சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக அமெரிக்கா தகவல் - வர்த்தகப் போர் முடிவுக்கு வருமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜேமி வைட்ஹெட்
- பதவி, பிபிசி நியூஸ்
சுவிட்சர்லாந்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஆனால் மேலதிக தகவல்கள் எதையும் வழங்கவில்லை. திங்கட்கிழமை இரு தரப்பும் இணைந்து முழு தகவல்கள் அடங்கிய கூட்டு அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திங்களன்று காலையில் சீனா மற்றும் ஹாங்காங்க் பங்குச்சந்தைகள் ஏற்றமடைந்து பங்குகள் லாபம் ஈட்டின. ஷாங்காய் காம்போசிட் இன்டெக்ஸ் 0.4 அதிகரித்தும் ஹாங் செங் 0.7% அதிகரித்தும் காணப்பட்டது.
அமெரிக்க ஸ்டாக் ஃப்யூச்சர்களும் அதிகரித்து காணப்பட்டன. ஃப்யூச்சர்ஸ் என்பது ஒரு சொத்தை எதிர்கால தேதியில் வாங்க அல்லது விற்பதற்கான ஒப்பந்தங்கள் ஆகும். இவை சந்தைகள் திறக்கின்ற போது எவ்வாறு வர்த்தகம் நடக்கும் என்பதற்காக குறியீடு ஆகும்.
அமெரிக்க டாலருக்கு நிகராக சீன நாணயமான யுவானும் வலுவடைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இரு நாடுகளின் அறிவிப்பு, வரிகள் குறைப்பையும் உள்ளடக்கியதாக இருக்கலாம் என்று ஒரு வர்த்தக நிபுணர் பிபிசியின் பிசினஸ் டுடே நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தகத் துறையின் முன்னாள் இணைச் செயலாளர் ஃபிராங்க் லாவின், "இரு நாடுகளும் வரிகளைக் குறைக்கும் என எதிர்பார்க்கிறேன், இருந்தாலும் அப்போதும் அவை வரலாற்றில் இருந்ததைவிட அதிகமாகவே இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஹின்ரிச் பவுண்டேஷனில் வர்த்தக கொள்கை தலைவரான டெபோரா எல்ம்ஸ் அவ்வளவு நம்பிக்கையாக இல்லை. "இந்த பரஸ்பர வரி விதிப்பு முறை சமாளிக்கப்படலாம் அல்லது இல்லாமலும் போகலாம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒப்பந்தமாகவே இருக்கும் என நினைக்கிறேன்" என பிபிசியின் நியூஸ்டே நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இந்த விவாதங்களை "ஆக்கப்பூர்வமானது" என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டுள்ள நிலையில், சீனாவின் துணை பிரதமர் ஹி லிஃபெங் இந்தப் பேச்சுவார்த்தைகளை ஆழமானது மற்றும் வெளிப்படையானது என விவரித்துள்ளார்.
இருவரும் வார இறுதி நாட்கள் முழுவதும் ரகசிய விவாதங்களில் ஈடுபட்டனர். ஜனவரியில் சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்த பிறகு நடைபெற்ற முதல் சந்திப்பு இது தான்.
டிரம்ப் சீன இறக்குமதிகளுக்கு 145% வரி விதத்தைத் தொடர்ந்து அதற்கு பதில் நடவடிக்கையாக சில அமெரிக்க சரக்குகளுக்கு சீனா 125% வரி விதித்தது. இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடி சந்திப்பு இது தான்.

இந்த அதிக வரிகள் நிதிச் சந்தைகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உலகளாவிய பொருளாதார மந்தநிலை உருவாவதற்கான அச்சத்தையும் கிளப்பியது.
ஜெனிவாவில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தைகளின் முடிவில், "சீனக் கூட்டாளிகளுடன் நாங்கள் செய்துள்ள ஒப்பந்தம்" அமெரிக்காவின் 1.2 ட்ரில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க உதவும் என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரேர் தெரிவித்துள்ளார்.
வர்த்தகப் போரை தவிர்ப்பதில் இரு நாடுகளும் "குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்" அடைந்துள்ளதாக பெசென்ட் தெரிவிக்கும் நிலையில் இந்த பேச்சுவார்த்தைகள், "இரு நாடுகளுக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை மற்றும் உலகப் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி மீது முக்கியமான தாக்கமும் கொண்டுள்ளது" என சீன துணை பிரதமர் ஹி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்புகள் பயனுள்ளதாக இருந்ததாக ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பதற்றங்களைத் தணிக்க வேண்டும் - உலக வர்த்தக நிறுவனம்

பட மூலாதாரம், Reuters
உலக வர்த்தக நிறுவனத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நகோசி ஒகோன்ஜோ-இவெலா இந்தப் பேச்சுவார்த்தைகளை "ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரு நாடுகளும் இதே உத்வேகத்தைப் பயன்படுத்தி பதற்றங்களைக் குறைக்கும் சாத்தியமான தீர்வுகளை வளர்த்து, பலதரப்பு வர்த்தக அமைப்பு மீதான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் பேச்சுவார்த்தைகளை மிகவும் சிறப்பானது என குறிப்பிட்டு, ஒரு நட்புரீதியான, ஆனால் ஆக்கப்பூர்வமான முறையில் பேசப்பட்டது" எனவும் தெரிவித்துள்ளார்.
அப்பதிவில், "சீனா மற்றும் அமெரிக்கா என இருவருக்கும் எது நல்லது என நாம் பார்க்க வேண்டும். அது அமெரிக்க வணிகத்துக்கு சீனாவைத் திறந்துவிடுவது தான். சிறப்பான முன்னேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரின் விளைவுகள்

பட மூலாதாரம், Getty Images
இருநாடுகளும் சந்திப்பிற்கு முன்பாக வெவ்வேறு எச்சரிக்கைகளை வெளியிட்டு வந்தன. அமெரிக்கா வரிகளை இலகுவாக்க வேண்டும் என சீனா கூறிய நிலையில் பதற்றத்தைக் குறைப்பதில் தான் கவனம் உள்ளது, இது மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இல்லை என பெசென்ட் தெரிவித்திருந்தார்.
உலகளாவிய எதிர்பார்ப்புகள், நாட்டின் நலன்கள் மற்றும் அமெரிக்க வணிகத் துறையிடம் இருந்து வந்த கோரிக்கைகளை முழுமையாக கருத்தில் கொண்டு தான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட சீனா முடிவெடுத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க வரிகளால் சீன ஏற்றுமதியாளர்கள் சிரமப்படுவதை பிபிசி கண்டறிந்தது. சோர்போ டெக்னாலஜி என்கிற ஒரு நிறுவனம் அமெரிக்காவுக்கு வழக்கமாக விற்கப்படும் அதன் பாதி பொருட்கள் தற்போது சீனாவில் ஒரு கிடங்கில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், அமெரிக்க பொருளாதாரம் வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் 0.3 சதவிகிதம் என்கிற வருடாந்திர விகிதத்தில் சுருங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
வரி விதிப்புகளைத் தொடரும் வர்த்தக ஒப்பந்தங்கள்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் கடந்த மாதம் டிரம்ப், அமெரிக்காவுக்கு வரும் அனைத்து இறக்குமதிகளுக்கும் உலகளாவிய அடிப்படை வரியை விதித்ததில் இருந்து அதிகரித்தது. இந்தப் பட்டியலில் சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் அடங்கும்.
அமெரிக்கா மீது பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்ட, நியாயமற்ற வர்த்தகக் கொள்கைகளுக்கு திருப்பிச் செலுத்தும் நடவடிக்கை இது என்று டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு வரும் அனைத்து எஃகு மற்றும் அலுமினியம் பொருட்கள் மீது 25 சதவிகித இறக்குமதி வரியையும், அனைத்து கார் மற்றும் கார் பாகங்கள் மீது கூடுதல் 25 சதவிகித வரியையும் அவர் தனித்தனியாக அறிவித்திருந்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












