அமெரிக்க அதிபர் தேர்தல்: மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் யாருக்கு சாதகமாக அமையும்?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், ஆண்டனி ஸர்ச்சர்
- பதவி, வட அமெரிக்க நிருபர்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸுக்கு இடையிலான போட்டி மிகவும் கடுமையானதாக மாறியுள்ளது.
தேசிய அளவிலும் சமபலம் கொண்ட மாகாணங்களிலும் கடும் போட்டி நிலவிவருவதால், மிகச்சிறிய வித்தியாசத்தில் அதிபர் தேர்தலில் வெற்றி தீர்மானிக்கப்படலாம். புதிய வாக்காளர்களும் வாக்களிப்பது குறித்து முடிவெடுக்காத வாக்காளர்களும் வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருப்பர்.
“மிகவும் சமபலத்துடன் கடுமையான போட்டி நிலவும்போது, ஒன்று அல்லது இரண்டு சதவிகித வாக்கு வித்தியாசம் கூட வெற்றியை தீர்மானிக்கும் வகையில் இருக்கும்,” என ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் அதிபர் தேர்தல் குறித்த வரலாற்று ஆய்வாளர் டேவிட் க்ரீன்பெர்க் கூறுகிறார்.
வெற்றியை தீர்மானிக்க க்கூடிய வாக்குகளை பெறுவது எப்படி என கட்சியின் வியூகவாதிகள் கவனம் செலுத்திவரும் நிலையில், அது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத, கடைசி வார பரப்புரைகளை தலைகீழாக திருப்பிப் போடும் எதிர்பாராத திருப்பங்கள் அல்லது சம்பவங்களாலும் நிகழலாம்.

இந்தாண்டு அமெரிக்க அரசியலில் பல சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதிபர் வேட்பாளர் ஒருவர் மீது இருமுறை கொலை முயற்சி, அவருக்கு எதிரான வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு ஆகியவை நடந்தேறின. அதிபர் ஜோ பைடன் தன்னைவிட இளம் வயதுடைய துணை அதிபருக்கு ஆதரவாக போட்டியிலிருந்து விலகினார்.
கடந்த காலத்தில் அமெரிக்க அரசியலில் அக்டோபர் மாதம் பல ஆச்சர்யங்கள் நிகழ்ந்துள்ளன. 2016 அக்டோபரில் டிரம்ப் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வெளியான வீடியோ (Trump’s Access Hollywood tape) மற்றும் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் சர்ச்சை ஆகியவை வெளியாகின. தவறான செய்தி அல்லது விரும்பத்தகாத சம்பவங்களின் சுழற்சியிலிருந்து மீள்வதற்கு நேரம் இல்லை.
வரும் நவம்பர் 5-ம் தேதிக்குள் அரசியலில் சூறாவளியை கிளப்பக் கூடிய பல புதிய சர்ச்சைகள் இந்த வாரத்தில் ஏற்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
ஹெலென் சூறாவளியின் அரசியல் தாக்கம்
அரசியல் புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ள முதல் சர்ச்சை சூறாவளி உருவிலேயே வந்துள்ளது. இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் ஜார்ஜியா மற்றும் வட கரோலினா மாகாணங்களில் கடந்த வாரம் ஹெலென் சூறாவளி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. அதிபர் தேர்தலில் இந்த இரு மாகாணங்கள் மீது செலுத்தப்பட்ட அதீத கவனம் தற்போதும் செலுத்தப்படுகிறது.ஏற்கெனவே 130 பேரின் உயிரிழப்புகளுடன் மானுட பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இந்த சூறாவளி அந்த மாகாணங்களில் அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில் ஜார்ஜியா சென்ற கமலா ஹாரிஸ் அப்பகுதிக்கு நீண்ட கால உதவியை செய்வதாக உறுதியளித்தார். கடந்த சனிக்கிழமையன்று வட கரோலினாவில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.
அதிபர் தேர்தலில் வெற்றிபெற இந்த இரு மாகாணங்களிலும் டிரம்ப் வெற்றிபெறுவது கட்டாயம் எனும் நிலை உள்ளது. இரு மாகாணங்களிலும் கடும் போட்டி நிலவுவதை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஜார்ஜியாவுக்கு சென்ற முன்னாள் அதிபர் டிரம்ப், அவசரகால நிவாரண நிதியை புலம்பெயர்ந்தவர்களுக்காக செலவிடுவதால் அமெரிக்கர்கள் அதனை இழப்பதாக கூறினார். உண்மையில், இந்த இரு நிதியும் தனித்தனி பட்ஜெட். இதையடுத்து, குடியரசு கட்சியினர் பேரிடர் நிதி குறித்து “அப்பட்டமான பொய் கூறி வருவதாக” பைடன் நிர்வாகம் குற்றம்சாட்டியது.
பேரிடர் தாக்கும்போது, அனைத்துத் தரப்பையும் மகிழ்ச்சிப்படுத்துவது ஓர் அரசாங்கத்திற்கு எளிதானது அல்ல. டிரம்பின் இத்தகைய குற்றச்சாட்டுகள் இந்த இரு மாகாணங்களிலும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் யாருக்கு சாதகமாக அமையும்?
பேரிடர் ஏற்பட்ட அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் மனிதர்களால் ஏற்பட்ட நெருக்கடி, அமெரிக்க அரசியலில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா படைகளுடன் இஸ்ரேலிய படைகளின் சண்டை மற்றும் இந்த வார தொடக்கத்தில் இஸ்ரேல் மீது இரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவியதால் காஸா போர் பிரதேச அளவிலான சண்டையாக உருவெடுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மாற்றத்திற்கான வேட்பாளராக தன்னை முன்னிறுத்தும் கமலா ஹாரிஸ், அமெரிக்கா-இஸ்ரேல் கொள்கை என வரும் போது தற்போதைய நிர்வாகத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளவில்லை. இதனால் அவருக்கு சில சவால்கள் ஏற்படலாம்.
அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக காஸாவில் சண்டை நிறுத்தம் உறுதியாக ஏற்படாது என்று தோன்றும் நிலையில், இரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பின் பதிலடி முழு வீச்சிலான போருக்கு இட்டுச் செல்வதை தடுக்க வெள்ளை மாளிகை முயற்சிக்கிறது.
“முழு வீச்சிலான போர் ஏற்படும் என நான் நம்பவில்லை,” என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார். “அதை நாம் தவிர்க்க முடியும். ஆனால், அதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.” என்பது அவரது கூற்று.
வழக்கமாக அமெரிக்க வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் போது வெளியுறவு கொள்கை குறித்து நேரடியாக சிந்திக்க மாட்டார்கள் என்றாலும், இந்த போர், அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினருக்கு சில விளைவுகளை ஏற்படுத்தும்.
இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விநியோகிப்பதில் கமலா ஹாரிஸின் உறுதிப்பாடு, ஜனநாயக கட்சியின் வாக்காளர்களின் இரு முக்கிய பிரிவுகளுக்கு பிரச்னையாக உள்ளது. அவர்கள், மிச்சிகன் மாகாணத்தில் உள்ள அரபு-அமெரிக்கர்கள் மற்றும் போருக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தொடங்கலாம் என கருதப்படும் கல்வி நிலையங்களில் உள்ள இளம் வாக்காளர்கள்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பொருளாதார ரீதியிலான கவலைகளும் எழுந்துள்ளன. இரானிய எண்ணெய் வளங்களை இஸ்ரேல் குறிவைக்கலாம் என பைடன் குறிப்பிட்டதால் வியாழக்கிழமை ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 5 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்தது.
பெட்ரோல் விலை உயர்வு குறித்து அமெரிக்கர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ஜனநாயகக் கட்சியினருக்கு இன்ப அதிர்ச்சிகள்
அமெரிக்க வாக்காளர்களிடையே பொருளாதாரம் தான் முக்கியமான பிரச்னையாக இருப்பதை பல்வேறு கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து காட்டுகின்றன. அதனடிப்படையில் ஹாரிஸ் மற்றும் ஜனநாயக கட்சியினருக்கு வெள்ளிக்கிழமை மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதாவது, சமீபத்திய வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களின்படி, கடந்த சில மாதங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. வேலைவாய்ப்பின்மை 4.1% குறைந்துள்ளது.
வாக்காளர்களின் பொருளாதாரம் குறித்த கவலைகள் சமீபத்திய வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் குறித்து மட்டுமல்ல என்கிறார், க்ரீன்பெர்க்.
“உண்மையில் மக்கள் நாட்டின் சில பகுதிகளில் நிலவும் நீண்ட கால தோல்வியை தான் குறை கூறுகின்றனர். குறிப்பாக கிராமப்புற அமெரிக்காவின் தொழில்மயமாக்கல் குறைந்துவருவது,” என்கிறார் அவர். “ஒரு நாட்டின் சிறப்பான பொருளாதாரத்தில் கூட இது பாதிப்பை ஏற்படுத்தும்.” என்று அவர் கூறுகிறார்.
இந்த தேர்தல் காலம் முழுவதும் பொருளாதாரத்தில் யார் சிறப்பாக பணியாற்றுவார் என்ற கேள்விக்கு, சமீபத்திய சி.என்.என் கருத்துக்கணிப்பு உட்பட, ஹாரிஸைவிட டிரம்பையே பலரும் தங்கள் தேர்வாக கூறினர். ஆனால், டிரம்பின் இந்த நிலை மாற்ற முடியாதது அல்ல. குறிப்பாக, குக் பொலிட்டிக்கல் ரிப்போர்ட் (Cook Political Report) கருத்துக்கணிப்பின்படி, பணவீக்கத்தை யார் சிறப்பாக கையாள்வார்கள் என்ற கேள்விக்கு சமபலம் உள்ள மாகாணங்களில், வேட்பாளர்கள் இருவரும் சமமான ஆதரவை பெற்றனர்.
ஜனநாயக கட்சியினருக்கு நெருக்கடியாக மாறுவதற்கு சாத்தியமான மற்றொரு விஷயமும் இந்த வாரம் தணிந்தது. கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக கிழக்கு கடற்கரை மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் முக்கியமான துறைமுகங்களை மூடுவதற்கு காரணமாக இருந்த கப்பல்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தான் அது. துறைமுகங்களை மீண்டும் திறக்கும் வகையில் பேச்சுவார்த்தைக்கு திரும்ப இருதரப்பும் முன்வந்துள்ளன. வேலைநிறுத்தம் தொடர்ந்திருந்தால், தேர்தலுக்கு முந்தைய வாரங்களில் சப்ளையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக பொருட்களின் விலை அதிகரித்திருக்கலாம்.
இதனிடையே, அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் வருவது, கொரோனா காலகட்டத்திற்கு முந்தைய அளவுக்கு திரும்பியுள்ளது. அது, கடந்தாண்டு டிசம்பரில் சாதனை அளவாக 2,49,741 என்ற எண்ணிக்கையை அடைந்தது.
இதன் தாக்கம் பல அமெரிக்க நகரங்களில் உணரப்பட்டாலும், நிலைமையின் தீவிரம் குறையக்கூடும்.
மீண்டும் கேபிடல் தாக்குதல் குறித்து கவனம்

பட மூலாதாரம், Getty Images
இந்த வாரச் செய்திகளில் பெரும்பாலானவை ஹாரிஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், டிரம்பிற்கும் அது சுமூகமானதாக இல்லை.
கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயற்சித்ததாக டொனால்ட் டிரம்பிற்கு எதிரான வழக்கு மற்றும் ஆதாரங்களைக் கோடிட்டுக் காட்டும் சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித்தின் ஆவணத்தை நீதிபதி ஒருவர் வெளியிட்டார். இதனால், 2021, ஜனவரி 6 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் இருக்கும் கேபிடல் கட்டடம் மீதான தாக்குதலில் டிரம்பின் செயல்பாடுகள் குறித்து கடந்த புதன்கிழமை மீண்டும் கவனம் பெற்றது.
இத்தாக்குதலுக்கு முன்பாக டிரம்பின் கருத்துகள் மற்றும் நடவடிக்கைகள், அவரது ஆதரவாளர்களால் கேபிடல் கட்டடம் தாக்கப்படுவதற்கு வழிவகுத்ததாக கூறும் புதிய தகவல்கள் அந்த ஆவணத்தில் அடங்கியுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கப்படுவதில் இருந்து டிரம்ப்பிற்கு விலக்களிக்கக் கூடாது என அந்த ஆவணம் பரிந்துரைத்தது.
“ஜனநாயகத்தைக் காப்பது” தொடர்பாக வாக்காளர்கள் டிரம்பைவிட (40%) ஹாரிஸை (47%)அதிகமானோர் ஆதரிப்பதாக சமீபத்திய சி.என்.என் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
"எதிர்பாராத முடிவாக இருக்கும்"
கடந்த 50 ஆண்டுகளாக, அமெரிக்க அரசியல் அகராதியில் “அக்டோபர் ஆச்சர்யம்” என்பது நிலையானதாக உள்ளது. இதனால் போட்டியின் போக்கை மாற்றும் எதிர்பாராத தலைப்புச் செய்திகள் அல்லது நெருக்கடி குறித்த அச்சம் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது.
சம போட்டி நிலவும் மாகாணங்களில் வாக்கு வித்தியாசம் சில பத்தாயிரங்களில் மட்டுமே இருக்கும் எனும் நிலையில், பொதுக் கருத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட வெற்றியை தீர்மானிக்கும் ஒன்றாக மாறலாம்.
நவம்பர் தேர்தல் முடிவு எதிர்பாராத ஒன்றாக இருக்கும் என்றார் க்ரின்பெர்க்.
“நீங்கள் எந்த தரப்பை ஆதரித்தாலும், உங்களின் வாக்கை பொறுத்து தீவிரமான விளைவுகள் ஏற்படும் என நான் யூகிக்கிறேன்.”
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












