, நைட்ரஜன் பொருட்கள், கார்போஹைட்ரேட், செரிக்கப்படாத தாவரப் பொருட்கள் மற்றும் கொழுப்புகள் அடங்கிய சுமார் ஆறு டன் மலத்தை நம் வாழ்நாளில் உற்பத்தி செய்கிறோம். 

இந்தக் கலவை நீண்ட நேரம் நம் உடலில் தங்கினால், உள்ளுக்குள் நொதித்தல் நிகழ்கிறது. இது வாயுவை மட்டும் ஏற்படுத்தாமல், வளர்சிதை மாற்ற ரசாயனங்களையும் உருவாக்குகிறது. 

பண்டைய கிரேக்கர்களின் காலத்திலிருந்தே, குடலில் உள்ள கழிவுப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியமான நான்கு உடல் பொருட்களின் (ரத்தம், மஞ்சள் பித்தம், கருப்பு பித்தம் மற்றும் சளி) சமநிலையின்மைக்கு பங்களிப்பதாக கருதப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் மலச் சிக்கல் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மோசமான ஒழுங்கீனங்களைச் சமாளிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தின் ஓர் அங்கமாக கெலாக்ஸ் தானியம் உருவாக்கப்பட்டது. 

உணவு உண்டபின் நீண்ட நேரத்திற்கு பின் மலம் கழிப்பது,

  • பெருங்குடல் புற்றுநோய்

  • பெருங்குடல் கட்டிகள்

  • செரிமான மண்டலத்தில் புடைப்புகள் ஏற்படுவது

  • பித்தப்பை கற்கள்

  • மூல நோய்

உள்ளிட்டவை ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. 

உணவு உண்டபின் குறைவான நேரத்தில் மலம் கழிப்பதும் குடல் சார்ந்த பல்வேறு கேடுகளுக்கு வழிவகுக்கிறது. 

உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

என்ன செய்ய வேண்டும்?

குடல் சார்ந்த இத்தகைய உடல்நலக் கேடுகளுக்கு நார்ச்சத்து மற்றும் திரவ உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இவற்றையெல்லாம்விட மேலானது, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்போது அதனைச் செய்துவிடுவதே.

மார்ட்டின் வெய்ஸி, பிரிட்டனின் நியூகேஸில் பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராக உள்ளார்.

காணொளிக் குறிப்பு, பெண்கள் இடையே அதிகரித்து வரும் கோபம் - 9 வருடங்களில் என்ன நடந்தது? - காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: