வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் என்ன ஆபத்து?

வைட்டமின் மாத்திரைகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஆரோக்கியமான நபர்கள் பலர், தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வாழ்நாளை நீட்டிக்கவும் மருத்துவர் பரிந்துரை இன்றி, வைட்டமின் மாத்திரை சாப்பிடும் பழக்கத்தில் இருப்பதாகவும், அதன் காரணமாக பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் கூறுகிறார்.

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஊட்டச்சத்துதுறை மருத்துவர் மீனாட்சி பஜாஜ் தன்னிடம் ஆலோசனைக்கு வந்த சில நோயாளிகள், வைட்டமின் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இன்றி சாப்பிட்டு வருவதை கண்காணித்ததாக கூறுகிறார். அவர்களில் சிலர் கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைட்டமின் சக்தியை அதிகரிக்கவும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டார்கள் என்றும் பின்னர் அதை பழக்கமாக பின்பற்ற தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

''கொரோனா பற்றிய அச்சம் காரணமாக, வைட்டமின் மாத்திரைகளை எடுக்க தொடங்கியவர்கள் அதனை தங்களது தினசரி உணவுடன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒரு சிலர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகும், தொடர்ந்து நோய் எதிர்ப்புச் சக்தியை நீட்டிக்க வைட்டமின் மாத்திரை சாப்பிடுவதைப் பழக்கமாக கொண்டிருந்தார்கள். ஒரு சில இளைஞர்கள் கூட, தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதுபோன்ற வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடவேண்டும் என்ற தவறான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இதனால், இதயநோய், சிறுநீரக கற்கள் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும்,'' என பிபிசி தமிழிடம் மருத்துவர் மீனாட்சி தெரிவித்தார்.

வைட்டமின் மாத்திரைகளை எப்போது சாப்பிடவேண்டும், தொடர்ந்து வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன உள்ளிட்ட பிபிசி தமிழின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவரது பேட்டியிலிருந்து:

ஆரோக்கியமான நபர் ஒருவர் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதால் என்ன பிரச்னை ஏற்படும்?

பொதுவாக, உடலில் தேவையான நுண் சத்துகள் குறைந்த அளவில் இருக்கும் நபர்களுக்கு பரிந்துரைக்கப்படும் வைட்டமின் மாத்திரைகளை நாமாகவே எடுத்துக்கொள்வதால் நம் உடலில் பலவிதமான உபாதைகள் ஏற்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் வீட்டில் சமைக்கும் சாம்பாரில் ஒரு நாள், தெரியாமல் உப்பு அதிகமாக போட்டுவிட்டீர்கள், அன்று உப்பு கரிக்கும் சுவை உங்களுக்கு தெரியும். ஆனால் தினமும் அதே அளவை நீங்கள் பயன்படுத்தினால் என்ன ஆகும்? தினமும் உப்பின் அளவு அதிகமாக சேர்த்துக்கொண்டால், ரத்தஅழுத்தம் அதிகரிக்கும், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகலாம், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் கூட உண்டு. அதுபோல, தினமும் நீங்களாகவே ஒரு வைட்டமின் அளவை உங்கள் உடலில் கூட்டிக்கொண்டே வந்தால், அதனால் பல தீங்குகள் ஏற்படும். ஒவ்வொரு வைட்டமின் அளவை பொறுத்தும் அந்த பாதிப்பு வேறுபடும்.

வைட்டமின் மாத்திரைகள்

பட மூலாதாரம், Getty Images

எடுத்துக்காட்டாக, கொரோனா முதல் அலை ஏற்பட்டிருந்த காலத்தில், வைட்டமின் சி குறைவாக இருந்த ஒரு பெண்மணிக்கு வைட்டமின் சி மாத்திரையை மருத்துவர் பரிந்துரை செய்திருந்தார். ஆனால் அவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, தினமும் மூன்று வேளையும் எடுத்துக்கொண்டிருந்தார். இந்த மாத்திரையை தொடர்ந்து அவர் சாப்பிட்டு வந்ததால், அவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிட்டன. அதனால், மாத்திரையை எத்தனை மாதத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற வரைமுறையை மருத்துவரிடம் கேட்டறிவது சிறந்தது.

அதேபோல, வைட்டமின் டி குறைபாடு இருந்த பெண்மணி ஒருவருக்கு வைட்டமின் மாத்திரையை ஒரு மாதத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். ஒரு சில மாதங்களுக்கு பின்னர், அவருக்கு உடல் சோர்வு அதிகமாக இருந்ததால், அவராகவே மீண்டும் மாத்திரை சாப்பிட தொடங்கிவிட்டார். அவருக்கு ஏற்கனவே சிறுநீரக பிரச்னை இருந்துள்ளது. தற்போது அது மேலும் அதிகரித்துள்ளது. சமீப காலமாக சிகிச்சை தரும்போது, மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுக்கவேண்டாம் என பலருக்கும் அறிவுறுத்துகிறோம்.

வைட்டமின் மாத்திரைகளை யார் எடுத்துக்கொள்ளவேண்டும்?

புற்றுநோய் மற்றும் காசநோய் பாதிக்கப்பட்டவர்கள், கர்பிணிகள், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள், கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள் மாத்திரைகளை சாப்பிடவேண்டும். இதுபோன்ற தனிக்கவனம் தேவைப்படும் நபர்களுக்கு அவர்கள் சாப்பிடும் உணவில் உள்ள நுண்சத்துகளை தாண்டி வைட்டமின்கள் தேவைப்படும் என்பதால், மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். கர்ப காலத்தில் இரும்பு சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில், வயிற்றில் உள்ள குழந்தைக்கு நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

அதுபோல, உடலில் இருந்து அதிக கழிவு வெளியேறும் நபர்கள், சிறுகுடல் ரத்தக்கசிவு காரணமாக மலத்தில் ரத்தம் வெளியேறும் பிரச்சனை இருப்பவர்கள், மருத்துவர் பரிந்துரை செய்யும் ப்ரோடீன் , இரும்பு சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த காரணங்கள் இல்லாமல், ஆரோக்கியமான நபர் ஒருவர், தனது வாழ்நாளை நீட்டிக்கவேண்டும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவேண்டும் என்பதற்காக வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சரியல்ல.

மல்டி வைட்டமின் மாத்திரைகள் எவ்வளவு காலத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்?

ஒவ்வொருவரின் உடல்நலத்தை பொறுத்து மருத்துவர் அறிவுறுத்தும் காலகட்டத்திற்குத்தான் வைட்டமின் மாத்திரைகளை பயன்படுத்தவேண்டும். ஒருமுறை உங்களுக்கு வைட்டமின் குறைபாடு இருப்பதற்காக மருத்துவர் பரிந்துரை செய்த மாத்திரையை வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதில்லை. ஒரு சில மாதங்களில் உங்கள் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், தொடர்ந்து அந்த மாத்திரைகளை எடுத்தால் பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மருத்துவர் கூறிய கால அளவுக்கு மட்டுமே மாத்திரைகளை பயன்படுத்தவேண்டும்.

ஊட்டச்சத்துகளை மாத்திரைகளாக எடுத்துக்கொள்வதிலும், உணவாக எடுத்துக்கொள்வதிலும் என்ன வேறுபாடு உள்ளது?

உணவுதான் மருந்தாக முடியும், மருந்து என்றுமே உணவுக்கு ஈடாகாது. முதலில் உணவு மற்றும் மாத்திரைகளை எவ்வாறு உங்கள் உடல் ஏற்றுக்கொள்கிறது என்பதை புரிந்துகொள்வோம். மாத்திரை எடுத்துக்கொண்டால், உணவு சாப்பிட்டது போன்ற திருப்தி உங்களுக்கு கிடைக்காது, சாப்பாடு சாப்பிடும்போது, சுவைத்து, மென்று நீங்கள் விழுங்கும்போது, அதில் ஒரு குறிப்பிட்ட வைட்டமின் மட்டுமல்ல, எண்ணற்ற நுண்சத்துகள், நார்சத்து, மாவு சத்துகொழுப்பு சத்து என பலவும் உங்களுக்கு கிடைக்கும். வைட்டமின் மாத்திரை சாப்பிடுவதால், பசியை அடக்கமுடியாது. ஒரு குறிப்பிட்ட வைட்டமின் மாத்திரையில் ஒரு குறிப்பிட்ட சத்து மட்டும்தான் கிடைக்கும்.

உணவு ஜீரணம் ஆன பின்னர், அந்த சத்து குளுக்கோசாக மாறும், அது உங்கள் மூளை செயல்பட துணைபுரிகிறது. ஒரு காருக்கு பெட்ரோல் என்பது எப்படி ஒரு எரிசக்தியாக செயல்படுகிறதோ, அதுபோல உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸ், உங்கள் உடல் முழுமைக்கும் தேவை.

மாத்திரை என்பது தவிர்க்கமுடியாத காரணத்தால், உடல்நோய்வாய்பட்ட நேரத்தில், மருத்துவர் பரிந்துரையின் பேரில் சாப்பிடவேண்டியது, சரிவிகித உணவு நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

ஊட்டச்சத்து

பட மூலாதாரம், Getty Images

இன்றைய உணவுகளில் சத்து குறைவாக இருப்பதாகவும், அதனால் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சிறந்தது என்ற கண்ணோட்டம் சரியா?

காய்கறிகள், பழங்கள், சமைத்த உணவு வகைகளில் உள்ள சத்துகள் குறித்த கணக்கீடுகள் அவ்வப்போது மாறுகின்றன. ஆனால் ஒரு உணவை நாம் எப்படி சேமித்துவைக்கிறோம், சமைக்கிறோம், சாப்பிடுகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். குறைந்தபட்சம், உங்களுக்கு கிடைக்கும் உணவை சரியான முறையில் நீங்கள் சாப்பிடும்போது நுண்சத்துகள் குறையாமல் உங்களுக்கு கிடைக்கும்.

மண் அரிப்பு மற்றும் பூச்சிமருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதால், மண்ணின் தன்மை மாறியுள்ளது என்பது உண்மை. அது உணவின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால் தற்போதைய உணவுகளில் சத்து குறைந்துள்ளது என்பதால் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடலாம் என்ற அறிவுரையை நான் ஏற்கமாட்டேன்.

வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் ஒரு பிரிவையும், வைட்டமின் சத்துகளை உணவுகள் மூலமாக எடுத்துக்கொள்ளும் ஒரு பிரிவையும் வைத்து ஒரு சோதனை சமீபத்தில் நடைபெற்றது. அதில் 29,000 நபர்கள் கலந்துகொண்டார்கள். அதில், மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்களை விட, உணவு மூலமாக சத்துக்களை அதிகரித்தவர்களின் வாழ்நாள் அதிகமாக இருந்தது என்று தெரியவந்தது. அதனால் ஒரு வைட்டமின் மாத்திரைகளை விட உணவில் மாற்றத்தை ஏற்படுத்துவதைத்தான் நான் பரிந்துரை செய்வேன்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?

நீங்கள் நோய்வாய்ப்பட்ட நேரத்தில் மட்டும்தான் உங்கள் உடலில் நுண்சத்துகள் குறைவாக இருக்கும், அதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தனியாக கவனித்து அதிகரிக்கவேண்டிய தேவை இல்லை, தினமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதற்காக சரிவிகித உணவை ரசித்தும், ருசித்தும், நன்றாக மென்று சாப்பிட்டால்போதும், உணவில் உள்ள எல்லா சத்துகளும் உங்களுக்கு கிடைக்கும்.

ஒரேவிதமான உணவை தொடர்ந்து உண்ணாதீர்கள். உங்கள் உணவில் தானியங்கள், சிறுதானியங்கள், காய்கறி,பழங்கள், கிழங்கு வகைகள், கீரை, பருப்பு, மாமிசம், பால் என ஒரு கலவை தேவை. உங்கள் வீட்டில் சமைத்த உணவை, நன்றாக சுவைத்து சாப்பிடுங்கள், சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் அந்த உணவை நம்பி சாப்பிடுங்கள்.

உணவை சமைத்து பிரிட்ஜ்ஜில் வைத்துவிட்டு அடிக்கடி சூடு செய்து சாப்பிடுவதை தவிருங்கள். சமைத்த உணவை அதன் தன்மை மாறுவதற்குள் சாப்பிடுங்கள். கடைகளில் அதிகம் சாப்பிடுவதை தவிருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: