ஷ்ரத்தா கொலை: அஃப்தாப் அறையைப் பார்க்க வரிசை கட்டும் மக்கள், அஞ்சும் அண்டை வீட்டார் - கள நிலவரம்

- எழுதியவர், கமலேஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இரண்டு மாடி வீட்டின் முதல் தளத்தில் கட்டப்பட்ட ஒரு பிளாட், அதன் கதவு பூட்டப்பட்டுள்ளது.
கதவின் வலது பக்கம் ஒரு பெரிய ஜன்னல் திறந்திருக்கிறது, அந்த வழியாகச் செல்பவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்து, வீடியோ எடுத்து, ஜன்னல் அருகே மேசையில் கிடந்த பொருட்களை எடுத்து முன்னும் பின்னுமாகப் பார்க்கிறார்கள்.
காலியாக இருக்கும் சாதாரண பிளாட் போல் தெரிகிறது.
ஆனால் இந்த ஃப்ளாட் தான், தற்சமயம் மும்பை முதல் தில்லி வரை விரிந்துள்ள விசாரணைக்குட்பட்டு நாடு முழுவதும் பேசு பொருளாகியிருக்கும் ஒரு கொடூரக் கொலை வழக்கின் சாட்சி.
மெஹ்ராலி காவல் நிலையத்தின் கீழ் வரும் டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இங்கு வசித்த அஃப்தாப் பூனாவாலா, தனது காதலி ஷ்ரத்தா வால்கரைக் கொன்று பல துண்டுகளாக வெட்டி, மெஹ்ராலி காட்டில் வீசியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மே 18 அன்று அஃப்தாப் ஷ்ரத்தாவை தனது குடியிருப்பில் கொன்று உடலை துண்டுகளாக வெட்டி பல நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்ததாகக் காவல் துறை கூறுகிறது.
உடல் உறுப்புகள் அழுகி நாற்றம் வராமல் இருக்க, புதிய ஃப்ரிட்ஜையும் வாங்கி பல மாதங்கள் அந்தத் துண்டுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக வீசிக்கொண்டே இருந்தார்.
ஆனால், சத்தர்பூர் மலைப் பகுதியின் முதல் தெருவிற்குள் நாங்கள் நுழைந்தபோது, ஊடகவியலாளர்கள் திரண்டிருப்பதை தூரத்திலிருந்து பார்க்க முடிந்தது. அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளும் அது தான் அந்த வீடு என்று சுட்டிக் காட்டினர்.
குற்றச்சம்பவம் நடந்த இடம் என்பதால், போலீஸ் கெடுபிடி பெரிய அளவில் இருக்கும் என்பதும் எங்களுக்குப் புரிந்தது. காவல் துறையினர் வீட்டைப் பூட்டியிருப்பார்கள் என்றும் தடைகள் அமைத்திருப்பார்கள் என்றும் புரிந்தது.
அந்த ஃப்ளாட்டை நான் எவ்வளவு அருகில் சென்று பார்க்க முடியும் என்ற கேள்வியும் என் மனதில் எழுந்தது.
ஆனால், அஃப்தாபின் அந்த பிளாட் திறந்து கிடந்தது. ஊடகவியலாளர்கள் அறைக்கு வெளியில் இருந்து செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தனர், மேலும், ஜன்னல் வழியாகச் சில பொருட்களைத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த அறையின் உள்ளே ஒரு மேஜையில் வாசனைக்காக ஒரு கிண்ணமும் வண்ணப் பெட்டியும் இருந்தது. ஒரு மெத்தை தரையில் கிடந்தது. உள்ளே இன்னொரு அறை தெரிந்தது, ஆனால் அங்கே எல்லாம் சிதறிக் கிடந்தது.
சிறிது நேரத்தில் தெருவில் வசிக்கும் சிலர் அங்கு வந்தனர். யாரோ ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார், யாரோ உள்ளே எட்டிப்பார்த்து ஜன்னல் வழியாக எல்லாவற்றையும் பார்க்க விரும்பினார்.

அறைக்கு வெளியே நிறைய குப்பைகள் கிடந்தன. சோதனையின் போது சில காகிதங்கள், லக்கேஜ் கவர்கள் மற்றும் தெர்மாகோல்கள் வெளியே வீசப்பட்டிருக்கலாம். எத்தனை பேர் அவற்றின் மீது ஏறிச் சென்றிருப்பார்கள் என்று தெரியவில்லை.
ஜன்னல் கம்பிகள், வெளிப்புற திரைச்சீலைகள், கதவுகள், கைப்பிடிகள், மாடிப்படியின் கைப்பிடிச் சுவர் போன்றவை மக்கள் அடையும் தூரத்தில் தான் இருந்தன.
கிரைம் சீன் எனப்படும் குற்றச் சம்பவம் நடந்த இடமே, குற்றம் குறித்த பல முக்கியத் தகவல்களை அளிக்கக்கூடியது. அந்த இடத்தின் பிரத்தியேக அம்சங்கள் பல முக்கியமான தடயங்களைக் கொடுக்கின்றன, அவை இறுதியில் குற்றவாளியைத் தண்டிக்க உதவுகின்றன.
ஷ்ரத்தா வழக்கின் கொடூரத்தைப் பார்க்கும் போது, அதன் அருகில் கூட செல்ல அனுமதிக்கப்படாது என்று தோன்றியது. ஏனென்றால் அங்குள்ள மக்களின் நடமாட்டம் அந்த விவரங்களை அழித்துவிடக்கூடும். இருப்பினும், அங்கு காட்சி சற்று வேறு விதமாக இருந்தது.
காவல் துறையினர் சம்பவ இடத்தில் இருந்து தடயங்களைச் சேகரித்தனர். சடலத்தின் துண்டுகள் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டி காவல் துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது. அறையில் கொந்தளிப்பு நிலவுகிறது.
இதற்கிடையில், வழக்கு விசாரணை நடந்து வருவதாகவும், உடல் உறுப்புகளை கண்டறிவது உள்ளிட்ட அறையில் கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சடலத்தின் சில துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் அடையாளத்தை நிறுவ மேலும் தேடுதல்கள் நடந்து வருகின்றன.

அஃப்தாப் குறித்து ஊடகத்தினரிடம் அக்கம்பக்கத்தவர் கருத்து
இதனிடையே, அப்பகுதி மக்களிடையே இது குறித்த விவாதங்களே பெருமளவில் நிலவி வருகிறது. சிலர் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உறைந்து போயிருப்பது புரிகிறது.
பெரும்பாலான மக்கள் ஊடகங்கள் முன் மௌனம் காத்து வருகின்றனர். சிலர், 'வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை' என்றும், சிலர் 'வேலையில் இருந்தோம்' என்றும், சிலர், 'கொஞ்சம் தூரத்தில் வசிக்கிறோம்' என்றும் கூறினர்.
இந்த வீடு ஒரு குறுகிய தெருவில் உள்ளது. வீடுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அடர்ந்த பகுதி இது. ஆனால் இந்தப் பகுதியில் பலர் வாடகை வீட்டுக்காரர்கள். அவர்களில் பெரும்பாலோர் வேலைக்குச் செல்பவர்கள்.
சில வீடுகளை வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு விட்டு வேறு இடங்களில் வசிக்கின்றனர். சிலர் அதே வீட்டில் ஒரு பகுதியில் வசிக்கின்றனர்.
அஃப்தாப் தங்கியிருந்த வீட்டில் தரைத்தளமும் முதல் தளமும் ஒரே உரிமையாளருக்குச் சொந்தமானவை, இரண்டாவது தளம் வேறு ஒருவருக்குச் சொந்தமானது.
அஃப்தாபுக்கு முன்பே இரண்டு மூன்று வாடகைக் காரர்கள் இங்கு தங்கியிருந்ததாக அக்கம்பக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறினார்.
அஃப்தாப்பும் அவர்களைப் போலவே அமைதியாக வாழ்ந்து வந்ததாக அவர் கூறினார். போலீசார் வந்தபோதுதான் வழக்கு குறித்து தகவல் அவருக்குக் கிடைத்துள்ளது.
எதிர் வீட்டில் வசிக்கும் குசும்லதா, ‘‘முதல் முறை 25 முதல் 30 போலீசார் இங்கு வந்தனர். இதை பார்த்த தெரு மக்கள் திரண்டனர். அப்போது ஒரு பெண் காணாமல் போனது தெரிய வந்தது. மறுநாள் அஃப்தாப்புடன் போலீஸ் வந்தது.மூன்றாம் நாள் இங்கிருந்து ஃப்ரிட்ஜை எடுத்துச் சென்றது போலீஸ். அதற்கு முன், அஃப்தாபை உணவு மற்றும் ஆர்டர் எடுக்க சில சமயங்களில் இறங்கி வரும்போது பார்த்திருக்கிறோம். நாங்கள் அந்தப் பெண்ணை இங்கு பார்த்ததுகூட இல்லை.” என்றார்.
அதே சமயம் கூட்டத்தில் நின்றவர் ஒரு பெண், காதலித்த் பெண்ணை எப்படிக் கொன்றான் என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.
மற்ற பெண் பேசும் போது அவர் மிகவும் ஒழுக்கமாக இருந்ததாகக் கூறினார். வரும்போதும் போகும்போதும் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். நன்றாகப் பேசுவார் என்றார்.
வெளியாட்கள் குறித்த சர்ச்சை
வாடகைக்கு இருப்பவர்கள் பற்றி மக்கள் சொல்லும் வார்த்தைகளில் கொஞ்சம் அவநம்பிக்கையும் தெரிகிறது. மக்கள் நீண்ட காலமாக குடியிருப்பவர்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள், ஆனால் புதிதாக வரும் வாடகைக்காரர்களைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருக்கிறார்கள்.
சில வீடுகள் தள்ளி வசிக்கும் ஜோகிந்தர் கவுர், “எங்கள் தெருவில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. போலீசார் வந்து பார்த்ததில் ஒரு பெண் வெட்டப்பட்டது தெரியவந்தது. அங்கு பார்ட்டி நடக்கும். பலூன்கள் பறக்கும். பாட்டுச் சத்தம் கேட்கும். ஆனால் நாங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. எந்த நாற்றமும் கூட வரவில்லை. கொஞ்சம் பயமாகிவிட்டது. இப்படி நடந்ததில்லை. வெளியூர்களில் இருந்து வந்து வசிக்கும் வாடகைக் காரர்கள் இப்படி நடந்து கொள்ளக்கூடாது. இப்போது போலீஸ் வருகிறது, மீடியாக்காரர்கள் தினமும் வருகிறார்கள்.”என்றார்.
மறுபுறம், அஃப்தாபின் பிளாட்டுக்கு மேலேயும் கீழேயும் வசிக்கும் மக்கள் அமைதி காத்துள்ளனர். எந்த அறிவும் இல்லை என்று மறுக்கிறார்.
மேலே உள்ள பிளாட்டில் வசிக்கும் ஒரு பெண், முகத்தை மூடிக்கொண்டு, ஜன்னல் வழியே பேசினாள், 'ஜூன் மாதம் தான் இங்கே குடி வந்தோம். அதனால் எங்களுக்கு எதுவும் தெரியாது. அஃப்தாப் படிக்கட்டுக்கருகில் நிற்கும் போது சில முறை பார்த்ததுண்டு” என்றார்.

விஷயம் வெளிவந்தது எப்படி
டேட்டிங் ஆப் மூலம் ஷ்ரத்தா வால்கரும், அஃப்தாப் அமின் பூனாவாலாவும் சந்தித்ததாகக் காவல் துறை கூறுகிறது.
இருவரும் மும்பையில் வசிப்பவர்கள். 2019 முதல் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பின்னர் அவர்கள் அடிக்கடி சண்டையிட ஆரம்பித்தனர். இதையடுத்து இருவரும் வேலையை விட்டுவிட்டு மே மாதம் டெல்லிக்கு வந்து சேர்ந்தனர்.
இங்கே அஃப்தாப் சதர்பூர் மலைப்பகுதியில், சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்தார். ஷ்ரத்தாவும் சில நாட்கள் இங்கு தங்க வந்தார்.
ஷ்ரத்தா காணாமல் போனது அவரது தோழி ஒருவர் மூலம் தெரிய வந்தது.
செப்டம்பர் 14 ஆம் தேதி, ஷ்ரத்தாவின் தோழி மூலம், அவரது சகோதரர், இரண்டரை மாதங்களாக ஷ்ரத்தாவுடன் பேசவில்லை என்றும், போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல் வந்ததாக ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் வால்கர் தெரிவித்தார்.
இதையடுத்து மும்பை மாணிக்பூர் காவல் நிலையத்தில் தந்தை புகார் அளித்தார்.
அங்கு விசாரணையில், அஃப்தாப்பும், ஷ்ரத்தாவும் டெல்லி மெஹ்ராலியில் வசித்து வந்தது தெரிய வந்தது.பின் இந்த விஷயம் டெல்லியில் உள்ள மெஹ்ராலி போலீசாருக்கு சென்றது.
இங்கு, போன் லொகேஷன், சிசிடிவி காட்சிகள் மற்றும் மக்களுடன் உரையாடியதன் அடிப்படையில், அஃப்தாப் குறித்துத் தகவல் தெரிய வந்தது.

மும்பை காவல் துறையிடம் அஃப்தாப் கூறியது என்ன?
அஃப்தாப்பை பிடித்து விசாரித்தபோது, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் காவல் துறை கூறுகிறது.
மும்பையைச் சேர்ந்த பிபிசி செய்தியாளர் தீபாலி ஜக்தாப்பிடம், அஃப்தாப் மும்பையில் விசாரணைக்காக இரண்டு முறை அழைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சண்டைக்குப் பிறகு ஷ்ரத்தா வீட்டை விட்டு வெளியேறியதாக அஃப்தாப் போலீஸாரிடம் கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு, ஷ்ரத்தா மும்பை மலாடில் உள்ள கால் சென்டரில் வேலை பார்த்து வந்தார். ஷ்ரத்தா தனது தாயுடன் மும்பையில் உள்ள வசாயிலும் அவரது தந்தை தனியாகவும் வசித்து வந்தனர்.
அப்போது, அவர் ஒரு டேட்டிங் ஆப் மூலம் அஃப்தாப்பை சந்தித்தார், பின்னர் அவரைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால், இந்த உறவைக் குடும்பத்தினர் அங்கீகரிக்கவில்லை.
2019 இல், ஷ்ரத்தா அஃப்தாப்புடன் வாழத் தொடங்கினார். அவரது தாயார் 2020 இல் இறந்தார்.
இதற்குப் பிறகு, ஷ்ரத்தா அஃப்தாப்புடன் வாழத் தொடங்கினார். அவர் தன் தந்தையிடம் நெடுங்காலமாகப் பேச்சு வார்த்தை இல்லாமல்தான் இருந்துள்ளார்.

பட மூலாதாரம், ANI
காவல் துறையின் கூற்றுகள்
- இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் தலா ஒருவர் மட்டுமே இருப்பதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். வேறு யாரையும் ஈடுபடுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை என்று தெரிகிறது. ஆனால் இந்த அம்சமும் சரிபார்க்கப்படுகிறது.
- ஒவ்வொரு கோணத்திலும் வழக்கைத் தீர்க்க முயற்சிப்பதாக காவல்துறை கூறுகிறது.
- இறந்த உடலின் துண்டுகள் முதலில் AIIMS க்கும் பின்னர் தடயவியல் பரிசோதனைக்கும் அனுப்பப்படும். உடல் பாகங்கள் ஷ்ரத்தாவினுடையவை தான் என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.
- சில பாஜக தலைவர்கள் இந்த விஷயத்தை 'லவ் ஜிஹாத்' என்று கூறுகின்றனர். லவ் ஜிகாத் உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி கூறுகிறார்.
- அஃப்தாபின் மன நிலை குறித்து எதுவும் வெளிவரவில்லை.
- டேட்டிங் ஆப்பான பம்பிள் இந்த விஷயத்தில் டெல்லி காவல்துறைக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்குவதாகக் கூறியுள்ளது. செயலியின் செய்தித் தொடர்பாளர், அதன் உறுப்பினர்களைப் பாதுகாக்க விரும்புவதாகவும், இந்த விஷயத்தைக் கவனித்து வருவதாகவும் கூறினார். அஃப்தாப் மற்றும் அவர் ஆன்லைனில் சந்தித்த பிற பெண்களைப் பற்றிய தகவல்களைக் காவல் துறை கோருகின்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












