இஸ்ரேல் ராணுவத்திற்கு ஒரே நேரத்தில் பல முனைகளிலும் போர் புரியும் வலிமை உள்ளதா?

இஸ்ரேல், மத்திய கிழக்கு, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த சில வாரங்களாக, மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
    • எழுதியவர், பெர்னாண்ட பால்
    • பதவி, பிபிசி செய்திகள்

காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்பொலா, ஏமேனில் ஹூதிகள், இராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய ஷியா பிரிவினர்கள் மற்றும் இரான் என இஸ்ரேல் போரிடும் முனைகளின் பட்டியல் நீண்டது.

கடந்த வாரத்தில் மட்டும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) லெபனான் மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது, அதே நேரத்தில் ஏமனில் பல்வேறு பகுதிகளையும் குண்டு வீசி தாக்கியது மற்றும் காஸாவில் ஏற்கனவே நடந்து வரும் அதன் தாக்குதல்களையும் தொடர்ந்தது.

ஹமாஸ் ஆயுதக் குழுவின் நட்பு நாடு மற்றும் ஆதரவாளரான இரான், ஹெஸ்பொலா அமைப்பு, ஹூதிகள் மற்றும் பிற ஷியா குழுக்கள் இஸ்ரேல் நகரமான ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் பகுதிகளை ஏவுகணைகள் கொண்டு பதில் தாக்குதல் நடத்தின. அதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

"இரான் இதற்கு கடும் விலை கொடுக்க நேரிடும்", என அவர் எச்சரித்தார்.

2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் தேதியன்று இஸ்ரேலிய பகுதிகளின் மீது ஹமாஸ் ஆயுதக்குழு திடீர் தாக்குதலை நடத்தியதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மத்திய கிழக்கில் "புதிய ஒழுங்கை" உருவாக்கும் தனது இலக்கை வலியுறுத்தி தாக்குதல்களை தொடங்கினார்.

இதனால் காஸாவில் 41 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். மேலும் லெபனானில் இந்த எண்ணிக்கை ஏற்கனவே 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவை அனைத்தும் தற்போது மத்திய கிழக்கின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் ஆபத்தான நிகழ்வுகளாக இருப்பதாக பிபிசியின் பாதுகாப்புச் செய்திகளின் நிருபர் ஃபிராங்க் கார்ட்னர் தெரிவிக்கின்றார்.

ஆனால் இந்த மோதல்களினால் எழும் கேள்வி என்னவென்றால், இஸ்ரேலுக்கு ஒரே நேரத்தில் பல அமைப்புகளுடன் போர் புரிவது எவ்வாறு சாத்தியமாக இருக்கிறது? அவ்வாறு செய்வதற்கான இராணுவ பலம் இஸ்ரேலுக்கு உள்ளதா? என்பதுதான்.

"சமீபத்திய தாக்குதல்கள் இஸ்ரேலிய உளவுத்துறை சேவைகள் மற்றும் இராணுவப் படைகள் திறமையானவையா என்பதைக் வெளிக்காட்டுகின்றன. ஆனால் அதற்கும் வரம்புகள் உள்ளன. அதிகமான அமைப்புகளுடன் போரில் இருந்தால், இஸ்ரேலுக்கு போர் நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் கடினமாக இருக்கும்", என்று ஏவுகணை பாதுகாப்பு நிபுணரும், உத்திகள் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் உறுப்பினருமான ஷான் ஷேக் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இஸ்ரேலின் இராணுவ வலிமை என்ன?

இஸ்ரேலிய ராணுவப்படை அதன் உயர் தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன திறனுக்காக உலகம் முழுவதும் பெயர் பெற்றது. ஆனால் அதன் உண்மை நிலையை பற்றி தெரிந்துகொள்ள தரவுகளை கணக்கில் எடுத்து பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

2019 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆண்டுதோறும் 20 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டாலர்களை இராணுவத்திற்கு ஒதுக்குகின்றது என்று சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான நிறுவனத்தின்(IISS) குறிப்புகள் அடிப்படையிலான உள்ள உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய உலக வங்கி தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு இரான் அதன் ராணுவச் செலவுகளுக்காக சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது. இதைக் காட்டிலும் இஸ்ரேல் இருமடங்கு அதிக நிதி ஒதுக்குகின்றது.

இது எந்தவொரு மோதல் நடந்தாலோ அதில் குறிப்பிடத்தக்க சாதகத்தை இஸ்ரேலுக்கு அளிக்கின்றது. மேலும் அதிநவீன ராணுவ உபகரணங்களை தேர்வு செய்ய வழிவகுக்கின்றன.

இஸ்ரேல் தனது பாதுகாப்புத் துறைக்காக செலவிடுவது, அதன் மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) ஒப்பிடுகையில் இரானை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

உலக வங்கியின் சமீபத்திய தகவல்களின்படி, இஸ்ரேல் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதம் பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்குகிறது. நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் இரான் 2.6 சதவீதமும், லெபனான் 3.4 சதவீதமும் மற்றும் சிரியா 4.1 சதவீதமும் ஒதுக்குகின்றன.

இஸ்ரேலின் விமானப்படை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலின் மிக முக்கியமான இராணுவ பலங்களில் ஒன்று அதன் விமானப்படை

சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் தரவுகளின்படி, இஸ்ரேலிடம் 340 போர் விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இவை இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களுக்கு மிக முக்கிய சாதகமான அம்சமாக இருக்கும் என்று இஸ்ரேலின் பார் இலன் பல்கலைக்கழகத்தில் மூலோபாய ஆய்வுகளுக்கான பிகின்-சதாத் மையத்தின் இயக்குநரான எய்டன் ஷமிர் கூறுகின்றார்.

"இஸ்ரேல் அதன் விமானப் படைகளின் உதவி கொண்டு, மத்திய கிழக்கின் எந்தப் பகுதியிலும் குண்டு வீச முடியும்", என்று அவர் பிபிசி முண்டோவிடம் கூறுகிறார்.

F-15 விமானங்களும், F-35 என்ற ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பக்கூடிய உயர் தொழில்நுட்பம் கொண்ட விமானங்களும் வேகமாகத் தாக்கும் ஹெலிகாப்டர்களும் இஸ்ரேலிடம் உள்ளன.

கூடுதலாக இஸ்ரேலிய ராணுவத்திடம் கவச வாகனங்கள், டாங்கிகள், பீரங்கிகள், போர்க்கப்பல்கள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவையும் உள்ளன.

"மிகவும் நவீன ஆயுதங்கள் கொண்ட ராணுவப் படைகளில் இஸ்ரேலிய ராணுவமும் ஒன்று என்று நினைக்கிறேன். குறிப்பாக காஸாவில் ஹமாஸுக்கு எதிரான போருக்குப் பிறகு அந்நாடு அதிக அனுபவத்தை கொண்டுள்ளது", என்கிறார் எய்டன் ஷமீர்.

செப்டம்பர் மாதம் லெபனானில் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடித்ததற்கு காரணமாக இருந்ததாக கருதப்படும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் அந்நாட்டிற்கு பலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், அயர்ன் டோம் மற்றும் டேவிட் ஸ்லிங் போன்ற அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் இஸ்ரேலின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அக்டோபர் 1 ஆம் தேதி அன்று இரான் இஸ்ரேல் மீது நடத்திய வான் தாக்குதல் போன்ற பல்வேறு தாக்குதல்களை இந்த ஏவுகணை அமைப்புகள் தடுத்து நிறுத்தியுள்ளன. இந்த ஏவுகணை அமைப்புகள் எதிரி ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டவை.

அயர்ன் டோம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலுக்கு எதிராக ஏவப்பட்ட ராக்கெட்டுகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட ஒரு பாதுகாப்பு ஏவுகணை அயர்ன் டோம் ஆகும்

இஸ்ரேலின் தரைப்படை

ஹமாஸ், ஹெஸ்பொலா அல்லது ஏமனில் ஹூதிகளைக் காட்டிலும் இஸ்ரேல் மிகவும் வலுவான சக்தியாக இருப்பதாக பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்கள் தெரிவித்தனர்.

"மற்ற அனைத்து ஆயுதக்குழுக்களின் தனித் திறமையைக் காட்டிலும் இஸ்ரேல் படைகள் அதிக திறன் கொண்டவை", என்று CSIS-இன் ஷான் ஷேக் கூறுகின்றார்.

ஆனால் இஸ்ரேல், "மற்ற அமைப்புகளுடன் போர் புரியும் அதே வேளையில் இரானுடனும் போர் புரிவது தான்" முக்கிய பிரச்னையாக அந்நாட்டிற்கு இருக்கும் என்று அவர் கூறுகின்றார்.

"அது மிகவும் கடினமானது. இஸ்ரேல் தோல்வியடைய வாய்ப்புள்ள விஷயங்களில் ஒன்றாக இருப்பது அவர்களின் புகழ்பெற்ற அயர்ன் டோம் அமைப்பு ஆகும். ஏனெனில் ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டால் அதிலிருந்து தற்காத்துக் கொள்வது இஸ்ரேலுக்கு சாத்தியமற்றதாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

"ஏன் என்றால், இந்த ஏவுகணையில் உள்ள சென்சார்கள் குறிப்பிட்ட ஒரு திசையை மட்டுமே கண்காணிக்க முடியும். உதாரணமாக இஸ்ரேலுக்கு வடக்கே லெபனானை நோக்கி சென்சார் இருந்தால், அது கிழக்கு பகுதியில் உள்ள இரானையோ அல்லது தெற்கில் உள்ள ஏமனையோ கண்காணிக்க இயலாது", என்று அவர் கூறினார்.

மத்தியகிழக்கில் உள்ள பல்வேறு பகுதிகளில் மோதல்களை எதிர்கொள்வதில் இஸ்ரேல் எதிர்கொள்ளக்கூடிய மற்றொரு சிரமம் அதன் தரைப்படை தொடர்பானது என்று எய்டன் ஷமிர் விளக்குகிறார்.

சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் தகவல்களின் படி, இஸ்ரேலில் சுமார் ஒரு லட்சத்து 78 ராணுவ வீரர்கள் பணியில் உள்ளனர், கூடுதலாக 4 லட்சத்து 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. (இஸ்ரேலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ராணுவ சேவை செய்வது கட்டாயமாகும்)

ஆனால் இரானில் 6 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உள்ளனர் மற்றும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தயார் நிலையில் உள்ளனர். ஹெஸ்பொலாவில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வீரர்கள் இருப்பதாகவும், ஹமாஸில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வீரர்கள் வரை இருப்பதாக கருதப்படுகின்றது.

இஸ்ரேலிய ராணுவப்படையில் அதிக எண்ணிக்கையில் வீரர்கள் இல்லாதது, அந்நாட்டிற்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது என்று ஷமிர் கூறுகிறார்.

"அதன் ராணுவ வீரர்களில் கிட்டத்தட்ட 70% பேர் தொழில்முறை வீரர்கள் அல்ல. எனவே, சில காலத்திற்கு மட்டுமே அவர்கள் ராணுவ பணி செய்ய முடியும். இது சில பணிகளை நீண்டதாகவும் சிக்கலானதாகவும் ஆக்குகிறது", என்று அவர் கூறுகிறார்.

ஜோ பைடன் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

அமெரிக்காவின் ஆதரவு

இஸ்ரேலிய இராணுவத் திறனை பகுப்பாய்வு செய்யும் போது முக்கிய அம்சமாக கருத வேண்டியது அமெரிக்காவிடமிருந்து அந்நாடு பெரும் ஆதரவு ஆகும்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) சமீபத்திய அறிக்கையின்படி, இஸ்ரேலிய ஆயுத இறக்குமதிகளில் 69% வட அமெரிக்காவில் இருந்து வருகிறது.

2023 ஆம் ஆண்டின் இறுதியில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயிரக்கணக்கான வெடி குண்டுகளை வழங்கியதாக, அந்த அமைப்பின் தரவிகள் கூறுகின்றன.

இந்த போருக்கு முன், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு 3.3 பில்லியன் டாலர்களை இராணுவ நிதியுதவியாக வழங்கியது. கூடுதலாக 500 மில்லியன் டாலர்களை ஏவுகணை பாதுகாப்பு நிதியுதவியாக அளித்தது என்று அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு, ஏவுகணைகளை இடைமறிக்கும் அமைப்பான அயர்ன் டோமை மேம்படுத்த கூடுதலாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது.

"இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவை பெரிதும் நம்பியுள்ளது. விமானங்கள், வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு வருகின்றன", என்று எய்டன் ஷமிர் விளக்குகிறார்.

வெவ்வேறு முனைகளில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தொடர அமெரிக்காவின் ஆதரவு முக்கியமானது என்று அவர் கூறுகின்றார்.

"இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் அந்நாட்டின் மீது சர்வதேச தடைகளை விதிக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகளின் சபை கூறி வருகின்றது. வீட்டோ அதிகாரம் உடைய அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் போனால் அது, இஸ்ரேலுக்கு ஒரு சிக்கலான சூழ்நிலையாக இருக்கலாம்", என்று எய்டன் ஷமிர் கூறுகிறார்.

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் மத்திய கிழக்கில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பது போல தான் தெரிகிறது என்று ஷான் ஷேக் தெரிவிக்கின்றார்.

"காஸாவில் போர் நிறுத்தத்தை விரும்புவதாக பைடன் அரசாங்கம் பல முறை கூறியுள்ளது. ஆனால் அதற்காக அது மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் குறைவு", என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"அவர் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்குவதை நிறுத்த தயாராக இல்லை". எனவே இது தொடர்ந்து அதிகரித்தால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு தொடர்ந்து பெரிய அளவில் ஆதரவு அளிக்கும் என்று நான் எண்ணுகிறேன்", என்று அவர் கூறினார்.

இஸ்ரேலுக்கு முக்கிய ஆதரவாக பிற நாடுகளும் உள்ளன.

உதாரணமாக, SIPRI தரவுகளின்படி, இஸ்ரேலுக்கு அதிக ஆயுதங்களை விற்கும் இரண்டாவது நாடாக (30%) ஜெர்மனி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, இஸ்ரேலுக்கு ஜெர்மனியின் ஆயுத ஏற்றுமதி மொத்தம் 326 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது 2022 ஆம் ஆண்டை விட 10 மடங்கு அதிகமாகும்.

SIPRI தரவுகளின்படி, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளில் இத்தாலி (0.9%) மூன்றாவது இடத்தில் உள்ளது.

பிரான்ஸ், பிரிட்டன், நெதர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குகின்றன.

காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்துகின்றன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரத்தின் வழியாக ஒரு பெண்ணும் குழந்தையும் நடந்து செல்கின்றனர்.

ஆயுதங்களைத் தாண்டி...

இஸ்ரேலின் ராணுவத் திறனை பகுத்தாய்வு செய்ய, அந்நாட்டிடம் உள்ள ஆயுதங்கள், விமானங்கள், டாங்கிகள் மற்றும் போர் வீரர்களின் எண்ணிக்கையைத் தாண்டி மற்ற காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"இஸ்ரேல் அதன் எதிரிகளை விட வலிமையானது, அது நீண்ட காலத்திற்கு போரில் தாக்குப்பிடிக்க முடியும் என்பது நமக்கு தெரியும். ஆனால் நாட்டின் ஆயுத இருப்பை மட்டும் வைத்து மட்டும் எவ்வளவு காலம் போரைத் தாங்க முடியும் என்பதை ஆராயாமல் வேறு சில அம்சங்களை வைத்தும் கணக்கிட வேண்டும்", என்று ஷமிர் கூறினார்.

"பொருளாதாரம், சமூகம் மற்றும் சர்வதேச அளவில் அந்நாட்டின் நற்பெயர் போன்றவற்றில் இஸ்ரேல் செலுத்த வேண்டிய விலை மிக அதிகமாக இருப்பதால், அதனை பொறுத்து அந்நாடு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்", என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலுக்கு அதிக ராணுவத் திறன் இருக்கும் போதிலும், மத்திய கிழக்கில் அந்நாட்டின் அளவு என்பது இஸ்ரேலுக்கு ஒரு பாதகமாக இருக்கலாம் என்று மூலோபாய ஆய்வுகளுக்கான பிகின்-சடத் மையத்தின் இயக்குனர் கூறுகிறார்.

"மத்திய கிழக்கு என்னும் ஒரு பெரிய பிராந்தியத்தில், ஒரு சிரிய நாடு இஸ்ரேல். அங்கு அதிகமான மக்கள் வாழ்கின்றனர்", என்று அவர் கூறினார்.

"எனவே ஒன்று, இரண்டு அல்லது 10 போர்களில் எதிரி நாடுகளை தோற்கடித்தாலும், அதில் ஒரு வித்தியாசமும் இல்லை. இஸ்ரேலால் அவர்களை முழுமையாக தோற்கடிக்க முடியாது", என்று அவர் கூறுகிறார்.

உதாரணமாக, இரான் இஸ்ரேலை விட மிகப் பெரிய நாடு. அதன் மக்கள் தொகை (சுமார் 89 மில்லியன்) இஸ்ரேலை விட (சுமார் 10 மில்லியன்) பல மடங்கு அதிகம் என்பது கவனிக்கக்கூடிய ஒன்று.

"காஸாவில் போர் நிறுத்தம் கொண்டு வருவதன் மூலம், தேவையற்ற உயிரிழப்புகளை தவிர்க்கலாம். இது ஹெஸ்பொலா மற்றும் இரானுடன் போர் புரிவதில் இருந்து பின்வாங்கி அவர்களுக்கும் ராஜதந்திர வெற்றியைப் பெற அனுமதிக்கும்", என்று ஏவுகணை பாதுகாப்பு நிபுணர் ஷான் ஷேக் கூறுகிறார்.

எப்படியிருந்தாலும், எதிர்காலத்தைப் பார்க்கும் போது, ​​இந்த மோதலில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இரு தரப்பினரும் இந்த பிராந்தியத்தில் "முழுமையான போரை" விரும்பவில்லை என்பதை இரு நிபுணர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)