இந்தியாவில் சந்திர கிரகணம் எப்போது தெரியும்? முழு நிலவு பற்றிய நம்பிக்கையும் உண்மையும்

முழு நிலவு, சந்திர கிரகணம், இந்தியா, சென்னை

பட மூலாதாரம், Hagens World Photography via Getty Images

    • எழுதியவர், பிபிசி குளோபல் ஜர்னலிசம்

இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வானியல் ஆர்வலர்கள் ஒரு முழு சந்திர கிரகணத்தின் போது முழு நிலவும் செந்நிறமாக காட்சியளிக்கும் ஒரு ஒரு அழகான காட்சியை இன்று எதிர்பார்க்கலாம்.

பூமியின் நிழலில் கடந்து செல்லும் போது, நிலவு ஆழமான சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், இது 'பிளட் மூன்' அல்லது "ரத்த நிலவு" என்று அழைக்கப்படும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் காணப்படும்.

பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி செல்லும்போது நீல ஒளியை வடிகட்டி, சிவப்பு ஒளி நிலவை நோக்கி வளைக்கப்படுவதால் இது ஏற்படுகிறது.

சூரியனிலிருந்து பூமிக்கு எதிர் பக்கத்தில் நிலவு வரும்போது முழு நிலவு அல்லது பெளர்ணமி ஏற்படுகிறது. அப்போது நம்மை நோக்கி இருக்கும் நிலவின் முழு பக்கமும் ஒளிரும்.

முழு நிலவுகள் உலகெங்கிலும் உள்ள கலாசாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இவை விவசாய நடைமுறைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், நமது தூக்கத்தையும் பாதிக்கக்கூடும்.

பல தோட்டக்காரர்கள் விதைகளை நடுவதற்கு முழு நிலவு நேரத்தை சிறந்த நேரமாக கருதுகின்றனர்.

முழு நிலவு நமது முன்னோருக்கு எவ்வாறு முக்கியமாக இருந்தது?

முழு நிலவு, சந்திர கிரகணம், இந்தியா, சென்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரஸ்ஸல்ஸில் உள்ள இஷாங்கோ எலும்பின் ஒரு பெரிய அளவிலான நகல், அங்கு அருங்காட்சியகத்தில் அசல் தொல்லியல் கண்டுபிடிப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

நிலவின் சுழற்சிகள் (அதன் வளர்பிறை மற்றும் தேய்பிறை கட்டங்கள்) நேரத்தை கணக்கிட பழங்காலம் முதல் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இஷாங்கோ எலும்பை எடுத்துக்கொள்ளுங்கள் - இது 1957 ஆம் ஆண்டு நவீன காங்கோ குடியரசில் கண்டுபிடிக்கப்பட்டது.

20,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகக் கணக்கிடப்பட்டுள்ள குரங்கின் கால் எலும்பிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் இது ஒரு ஆரம்ப கால நாட்காட்டியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பெல்ஜிய புவியியலாளர் ஒருவரால் அகழ்வு செய்யப்பட்ட இந்த எலும்பில் தெளிவான செதுக்கல்கள் உள்ளன - சில சிறு வட்டங்கள், கருமையான வட்டங்கள் அல்லது பகுதி வட்டங்களின் வடிவத்தில் உள்ளன. ஹார்வர்ட் பல்கலைக்கழக தொல்லியலாளர் அலெக்சாண்டர் மார்ஷாக் இவை நிலவின் பல்வேறு கட்டங்களைக் குறிக்கலாம் என்று கருதினார், இது ஆறு மாத நிலவு நாட்காட்டியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிப்பிடுகிறது.

முழு நிலவு, சந்திர கிரகணம், இந்தியா, சென்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "பனி நிலவு" பிப்ரவரியில் காணப்படுகிறது, இது இத்தாலியில் ஆல்ப்ஸ் பின்னால் உதயமாகிறது

அறுவடை நிலவு (Harvest Moon) என்று அழைக்கப்படுவது அக்டோபர் முதல் வாரம் அல்லது செப்டம்பர் இறுதியில் வரும் முழு நிலவைக் குறிக்கிறது.

வருடத்தின் இந்தக் காலகட்டத்தில் சூரியன் மறைந்தவுடனே நிலவு உதயமாகி, பயிர்களை சேகரிக்க முயற்சிக்கும் விவசாயிகள் நிலவின் ஒளியில் பணியாற்ற முடிந்தது. இன்று பெரும்பாலும் மின்சார விளக்குகளை பயன்படுத்துகின்றனர்.

முழு நிலவின் போது எந்த விழாக்கள் நடத்தப்படுகின்றன?

முழு நிலவு, சந்திர கிரகணம், இந்தியா, சென்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுசோக் நிகழ்வின்போது கொரிய மக்கள் அறுவடைக்கு நன்றி செலுத்தி, தங்கள் முன்னோர்களை வணங்குகின்றனர்

சீனாவில் இலையுதிர் காலத்தின் நடுவில் கொண்டாடப்படும் பண்டிகை - ஜோங்க்குயி ஜியே (நிலவு பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது) - அறுவடை நிலவு நாளில் நடைபெறுகிறது மற்றும் இது ஒரு பொது விடுமுறை. 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த பண்டிகை இன்றும் அதே உற்சாகத்துடன் தொடர்கிறது.

அதேபோல, கொரிய கலாசாரத்தில் சுசோக் பண்டிகை அறுவடை நிலவுடன் இணைந்து மூன்று நாள் நிகழ்வாக நடைபெறுகிறது. குடும்பங்கள் சேர்ந்து அறுவடையை கொண்டாடி, தங்கள் முன்னோரை வணங்குகின்றனர்.

இந்து கலாசாரத்தில், முழு நிலவு நாட்கள் பூர்ணிமா என்று அழைக்கப்படுகின்றன, இந்த நாளில் உபவாசம் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை பூர்ணிமா நவம்பரில் நடைபெறுகிறது - இது இந்து நாட்காட்டியில் மிகவும் புனிதமான மாதம் - இது சிவபெருமான் திரிபுராசூரனை வெற்றி கொண்டது மற்றும் விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்சாவதாரத்தை குறிக்கிறது. நதிகளில் குளிப்பது மற்றும் அகல் விளக்குகளை ஏற்றுவது ஆகியவை சடங்குகளில் அடங்கும்.

முழு நிலவு நேரத்தில் தொடங்கும் கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.

முழு நிலவு, சந்திர கிரகணம், இந்தியா, சென்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாலியில் புர்ணமா நாளில், மக்கள் கடவுள்களுக்கு காணிக்கைகளை படைக்கின்றனர்

புத்தர் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு முழு நிலவு நாளில் பிறந்தார் என பௌத்தர்கள் நம்புகின்றனர். அவர் ஞானம் பெற்றதும், மரணமடைந்ததும் முழு நிலவு நாளிலேயே நடந்தது என்று அவர்கள் நம்புகின்றனர். இந்த நிகழ்வுகள் புத்த பூர்ணிமா நிகழ்வில் கொண்டாடப்படுகின்றன. இது பொதுவாக ஏப்ரல் அல்லது மே மாதங்களில் முழு நிலவு நாளில் நடைபெறுகிறது.

இலங்கையில் ஒவ்வொரு மாதமும் முழு நிலவு ஒரு பொது விடுமுறை நாள் ஆகும், இது போயா என்று அழைக்கப்படுகிறது, அப்போது மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை தடை செய்யப்படுகிறது.

பாலியில், முழு நிலவு புர்ணமாவால் குறிக்கப்படுகிறது, அப்போது கடவுள்களும், பெண் கடவுள்களும் பூமியில் இறங்கி ஆசீர்வதிப்பதாக நம்பப்படுகிறது. இது பிரார்த்தனை, காணிக்கை அளிப்பது மற்றும் தோட்டங்களில் பழ மரங்களை நடுதல் ஆகியவற்றிற்கான நேரமாகும்.

இஸ்லாமியர்கள் முழு நிலவு நேரத்தில் மூன்று நாட்கள் உபவாசம் மேற்கொள்ள உந்தப்படுகின்றனர். இவை வெள்ளை நாட்கள் அல்லது அல்-அய்யம் அல்-பிட் என்று அறியப்படுகின்றன. இருளான இரவுகளை ஒளிரச் செய்ததற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முகமது நபி இந்த நாட்களில் உபவாசம் இருந்ததாக கூறப்படுகிறது.

கிறிஸ்தவத்தில், வசந்த காலத்தில் சமமான பகலிரவு நாளுக்கு பிறகு வரும் முதல் முழு நிலவு நாளுக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மெக்ஸிகோ மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகளில், பூர்வீக அமெரிக்க "நிலவு நடனம்" மீண்டும் உயிர் பெற்றுள்ளது, இதில் பெண்கள் முழு நிலவு நேரத்தில் ஒன்று சேர்ந்து மூன்று நாள் பண்டிகையில் நடனமாடி வழிபாடு செய்கின்றனர்.

முழு நிலவு பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் நம்பிக்கைகள்

முழு நிலவு, சந்திர கிரகணம், இந்தியா, சென்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1935ஆம் ஆண்டு வெளியான 'வெர்வொல்ஃப் ஆஃப் லண்டன்' போன்ற பயங்கர திரைப்ப்டங்கள் காரணமாக ஓநாய் மனிதர்கள் பற்றிய கட்டுக்கதைகள் நவீன காலங்களில் தொடர்கின்றன

ஐரோப்பாவில், பழங்காலத்திலிருந்து முழு நிலவு சில மக்களிடம் மனப்பிறழ்வை ஏற்படுத்துவதாகக் கருதப்பட்டு வந்தது. "லுனாசி" என்ற சொல் நிலவை குறிக்கும் லுனா என்ற லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது.

முழு நிலவு கட்டுப்படுத்த முடியாத நடத்தைக்கு வழிவகுக்கிறது என்ற கருத்து, தங்களை அறியாமல் ஓநாய்களாக மாறி முழு நிலவு இரவுகளில் தங்கள் சமூகத்தை பீதியில் ஆழ்த்தும் ஓநாய் மனிதர்கள் பற்றிய கட்டுக்கதைகளை உருவாக்கியது.

கிமு 4 ஆம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸ் (தற்போதைய ரஷ்யாவில் உள்ள) சைத்தியாவைச் சேர்ந்த நியூரி என்ற ஒரு பழங்குடியை பற்றி எழுதினார், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சில நாட்கள் ஓநாய்களாக மாறுவதாக எழுதினார்.

ஐரோப்பாவில் 15 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பலர் ஓநாய் மனிதர்களாக இருக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இதில் அறியப்பட்ட ஒருவர் 1589ஆம் ஆண்டு விசாரிக்கப்பட்ட ஜெர்மனியை சேர்ந்த நில உரிமையாளர் பீட்டர் ஸ்டபே (அல்லது ஸ்டம்ப்) என்பவர். உள்ளூர் வேடர்கள் அவர் ஓநாயாக இருந்து மனிதனாக மாறுவதை பார்த்ததாக கூறினர். கொடூரமாக கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர் ஓநாய் மனிதனாக மாறி மனிதர்களை வேட்டையாடி உண்ண உதவி செய்யும் ஒரு மந்திர பெல்ட் தன்னிடம் இருப்பதாக பீட்டர் ஒப்புக்கொண்டார்.

முழு நிலவு தினசரி வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?

முழு நிலவு, சந்திர கிரகணம், இந்தியா, சென்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முழு நிலவு இருக்கும் போது நாம் குறைவாக தூங்குவதை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன

நிலவு மண்ணின் தரத்தை மேம்படுத்துவதாக நம்பி, தோட்டக்காரர்கள் (பாலினியர்கள் புர்ணமாவின் போது செய்வது போல) முழு நிலவு நேரத்தில் விதைகள் மற்றும் செடிகளை நடுகின்றனர்,

முழு நிலவு இருக்கும் போது, நிலவின் ஈர்ப்பு சக்தி பூமியின் ஒரு பக்கத்தை ஈர்க்கும், அதே நேரம் சூரியனின் ஈர்ப்பு சக்தி மறு பக்கத்தை ஈர்க்கும். இது அதிக தீவிரமான அலைகளை உருவாக்குவதுடன், பூமியின் மேற்பரப்பில் அதிக ஈரப்பதத்தை கொண்டு வரலாம் என்று கருதப்படுகிறது.

சிலர் முழு நிலவு தூக்கத்தை கலைக்கிறது என்று நம்புகின்றனர்.

முழு நிலவு அல்லது அதற்கு நெருக்கமான நாட்களில் மக்கள் தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும், ஆழமான தூக்கத்தில் குறைவான நேரத்தையே செலவிடுவதாகவும், குறைவான நேரம் தூங்குவதாகவும், தூங்குவதற்கு உதவும் ஹார்மோனான மெலடோனின் அளவு குறைவாக இருப்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்த ஆய்வுகளில் தொடர்புடையவர்கள் முழு நிலவின் ஒளியால் தூக்கம் கெடாதவாறு சீலிட்ட அறைகளில் தூங்கினாலும், தங்கள் தூக்கம் திருப்திகரமாக இல்லை என தெரிவித்தனர்.

2000 ஆம் ஆண்டு பிரிட்டனின் பிராட்ஃபோர்டில் நடந்த ஒரு ஆய்வின்படி, விலங்குகள் முழு நிலவு நேரத்தில் கடிக்க அதிக வாய்ப்புள்ளது.

1997 முதல் 1999 வரை, முழு நிலவு நாளை ஒட்டிய நாட்களில் விலங்கு கடி காயங்களுடன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததை அந்த ஆய்வு கண்டறிந்தது.

ஓநாய் மனிதர்கள் கடி எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்தியாவில் சந்திர கிரகணம் எப்போது தெரியும்?

ஆப்ரிக்காவின் கிழக்கு முனைகள், மத்திய கிழக்கு, ஆசியாவின் பெரும்பகுதி மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பார்வையாளர்கள் நிகழ்வின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை முழு நிகழ்வையும் காண முடியும்.

இந்தியாவைப் பொருத்தவரை, இன்றைய முழு நிலவு நாளில் சந்திர கிரகணத்தை இரவு 10 மணி தொடங்கி மறுநாள் அதிகாலை 01:30 மணி வரை வெறும் கண்களாலே தெளிவாகக் காணலாம் என மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் தெரிவித்துள்ளது.

இரவு 08:58 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் அதிகாலை 02:25 மணிக்கு முடிகிறது. 09:57 மணிக்கு பகுதியளவு கிரகணமும், 11 மணியளவில் முழு கிரகணமும் தொடங்குகிறது. வானிலை தெளிவாக இருந்தால் வெறும் கண்களாலே காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் சென்னை பிர்லா கோளரங்கத்தில் இரவு 8 மணி முதலே வானில் இந்த நிகழ்வை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வானிலை தெளிவாக இருந்தால் இந்த நிகழ்வு தடையின்றி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வைக் காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு