இஸ்ரேல்-இரான் மோதல்: பாதுகாப்பான இடத்தில் இரான் தலைவர்; ஐ.நா பொதுச் செயலாளருக்கு இஸ்ரேல் தடை
மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டாகவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் மோசமாக்கும் வகையில், இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நேற்று (அக்டோபர் 1) நடத்தியது.
இதற்கிடையே, இரானின் அதி உயர் தலைவர், அயதுல்லா அலி காமேனெயி இன்று (அக்டோபர் 2) தெஹ்ரானில் இரானின் முக்கியஸ்தர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மற்றும் போருக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளை குற்றஞ்சாட்டினார். அவர்கள் இங்கு அமைதியை நிலைநாட்டுவதாக பொய்யாக கோருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
''அந்த நாடுகள் இங்கிருந்து வெளியேற வேண்டும் (Get lost) அப்போதுதான் இங்குள்ள நாடுகள் அமைதியாக இருக்கும்'' என்றும் அவர் கூறினார்.
நேற்று (அக்டோபர் 1) இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதற்கான உத்தரவை வழங்கிய இரானின் அதி உயர் தலைவரான காமேனெயி, ஒரு பாதுகாப்பான இடத்தில் தொடர்ந்து இருப்பதாக இரான் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Ma'ayan Toaff
பாதுகாப்பு ஆலோசனை நடத்திய இஸ்ரேல் பிரதமர்
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று (அக்டோபர் 2) டெல் அவிவில் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் மற்றும் பிற பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நேற்று (அக்டோபர் 1) இரான் நடத்திய தாக்குதல் 'பெரும் தவறு' என்று குறிப்பிட்ட பிரதமர் நெதன்யாகு, இரானுக்கு தக்க பதிலடி கொடுப்பதாகக் கூறியிருந்த நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
நேற்று (அக்டோபர் 1) இரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலின் விமானங்கள், டிரோன்கள் அல்லது முக்கியமான உள்கட்டமைப்புகள் என எதுவும் சேதம் அடையவில்லை என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கூறியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய ஊடகங்களின்படி, இந்தத் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் மட்டுமே காயமடைந்துள்ளனர், பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தடை
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை குட்டெரெஸ் "வெளிப்படையாக கண்டிக்க" தவறியதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் மோதல் அதிகரித்து வருவதை நேற்று (அக்டோபர் 1) கண்டித்த ஐ.நா பொதுச்செயலாளர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
‘நிலைமை கைமீறிச் செல்கிறது’
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடந்தது.
அதில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், "மத்திய கிழக்கில் பற்றி எரியும் தீ கைமீறிச் செல்கிறது," என்று அப்பகுதியில் நடந்து வரும் தாக்குதல்கள் குறித்து கூறினார்.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ‘மிகவும் கடுமையானது’ என்று விவரிக்கும் அவர், தற்காலிகப் போர்நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என்ற அவரது முன்மொழிவை இஸ்ரேல் நிராகரித்து மேலும் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறுகிறார்.
இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலையும் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறுகிறார். தாக்குதல்களை அவர் இன்னும் கண்டிக்கவில்லை என்று கூறி இஸ்ரேலுக்குள் நுழைய இதற்கு முன் இஸ்ரேல் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இரான் தாக்குதலும் இஸ்ரேல் பதிலும்
இரான் ஏவிய ஏவுகணைகளில் பெரும்பாலானவை அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இஸ்ரேலிய விமானப்படையால் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரானுக்கு உரிய பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேலை நோக்கி டஜன்கணக்கான ஏவுகணைகளை ஏவியதாக இரானின் புரட்சிகர காவல்படை உறுதிப்படுத்தும் அறிக்கையை இரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் மற்றொரு தாக்குதல் நடைபெறும் எனவும் அது எச்சரித்துள்ளது.
ஜூலை மாதம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலத்தீன, லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக புரட்சிகர காவல்படை தெரிவித்தது.
இந்த தாக்குதலுக்கு பின் விளைவுகள் இருக்கும் என இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters
இஸ்ரேலில் என்ன நடந்தது?
முன்னதாக இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு படை வீரர்களின் அறிவுறுத்தல்களின் படி நடக்குமாறும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
சைரன் சத்தம் கேட்டவுடன், ''நீங்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்து, மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்க வேண்டும்", எனவும் அது கூறியது.
இரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதால், இஸ்ரேல் முழுவதும் உள்ள மற்றவர்களைப் போல நாங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றோம் என ஜெரூசலத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஆலிஸ் கட்டி கூறினார்.
அமெரிக்கா என்ன செய்தது?
இதற்கிடையே இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
இரானிய தாக்குதல்களிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கவும், இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும் பைடன் உத்தரவிட்டார்.
இரானின் தாக்குதல்களை அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கண்காணித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
சில இரானிய ஏவுகணைகளை நடுவானில் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தார்.

இரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் உறுதி
இரான் செலுத்திய ஏவுகணைகளை தடுப்பதில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறினார்.
"இரானின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. இரான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சரியான தொடர் விளைவுகள் இருக்கும்" என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
இரானுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
இரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாகவும், அதற்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்தது.
இரான் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய அமைச்சரவை கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் இஸ்ரேலின் உறுதிப்பாட்டை இரான் புரிந்து கொள்ளவில்லை" என்றார்.
"இரான் அதனை புரிந்து கொள்ளும். எங்களை யார் தாக்கினாலும் நாங்கள் திருப்பித் தாக்குவோம். நாங்களே வகுத்துக் கொண்ட அந்த விதிகளின் கீழ் செயல்பட நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், EPA
இரானில் வீதியில் இறங்கி கொண்டாடிய மக்கள்

பட மூலாதாரம், EPA
இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரானின் தலைநகரான டெஹ்ரானில் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடினர்.
ஏராளமான மக்கள் இரான் மற்றும் ஹெஸ்பொலாவின் கொடிகளை ஏந்தியிருந்தனர். லெபனானில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லாவின் புகைப்படத்தை மக்கள் வைத்திருந்ததை பார்க்க முடிந்தது.
இந்தக் கொண்டாட்டம் தொடர்பாக வெளியான புகைப்படங்களின்படி, சிலர் பட்டாசுகளை வெடிக்கிறார்கள்.
ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்திய பிறகு இதேபோன்ற கொண்டாட்டம் பிரிட்டன் தூதரகத்திற்கு முன் நடந்தது. இப்போதும் அதே இடத்தில் தான் மக்கள் ஒன்று கூடினர்.

பட மூலாதாரம், EPA
லெபனானில் கொண்டாட்டம்

இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய செய்தி வெளியான பிறகு, லெபனானில் உள்ள ஹெஸ்பொலா உறுப்பினர்கள், பாலத்தீனிய குழுக்கள் மற்றும் இரானின் ஆதரவாளர்கள், தலைநகர் பெய்ரூட்டில் பட்டாசு வெடித்தும், துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடமாக இருக்கும் ஒரு பள்ளியில் சில கொண்டாட்டங்களை பார்க்க முடிந்தது. இங்கு சிவில் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பிபிசி கேமரா முன்பு ‘V’ (வெற்றி) என்ற அடையாளத்தில் இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டி "நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்," என்று அவர்கள் கூச்சலிட்டனர்.
முன்னதாக சில ஹெஸ்பொலா ஆதரவாளர்களும், லெபனானில் உள்ள சிலரும், ‘இரானை ஹெஸ்பொலாவை விற்றுவிட்டதாக’ கூறி கடுமையாக விமர்சித்தனர். ‘ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு இரான் பழிவாங்கவில்லை, இது இஸ்ரேலுக்கு தைரியத்தை அளித்துள்ளது’ என்றும் சிலர் பிபிசியிடம் கூறினார்கள்.
ஒருவர், “இது ஒரு நிகழ்வு மட்டுமே. எங்கள் தலைவர் போய்விட்டார், எந்தப் பழிவாங்கலும் அவரைத் திரும்பக் கொண்டுவராது." என்று கூறினார்.
ஏவுகணையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாலத்தீன மக்கள்

பட மூலாதாரம், Getty Images
மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் நகருக்கு அருகே பாலத்தீனர்கள், அங்கு விழுந்த ஒரு ஏவுகணையின் இடிபாடுகளை பார்க்கும் புகைப்படங்கள் வெளியாகின.
ஏ.எப்.பி. செய்தி முகமையின் புகைப்படக் கலைஞரின் கூற்றுப்படி, அடையாளம் தெரியாத இந்த ஏவுகணையின் மிச்சம் ஹெப்ரோனுக்கு மேற்கே உள்ள துரா நகரின் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஏவுகணையுடன் ஒரு குழு புகைப்படம் எடுப்பதையும் காண முடிந்தது. ஆனால் அந்த புகைப்படங்களின் நம்பகத்தன்மையை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













