கொரோனா காலத்திலும் காஷ்மீர் ஆப்பிள்களை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த இளைஞர்கள் - எப்படி சாத்தியமானது?

பட மூலாதாரம், SAMIULLAH AND ABID RASHID
இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் இருந்து ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம், ஷார்க் டேங்க் இந்தியா என்ற ரியாலிட்டி ஷோவில் நிதி திரட்டியுள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள பிற வளரும் தொழில்முனைவோரின் தன்னம்பிக்கையை இது அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்னால் உள்ளவர்களை அக்கிப் ஜாவீத் சந்தித்தார்.
காஷ்மீரை தளமாகக் கொண்ட ஒரு கூரியர் டெலிவரி சேவையான FastBeetle, நிகழ்ச்சியின் இந்தியப் பதிப்பில் 9 மில்லியன் ரூபாய் திரட்டியது. இந்த நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்பு அல்லது சேவையை, முதலீட்டாளர்கள் அதாவது "ஷார்க்" குழுவிடம் வழங்குகிறார்கள். பின்னர் அந்தக் குழு அந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்கிறது.
இந்த கம்பெனியின் நிறுவனர்களான ஷேக் சமியுல்லா மற்றும் அபித் ரஷீத்தும், லிங்க்ட் இன்னில் நிகழ்ச்சி குறித்த விளம்பரத்தைப் பார்த்து, ஷார்க் டாங்கிற்கு விண்ணப்பித்திருந்தனர்.
பிரபலமான இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், காஷ்மீரில் இருந்து நிதி திரட்டும் முதல் நிறுவனம் அவர்களுடையது. இந்தப் பிராந்தியத்தில் இருந்து அதிக தொழில்முனைவோரை ஏன் பார்க்க முடிவதில்லை என்று ஒரு நீதிபதி கேட்டார்.
"எங்களிடம் அத்தகைய வசதிகள் இல்லை. எங்களை ஆதரிக்க உங்களைப் போன்றவர்கள் [ஷார்க் டாங்க் நீதிபதிகள்] இல்லை. அதனால்தான் காஷ்மீரில் மக்கள் வேலைவாய்ப்பை நம்பியிருக்கிறார்கள்," என்று சமியுல்லா பதிலளித்தார்.
தாங்கள் பெறும் நிதி, காஷ்மீரில் உள்ள அதிகமான இளைஞர்கள் தங்கள் சொந்த தொழில்களைத் தொடங்க ஊக்குவிக்கும் என்று சமியுல்லாவும் ரஷீத்தும் நம்புகிறார்கள்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அதன் உரிமைக்கான போராட்டம் நிலவிவரும் காரணத்தால் காஷ்மீரின் இமயமலைப் பகுதி மிகவும் நாசூக்கானது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரிவினைவாத போராளிகள் இந்தப் பகுதியில் இந்தியாவின் ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சியை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது. இஸ்லாமாபாத் இந்த குற்றச்சாட்டை மறுத்துவருகிறது.
2019 ஆகஸ்டில் பாஜக தலைமையிலான அரசு, அங்கு அமலில் இருந்த இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்தது. மேலும் அதை இரண்டு கூட்டாட்சி நிர்வாகப் பகுதிகளாகக் குறைத்தது. 370வது பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க சுயாட்சிக்கு உத்தரவாதம் அளித்து வந்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இணைய முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு போன்ற நிலைமைகள் பல மாதங்கள் நீடித்தன. அமைதியின்மை சூழ்நிலைகளைச் சமாளிக்க ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்கள் அங்கே நிறுத்தப்பட்டன.
இப்பகுதிக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்று அப்போது இந்திய அரசு கூறியது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் முதலீடுகள் குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், விஷயங்கள் சிறப்பாகி வருவதாகவும் இப்பகுதியில் உள்ளூர் ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கையில் "ஏற்றம்" காணப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
"ஜே & கே ஸ்டார்ட் அப் பாலிசி 2023-2028" தொடர்பாக அரசு செயல்பட்டு வருகிறது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இப்பிராந்தியத்தில் 3,000 ஸ்டார்ட் அப்கள் அமைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இது வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும்,” என்று ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழகத்தின் (ஜேகேடிஐ) இயக்குநர் ஐஜாஸ் அஹமத் பட் கூறினார்.
"இந்தக் கொள்கை ஏற்கெனவே இருந்தது. ஆனால் சில சிக்கல்கள் மற்றும் தொற்றுநோய் நிலைமை காரணமாக அதைச் செயல்படுத்த முடியவில்லை. இப்போது நாங்கள் நிபுணர்களின் உதவியுடன் அதில் திருத்தம் செய்து வருகிறோம், ஒரு புதிய கொள்கை வரும் வாரங்களில் பொதுவெளியில் வெளியிடப்படும்," என்றார் அவர்.
சமியுல்லாவும் ரஷீத்தும் 2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு. FastBeetleஐ தொடங்கினர். தனது சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு சமியுல்லா, இந்தியா முழுவதும் பொருட்களை விநியோகிக்கும் ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
"இந்த ’மாடல்’ காஷ்மீரிலும் பயன்படுத்தப்படலாம் என்று நாங்கள் நினைத்தோம். எனவே நாங்கள் எங்கள் சொந்த பிராண்டை உருவாக்கினோம்," என்று அவர் கூறினார்.
FastBeetle டெலிவரி முகவர்கள் தயாரிப்புகளை பிக் அப் செய்து, பிராந்தியத்தின் முக்கிய நகரமான ஸ்ரீநகரில் உள்ள தங்கள் அலுவலகத்தில் அதை பேக் செய்து, மோட்டார் பைக்குகள், மினி வேன்களில் டெலிவரி செய்வார்கள்.
ஆனால் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து வணிகம் முடங்கியது. அவசர சேவைகளைத் தவிர வேறு எந்த வாகனங்களும் சாலைகளில் அனுமதிக்கப்படவில்லை. எனவே பொருட்களைக் கொண்டு சேர்க்க முடியவில்லை.
தொலைத்தகவல் தொடர்பு தடை காரணமாக நிறுவனர்கள் தங்கள் ஊழியர்களுடன் பல மாதங்களாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் நிறுவனத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என்கிறார் சமியுல்லா.

பட மூலாதாரம், SAMIULLAH AND ABID RASHID
தங்கள் தனிப்பட்ட சேமிப்பில் இருந்து பணம் எடுத்து சம்பளம் கொடுத்ததாக நிறுவனர்கள் கூறுகிறார்கள். 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் விஷயங்கள் சீராகத் தொடங்கியவுடன், அவர்கள் தங்கள் வணிகத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்தனர். ஆனால் பின்னர் கோவிட்-19 தொற்றுநோய்ப் பேரிடர் உலகை உலுக்கியது. அதைத் தொடர்ந்து மாதக்கணக்கான பொதுமுடக்கங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
ஆனால் சமியுல்லாவும் ரஷீத்தும் நம்பிக்கை இழக்கவில்லை.
பள்ளத்தாக்கில் உள்ள ஆப்பிள் வியாபாரிகள் தங்கள் விளைபொருட்களைக் கொண்டு சேர்க்க சிரமப்படுவதை அவர்கள் உணர்ந்தனர். எனவே காஷ்மீர் முழுவதும் பழங்களை விநியோகம் செய்யும் வேலையில் FastBeetle இறங்கியது.
"ஆப்பிள் தொழில் இப்பகுதியில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது, மேலும் பழங்களை டெலிவர் செய்ததன் மூலம் நாங்கள் பெற்ற லாபம் வணிகத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட உதவியது" என்று சமியுல்லா கூறுகிறார்.
நிறுவனம் கோவிட் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துகளையும் வழங்கத் தொடங்கியது.
இன்று, FastBeetle எல்லாவற்றையுமே டெலிவரி செய்கிறது. 130 பணியாளர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் மற்றும் பல வெளிநாடுகளிலும் செயல்படுகிறது. இதுவரை, 55க்கும் மேற்பட்ட நாடுகளில் 100,000 ஆர்டர்களை வழங்கியுள்ளது. நிறுவனம் 1,500க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் இணைந்து (MSMEs) செயல்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
சிறிய அளவிலான தொழில்முனைவோருக்கு அவர்களுடைய தயாரிப்புகளை நியாயமான விலையில் டெலிவரி செய்வதன் மூலம் உதவ முயல்வதாகவும் சமியுல்லா கூறுகிறார்.
33 வயதான பீனிஷ் பாஹிர் கான், கிராஃப்ட் வேர்ல்ட் காஷ்மீர் என்ற ஸ்டோரை நடத்துகிறார். கையால் செய்யப்பட்ட க்ரோஷே பொருட்கள், பைகள் மற்றும் பின்னப்பட்ட குளிர்கால ஆடைகளை விற்கும் ஆன்லைன் ஸ்டோர் அது. தனது வணிகம் FastBeetle மூலம் பெரும் உந்துதலைப் பெற்றுள்ளது என்கிறார் அவர்.
"அவர்கள் எங்கள் தயாரிப்புகளை, எங்களிடமிருந்து பிக்-அப் செய்து வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இது எங்களின் விரிவாக்கத்திற்கு உதவியது."
FastBeetle-இன் வெற்றிக் கதை, இப்பகுதியில் உள்ள அரிஃப் இர்ஷாத் தார் போன்ற பிற தொழில்முனைவோருக்கு உத்வேகமாக விளங்குகிறது.
30 வயதான அவர் ’காஷ்மீர் ஆரிஜின்’ என்ற ஆர்கானிக் கடையை நடத்தி வருகிறார், இது காஷ்மீர் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட பிரெஷ் தயாரிப்புகள், கைவினைப்பொருட்களை விற்கிறது.
சமியுல்லா மற்றும் ரஷீத் போல தனது தொழிலை வளர்க்க விரும்புவதாக தார் கூறுகிறார். அதனால் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார் அவர்.
FastBeetle, ஷார்க் டேங்கில் சிறப்பாகச் செயல்பட்டதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வளர்ந்து வரும் தொழில்முனைவோர் கூறினார்.
"காஷ்மீரில் இருந்து வரும் ஒரு ஸ்டார்ட்-அப் கூட பெரிதாக சாதிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது" என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
"ஸ்டார்ட்-அப் உருவாக்கத்திற்குத் தேவையான சூழலை" உருவாக்கத் தாங்கள் இப்போது பணியாற்றி வருவதாக நிறுவனர்கள் கூறுகிறார்கள்.
ஆயினும் பல சவால்கள் உள்ளன. பிராந்தியத்தின் நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலையின் காரணமாக மக்கள் இன்னும் ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்யத் தயங்குவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
"ஆனால் நாங்கள் இங்கு வாழ்கிறோம், எங்களுக்கு நிலைமை தெரியும். பனிப்பொழிவுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை நாங்கள் அறிவோம். இந்த சூழ்நிலைக்குப் பழகிக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும்" என்று ரஷித் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












