கொரோனா வைரஸ் BF.7 திரிபை கபசுர குடிநீர் கட்டுப்படுத்துமா?

பட மூலாதாரம், MURALINATH/ GETTY IMAGES
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
சீனாவில் மீண்டும் புதிய வகை திரிபால் உயிர்த்தெழுந்துள்ள கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சித்த மருந்தான கபசுரக்குடிநீருக்கான தேவை இந்திய அளவில் உணரப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில், சித்தமருந்தான கபசுரக்குடிநீரை தமிழ்நாட்டில் இருந்து பெற்று இந்தியா முழுவதும் பல மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு விநியோகித்தது.
தற்போது புதிய திரிபான பி.எப்.7ன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று புலப்படவில்லை என்பதால், தற்காப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து கபசுரக்குடிநீரை மீண்டும் கொள்முதல் செய்துகொள்ள டாம்கால் நிறுவனத்தை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நாடியுள்ளது.
இந்த நேரத்தில், கபசுரக்குடிநீர் என்ற சித்தமருந்துக்கான அங்கீகாரத்தைப் பெற்று, உலகளவில் கொண்டுசேர்க்க இந்திய அரசு முயற்சிக்கவேண்டும் என சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு பல ஆயிரம் நபர்கள் பாதிப்புக்கு ஆளான நேரத்தில், 2020-21ல் டாம்கால் நிறுவனம் சுமார் மூன்று லட்சம் கிலோ அளவு கபசுரக்குடிநீரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டுசேர்த்தது. அதன் பயன்பாட்டை அறிந்துகொண்ட மத்திய அரசு, தேசிய அளவில் நோயாளிகளுக்கு விநியோகம் செய்தது. தற்போது கபசுரக்குடிநீரை 100 கிராம் பொட்டலங்களாக வழங்க முடியுமா என ஆயுஷ் அமைச்சகம் டாம்கால் நிறுவனத்திடம் கேட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கபசுரக்குடிநீர் என்றால் என்ன?
கபசுரக்குடிநீர் என்ற சித்த மருந்தில் 15 வகையான மூலிகைகள் அடங்கியுள்ளன. சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகொஞ்சரி வேர், முள்ளி வேர், ஆடாதோடை இலை, கடுக்காய் தோல், கற்பூரவள்ளி,வட்டத்திருப்பி வேர்,கோரைக் கிழங்கு உள்பட 15 மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் மருந்து பொடிதான் கபசுரக் குடிநீர்.
கபசுரக் குடிநீர் குறித்து சித்தமருத்துவ நூல்களில் உள்ள குறிப்பு பற்றி பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் சிவராமன், ''64 வகையான சுரங்கள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. அதில் ஒருவகையானது, நாள்பட்ட இருமல், இருமலோடு நாச்சுவை அறியாமை, உடல் இளைப்பு மற்றும் ஒரு சில சமயம் நாள்பட்ட காய்ச்சல் நீடித்து, மரணம் நேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஒரு சுரத்திற்கான மருந்து சித்த மருத்துவ பாடல்களில், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் கபசுரக்குடிநீர் கலவை அறிமுகம் செய்யப்பட்டது,''என்கிறார்.
இந்த சுரம் பற்றிய குறிப்பானது, தேரன் கரிசல், சூரவகதம், யுகி சிந்தாமணி உள்ளிட்ட சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

''இதுவரை கொரோனா வைரஸை முழுமையாக தடுக்கக்கூடிய மருந்து என ஒரு மருந்து எந்த மருத்துவத்திலும் கிடையாது. தடுப்பூசி வருவதற்கு முன், எந்த மருந்துகளும் இல்லாத நேரத்தில், கொத்துக்கொத்தாக மனிதர்கள் மடிந்த நேரத்தில், கபசுரக்குடிநீர் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்தது. அதோடு இந்த மருந்து, வைரஸ் எண்ணிக்கை உடலில் பெருகுவதைக் கட்டுப்படுத்துகிறது, உடலில் எரிச்சல்,சூடு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துகிறது என்பதால் பலர் குணம் பெற்றனர்.
மருத்துவர் பரிந்துரை செய்த அளவில் எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் ஏதுமில்லை என்பதால், இந்த மருந்தால் பலரும் பயன்பெற்றனர். கபசுரக்குடிநீர் என்பது சித்த மருத்துவமான, தமிழர் மருத்துவம், இந்தியா முழுமைக்கும் தந்த ஒரு கொடை. ஆனால் அதற்கான அங்கீகாரம் தற்போதுவரை அளிக்கப்படவில்லை. உலகளவில் இந்த மருந்தை கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் தேவை,''என்கிறார் மருத்துவர் சிவராமன்.
கபசுரக்குடிநீர் பற்றி ஆய்வுகள் சொல்வது என்ன?
கபசுரக் குடிநீர் தடுப்பு மருந்து என்றோ, முழுமையான தீர்வு என்றோ சொல்லமுடியாது, ஆனால் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்தது என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துவிட்டன என்கிறார் மருத்துவர் சிவராமன்.
''ஜனவரி 2020 தொடங்கி ஏப்ரல் 2020 வரை பலகட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. பல மருத்துவமனைகளில் கபசுரக்குடிநீர் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்திய வரலாற்றில் முதல்முறையாக, ஆங்கில மருந்துடன், சித்த மருந்து ஒன்று பரிந்துரைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது அதுதான் முதல்முறை. சென்னை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நான்கு மருத்துவமனைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. கபசுரக்குடிநீர் பயன்பாட்டின் ஆய்வுமுடிவுகள் இதுவரை 20க்கும் மேற்பட்ட ஆய்விதழ்களில் வெளியாகியுள்ளன,''என்கிறார் சிவராமன்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் எம். பிச்சையா குமார் கூறுகையில், 2020ல் கபசுரக்குடிநீர் பயனுள்ளதா இல்லையா என்று பலமுறை ஆராயப்பட்டது என்கிறார்.
''அறிகுறியற்ற கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளிடம், வைட்டமின் சி மற்றும் ஜின்க் மாத்திரைகளுடன் ஒப்பிடும்போது சித்த மருத்துவத்தின் கபசுரக்குடிநீரின் செயல்திறன் எவ்வளவு பலன் தருகிறது என்ற ஆய்வு அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல ஆய்வுகள் நடத்தப்பட்ட பிறகுதான் கபசுரக்குடிநீர் பல ஆயிரம் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது,''என்கிறார்.
சித்த மருத்துவத்திற்காக அடையாளம்
மத்திய அரசு தேசிய அளவில் மீண்டும் கபசுரக்குடிநீரை வாங்க முன்வந்துள்ளது பற்றிப் பேசிய, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் சுகந்தன், ''கொரோனா வைரஸ் திரிபுகள் வருவதை நாம் கட்டுப்படுத்தமுடியாது. இதுபோன்ற பல வைரஸ்கள் இனி வருங்காலங்களில் அதிகரிக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசு கபசுரக்குடிநீரை வாங்க முன்வந்துள்ளது என்பது சித்த மருத்துவத்தை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல கிடைத்த வாய்ப்பு.

பட மூலாதாரம், MINISTRY OF AYUSH, GOVT. OF INDIA
கபசுரக்குடிநீரை தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய 15 விதமான மூலிகைகளில் 3 மூலிகைகள் அருகிவரும் மூலிகைகள் என்பதால், அவற்றைப் பாதுகாத்து, வளர்ப்பதற்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும். வணிக ரீதியான உற்பத்தியில் தரம் குறைந்துவிடக்கூடாது. பல தனியார் நிறுவனங்கள் கபசுரக்குடிநீர், நிலவேம்பு குடிநீர் மருந்துகளுக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதைப் பயன்படுத்தி லாபம் பார்க்கிறார்கள்,''என்கிறார்.
''சிக்கன்குனியா அதிகளவில் பரவிய நேரத்தில், நிலவேம்பு குடிநீர் பிரபலமானது. டெங்குகாய்ச்சலுக்கு விசசூரக்குடிநீர் என்ற மருந்தை பயன்படுத்தலாம். இதுபோல சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள 64 வகையான சுரங்களுக்கு உள்ள மருந்துகளின் பட்டியலைத் தொகுத்து, தற்காலத்திற்கு ஏற்ப ஆய்வுகள் நடத்தினால், புதுவகையான நோய்களுக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு,''என்கிறார் சுகந்தன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












