நிலவில் கால் பதிக்க அமெரிக்கா, இந்தியா, சீனா போட்டாபோட்டி - முந்துவது யார்?

நிலா ஆராய்ச்சி

பட மூலாதாரம், Getty Images

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னும் சில ஆண்டுகளில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது.

1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் காலடி எடுத்து வைத்ததே முதல் முறையாக மனிதர்கள் நிலவில் தரையிறங்கியது.

அதற்கு பிறகு, தொடர் அப்பல்லோ திட்டங்களின் மூலமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி இதுவரை மொத்தம் 12 பேரை நிலவில் தரையிறக்குவதில் வெற்றி பெற்றுள்ளது அமெரிக்கா.

அதை தொடர்ந்து ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் நிலவில் தங்களது விண்கலம், லேண்டர்கள் அல்லது ரோவர்களை தரையிறக்குவதில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இதில் மனிதர்கள் இடம்பெறவில்லை.

இந்நிலையில் மீண்டும் அமெரிக்கா தனது ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

சீனா மற்றும் இந்தியாவும் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றி வருகின்றன. நிலவில் தளம் அமைக்க அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுமே போட்டாபோட்டியில் ஈடுபட்டுள்ளன. இதில் முந்தப் போவது யார்?

விண்வெளி பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் காலடி எடுத்து வைத்ததே முதல் முறையாக மனிதர்கள் நிலவில் தரையிறங்கியது

நிலவுக்கு பயணம்

விண்வெளிக்கு செல்ல ராக்கெட் தொழில்நுட்பம் மிகமிக அவசியம். பனிப்போர் காலகட்டத்தில், யார் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது என்பதில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு போட்டித் தொடங்கியது. அந்த போட்டியில் 1961 ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் யூரி ககாரினை விண்வெளிக்கு அனுப்பி வெற்றி பெற்றது.

'தி எக்கனாமிஸ்ட்' பத்திரிகையின் மூத்த ஆசிரியரும், 'தி மூன் : எ ஹிஸ்டரி ஃபார் தி ஃபியூச்சர்' என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஆலிவர் மார்டன், “மனிதர்களை நிலவு அல்லது விண்வெளிக்கு அழைத்துச் செல்வது மிகப்பெரிய சவாலான பணி என்று கூறப்படுகிறது. இது உலக அரங்கில் குறிப்பிட்ட நாட்டின் நம்பகத்தன்மையையும், பலத்தையும் அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சோவியத் ஒன்றியத்தின் வெற்றிக்குப் பிறகு, அமெரிக்கா மீதான அழுத்தம் அதிகரித்தது” என்று கூறுகிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "சோவியத் வெற்றிக்கு பிறகு அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தின் சாதனையை விட வேறு ஒரு சிறந்த சாதனையை படைக்க விரும்பியது." இதை விட பெரிய சாதனையாக நிலவுக்கு ஒரு மனிதனை அனுப்புவதே கருதப்பட்டது. ஆனால், அதற்கு அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் தேவைப்பட்டது. இருந்தாலும் நிலவில் கால் பதிப்பதன் மூலம், உலக அரங்கில் தனது முத்திரையை பதிக்க விரும்பியது அமெரிக்கா” என்றார்.

விண்வெளி பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1961 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் யூரி ககாரினை விண்வெளிக்கு அனுப்பி வெற்றி பெற்றது.

“அதனை தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு, அப்பலோ 11 விண்கலம் மூலம் இரண்டு விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கி மெரிக்கா வெற்றி பெற்றது. அதன் பிறகு மற்ற அப்பல்லோ பயணங்கள் மூலம் மேலும் பத்து பேரை நிலவுக்கு அனுப்புவதில் வெற்றி பெற்றது. இது பெரிய அறிவியல் சாதனை மட்டுமல்ல, அமெரிக்காவின் அரசியல் சாதனையும் கூட. நிலவின் மேற்பரப்பில் இரண்டு மனிதர்கள் நடந்து செல்லும் படங்கள் உலகம் முழுவதும் பரவியது. ஆனால் அதைவிட மற்றொரு படம் மக்களை மிகவும் கவர்ந்தது.”

மேலும் பேசிய ஆலிவர் மார்டன், "நிச்சயமாக நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் இருக்கும் படங்கள் உலகம் முழுவதும் பரவின. ஆனால், அதைவிட நிலவிலிருந்து பூமியை எடுக்கப்பட்ட படம்தான் உலக மக்களின் மனதில் இடம்பிடித்தது. உயிர்கள் வாழும் கிரகமான பூமியின் படத்தை மக்கள் பார்த்து திகைத்து போய் நின்றது மட்டுமின்றி, அவற்றை தங்களது வீடுகளில் போஸ்டர்களாக ஒட்டிக் கொண்டனர்” என்று குறிப்பிடுகிறார்.

அதற்கு பிறகு சோவியத் யூனியனால் நிலவுக்கு மனிதனை அனுப்பவே முடியவில்லை. ஆனால் 1970களில் மனிதர்கள் விண்வெளிக்கு பயணிப்பதன் முக்கியத்துவம் ஏன் குறைந்தது?

அதற்கு காரணம் இதில் அமெரிக்கா ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதே என்று ஆலிவர் மார்டன் நம்புகிறார். அது ஏற்கனவே ஒன்றுக்கும் அதிகமான முறை மனிதர்களை ஆய்வுக்காக விண்வெளிக்காக அனுப்பிவிட்டது. இந்நிலையில் அதன் மீதான ஆர்வம் குறைந்து, அந்த திட்டங்களையே அமெரிக்கா நிறுத்திவிட்டது.

இந்நிலையில் மீண்டும் இந்த திட்டங்கள் இப்போது உயிர் பெற்றுள்ளன. நிலவில் மனிதனை தரையிறக்கும் முயற்சியை மீண்டும் முன்னெடுத்துள்ளது அமெரிக்கா. ஆனால், மற்ற நாடுகளுக்கு முன் அதை செய்து முடிப்பது கடினம்தான். இந்த முறை போட்டியும் கடுமையாக உள்ளது என்கிறார் அவர்.

விண்வெளி பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவும் சீனாவும் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் தயாராகி வருகின்றனர்.

நிலவுக்கு செல்வதற்கான போட்டி

அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான நிலையில் உள்ளது. ஆனால், இந்த முறை இரு நாடுகளும் தங்களது போட்டியை பூமிக்கு அப்பால் கொண்டு சென்றுள்ளனர்.

தொழில்நுட்பம் சார்ந்து எழுதிவரும் இணையதளமான ஆர்ஸ் டெக்னிகாவின் விண்வெளி விவகாரங்களுக்கான மூத்த ஆசிரியர் எரிக் பர்கர் கூறுகையில், “அமெரிக்காவும் சீனாவும் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் தயாராகி வருகின்றனர். இதற்காக இருவரும் சர்வதேச கூட்டாளிகளுடன் தங்களது ஒத்துழைப்பை தொடங்கியுள்ளனர். இது நேரடியாக அரசியலுடன் தொடர்புடையது என்கிறார்.”

"நிலவின் மேற்பரப்பில் குறைந்த ஈர்ப்பு விசையே உள்ளது என்பதாலும், அது பூமிக்கு மிக அருகில் இருக்கிறது என்பதாலும் அது நடைமுறை சாத்தியமான மற்றும் சிறந்த இலக்காக பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். ஆனால் நிலவுக்கோ வெறும் மூன்று நாட்கள் போதும். எனவே நிச்சயமாக நிலவுதான் அடுத்த இலக்காக இருக்கும்.”

நிலவை அடைவதற்கான இந்த போட்டி குறித்து பேசுவதற்கு முன், அதிலுள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப சிக்கல்களைப் குறித்து பேசுவது அவசியம். இந்த பயணத்தில் ராக்கெட்டை விண்வெளிக்கு எடுத்துச் செல்வதும், விண்வெளி வீரர்களை கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பதும், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதும் மிகப்பெரிய சவாலாகும். அதே ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு கொண்டு வர, நிலவில் இருந்து ஏவுவது இன்னும் கடினம் என்கிறார் எரிக்.

"பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவும்போது அதை கண்காணிக்கவும், கவுண்ட் டவுன் தொடங்கவும், எரிபொருள் இயக்கத்தை தொடங்கவும், ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் உடனே செயல்பாட்டை நிறுத்தவும் வசதிகள் உள்ளன. ஆனால், நிலவில் இது எல்லாமே தானியங்கி முறையில் தான் நடக்கும். மேலும், ராக்கெட் பூமியின் சுற்று வட்டப்பாதையில் நுழையும்போது அதன் வேகம் அதிகமாக இருப்பதால் வெளிப்படும் வெப்பத்திலிருந்து ராக்கெட்டை பாதுகாக்க வலுவான வெப்ப கவசம் தேவைப்படுகிறது.” என்று அவர் கூறுகிறார்.

விண்வெளி பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த போட்டியில் நிலவின் தென் துருவத்தின் மீது தான் அதிக ஆர்வம் உள்ளது.

இந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, விண்வெளி வீரர்களின் உயிரையும், மக்களின் பில்லியன்கணக்கான டாலர்களையும் மீண்டும் பணயம் வைக்க வேண்டிய அவசியம் உள்ளதா?

ஒருவேளை இப்போது இந்த பந்தயத்தின் வடிவம் மாறியிருக்கலாம். ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால், முதலில் நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்வது யார் என்பது அல்ல, மாறாக சந்திரனில் மனிதன் வாழக்கூடிய மற்றும் அதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தொழில்நுட்பத்தை யார் முதலில் கண்டுபிடிப்பது?, அதாவது யார் முதலில் நிலவில் மனிதக் குடியேற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதே இந்த போட்டி.

இதுகுறித்து எரிக் பர்கர் கூறுகையில், இந்த போட்டியில் நிலவின் தென் துருவத்தின் மீது தான் அதிக ஆர்வம் உள்ளது, ஏனெனில் அந்த பகுதியில் உள்ள பள்ளங்கள் சூரிய ஒளி படாமல் எப்போதும் இருளில் இருக்கும். அங்கு நீர் பனிக்கட்டி வடிவில் உறைந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இது ஒரு மிக முக்கியமான வளமாக இருக்கலாம்.

நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவு கொண்ட இந்தப் பகுதியில் ஆராய்ச்சி மையத்தை நிறுவ ஆய்வாளர்கள் விரும்புகிறார்கள். இது ஒரு சிறிய பகுதி என்பதால் அதன் மீதான கட்டுப்பாடு யார் என்பதில் மோதல் ஏற்படுமா?

தற்போதைய கேள்வியே அதன் தொழில்நுட்ப அல்லது அரசியல் பலன் என்ன என்பதுதான். இந்த போட்டியே மக்கள் மனதில் யார் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதேயாகும். அதில் அமெரிக்காவின் பிரதான போட்டியாளராக சீனா இருக்கும் என்பதே எரிக் பர்கரின் கருத்து.

எரிக் பர்கரின் கூற்றுப்படி, கடந்த இருபது ஆண்டுகளில் சீனா இதில் நிறைய முன்னேற்றத்தை கண்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற சிறிய மாதிரியை தயார் செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் தனது பயணத்தின் போது, ​​சீனா செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்தது மட்டுமல்லாமல், அதன் மேற்பரப்பில் தரையிறங்குவதில் வெற்றியும் பெற்றது. இது பெரிய சாதனை.

2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் தனது ஆய்வுத்தளத்தை உருவாக்க சீனா விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா இதே விஷயத்தை 2028 ஆம் ஆண்டிற்குள் செய்ய விரும்புகிறது. ஆனால் அதன் திட்டம் ஏற்கனவே தாமதமாகிவிட்டது. இதற்காக அந்நாடு கோடீஸ்வரர் எலான் மஸ்க் மற்றும் அவரது 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தை சார்ந்துள்ளது.

நாசாவிற்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ஸ்டார்ஷிப் விண்கலம் இல்லாமல் இது சாத்தியமில்லை என்று கூறுகிறார் எரிக் பெர்கர். விண்வெளி ஆய்வு பணிகளுக்காக அமெரிக்காவும், சீனாவும் தனியார் நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன.

விண்வெளி பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாசாவின் 'ஆர்டெமிஸ் மிஷன்' திட்டத்திற்காக விண்கலத்தை தயாரிக்கும் பொறுப்பு எலான் மஸ்க் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நிலவில் வணிகத்திற்கான சாத்தியங்கள்

நிலவில் மனிதர்களை இறக்கி, அங்கேயே சில காலம் தங்கி ஆராய்ச்சி செய்ய பல வகையான தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இதில் பல நாடுகள் ஆர்வமாக உள்ளன.

நிலா குறித்த ஆராய்ச்சி மற்றும் அங்குள்ள வளங்களை அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு என்னென்னெ விதிகள் மற்றும் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்தின் வடக்கு அம்ப்ரியா பல்கலைக்கழகத்தின் விண்வெளி கொள்கை மற்றும் ஒழுங்குமுறை பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் அமெரிக்காவும் அதன் ஆர்ட்டெமிஸ் மிஷனும் இந்த திட்டத்தை தலைமையேற்று நடத்தும் என்று நம்புகின்றன" என்கிறார்.

"பல நாடுகளும், நிறுவனங்களும் நிலவில் தங்களது நிலைகளை உருவாக்கி, அங்கு கிடைக்கும் வளங்களைச் சுரண்ட ஆசைப்படுவதனாலேயே அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதே காரணம்தான் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கும் உள்ளது. நிலவில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்க முடியும்.”

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனது விண்வெளித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டதன் மூலம் சீனா ஓரளவு வெற்றி பெற்றது. ஆனால் இந்த துறையில் இன்னமும் மிக முக்கியமான நபராக எலான் மஸ்க் இருந்து வருகிறார்.

நாசாவின் 'ஆர்டெமிஸ் மிஷன்' திட்டத்திற்காக விண்கலத்தை தயாரிக்கும் பொறுப்பு அவரது நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் லட்சியம் மிகப் பெரியது என்று கூறுகிறார் கிறிஸ்டோபர் நியூமன்.

மேலும் "இந்த விண்கலம் தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டிருப்பதன் மூலம் மனித எதிர்காலத்தின் திசையை நிர்ணயிக்கும் பணியில் தான் ஈடுபட்டுள்ளதாக காட்ட விரும்புகிறார் எலான் மஸ்க்” என்கிறார் கிறிஸ்டோபர் நியூமன்.

“வேற்று கிரகங்களில் மனித குடியிருப்புகளை நிறுவுவதில் எலான் மஸ்க்கின் விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும். அவர்களின் லட்சியம் வெறும் லாபமீட்டுவதையும் தாண்டி மிகப்பெரியது."

விண்வெளி ஆய்வுப் பணிகளில் தனியார் நிறுவனங்களை இணைத்துக்கொள்வது பல கேள்விகளை எழுப்புகிறது.

இதுகுறித்து பேசிய கிறிஸ்டோபர் நியூமன் , நாம் மற்ற கிரகங்களுக்குச் செல்ல விரும்பினால் அல்லது அங்கு மனிதர்களைக் குடியேற்ற விரும்பினால், அங்கு என்ன விதிகள் இருக்கும்?, குற்றங்கள் எவ்வாறு வரையறுக்கப்படும்?, தண்டனைகள் எப்படி வழங்கப்படும்?. இந்த விதிகளின் எல்லைக்குள் தனியார் நிறுவனங்களை வைத்திருப்பது சவாலானது. இத்தகைய சூழலில், விண்வெளிப் பயணங்களில் தனியார் நிறுவனங்களைச் சார்ந்திருப்பது அரசாங்கங்களுக்கு கவலையளிக்கும் விஷயம் என்பது நிரூபிக்கப்படலாம்” என்கிறார்.

"ஸ்பேஸ்எக்ஸின் பிரச்னையும் இதுதான்" என்கிறார் கிறிஸ்டோபர் நியூமன்.

இதன் வழியாக எலான் மஸ்க் மிகவும் சக்தி வாய்ந்த நபராக மாறுவார். அதற்கு பின் அவரைக் கட்டுப்படுத்துவது கடினம்.

நாம் தற்போது வாழ்ந்து வரும் பூமியில் அழிவு ஏற்பட்டால் மற்ற கிரகங்களில் குடியேறி விடலாம் என்று, அங்கெல்லாம் மனித குடியேற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கிறது. அவர்களுள் ஒருவர்தான் எலான் மஸ்க்.

ஆனால், மற்ற கிரகங்களில் குடியேற்றங்களை நிறுவுவதற்கு முன்பு மனிதர்களை நிலவில் சில காலம் வைத்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் என்ன பலன்கள் கிடைக்கும்?

விண்வெளி பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் நிலவின் தென் துருவத்திலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்கியது. அதன் மூலம் சந்திரனில் சல்பர், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது"

நிலவில் நீர் இருக்கிறதா? இல்லையா?

அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டின் பேராசிரியரும், விண்வெளிக் கொள்கை நிபுணருமான நம்ரதா கோஸ்வாமி பேசுகையில், “ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையின் குறிக்கோளே நிலவில் முகாமை உருவாக்குவதுதான். இதன் மூலம் நிலவில் உள்ள வளங்களைப் பயன்படுத்தலாம். மேலும் செவ்வாய் கிரகத்தை அடையும் திறனையும் அதிகரிக்க முடியும். சமீபத்தில், நிலவில் இரும்பு, டைட்டானியம் மற்றும் பிற பயனுள்ள கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது.”

"இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் நிலவின் தென் துருவத்திலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்கியது. அதன் மூலம் சந்திரனில் சல்பர், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் பனிஉறைந்த நீர் இருப்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

2026 இல், இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து நிலவில் உள்ள பனி உறைந்த நீரைக் கண்டறிய நிலவுக்கு மற்றொரு பயணத்தை தொடங்க உள்ளன. நிலவில் மனிதர்கள் குடியேறுவதற்கு பனியாக உறைந்துள்ள நீர் அவசியம். ஏனெனில் அதில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்க முடியும்.”

விண்வெளியில் மேலும் ஆய்வு செய்வதற்கு நிலவை ஒரு தளமாகப் பயன்படுத்தலாம் என்பதை இவை சுட்டிக்காட்டுகின்றன.

“நிலாவை தளமாக்குவதன் மூலம் அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை எளிதில் அனுப்ப முடியும்” என நம்புகிறார் நம்ரதா கோஸ்வாமி.

2036ம் ஆண்டுக்குள் நிலவில் தளம் அமைத்து விட வேண்டும் என சீனா விரும்புகிறது. இந்தியாவும் இதே திட்டத்தை அறிவித்துள்ளது. வெற்றி கிடைத்தால், நிலவின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அங்கிருந்து ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியும்.

பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவுவதற்கான செலவு மிகவும் அதிகம். காரணம் நிலவின் ஈர்ப்பு விசையில் இருந்து வெளியேறுவதை விட, பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து வெளியேற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது. அதனால்தான், பல நாடுகளும் நிலவை முக்கியத்துவம் வாய்ந்த வளமாக பார்க்கின்றன.

ஆனால் இது தவிர, எதிர்காலத்தில் நிலவால் கிடைக்கும் நன்மைகள் ஏதேனும் உண்டா? உதாரணமாக, நிலவின் சில பகுதிகள் எப்போதும் சூரிய ஒளியில் இருக்கும். ஆனால், அங்கு மேகங்களோ அல்லது வளிமண்டலமோ இருக்காது. எனவே நிலவின் அந்தப்பகுதியை சூரிய சக்தியை பயன்படுத்தி ஆற்றல் உற்பத்தி செய்ய பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து நம்ரதா கோஸ்வாமி கூறுகையில், "நிலவில் சூரிய சக்தியை உற்பத்தி செய்து, மைக்ரோவேவ் மூலம் குறைந்த சுற்றுப்பாதையில் பெரிய செயற்கைக்கோள்கள் வழியாக பூமிக்கு அனுப்ப முடியும்" என்கிறார்.

விண்வெளி பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பூமியில் உள்ள புதைபடிவ எரிபொருள்கள் இன்னும் சில காலத்திற்குப் பிறகு தீர்ந்துவிடும். அதுபோன்ற சூழலில், விண்வெளியில் காணப்படும் சுத்தமான சூரிய ஆற்றல் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

நிலவில் கால் பதிக்க அமெரிக்கா, இந்தியா, சீனா போட்டி - முந்துவது யார்?

பூமியில் இரவு நேரம் இருக்கிறது, அதே போல் இங்கு வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் சூரிய சக்தி உற்பத்தியை பாதிக்கிறது. ஆனால் விண்வெளியில் 24 மணி நேரமும் சூரிய சக்தியை உருவாக்க முடியும்.

பூமியில் உள்ள புதைபடிவ எரிபொருள்கள் இன்னும் சில காலத்திற்குப் பிறகு தீர்ந்துவிடும். அதுபோன்ற சூழலில், விண்வெளியில் காணப்படும் சுத்தமான சூரிய ஆற்றல் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

தற்போது இங்கு எழும் கேள்வி என்னவென்றால், யார் இந்த வளங்களை, எந்த அளவு பயன்படுத்த முடியும்?

1967 விண்வெளி ஒப்பந்தத்தின் படி, எந்த நாடும் விண்வெளியில் அதிகாரத்தை செலுத்த முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவோ, சீனாவோ நிலவின் இருண்ட பகுதிக்கு சென்று அங்கு குடியிருப்புகளை ஏற்படுத்தினாலும் கூட, அதை தங்கள் பகுதியாக உரிமைகோர முடியாது.

ஆனால் யதார்த்தம் இதிலிருந்து வேறுபட்டிருக்கலாம். நிலவின் வளங்களை சமமாக பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான எந்த சட்ட அமைப்பும் தற்போது இல்லை என்றும், முதலில் அங்கு சென்றடையும் நாடுகளே இதன் மூலம் பயனடையும் என்பதே கவலைக்குரிய விஷயம் என்றும் நம்ரதா கோஸ்வாமி கூறுகிறார்.

இந்நிலையில் அடுத்த முறை நிலவில் யார் முதலில் காலடி வைப்பது என்பது தற்போதைய கேள்வி?

ஆனால், இந்த காலகட்டத்தில் நிலவை அடைவது என்பது விஞ்ஞான ரீதியிலான சாதனைக்கானது மட்டுமல்ல, அதை தாண்டி நிலவில் இருந்து சூரிய சக்தியைப் பெறவும், அங்கு ஒரு தளத்தை உருவாக்குவதன் மூலம் மற்ற கிரகங்களுக்கு ஆய்வு பணிகளுக்கு செல்லவும் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.

தற்போதைய நிலவரத்தை பொறுத்தவரை 2028ல் அமெரிக்கா மீண்டும் நிலவில் காலடி எடுத்து வைக்கும் என தெரிகிறது. இரண்டு வருடங்கள் கழித்து சீனாவும் பத்து வருடங்கள் கழித்து இந்தியாவும் நிலவில் காலடி வைக்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)