இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் டிரம்புக்கு 2 எம்.பி.க்கள் எதிர்ப்பு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திங்களன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இந்த எதிர்ப்பால் டிரம்ப் தனது உரையை சிறிது நேரம் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஓஃபர் காசிஃப் மற்றும் அய்மன் ஓதே ஆகியோர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
உரையின் போது அய்மன் ஓதே, டிரம்பின் முன்னிலையில் 'பாலஸ்தீனத்தை அங்கீகரியுங்கள்' என்று எழுதப்பட்ட ஒரு காகிதத்தை உயர்த்தி காட்டி, கோஷங்களையும் எழுப்பினார்.
பின்னர் அவர் தனது பின்புறத்தில் அமர்ந்திருந்த ஓஃபர் காசிஃப்பை அணுகினார்.
இதையடுத்து இருவரும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, நாடாளுமன்ற சபாநாயகர் அமீர் ஓஹானா, டிரம்பிடம் மன்னிப்பு கேட்டார்.
அதற்கு டிரம்ப் நகைச்சுவையாக, "அது மிகவும் வெற்றிகரமாகவும் விரைவாகவும் முடிந்தது," என்று பதிலளித்தார்.

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் கூறியது என்ன?
போர் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றும் போது,'நீண்ட மற்றும் வேதனையான கனவு இறுதியாக முடிந்துவிட்டது' என்று தெரிவித்தார்.
2008-க்குப் பிறகு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார்.
"இன்று எல்லாம் மாறத் தொடங்கும் தருணம். இந்த மாற்றம் சிறப்பாகவே இருக்கும்," என்று அவர் கூறினார்.
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் "டிரம்ப்! டிரம்ப்! டிரம்ப்!" என எழுந்த கோஷங்களுக்கு மத்தியில், "இப்பகுதி ஒரு புதிய மத்திய கிழக்கின் வரலாற்றுச் சூரியோதயத்தை காண்கிறது," என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
"இறுதியாக, இஸ்ரேலியர்கள் மட்டுமல்ல, பாலத்தீனர்களும் நீண்ட மற்றும் வேதனையான கனவில் இருந்து விழித்துள்ளனர்," என்று டிரம்ப் கூறினார்.
அவர் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்தம், 'இதுவரை கிடைத்த மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான வெற்றி' என்று டிரம்ப் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் தனது அடுத்த கவனம் இருக்கும் என்று டிரம்ப் கூறினார்.
போராட்டம் நடத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையின்போது எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இஸ்ரேல் எம்.பிக்கள் ஓஃபர் காசிஃப் மற்றும் அய்மன் ஓதே, தங்கள் நடவடிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
"தடை செய்ய அல்ல, நீதி கோருவதற்காகவே வந்தோம்" என்று காசிஃப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
"ஆக்கிரமிப்பு முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, இஸ்ரேலுக்கு அருகே மற்றொரு நாடாக பாலத்தீனம் (அதாவது தனிநாடாக) உலகளவில் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே, இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த இரு நாட்டு மக்களையும் துன்பத்திலிருந்து காப்பாற்றும் உண்மையான மற்றும் நியாயமான அமைதி சாத்தியமாகும்" என்றும் அவரது பதிவு கூறுகிறது.
அவர் நாடாளுமன்றத்தில் காட்டிய காகிதத்தின் படத்தையும் அந்தப் பதிவில் பகிர்ந்தார்.
"நான் ஒரு எளிய கோரிக்கையை எழுப்பியதற்காக, முழு சர்வதேச சமூகமும் ஒப்புக் கொள்ளும், 'பாலத்தீன நாட்டை அங்கீகரிக்க வேண்டும்' என்ற ஒரு கோரிக்கையான எழுப்பியதற்காக, அவர்கள் என்னை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றினர். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று ஒடே எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியான ஹடாஷ் கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்த கட்சி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாலத்தீனப் பிரதேசங்கள் ஆக்கிரமிப்பு குறித்த கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளது.
ஹடாஷ் என்பது இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி (மக்கி) மற்றும் பிற இடதுசாரி குழுக்களால் உருவாக்கப்பட்ட இஸ்ரேலில் உள்ள ஒரு தீவிர இடதுசாரி அரசியல் கூட்டணி.
50 வயதான அய்மன் ஒதே, ஹடாஷின் தலைவராகவும், இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார். இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் அரபு சமூகத்தின் குரலாகக் கருதப்படும் ஒரு முக்கிய இஸ்ரேலிய அரபுத் தலைவர் இவர்.
பாலத்தீனர்களுக்கு ஒரு சுதந்திர அரசை நிறுவுவதை ஆதரிக்கும் அய்மன் ஒதே, ஒரு முற்போக்கான மற்றும் அமைதியை வலியுறுத்தும் நபராகவும் அடையாளம் காணப்படுகிறார்.
60 வயதான ஓஃபர் காசிஃப், இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் மற்றும் அரபு-யூதத் தலைவர். அவர் 2019 முதல் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் ஹடாஷ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.
கசீஃப் சமூக நீதி, சமத்துவம் மற்றும் பாலத்தீன உரிமைகளுக்காக தீவிரமாக போராடுகிறார்.
பாலத்தீனர்களுக்கு ஒரு சுதந்திர அரசை நிறுவுவதை ஆதரிக்கும் அவர், அரபு மற்றும் யூத சமூகங்கள் அமைதியாகவும் சமத்துவமாகவும் இணைந்து வாழும் இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்கிறார்.
'டிரம்ப் இஸ்ரேலின் சிறந்த நண்பர்'

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டிரம்பிற்கு முன்பாக உரை நிகழ்த்தினார்.
அப்போது, "நாங்கள் இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறோம். முழு இஸ்ரேல் மக்களின் சார்பாக உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று நெதன்யாகு கூறினார்.
"இதுவரை பதவி வகித்த அமெரிக்க அதிபர்களில் டொனால்ட் டிரம்ப் தான் இஸ்ரேலின் சிறந்த நண்பர்" என்றும் தெரிவித்தார்.
டிரம்பின் காஸா திட்டத்தை அமைதிக்கான "முக்கியமான" படியாக நெதன்யாகு விவரித்தார்.
"நான் அமைதியின் மீது பற்றுக் கொண்டுள்ளேன். நீங்களும் அமைதியை ஆதரிப்பவர். நாமிருவரும் இணைந்து இந்த அமைதியை நிலைநாட்டுவோம்" என்று நெதன்யாகு கூறினார்.
மேலும், "யூத நாட்காட்டியின் படி, இரண்டு ஆண்டுகளாக நீடித்த போர் இன்று அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது"என்று தெரிவித்த அவர், டிரம்பின் தலைமையால் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
பணயக்கைதிகள் விடுதலை
வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, இரண்டு வருடங்களாக காஸாவில் பிடித்து வைத்திருந்த 48 இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
அவர்களில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை, உயிருடன் இருந்த 20 பணயக்கைதிகளை இரண்டு குழுக்களாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் (ICRC) ஹமாஸ் ஒப்படைத்தது.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தனது சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 250 பாலத்தீன கைதிகளையும், தடுப்புக்காவலில் இருந்த 15 சிறுவர்கள் உட்பட காஸாவைச் சேர்ந்த 1,718 பேரையும் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












