பா.ஜ.க. ஆளும் இந்த மாநிலத்தில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து ஏன்?

அசாமில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், திலீப் குமார் ஷர்மா
    • பதவி, பிபிசி இந்திக்காக, குவஹாத்தியில் இருந்து

அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் 1935, இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கை, மாநிலத்தில் குழந்தை திருமணத்தை நிறுத்த அரசுக்கு உதவும் என்று பா.ஜ.க.வைச் சேர்ந்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார்.

"பல நூற்றாண்டுகள் பழமையான அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்யும் ஒரு முக்கியமான முடிவை பிப்ரவரி 23 ஆம் தேதி அசாம் அமைச்சரவை எடுத்துள்ளது," என்று அவர் மேலும் குறிப்பிட்டுல்ளார்.

''மணமகனுக்கும், மணமகளுக்கும் முறையே 21 மற்றும் 18 என்ற சட்டப்பூர்வ வயது ஆகாவிட்டாலும்கூட திருமணத்தை பதிவு செய்ய அனுமதிக்கும் விதிகள் சட்டத்தில் இடம்பெற்றிருந்தன. எனவே சட்டத்தை ரத்து செய்யும் நடவடிக்கையானது, அசாமில் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான மற்றொரு முக்கியமான படியாகும்.”

அமைச்சரவையின் இந்த முடிவைப் பற்றிய தகவலை அசாம் மாநில அமைச்சர் ஜெயந்த் மல்லா பருவா, ஊடகங்களிடம் கூறினார். "அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் 1935 - இதன் அடிப்படையில் 94 முஸ்லிம் பதிவாளர்கள் (அரசு காஜிகள்) மாநிலத்தில் முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்தை பதிவு செய்து வந்தனர். அது இப்போது நிறுத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

“இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தச் சட்டம் நீக்கப்பட்டதால், இன்று முதல் இந்த சட்டத்தின் மூலம் முஸ்லிம் திருமணம் அல்லது விவாகரத்தை பதிவு செய்ய முடியாது. நம்மிடம் சிறப்பு திருமணச் சட்டம் உள்ளது. எனவே இனி எல்லா திருமணங்களும் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”

அசாமில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA

அரசின் நோக்கம் மக்களை பிளவுபடுத்தும் அரசியலா?

இந்தச் சட்டத்தை ரத்து செய்யும் அசாம் அரசின் முடிவை, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலர் மக்களை பிளவுபடுத்தும் அரசியலுடன் தொடர்புபடுத்துகின்றனர்.

முஸ்லிம் சட்டத்தை ரத்து செய்ததன் பின்னணியில், மக்களை பிளவுபடுத்தும் அரசியல் செய்வதுதான் அரசின் நோக்கம் என்று குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான ஹபீஸ் ரஷீத் அகமது செளத்ரி குறிப்பிட்டார்.

"இந்தச் சட்டத்தை ரத்து செய்ய அரசு முன்வைக்கும் வாதத்தை பார்க்கும்போது அவர்களின் நோக்கம் நல்லதல்ல என்பதை அது காட்டுகிறது. இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக அரசு உணர்ந்தால் அதை திருத்தியிருக்கலாம் அரசு காஜியின் வேலை மீது கடுமையான கண்காணிப்பு நடவடிக்கையை அமல் செய்திருக்கலாம்,” என்றார் அவர்.

“இந்தச் சட்டத்தின் திரைக்கு பின்னால் குழந்தைத் திருமணம் நடந்திருந்தால், அரசு காஜி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவரது உரிமத்தை ரத்து செய்திருக்க வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் குழந்தைத் திருமணம் நடந்ததாக அரசிடம் தரவு இருந்தால் அது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அரசு முஸ்லிம் சட்டத்தை ஒழித்தால், முஸ்லிம்கள் குரல் எழுப்புவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

"இது ஆங்கிலேயர் காலத்து சட்டம், திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு இதில் கட்டாயமாக்கப்படவில்லை என்று அரசில் உள்ள சிலர் கூறுகின்றனர். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்வதை கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு இவ்வளவு பெரிய ஒரு முடிவை எடுக்கிறது என்றால் அது பற்றிய தகவல்களை மக்கள் அறிந்திருக்க வேண்டும்,” என்று காங்கிரஸ் தலைவர் செளத்ரி குறிப்பிட்டார்.

அசாமில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA

படக்குறிப்பு, ஹபீஸ் ரஷீத் அகமது சௌத்ரி

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அசாமின் மக்கள் தொகையில் 34 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள். அதாவது அசாமில் உள்ள மொத்த மக்கள் தொகையான 3.12 கோடியில் 1.06 கோடி பேர் முஸ்லிம்கள்.

"இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கு காரணம் குழந்தைத் திருமணத்தை தடுப்பது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் குழந்தை திருமணம் வெகுவாகக் குறைந்துவிட்டது," என்று மாநிலத்தில் வங்காள வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள் தொடர்பாக நடக்கும் அரசியலை நுட்பமாக கவனித்துவரும் குவஹாத்தி பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அப்துல் மன்னான் கூறினார்.

“சில குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன என்று வைத்துக்கொண்டாலும்கூட அரசின் இந்த நடவடிக்கை ஒரு சமூகத்துக்கு எதிரானது என்பதை கவனிக்க வேண்டும். அதேசமயம் பழங்குடியினரிடையேயும் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. எனவே அரசின் நோக்கம் வேறு ஏதோ ஒன்று. இது வாக்கு அரசியல் மட்டுமே,” என்றார் அவர்.

அசாமில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA

படக்குறிப்பு, அசாம் அரசின் சட்டம்

பாஜக அரசு முடிவால் என்ன மாற்றம் நிகழும்?

இந்தச் சட்டம் தற்போது முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளை தானாக முன்வந்து பதிவு செய்யும் வசதியை அளிக்கிறது. முஸ்லிம் மக்களின் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளை பதிவு செய்ய உரிமம் வழங்கவும் சட்டம் அரசுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு அத்தகையவர்கள் திருமணம் மற்றும் விவாகரத்தை பதிவு செய்ய முடியாது.

சட்டத்தை ரத்து செய்த பிறகு, 94 முஸ்லிம் திருமணப் பதிவாளர்களால் பராமரிக்கப்படும் பதிவுகளை மாவட்ட ஆணையர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் தங்கள் வசம் எடுத்துக்கொள்வார்கள் என்று அசாம் அரசு கூறியது. அரசு சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, அவர்களின் மறுவாழ்வுக்காக முஸ்லிம் திருமணப் பதிவாளர்களுக்கு (அரசு காஜிகள்) தலா ரூ.2 லட்சம் இழப்பீடாக அரசு வழங்கும். எனினும் அமைச்சரவையின் இந்த முடிவால் அரசு அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அசாமில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA

அசாம் அரசால் நியமிக்கப்பட்ட முஸ்லிம் திருமண-விவாகரத்து பதிவாளரும், சதர் காஜியுமான மௌலானா ஃபக்ருதீன் அகமது கடந்த 25 ஆண்டுகளாக அரசு காஜியாக பணியாற்றி வருகிறார்.

"இந்த சட்டத்தை ரத்து செய்த அரசின் முடிவால் நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன். குழந்தை திருமணம் என்று சொல்கிறார்கள். ஆனால் திருமணத்தை பதிவு செய்யும் போது வயது, பிறப்பு சான்றிதழ் தொடர்பான எல்லா ஆவணங்களையும் சரிபார்க்கிறோம். எந்த அரசு காஜியும் வயது குறைந்தவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடியாது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"அவ்வாறு செய்தால் மற்ற சட்டங்களின் கீழ் அவர்கள் தண்டிக்கப்படலாம். முத்தலாக் என்ற பேச்சுக்கும் எந்த விதமான ஆதாரமும் இல்லை. காஜி விவாகரத்து செய்துவைப்பதில்லை. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரிடமிருந்து விவாகரத்து பெறுகிறார்கள்."

"இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கு பதிலாக அரசு, திருத்தம் செய்திருக்கலாம். இந்த சட்டத்தின் கீழ் திருமணம்-விவாகரத்து பதிவு கட்டாயமில்லை என்பதும் முற்றிலும் தவறானது. மாநில அரசுகள் இதை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2008 இல் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தபோது அதை எங்கள் அரசும் கட்டாயமாக்கியது,” என்று அவர் தெரிவித்தார்.

"இனி மக்கள் திருமணம் போன்றவற்றை பதிவு செய்வதில் அதிக சிரமத்தை எதிர்கொள்வார்கள். ஏனென்றால் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் காஜியின் முன் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். ஆனால் இப்போது அவர்கள் மாவட்ட ஆணையர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். இது பதிவு செய்வதற்கான நீண்ட செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்கும். மக்கள் பாதிக்கப்படுவார்கள். அனைத்து அசாம் அரசு காஜி சங்கத்தின் கீழ் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

அசாமில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA

படக்குறிப்பு, அசாம் பாஜக தலைவர் பிரமோத் சுவாமி

பாஜக சொன்னது என்ன ?

முஸ்லிம் சமூகத்தில் குழந்தை திருமணம், பலதார மணம் போன்ற தீமைகளை தடுக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அசாமின் ஆளும் பாஜக கூறுகிறது.

"அசாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம் என்பது ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பழைய சட்டம். இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கு முன், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் எங்கள் அரசு சிறப்புக் குழுவை அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்றார் அசாம் மாநில பாஜக மூத்த தலைவர் பிரமோத் சுவாமி.

"முஸ்லிம் ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாய மரபு இஸ்லாத்தில் இல்லை. முத்தலாக் என்ற பெயரில், இஸ்லாமிய சகோதரிகளின் சுயமரியாதை சீர்குலைக்கப்பட்டது. அந்த சகோதரிகளின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்ய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது" என்று பாஜக தலைவர் மேலும் கூறினார்.

இந்த முடிவு வாக்கு அரசியலுடன் இணைக்கப்பட்டிருப்பதான குற்றச்சாட்டு பற்றிப் பேசிய அவர் ”அது முற்றிலும் தவறானது. முஸ்லிம் சகோதரிகளுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுத்து நிறுத்துவதே அரசின் நோக்கம். குழந்தை திருமணம் மற்றும் பலதார மணத்தை தடுக்க நமது அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகள் உள்ளவர்கள் தங்கள் பழமைவாத சிந்தனையில் இருந்து வெளியே வர வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

அசாம் அரசு சமீபத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து சுமார் 4 ஆயிரம் பேரை கைது செய்தது.

அசாம் அரசு பொது சிவில் சட்டத்தை (யுசிசி) கொண்டு வரும் திசையில் பணியாற்றி வருவதாக அசாம் முதல்வர் சர்மா பல சந்தர்ப்பங்களில் கூறி வருகிறார். இதனுடன் பலதார மணத்தை கிரிமினல் குற்றமாக மாற்றும் நோக்கத்துடன் ஒரு மசோதாவும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)