உடல்நலம்: எதையும் செய்யாமல் சும்மா இருப்பது மூளைக்கு நல்லது - ஏன் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அல்முடேனா டெ காபோ
- பதவி, பிபிசி
எதுவும் செய்யாமல் சும்மா இருக்கிறீர்களா? இப்படி யாராவது உங்களிடம் கேட்டால் உடனே நீங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் எதையாவது செய்யலாமா என நினைப்பீர்கள்.
பல வேலைகளை செய்து முடிக்க நேரம் போதாமை அல்லது குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாதது போன்றவை ஏற்படுவது இயல்பானதுதான்.
வேலைகள் எதுவும் செய்யாதபோது பொழுதுபோக்குக்காக நாம் உடனேயே செல்பேசிகளில் இணையத்தில் ஏதாவது படிப்போம் அல்லது சமூக வலைத்தளங்களில் யாருக்காவது பின்னூட்டங்களில் பதில் அனுப்புவோம்.
எந்த வேலையும் செய்யாமல் சலிப்புடன் இருக்கும்போது கற்பனை உணர்வு, பணிகளை செய்துமுடிக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பு, வேலைத்திறன் ஆகியவை அதிகரிப்பதாக, நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஓய்வே இல்லாத மூளை
உங்களின் மூளை 24 மணிநேரமும் வாரம் 7 நாட்களும் வேலை செய்கிறது. நீங்கள் உறங்கினாலும் உங்களின் மூளை உறங்குவதில்லை. உங்களை பாதுகாப்புடனும் விழிப்புடனும் வைத்திருக்க எப்போதும் மூளை வேலை செய்துகொண்டே இருக்கிறது.
பலவற்றுக்கான தீர்வுகள், முடிவுகள் குறித்து எப்போதும் மூளை சிந்தித்துக்கொண்டே இருக்கிறது.
எப்போதும் இயக்கத்திலேயே இருக்கும் நமது மூளை, எந்தவொரு இடைவேளையையோ விடுமுறையையோ எடுப்பதில்லை. ஆனால், மூளைக்கும் கட்டுப்பாடுகள் உண்டு என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள்.
ஒரு முழு நாளும் வேலை செய்துகொண்டிருந்தாலும் மூளை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் நேரம் நாம் உறங்கும் நேரம்தான். ஆனால், உறக்கத்தைவிட நாம் எதையும் செய்யாமல் சும்மா இருப்பது மூளையின் நலத்துக்கு முக்கியமானது.
எதுவும் செய்யாமல் இருப்பது என்பது உறங்குவது அல்ல, அதையும் விட ஆழமான செயல். தினசரி வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தங்களைத் தாங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் ஓய்வுக்கும் அர்ப்பணித்துக்கொள்வதே எதுவும் செய்யாமல் இருப்பதாகும்.

பட மூலாதாரம், Getty Images
படைப்பாற்றலை தட்டியெழுப்புதல்
அமெரிக்காவிலுள்ள ரென்சீலர் பாலிடெக்னிக் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள அறிவாற்றல் அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளரும் நரம்பியல் நிபுணருமான அலிசியா வால்ஃப், ஒன்றும் செய்யாமல் இருப்பது மூளையின் நலத்துக்கு அவசியம் என்று கூறுகிறார்.
“வேலை செய்யாமல் இருப்பது சமூகத் தொடர்புகளை மேம்படுத்துகிறது. உண்மையில், சலிப்பாக இருக்கும்போது ஆக்கப்பூர்வமான யோசனைகள் மேம்படலாம்" என ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் விளக்கியுள்ளார்.
“மந்தமாகவும், வெறுமையாகவும், தேவையற்றதாகவும் தோன்றும் அந்த தருணங்களில், ஆரம்ப கட்டத்தில் உள்ள உத்திகளும் தீர்வுகளும் உயிர் பெறுகின்றன. நாம் அதிக வேலை செய்யாதபோது மூளைக்குத் தேவையான ஓய்வு கிடைக்கிறது" என்கிறார் அவர்.
2019 இல் அகாடமி ஆஃப் மேனேஜ்மென்ட் டிஸ்கவரிஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், மொச்சை கொட்டைகளை அவற்றின் வண்ணத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துமாறு ஒரு குழுவினரிடம் கூறப்பட்டது. இதற்கிடையில், மற்றொரு குழுவிற்கு மிகவும் சுவாரஸ்யமான பணி ஒன்றும் ஒப்படைக்கப்பட்டது.
இரு குழுவினரிடமும் ஓரிடத்திற்கு தாமதமாக செல்வதற்கு சிறந்த காரணங்களை கூறுமாறு கேட்கப்பட்டது. எதுவும் செய்யாமல் இருந்த குழுவானது மற்றொரு குழுவைவிட காரணங்களின் எண்ணிக்கை மற்றும் கற்பனை ஆகிய இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்டது தெரியவந்தது.
“தி ஆர்ட் ஆஃப் பீயிங் போர்ட்” (The art of being bored) எனும் புத்தகத்தில் பிரிட்டிஷ் உளவியல் நிபுணர் சாண்டி மான், "படைப்பாற்றல், சிந்தனை மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை எதையும் செய்யாமல் சும்மா இருப்பது ஊக்குவிக்கலாம்” என வாதிடுகிறார்.
"நீங்கள் உண்மையில் இதற்கு அதிகம் செய்ய வேண்டியதில்லை," என்று அவர் கூறுகிறார். அதே நேரத்தில் தங்கள் குழந்தைகளை அவ்வாறு இருக்க அனுமதிக்குமாறு பெற்றோரை ஊக்குவிக்கிறார். "குழந்தைகள் சலிப்புடன் இருப்பதை சமாளிக்கவும், 'சலிப்படையவும்' கற்றுக் கொள்ளட்டும். அதன்மூலம் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் படைப்பாற்றலின் உலகத்தைக் கட்டவிழ்த்து விடுவீர்கள்," என்கிறார் அவர்.
சலிப்பாக இருப்பது குழந்தைகளுக்கு நல்லது என, அமெரிக்கன் சைல்ட் மைண்ட் இன்ஸ்டிட்யூட்டும் கூறுகிறது.
“சலிப்பைச் சமாளிக்க கற்றுக்கொள்வது, குழந்தைகள் நெகிழ்வுத்தன்மை, திட்டமிடல் திறன் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள உதவுகிறது,” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கவனத்தை மேம்படுத்துகிறது
மூளைக்கு உறக்கம் முக்கியமானது. அதுபோலவே, எதுவும் செய்யாமல் இருப்பதும் நம் மனதுக்கும் நல்வாழ்வுக்கும் இன்றியமையாதது.
“ஒன்றும் செய்யாமல் இருப்பது வெறும் விடுமுறையோ, உல்லாசமோ அல்ல. உடலுக்கு விட்டமின்-டி எவ்வளவு இன்றியமையாததோ, அதுபோல மூளைக்கு ஒன்றும் செய்யாமல் இருப்பது இன்றியமையாதது. அப்படி இல்லாவிட்டால், ரிக்கெட்ஸ் போன்ற மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்” என தன்னுடைய “தி ஹஸில் டிராப்” (The Hustle Trap) எனும் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் டிம் கிரெய்டெர் எழுதுகிறார்.
சயின்டிஃபிக் அமெரிக்கன் என்ற ஆய்விதழ் இதன் நன்மைகள் குறித்து ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளது.
“கவனம், உற்பத்தித்திறன் மற்றும் படைப்பாற்றலை இது வளர்க்கிறது. மேலும் நமது அதிகபட்ச செயல்திறனை அடைவதற்கும் அன்றாட வாழ்வில் நிலையான நினைவுகளை உருவாக்குவதற்கும் இது அவசியம்,” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்றும் செய்யாமல் இருப்பதை மனச் சுத்திகரிப்பு என கருதலாம். காலப்போக்கில் குவியும் அறிவாற்றலில் இருந்து நம் மனதை விடுவிக்கும் ஒரு வழி அது.
சைக்காலஜி டுடே வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில், மூளையில் அதிகப்படியான தகவல் சேர்வது கவனத்தைக் குறைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"எனவே ஓய்வு எடுப்பது நமது அதிக சுமை நிறைந்த மூளையை ஓய்வெடுக்கவும், மன அழுத்தத்தைப் போக்கவும் உதவும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாகும். சமூக ஊடகங்கள் மற்றும் பிற மன அழுத்தங்களில் இருந்து நீண்ட காலம் விலகி இருப்பது நன்மை பயக்கும்" என்று அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாஹ்ராம் ஹெஷ்மத் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார்.
"சலிப்பு நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தகவல்கள் நிறைந்த இந்த யுகத்தில், நமது மூளை தரவுகள் மற்றும் கவனச்சிதறல்களால் நிரப்பப்பட்டுள்ளது. மிகுதியான தகவல்கள் நம் மூளையில் சேர்வது கவனக்குறைவுக்கு வழிவகுக்கும்" என, அதில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மனநலனுக்கு நல்லது
மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் மற்றும் டேட்டிங் செயலிகள் பரவியிருக்கும் இந்த நவீன யுகம், மன நலத்தை சோதனைக்கு உட்படுத்தும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, ஓய்வு எடுப்பது நமது மூளையை ரீசார்ஜ் செய்ய ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாகும்.
அதனால்தான், சாண்டி மான் போன்ற பல நிபுணர்கள், சலிப்பை ஒரு பாதுகாப்பு எதிர்வினையாகக் கருதுகின்றனர், இது நம்மைத் தொடர்ந்து துன்புறுத்தும் தகவல்கள் மற்றும் சத்தத்திலிருந்து துண்டிக்க அனுமதிக்கிறது.
“நமது மனதை இவற்றிலிருந்து விடுவிக்க நாம் அவை குறித்து சிந்திக்கக் கூடாது. சலிப்பாக இருப்பது, மிகவும் கவனமாக பரிசீலிக்க வேண்டிய வாழ்க்கையின் அம்சங்களில் கவனம் செலுத்த மூளையை அனுமதிக்கிறது” என்கிறார், சாண்டி மான்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













