குஜராத்தில் கரையை கடக்க தொடங்கிய பிபர்ஜாய் புயல் - அரபிக் கடலில் அதிக புயல்கள் உருவாவது ஏன்?

புயல், கடல், பிபர்ஜாய், குஜராத்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஒரு வாரமாக அரபிக்கடலை கொந்தளிப்புடன் வைத்திருக்கும் பிபர்ஜாய் புயல் இன்று (ஜூன் 15ஆம் தேதி) மாலை குஜராத் மாநிலத்தின் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளில் கரையைக் கடக்கத் தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதைத்தவிர்த்து, பாகிஸ்தானின் கராச்சி நகரத்திலும் இப்புயலின் தாக்கம் காணப்படுகிறது. அதேபோல ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மற்றும் ஜாலோர் பகுதிகளில் புயலின் தாக்கம் தென்படுகிறது.

மாலை 6 மணிக்குமேல் கரையைக் கடக்கத் தொடங்கிய இப்புயல், நள்ளிரவு வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 140 முதல் 150 கிமீ வரையிலான வேகத்தில் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள ஜக்காவ் துறைமுகத்தை முதலில் புயல் தாக்கியது. அது கட்ச் பகுதியின் மாண்ட்வி மற்றும் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு இடையே உள்ளது.

பிபர்ஜாய் புயல் காரணமாகப் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சுமார் 1.5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். புயலின் தீவிரம் இன்று இரவு வரை நீடிக்கும்.

குஜராத்தில் ராணுவ வீரர்கள் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காகத் தயாராகி வருகின்றனர்.

மும்பையில்கூட பிபார்ஜாய் புயலின் விளைவு காணப்படுகிறது. இதன் காரணமாக அரபிக்கடலில் மூன்று மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயலின் தாக்கத்திலிருந்து காப்பாற்ற, குஜராத்தின் கரையோரப் பகுதிகளில் வசித்த 75,000 மக்கள் இதுவரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்திருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் அதிக புயல்கள்

புயல், கடல், பிபர்ஜாய், குஜராத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரபிக்கடலின் வெப்பம் அதிகரிப்பதால், அங்கு உருவாகும் புயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது

வங்காள மொழியில் ‘பேரிடர்’ என்று பொருள்படும் பெயருள்ள பிபர்ஜாய் புயல், இந்த ஆண்டு அரபிக்கடலில் உருவாகும் முதல் புயல். 2019ஆம் ஆண்டு அரபிக்கடலில் மஹா, வாயு, ஹிக்கா, மற்றும் க்யார் ஆகிய புயல்கள் உருவாகின.

இந்தியாவின் மிகநீளமான கடற்கரை – 1,600கி.மீ -- குஜராத் மாநிலத்தில்தான் இருக்கிறது.

அரபிக்கடலின் வெப்பம் அதிகரிப்பதால், அங்கு உருவாகும் புயல்களின் எண்ணிக்கையும், தீவிரமும், அவற்றின் தாக்கமும் பெரும் பிரச்னைகளாக உருவெடுத்துள்ளன.

குஜராத்திலிருக்கும் 40 சிறு மற்றும் பெரும் துறைமுகங்களிலிருந்து தினமும் பலகோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி நடக்கிறது. பெருகி வரும் புயல்களின் எண்ணிக்கை இந்தப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, கரையோரத்தில் வாழும் மக்களின் வாழ்வையும் பாதிக்கிறது.

எப்படி உருவாகின்றன இந்தப் புயல்கள்?

புயல், கடல், பிபர்ஜாய், குஜராத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடலின் வெப்பம் அதிகரிப்பது புயல்கள் உருவாவதற்கு வழிவகுக்கிறது

கடலின் மேற்பரப்பின் வெப்பநிலைக்கும் புயல்கள் உருவாவதற்கும் நேரடித் தொடர்பு உண்டு. பருவநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் கடலின் வெப்பம் அதிகரிப்பதற்கான முக்கியக் காரணிகளாகக் கருதப்படுகின்றன.

புனேவில் இருக்கும் வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தில் இதைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார் முனைவர் ராக்ஸி மேத்தியூ கோல். பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் அரபிக் கடலின் வெப்பம் 1.2 டிகிரியிலிருந்து 1.4 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்ந்துள்ளதாகக் கூறினார்.

“இதற்கு காலநிலை மாற்றம்தான் முக்கியக் காரணம். கடலின் வெப்பம் அதிகரிப்பது புயல்கள் உருவாவதற்கான ஆற்றலை வழங்குகிறது,” என்கிறார்.

மேலும் பேசிய அவர், முன்னர் அரபிக்கடல் குளிர்ந்து இருந்ததாகவும், அதனால் காற்றழுத்தத் தாழ்வு மையங்கள் உருவானதாகவும் கூறினார். “ஆனால் அரபிக்கடலின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளுடைய மேற்பரப்பின் வெப்பநிலை குறைவாக இருந்ததால், அவை புயல்களாக உருவாகவில்லை. ஆனால் இப்போது வெப்பம் அதிகரித்துள்ளதால் புயல்கள் உருவாகின்றன,” என்றார்.

புயலின் மேலிருக்கும் காற்றுதான் புயலின் திசையைத் தீர்மானிக்கிறது. பொதுவாக அரபிக்கடலில் உருவாகும் புயல்கள் குஜரத்தை நோக்கிப் பயணிக்கும், என்றார்.

முன்பு வங்கக் கடலில் இதுபோன்ற தீவிரமான புயல்கள் அடிக்கடி உருவாகும். சமீப வருடங்களிலோ இது அரபிக்கடலில் காணப்படுகிறது, என்றும் கூறினார்.

புயல்களின் வகைகளும் அவற்றின் வேகமும்

புயல், கடல், பிபர்ஜாய், குஜராத்

பட மூலாதாரம், https://earthobservatory.nasa.gov/

படக்குறிப்பு, விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட பிபர்ஜாய் புயலின் படம்
  • புயலின் வேகம் மணிக்கு 31கி.மீ அல்லது அதற்குக் குறைவாகவோ இருந்தால் அது ‘காற்றழுத்தத் தாழ்வு மையம்’.
  • மணிக்கு 31-49கி.மீ வேகத்தில் இருந்தால் அது அழுத்தக்குறைவு (depression).
  • மணிக்கு 50-61கி.மீ வேகத்தில் இருந்தால் அது தீவிரமான அழுத்தக்குறைவு (deep depression).
  • காற்றின் வேகம் மணிக்கு 62-88கி.மீ வரை எட்டினால் அது சூறாவளி (hurricane).
  • அதுவே மணிக்கு 89-118கி.மீ வரை இருந்தால் அது தீவிரமான புயல் (severe cyclone).
  • காறின் வேகம் மணிக்கு 119-221கி.மீ இருந்தால் அது அதிதீவிர புயல் (very severe cyclone). அதுவே மணிக்கு 222கி.மீட்டரைக் கடந்தால் அது super cyclone என்று அழைக்கப்படுகிறது.
  • புயலின் மையம் அமைதியாக இருக்கும், இதன் விட்டம் 30 கிலோமீட்டரில் இருந்து 50 கி.மீ வரை இருக்கும். இதிலிருந்து புயலின் பதிப்பு நிகழும் பரப்பு 150 கிலோமீட்டரிலிருந்து 1,000கி.மீ வரை இருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: