பிபர்ஜாய் புயலினால் குஜராத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சேதம் - கலங்க வைக்கும் புகைப்படங்களின் தொகுப்பு

பிபர்ஜாய் புயல், இந்தியா, குஜராத்

பட மூலாதாரம், PAWAN JAISHWAL

அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல், வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் குஜராத்தின் கடலோரப் பகுதிகளில், கரையை கடக்க தொடங்கியது. மாலையில் கரையை கடக்க தொடங்கிய பிபர்ஜாய் புயல், நள்ளிரவு வரை நீடித்தது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் குஜராத்தின் மாண்டவி பகுதிக்கும் இடையே அமைந்துள்ள ஜகாவ் என்ற இடத்தின் அருகே புயல் கரையை கடக்கத் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஜூன் 15 ஆம் தேதி நள்ளிரவு வரை புயல் கரையை கடக்கும் நேரம் நீடித்து வந்தது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் பலத்த காற்று வீச தொடங்கியது. மணிக்கு சுமார் 115 முதல் 125கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் அங்குள்ள கடல் பகுதிகள் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்பட்டன.

பிபர்ஜாய் புயல், இந்தியா, குஜராத்

பட மூலாதாரம், SAMPATHAKY/AFPVIA GETTY IMAGES

மேலும் குஜராத் அரசு வெளியிட்டுள்ள தகவலில், ‘இந்த புயல் காரணமாக கரையோர பகுதிகளில் வசித்து வந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிபர்ஜாய் புயலை இந்திய வானிலை மையம் ’தீவிர சூறாவளி புயல்’ என குறிப்பிட்டிருந்தது. ஆனால் பிபர்ஜாய் புயல் கரையை கடந்த வேகம் கடுமையாக இருந்ததால், தற்போது அது ‘தீவிர சூறாவளி புயல்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், "பாகிஸ்தான் இதுவரை இத்தகைய மோசமான புயலை சந்தித்தது இல்லை" என பாகிஸ்தானின் மத்திய காலநிலை மாற்ற அமைச்சகத்துக்கான அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் கூறியுள்ளார்.

மேலும், ”இந்த புயலின் காரணமாக சுமார் 82,000க்கும் மேற்பட்ட மக்கள், பாதுகாப்பு கருதி நாட்டின் தென்கிழக்கு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிபர்ஜாய் புயல், இந்தியா, குஜராத்

பட மூலாதாரம், DIVYAKANTHSOLANKI/SHUTTERSTOCK

பிபர்ஜாய் புயல், இந்தியா, குஜராத்

பட மூலாதாரம், Reuters

இந்த நிலையில், பிபர்ஜாய் புயலின் காரணமாக பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் கனமழை பெய்து, வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகலாம் எனவும் அஞ்சப்பட்டு வருகிறது.

இந்திய வானிலை மையத்தின் அண்மை தகவலின்படி, பிபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச் மற்றும் சௌராஷ்டிர பகுதிகளை கடந்து, தற்போது நலியா பகுதியை மையமிட்டு வருகிறது. மேலும் இந்த புயல் மெதுவாக நகர்ந்து, ராஜஸ்தானின் தெற்கு பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது.

அதேபோல், வெள்ளிக்கிழமையன்று இந்த புயல் சற்று வலுவிழந்து, காற்றின் வேகம் மணிக்கு 80கிமீ முதல் 90 கிமீ ஆக குறையலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது கணித்துள்ளது. ஆனால் எப்படியானாலும், இந்த புயல் காரணமாக ராஜஸ்தானில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலை தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்தில் புயலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பிபர்ஜாய் புயல், இந்தியா, குஜராத்

பட மூலாதாரம், Getty Images

பிபர்ஜாய் புயல், இந்தியா, குஜராத்

பட மூலாதாரம், Getty Images

” வன விலங்குகள், குறிப்பாக ’கிர்’ சிங்கங்களை பாதுகாப்பது தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் தன்னிடம் பிரதமர் கேட்டறிந்ததாக” பூபேந்திர பட்டேல் கூறியுள்ளார்.

பிபர்ஜாய் புயலின் காரணமாக, வெள்ளிக்கிழமையன்று இயங்கவிருந்த 21 ரயில்களை மேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. அதேபோல் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை கருத்தில் கொண்டு, 7 ரயில்கள் செல்லும் பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் புயல் பாதிப்பின் காரணமாக, ராஜ்கோட், ஓகா, துவாரகா, ஜாம்நகர், மோர்பி உள்ளிட்ட 14 ரயில் நிலையங்களுக்கு ரயில்வே நிர்வாகம் உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

பிபர்ஜாய் புயல், இந்தியா, குஜராத்

பட மூலாதாரம், Getty Images

இருளில் மூழ்கியுள்ள குஜராத்தின் 940 கிராமங்கள்

பிபர்ஜாய் புயல், இந்தியா, குஜராத்

பட மூலாதாரம், Getty Images

”பிபர்ஜாய் புயல் காரணமாக இதுவரை மாநிலத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை” என குஜராத் மாநிலத்தின் நிவாரண ஆணையர் அலோக் சிங் ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

”இதுவரை 22 நபர்கள் காயமடைந்துள்ளனர். ஆனால் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் 23 விலங்குகள் உயிரிழந்துள்ளன மற்றும் 524 மரங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் பல இடங்களில் மின்சார கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் 940 கிராமங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது” என்று அலோக் சிங் குறிப்பிட்டுள்ளார்.

மாண்டவியில் உள்ள நிலைமை என்ன?

பிபர்ஜாய் புயல், இந்தியா, குஜராத்

பட மூலாதாரம், DIVYAKANTH SOLANKI/SHUTTERSTOCK

புயல் காரணமாக குஜராத்தின் ’கட்ச்’ பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வியாழனன்று வீசிய பலத்த காற்றினால் ஜகாவ் - மாண்டவி சாலையிலும், மாண்டவியை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அதேபோல் மாண்டவியில் உள்ள பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.

மாண்டவி நகரின் நிலைமை குறித்து, அப்பகுதி மாவட்ட ஆட்சியர் பி.டி.ஐ. செய்தி முகமையிடம் பேசினார்.

”அங்கு இருபதுக்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் சாய்ந்துள்ளன. அதேபோல் 250க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு வீழ்ந்துள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஆனால் இதுவரை புயலினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை” என்று மாவட்ட ஆட்சியர் அமித் அரோரா தெரிவித்துள்ளார்.

மேலும், ” புயல் கரையை கடப்பதற்கு முன்பு, கடற்கரையிலிருந்து 10 கிமீ தொலைவு வரை வசித்து வந்த மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். அதேசமயம், 25,000க்கும் அதிகமான கால்நடைகளை உயரமான இடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்றியுள்ளது” என்றும் அமித் அரோரா குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: