இஸ்ரேல் - பாலத்தீன அமைதி முயற்சியை குழப்பி வரலாற்றை புரட்டிப்போட்ட இசாக் ராபின் படுகொலை

இசாக் ராபின் படுகொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த 1993ஆம் ஆண்டு ஒஸ்லோ உடன்படிக்கையில் கையெழுத்திட்ட போது இசாக் ராபின் மற்றும் யாசர் அராபத் இடையிலான கைகுலுக்கல் எல்லோரிடமும் ஒரு நம்பிக்கையை வளர்த்தது.
    • எழுதியவர், பவுலா ரோசாஸ்
    • பதவி, பிபிசி நியூஸ்

கடந்த 1995ஆம் வருடம் நவம்பர் 4ஆம் தேதி ஒரு அரசியல் கொலை நடந்தது. அது அண்மைக்கால அரசியல் வரலாற்றையே புரட்டிப்போட்ட சம்பவமாக மாறியது.

அந்த நாள் தீவிர யூத தேசியவாதியான இகல் அமீர், இஸ்ரேலிய பிரதமராக இருந்த இசாக் ராபினை (Yitzhak Rabin) நோக்கி இரண்டு முறை மிகத் துல்லியமாக துப்பாக்கியால் சுட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இசாக் ராபின் இறந்ததுடன், அவர் முன்னிறுத்திய அரசியல் நம்பிக்கையும் இறந்துபோனது.

இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நீடித்த அமைதியை உருவாக்க முடியும் என்பதே அந்த நம்பிக்கை.

கடந்த சனிக்கிழமையுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்த இந்தப் படுகொலை, இப்போது வரை நீடிக்கும் இஸ்ரேல்-பாலத்தீனப் பிரச்னையில் ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் எப்படி நடந்தது? இது என்ன விளைவுகளை ஏற்படுத்தியது?

ரத்தத்தில் முடிந்த அமைதிக் கூட்டம்

இந்தச் சம்பவத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான், பாலத்தீனிய சுயநிர்ணயத்திற்கான அடித்தளத்தை அமைக்க முயன்ற ஒஸ்லோ ஒப்பந்தத்தில், ​​அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் இசாக் ராபினும் பாலத்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைவர் யாசர் அராஃபத்தும் கையெழுத்திட்டிருந்தனர்.

பல தசாப்தங்களாக நீடித்து வந்த மோதலின் முடிவில் ஒரு சிறிய வெளிச்சத்தைப் பார்க்கத் தொடங்கிய பல இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனியர்களின் நம்பிக்கையை இந்த ஒப்பந்தம் உறுதி செய்திருந்தது. இருப்பினும், இது இஸ்ரேலியர்கள் மற்றும் ஆயுதக் குழுவான ஹமாஸ் இடையே வன்முறை மற்றும் வெறுப்பு அலைகளைக் கட்டவிழ்த்து விடவும் செய்தது.

இன்றைய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் வலதுசாரிக் கட்சியின் தலைமையில், இசாக் ராபினுக்கு எதிரான அவதூறு பிரசாரங்கள் நாடு முழுவதும் பரப்பப்பட்டன.

பிபிசியின் சர்வதேச செய்தியாளர் ஜெரமி போவன் நினைவு கூர்ந்தபடி, இஸ்ரேலிய நகரங்கள் எங்கும் அராஃபத் உடையணிந்து, தலையில் குஃபியா (பாலத்தீன தொப்பி) அணிந்திருந்த இசாக் ராபினை காட்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அவருடைய படங்கள் நாஜிக்களின் சீருடையுடனும் அந்த சுவரொட்டிகளில் காணப்பட்டன.

பாலத்தீனப் பகுதிகளின் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டை விட்டுக் கொடுத்ததற்காக தீவிர வலதுசாரிகள் ராபினை மன்னிக்கவில்லை. ஹமாஸ், அதன் பங்கிற்கு ஏற்கெனவே தற்கொலைத் தாக்குதல்களைத் தொடங்கியிருந்தது. இருக்கவே கூடாது என அவர்கள் கருதிய ஒரு தேசத்திடம் இஸ்ரேல் சரணடைந்தது தான் ஒஸ்லோ ஒப்பந்தம் என அந்த அமைப்பு நம்பியது.

டெல் அவிவில் 1995ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற, அமைதி உடன்படிக்கையை ஆதரித்து விளக்கிப் பேசும் ஒரு நிகழ்வில் இசாக் ராபின் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கூட்டினார்.

“நான் 27 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினேன். அமைதிக்கு வாய்ப்பில்லாத போதுகூட நான் அதற்காகப் போராடினேன். அவரிடம் (யாசர் அராபத்) இப்போது அவை இருப்பதாக நான் நினைக்கிறேன். இங்கு இருப்பவர்கள் சார்பாகவும், இங்கு இல்லாதவர்கள் சார்பாகவும், பலர் சார்பாகவும் நாம் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெரும்பான்மையான மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்றும், அமைதிக்காக ஆபத்துகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் நான் எப்போதும் நம்பினேன்," என்று அவர் தனது கடைசி உரையில் கூறினார்.

அப்போது அந்தக் கூட்டத்தில் 'ஷிர் லாஷாலோம்' ('அமைதிக்கான பாடல்') பாடப்பட்டது.

ராபின் மேடையை விட்டு இறங்கியவுடன், இகல் அமீன் அவரது முதுகில் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார்.

சிறிது நேரத்தில் ராபினின் சட்டைப் பையில் இருந்து, அமைதிக்கான அந்தப் பாடல் வரிகளின் நகல் ரத்தத்தில் நனைந்து, உறைந்துபோன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இசாக் ராபின் படுகொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல இஸ்ரேலியர்களுக்கு, ராபினின் ராணுவப் பின்னணி அவரை அமைதிப் பேச்சுக்களுக்குத் தலைமை தாங்கும் சிறந்த நபராகக் காட்டியது.

சமாதானத்தை விரும்பிய முன்னாள் ராணுவத் தளபதி

இஸ்ரேலிய தொழிலாளர் கட்சியின் உறுப்பினரான இசாக் ராபின் இரண்டு முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடைசியாக 1992 தேர்தலில் அவர் மீண்டும் பிரதமராகத் தேர்வானார்.

ஆனால் பல இஸ்ரேலியர்களுக்கு, அவரது ராணுவ சேவைதான் சிறந்த அறிமுகமாக இருந்தது.

ராபின் தனது ராணுவப் பணியை பிரிட்டன் ஆட்சியின்போது செயல்பட்ட ஹகானா என்ற ராணுவத்தின் உயரடுக்குப் பிரிவான ‘பால்மாக்’கில் தொடங்கினார். இந்த ஹகானா தான் இஸ்ரேல் அரசின் பிரகடனத்திற்குப் பிறகு, இஸ்ரேல் பாதுகாப்புப் படையாக (IDF) மாறியது.

அரபு-இஸ்ரேலிய போர் 1948ஆம் ஆண்டில் நடந்துகொண்டிருந்தபோது, ராபின் ஏற்கெனவே ஒரு முக்கிய இஸ்ரேல் ராணுவத் தளபதியாக இருந்தார். இருப்பினும் இது அவரது ராணுவ வாழ்க்கையின் தொடக்கமாக மட்டுமே இருந்தது.

இசாக் ராபின், 1967-ஆம் ஆண்டில் ஆறு நாள் போரின்போது, ஒரு ராணுவப் பிரிவின் தலைமை அதிகாரியாக இருந்தார். அந்தப் பிரிவு அரபு எதிரிகளுக்கு எதிராக மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. ஒரு வாரத்திற்குள், எகிப்து, ஜோர்டான், சிரியா, மற்றும் இராக் ஆகிய நாடுகளைத் தோற்கடித்து, சினாய், கோலன் குன்றுகள், காஸா மற்றும் மேற்குக் கரைப் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது.

இந்த வெற்றிக்குப் பிறகு, அவரது ராணுவ வாழ்க்கையின் உச்சத்தில், பல இஸ்ரேலிய ஜெனரல்கள் செய்ததைப் போல், ராபினும் அரசியலில் நுழைந்தார்.

அவர் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேலின் தூதராக இருந்தார். அங்கிருந்து அவர் திரும்பியதும், 1973இல், தொழிற்கட்சிக்கான அரசியல் அமைப்பின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1974இல் யோம் கிப்பூர் போரால் பலவீனமடைந்திருந்த கோல்டா மேயர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு, அவர் முதல் முறையாக (1974-1977) பிரதமர் பதவியை வகித்தார். அதற்குப் பின் அவர் 1992 முதல் இறக்கும் வரை மீண்டும் பிரதமராகப் பதவி வகித்தார்.

இசாக் ராபின் படுகொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராபின் ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றினார்.

‘அமைதிக்கான போரை’ நடத்திய நம்பிக்கைக்குரியவர்

பல வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி, ராபினின் ராணுவப் பணிக்காலம், இஸ்ரேலியர்களால் அப்பழுக்கற்றதாகப் பார்க்கப்பட்டது. அதுதான் ஒஸ்லோ அமைதி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் தகுதியை அவருக்கு வழங்கவும் செய்தது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் யூத வரலாற்றின் பேராசிரியரான டெரெக் பென்ஸ்லர் கூறுகையில், "ராபின் தான் அமைதிக்கான ஒரே வாய்ப்பாக இருந்தார் எனக் கருதமுடியாது. ஆனால் அவர் அதற்கான மிகச் சிறந்த நபராக இருந்தார். பாதுகாப்பு அமைப்பின் தூணாக இருந்த அவருடைய அனுபவம், அவரிடமிருந்த நம்பகத்தன்மை, அவரது வாழ்வின் இறுதி வருடங்களில் அவர் அனுபவித்த உண்மையான மாற்றம், போன்றவை அவருக்கு அந்த இடத்தை அளித்தன,” என்கிறார்.

டெரெக் பென்ஸ்லர் மேலும் கூறுகையில், “ராபின் போருக்கு தலைமை தாங்கினாலும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு பேச்சுவார்த்தை முக்கியமானது என்று நம்பினார். தனது உரைகளில் அவர் உணர்ச்சியுடன் பல கருத்துகளைப் பேசினார்,” என்றார்.

உதாரணமாக இந்த உரை: ‘நான், வரிசை எண் 30,743, ரிசர்வ் லெப்டினன்ட் ஜெனரல் இசாக் ராபின், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் மற்றும் அமைதி காக்கும் ராணுவத்தின் சிப்பாய்; படைகளை துப்பாக்கிச் சூட்டுக்கும், வீரர்களை மரணத்திற்கும் அனுப்பிய நான், இன்று சொல்கிறேன்: ‘ஒரு போரை நோக்கி நாம் பயணிக்கிறோம். இந்தப் போரில் உயிரிழப்புகள் இல்லை. காயங்கள் இல்லை. ரத்தம் இல்லை. துன்பம் இல்லை. இப்படி ஒரு போரில் நாம் பங்கேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் போர் தான் அமைதிக்கான போர்.’

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இஸ்ரேல் குறித்த ஆய்வுகளுக்கான Y&S நஜாரியன் மையத்தின் இயக்குனர் டோவ் வாக்ஸ்மேன் கூறுகையில், இசாக் ராபின் ‘ஒரு இடதுசாரி அமைதிவாதி அல்ல’, ஆனால், அதனால்தான் அவர் இஸ்ரேலின் அமைதிக்கான முயற்சிகளை வழிநடத்த மிகவும் பொருத்தமான நபரானார்.

"பிரதமர் ராபின் ஒரு வெற்றிகரமான சமாதான முன்னெடுப்பை அதன் முடிவுக்கு கொண்டு வர தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டார். அவரது நீண்ட ராணுவ அனுபவம் காரணமாக, அவர் இஸ்ரேலியர்களுக்கு, குறிப்பாக இஸ்ரேலிய யூதர்களுக்கு, அவர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய மாட்டார் என்று உத்தரவாதத்தை அளிக்க முடிந்தது,” என்று வாக்ஸ்மேன் பிபிசி முண்டோவிடம் கூறினார்.

இந்த ஆதரவின் மூலம் வலுப்பெற்று, 1991-இன் மாட்ரிட் அமைதி மாநாடு மற்றும் 1978-இன் கேம்ப் டேவிட் ஒப்பந்தங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட தளங்களின் அடிப்படையில், இசாக் ராபின் ஒஸ்லோ உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய அங்கமாக மாறினார்.

இசாக் ராபின் படுகொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிஎல்ஓ தலைவர் யாசர் அராபத் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் ஷிமோன் பெரஸ் மற்றும் பிரதமர் இசாக் ராபின் ஆகியோர் 1994 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.

ஓஸ்லோ உடன்படிக்கை என்றால் என்ன?

மத்திய கிழக்கு போன்ற அரசியல் ஸ்திரத்தன்மையற்ற ஒரு பகுதியில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தச் சீரிய சிந்தனையும், விவேகமும் தேவை.

இந்தக் காரணத்திற்காக, பாலத்தீனிய மற்றும் இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக் குழுக்கள் 1993-இல் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் ரகசியப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக வெள்ளை மாளிகையில் அதே ஆண்டு செப்டம்பரில் முதல் ஒஸ்லோ ஒப்பந்தம் (ஒஸ்லோ I) நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுக்கு முன்னால், ராபினும் பாலத்தீன விடுதலை அமைப்பின் (பி.எல்.ஓ) தலைவர் யாசர் அராஃபத்தும் அதுவரை சாத்தியமற்றதாகத் தோன்றியதைக் கைகுலுக்கிச் சாதித்தனர். ஒருவரையொருவர் அமைதிக்கானப் பேச்சுவார்த்தையில் அங்கத்தினராக அங்கீகரித்தனர்.

இதைத்தொடர்ந்து, அமைதிக்காகப் பணியாற்றிய ராபின், அராஃபத், மற்றும் அப்போதைய இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சராக இருந்த ஷிமோன் பெரஸ் ஆகிய மூவருக்கும் 1994-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டு, அவர்களது பணிகள் அங்கீகரிக்கப்பட்டன.

இரண்டாவது ஓஸ்லோ ஒப்பந்தம் (ஒஸ்லோ II) 1995-இல் கையெழுத்திடப்பட்டது.

அதுவரை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாகக் கருதிய பி.எல்.ஓ.வுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வந்தது. ஆனால் அந்த தருணத்திலிருந்து, பி.எல்.ஓ இஸ்ரேலின் பார்வையில் ‘பாலத்தீன மக்களின் பிரதிநிதி’ ஆனது.

இதையொட்டி, பி.எல்.ஓ இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்தது மட்டுமின்றி ஆயுதமேந்திய தாக்குதல்களைக் கைவிடவும் செய்தது. நாடு கடத்தப்பட்ட அதன் தலைவர்களும் பத்திரமாகத் திரும்ப முடிந்தது.

ஓஸ்லோ ஒப்பந்தங்கள் பாலத்தீனர்களுக்கு அவர்களின் நகர்ப்புறங்களில் வரையறுக்கப்பட்ட நிர்வாக உரிமையை வழங்கியது என்பதுடன் பாலத்தீனிய தேசிய ஆணையத்தை (PNA) உருவாக்க வழிவகுத்தது.

ஆனால் இப்படி உருவாக்கப்பட்ட கட்டமைப்பு தற்காலிகமாக இருக்க வேண்டும் என்றும், ஐந்தாண்டுகளுக்குள் புதிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, மோதலுக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் ஓஸ்லோ உடன்படிக்கையில் தீர்மானமானது.

30 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த நேரத்தில் இருந்த நம்பிக்கையைப் போன்ற நம்பிக்கை தற்போது ஏற்பட வழியே இல்லை என்று தோன்றுகிறது.

இன்று, இஸ்ரேல்-காஸா பிராந்தியத்தில் அமைதியைப் பற்றிய பேச்சுகள் கூட அடிபடவில்லை.

இசாக் ராபின் படுகொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராபின் கொலை செய்யப்பட்ட பின் அவரது சட்டைப் பையில் இருந்து ரத்தம் தோய்ந்த காகிதத்தில் அமைதிக்கான பாடல் வரிகள் கண்டெடுக்கப்பட்டன.

இசாக் ராபினின் கொலையுடன் அமைதி முயற்சிகள் முடிந்தனவா?

அவரது படுகொலை ஓஸ்லோ அமைதி முயற்சிகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

ராபினின் மரணத்திற்குப் பிறகு, ஷிமோன் பெரஸ் அரசாங்கத்தின் தலைமையை ஏற்றுக்கொண்டார். ஒரு வருடம் கழித்து அவரது அரசாங்கம் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான ஒரு தேர்தலில் தோல்வியடைந்தது.

"அமைதி நடவடிக்கைகளை நெதன்யாகு நிறுத்தவில்லை என்றாலும், அதை நிலைகுலைய வைக்கவும், பாலத்தீன அரசு உருவாகாமல் பார்த்துக்கொள்ளவும் தன்னால் அவர் முடிந்த அனைத்தையும் செய்தார்," என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியரான வாக்ஸ்மன்.

டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் யூத வரலாற்றுப் பேராசிரியரான ஓரிட் ரோஸின், கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி 1,400 இஸ்ரேலியர்களைக் கொன்றதாக அதிகாரிகள் கருதும் ஹமாஸ் தாக்குதல், இஸ்ரேலிய மக்களை எவ்வாறு உலுக்கியதோ, அதே போலத்தான் அன்று ராபினின் படுகொலையும் உலுக்கியது, என்கிறார்.

"ஆம், சூழ்நிலைகள் வேறுபட்டவை. ஆனால் இப்போது போலவே அப்போதும், இஸ்ரேலியர்களும் அவர்களின் தலைவர்களும் தங்கள் சமநிலையை இழந்துவிட்டதாக உணர்ந்தனர்," என்று ரோஸின் கூறுகிறார்.

மேலும், ஷிமோன் பெரெஸ் ‘அமைதி உடன்படிக்கையை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்குத் தேவையான தைரியத்தை வரவழைக்க மிகவும் சிரமப்பட்டார்,’ என்றும் ரோஸின் கூறுகிறார்.

வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், இஸ்ரேலிய தீவிர வலதுசாரிகள், ‘ராபினின் படுகொலையைக் கொண்டாடினர்,’ என்று அவர் கூறுகிறார். அன்றிரவு குடியேற்றப் பகுதியில் வசித்து வந்தவர்களில் ஒருவர் ரோசோனை அழைத்து ‘மக்கள் தங்கள் பால்கனிகளில் நடனமாடுகிறார்கள்’ என்று சொன்னதாக ரோஸின் கூறினார்.

ராபின் படுகொலை செய்யப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, 19 வயது இளைஞர் ஒருவர் ராபினின் காடிலாக் காரின் சின்னத்துடன் தொலைக்காட்சியில் தோன்றினார். அந்த சின்னத்தை அவரே வாகனத்திலிருந்து கிழித்து எடுத்து வந்ததாகத் தெரிவித்த அவர், "நாங்கள் இன்று அவருடைய காரை அடைந்தோம், விரைவில் அவரையும் அடைவோம்," என்று அச்சுறுத்தினார். அவருடைய பெயர் இடாமர் பென் க்விர்.

அவர் தான் இன்று இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

இறுதியில், ‘ஹமாஸ், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களாலும், இஸ்ரேலியர்கள் தீவிர வலதுசாரி போக்குகளாலும் சமாதான முயற்சிகளைப் படுகொலை செய்தனர்,’ என்கிறார் ரோசின்.

ராபினின் மரணத்திற்குப் பிறகு, பாலத்தீனரோ, அல்லது இஸ்ரேலிய தரப்புகளோ அமைதிச் சுடரை உயிர்ப்புடன் வைத்திருக்கத் தேவையான தகுதியுடனும், தலைமைத்துவத்துடனும் வெளிவரவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இசாக் ராபின் படுகொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 25 வயதான யூத தீவிர வலதுசாரியான யிகல் அமீர், "தனது நிலத்தையும் மக்களையும் எதிரிகளிடம் ஒப்படைத்ததற்காக" ராபினைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். தற்போது அவர் இஸ்ரேலிய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

முடிவை எட்டாத உடன்படிக்கைகள்

ராபின் படுகொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.

ராபின் இறந்த போது, அமைதி உடன்படிக்கையின் முக்கியமான, சிக்கலான ஷரத்துகள் இன்னும் விவாதிக்கப்படாமலே இருந்தன.

உதாரணமாக: வரவிருந்த பாலத்தீன அரசின் வரம்புகள் மற்றும் அதிகார எல்லைகள், அகதிகள் நாடு திரும்புதல், ஜெருசலேமின் நிலை, மற்றும் பாலத்தீனப் பகுதிகளில் இருந்த யூதக் குடியேற்றங்களின் நிலை.

படுகொலை செய்யப்பட்ட ராபின் கூட, பாலத்தீன அரசை உருவாக்குவதை ஆதரிப்பதாக ஒருபோதும் பகிரங்கமாக கூறவில்லை. இருப்பினும் அமைதி ஒப்பந்தங்கள் அந்த இலக்கைத் தான் நோக்கிச் சென்றுகொண்டிருந்தன என்பதை அவர் தெளிவாக புரிந்து கொண்டார், என்று டோவ் வாக்ஸ்மேன் குறிப்பிடுகிறார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எட்வர்ட் சைத் நவீன அரேபிய ஆய்வு மையத்தின் தலைவராக இருக்கும் வரலாற்றாசிரியர் ரச்சித் காலிடி பிபிசி முண்டோவுடன் பேசிய போது, “பாலத்தீனம் ஒரு அரசு என்ற நிலையை விடக் குறைவாக இருக்கும் என்றும், ஜோர்டான் நதி பள்ளத்தாக்கு மற்றும் ஜெருசலேம் பகுதி முழுவதையும் இஸ்ரேல் கட்டுப்படுத்தும் என்றும் ராபின் பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார்,” என நினைவுகூர்ந்தார்.

இன்று, கோட்பாட்டளவில் இன்னும் நடைமுறையில் இருக்கும் ஓஸ்லோ ஒப்பந்தங்கள் அவற்றின் மதிப்பை பெரிதும் இழந்துவிட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் மாற்றப்பட வேண்டிய பாலத்தீன அதிகார அமைப்பின் நடைமுறைகளும் அவற்றின் நியாயத்தன்மையை இழந்து வருகின்றன.

ராபினின் படுகொலைக்குப் பின் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்காக நடந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

டெரெக் பென்ஸ்லர் கூறுவதைப் போல, கடைசியாக நடந்த நேர்மையான அமைதி முயற்சி 2008-இல் இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் மற்றும் பாலத்தீன அதிகார அமைப்பின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோர் இணைந்து மேற்கொண்டதாகவே இருக்கக் கூடும்.

ஆனால், “நெதன்யாகு மீண்டும் பிரதமரானவுடன், எல்லாம் முடிந்துவிட்டது," என்கிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)