'அகநக முகநக' பாடல் வரிகள் எப்படி உருவானது ? - குந்தவையின் காதலை சிலாகிக்கும் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன்

பட மூலாதாரம், MADRAS TALKIES
- எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து, முதல் பாடல் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல் வெளியான அன்றைய தினம், நடிகர்கள் கார்த்தி மற்றும் த்ரிஷா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வந்தியத்தேவன் மற்றும் குந்தவையாக உரையாடி வந்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
”அகநக அகநக முகநகையே” என தொடங்கும் இந்த பாடல் வரிகள்தான் கடந்த இரண்டு நாட்களில் பொன்னியின் செல்வன் ரசிகர்களின் முனுமுனுப்பாக மாறியிருக்கிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த 2022ஆம்ஆண்டு இதன் முதல் பாகம் வெளியான நிலையில், தற்போது வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.
பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், பொன்னியின் செல்வனின் முதல் பாகம் மிகப்பெரும் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு ஏ.ஆர் ரகுமானின் இசையும், பாடல்களும் முக்கிய காரணமாக அமைந்தன. இதுவே இரண்டாம் பாகத்தின் பாடல்கள் மீது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.
குறிப்பாக முதல் பாகத்தில், வந்தியத்தேவன் இளவரசி குந்தவையை படகில் சந்திப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியின் இடையே ”அகநக அகநக முகநகையே” பாடல் மிகவும் சிறிய அளவில் இடம்பெற்றிருந்தது. அப்போதே மக்களை வெகுவாக கவர்ந்த இந்த பாடல், தற்போது முழுமையாக வெளியாகியிருப்பது, பொன்னியின் செல்வன் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாடல் உருவான விதம் குறித்தும், படத்தில் பாடல் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் குறித்தும் பேசுவதற்காக, இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.
இரண்டெழுத்து சொற்களில் உருவான பாடல் வரிகள்:

பட மூலாதாரம், FACEBOOK
“இந்த பாடலுக்கான மெட்டை ஏ.ஆர்.ரகுமான் மிகவும் கடினமாக அமைத்திருந்தார். அதற்கு ஏற்றாற் போல பாடல் வரிகளை அமைக்க வேண்டும் என்ற சூழல்தான் அகநக பாடல் வரிகள் உருவாவதற்கு காரணமானது” என்கிறார் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “பாடல் எப்படி உருவாக வேண்டும் என்று முதலில் நிறைய திட்டங்கள் மேற்கொண்டோம். சோழ தேசத்து இளவரசியான குந்தவை பிராட்டி தானே பாடுவது போன்ற பாடல் அமைய வேண்டும் என இயக்குநர் மணிரத்னம் கூறினார். இளவரசியான குந்தவைக்கு நிச்சயம் தன்னுடைய தேசத்தின் மீது மிகப்பெரும் காதல் இருக்கும். அந்த அதீத காதலால் தன் தேசத்தின் மீது அவளுக்கு தன்னுடைமை மனோபாவமும் இருந்திருக்கும். எனவே இதனை மையப்படுத்தி இந்த பாடலை எழுதலாம் என நான் முடிவு செய்தேன்.
ஆனால் இந்த பாடலுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தேர்ந்தெடுத்த மெட்டு மிகவும் கடினமாக இருந்தது. அதாவது அந்த மெட்டில் ஒரு முடிவே இல்லாதது போன்ற அமைப்பு இருக்கும். ஆனால் அதேசமயம் அது மிகவும் இனிமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அதன் இயல்பு தன்மை மாறாமல் இருக்கும் வகையில், நான் பாடல் வரிகளை எழுத வேண்டும்.
அப்போதுதான் மிகவும் சிறு சிறு வார்த்தைகளில் பாடலை எழுதுங்கள் என ஏ.ஆர்.ரகுமான் என்னிடம் கூறினார். இரண்டு எழுத்து சொற்களால் வார்த்தைகளை கட்டமையுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். அப்படிதான் ”அகநக” பாடல் வரிகளை எழுத துவங்கினேன்” என்று தெரிவிக்கிறார் இளங்கோ கிருஷ்ணன்.
அந்தாதி இலக்கியத்தில் அகநக பாடல்

பட மூலாதாரம், MADRAS TALKIES
“இரண்டெழுத்து சொற்களில் வார்த்தைகளை எழுத துவங்கியபோது, இந்த பாடலை ஏன் அந்தாதி இலக்கிய வகையில் எழுதக்கூடாது என எனக்கு தோன்றியது.
அந்தாதி என்பது தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. அதாவது பாடலின் முதல் வரியில் இடம்பெறக்கூடிய இறுதி வார்த்தையே, பாடலின் இரண்டாம் வரியின் துவக்க வார்த்தையாகவும் இருக்கும். இதுவே அந்தாதி பாடல் வகையின் இயல்பு” என்று கூறுகிறார் பாடலாசிரியர்.
“அகநக அகநக முகநகையே
முகநக முகநக முறுநகையே
முறுநக முறுநக தருநகையே
தருநக தருநக வருணனையே
யாரது.. யாரது”
என்ற இந்த வரிகளை கவனித்தால் அந்தாதி இலக்கிய இயல்பில் நான் இந்த பாடலை வடிவமைத்திருப்பது புரியும். ஏ.ஆர்.ரகுமான் தேர்ந்தெடுத்த மெட்டிற்கு அந்தாதி இலக்கிய வகைதான் பொருத்தமாக இருந்தது. சக்திஸ்ரீயின் குரல் இந்த பாடலை மிகவும் உயிரூட்டமாக மாற்றியது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
வரிகளின் அர்த்தங்கள் :

பட மூலாதாரம், MADRAS TALKIES
”அகம் மலர்ந்து, முகம் மலர்வது போல் ஒரு பூ மரம் (தரு) தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது என்பதையே இந்த வரிகளில் நான் கூறுகிறேன். ஒரு மலர் உருவாவதற்கு பல்வேறு பருவங்கள் இருக்கின்றன. அதில் மொட்டு உருவாவதற்கு முந்தைய நிலையான மலர்களின் இரண்டாம் பருவம்தான் ’நனை’ என்று கூறப்படுகிறது. இந்த ‘நனை’ (வருணனையே) என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியதற்கு காரணம் இருக்கிறது.
குந்தவைக்கு வந்தியத்தேவன் மீது இருக்கும் காதல் இப்படியொரு நிலையில்தான் இருந்தது. ஒரு பேரரசின் இளவரசியான குந்தவை, படை தளபதியான வந்தியத்தேவன் மீது ஈர்ப்பு கொள்வதை, அவளால் அவ்வளவு எளிதில் வெளிப்படுத்தி விட முடியாது. அப்போது குந்தவைக்கும், வந்தியத்தேவனுக்கும் இடையில் இருக்கும் அந்த தவிப்பான மனநிலையை குறிப்பிடவே இந்த வார்த்தையை பயன்படுத்தினேன். படத்தில் இது குறித்து காட்சிகள் அமைக்கப்படவில்லை, ஆனால் எனது பாடலில் இதை குறிப்பிட வேண்டும் என நான் நினைத்தேன்” என்று பாடல் வரிகள் குறித்து விவரிக்கிறார் இளங்கோ கிருஷ்ணன்.
முன்பே கூறியது போல், மரங்களில் ஆரம்பித்து பின் தன் நிலம் குறித்து குந்தவை பாடுவது போல் இதன் பாடல் வரிகள் நீள்கிறது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
மணிரத்னத்தின் பாராட்டு
இந்த பாடல் வரிகளை இரண்டு நாட்களில் எழுதி முடித்ததாக கூறுகிறார் இளங்கோ கிருஷ்ணன். இந்த வரிகளை மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்பது மிகவும் சவாலான ஒன்றாக அமைந்தது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
அவர் மேலும் கூறும்போது, “பாடல் வரிகளின் அர்த்தம் மாறாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஓரளவு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பழந்தமிழ் சொற்களை மொழிபெயர்ப்பது எப்போதும் கடினமான காரியம்தான். இதற்கு முன்னதாக முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த தேவராளன் பாடலை கூட மற்ற மொழிகளில் மாற்றியமைத்தது மிகவும் கடினமாக இருந்தது என ஏ.ஆர்.ரகுமான் என்னிடம் தெரிவித்தார்.
அதேபோல் அகநக பாடல் உருவாக்கப்பட்டது இரண்டாம் பாகத்திற்காகத்தான். அது முதல் பாகத்தில் சிறியளவில் இடம்பெற்றதற்கு ரகுமானின் மேஜிக்தான் காரணம். அப்போது ரசிகர்களிடம் ஏற்பட்ட மிகப்பெரும் வரவேற்பே, தற்போது இந்த பாடல் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலாக வெளியாகியிருப்பதற்கு ஒரு காரணமாகவும் அமைந்தது.
இயக்குநர் மணிரத்னம் தனிப்பட்ட முறையில் என்னுடைய எழுத்து குறித்து நிறைய பாராட்டியிருக்கிறார். என்னுடைய மொழி வளம் மிகவும் நன்றாக இருப்பதாக அவர் கூறுவார். அகநக பாடல் கூட அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் பாடலாசிரியார் இளங்கோ கிருஷ்ணன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












