'சைக்கோபாத்' பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

மனநலக் குறைபாடு

பட மூலாதாரம், Getty Images

ஆங்கிலத்தில் 'சைக்கோபதி' (Psychopathy) எனப்படும் உளப்பிறழ்வு என்பது பலரும் சம அளவில் வெறுக்கும் மற்றும் விரும்பும் நிலையாக உள்ளது. ஆனால் இந்தக் கோளாறு குறித்து இன்னும் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும்போது.

விக்டோரியாவுக்கு அவரது காதலனின் மனைவி பற்றி தெரியும். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு வேறு காதலி இருப்பதாக விக்டோரியா சந்தேகித்தார். அதற்கு எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் அவரது உடல் மொழி காட்டிக்கொடுத்ததாகவும், பொய் சொல்லும்போது அவர் முகம் வேறு மாதிரி தெரிந்ததாகவும் விக்டோரியா கூறுகிறார்.

“அவருக்கு நன்கு பொய் செல்லத் தெரியாது, ஆனால், அவர் மனைவி அதை ஏன் கண்டுபிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை” என விக்டோரியா கூறுகிறார்.

அவரை தண்டிக்க நினைத்த விக்டோரியா தனக்கு எதுவும் தெரியாதது போல சிறிது காலம் காத்திருந்தார். பல மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அவரைச் சந்தித்த போது, விக்டோரியா தனது காதலனின் நிர்வாணப் புகைப்படங்களை அவரது மனைவிக்கு அனுப்பினார்.

அவரது மனைவி மனம் உடைந்து போனார். இப்படிப்பட்ட செயலை யார் செய்வார் என்று மனவேதனையுடன் வந்த காதலன், மற்றொரு பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருப்பதை விக்டோரியாவிடம் ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் விக்டோரியாவை சந்தேகிக்கவில்லை. விக்டோரியா அவருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் ஒரு கட்டத்தில் சலிப்படைந்த விக்டோரியா, உறவை முறித்துக் கொள்ள தயாரானபோது, மேலும் சில படங்களை அனுப்பினார். அதன் பிறகு, அவர்களின் வாழ்க்கையிலிருந்து விக்டோரியா முழுமையாக வெளியேறினார்.

“இதை மற்றவர்களிடம் நான் சொன்னபோது, அவர்கள் என்னிடம் 'நீங்கள் ஏன் அவருடைய மனைவிக்கு இதைச் செய்கிறீர்கள்? அவரது மனைவி உங்களுக்கு என்ன செய்தார்? அவர் உங்களை எப்படி காயப்படுத்தினார்?' என்று கேட்டார்கள். அப்போது, வாழ்க்கை நியாயமற்றது" என்று நான் நினைப்பேன்” என்கிறார் விக்டோரியா.

"எனக்கு இருந்த ஒரு தீவிர மனநலக் குறைபாட்டின் பண்பிற்கு இது சிறந்த உதாரணம் என்று நான் நினைக்கிறேன்” என்கிறார் அவர்.

மனநலக் குறைபாடு என்பது மருத்துவ உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் மனநலக் கோளாறுகளைக் கண்டறிதல் மற்றும் புள்ளியியல் கையேட்டின் சமீபத்திய பதிப்பில் மனநலக் குறைபாடு என்பது சமூக விரோத ஆளுமைக் கோளாறு என்ற பரந்த பொருளில் கூறப்பட்டுள்ளது. இது நரம்பியல் மனநலக் கோளாறாக பரவலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. இதில் ஒரு நபர் வழக்கத்திற்கு மாறாக குறைந்த அளவு குற்ற உணர்ச்சியுடன் காணப்படுகிறார். இது, பெரும்பாலும் சமூக விரோத மற்றும் குற்றவியல் நடத்தைக்கு வழிவகுக்கும்.

சமூக விரோத ஆளுமைக் கோளாறு

'சைக்கோபதி' எனும் இந்தச் சொல் 1900களின் தொடக்கத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டது. 1941ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க மனநல மருத்துவர் ஹெர்வி எம் கிளெக்லியின் (The Mask of Sanity) என்ற புத்தகத்திற்குப் பிறகு இந்தச் சொல் மிகவும் பிரபலமானது.

"உலகின் முன்னணி கல்வியாளர்கள் உளப்பிறழ்வுக்கான வரையறையை விவாதித்துள்ளனர். நீங்கள் ஒரு தடயவியல் உளவியலாளர் அல்லது ஒரு குற்றவியல் நிபுணரிடம் பேசுகிறீர்களா என்பதைப் பொறுத்து மனநோய் குறித்த பல்வேறு விளக்கங்களைப் பெறுவீர்கள்" என்கிறார் வாஷிங்டன்னில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக உளவியலாளரும் நரம்பியல் விஞ்ஞானியுமான அபிகயில் மார்ஷ்.

வன்முறை மற்றும் தீவிரமான நடத்தையை வெளிப்படுத்தும்போது மட்டுமே ஒருவரை மனநலக் குறைபாடுடையவராக குற்றவியல் உளவியலாளர்கள் வகைப்படுத்துவதாக அபிகயில் மார்ஷ் கூறுகிறார். எனினும், தன்னைப் பொறுத்தவரை, இந்த நிலை நபருக்கு நபர் மாறுபடக் கூடிய குறைவான வியத்தகு நடத்தையுடன் வெளிப்படுவதாக அவர் கூறுகிறார்.

மக்கள் தொகையில் ஒவ்வொரு 100 பேரிலும் ஒன்று முதல் இருவர் வரை உளப்பிறழ்வுக்கான பண்புகளைக் கொண்டிருப்பதை உளவியலாளர்கள் மற்றும் உளவியல் மருத்துவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் பொது மக்களில் 30 சதவிகிதம் பேர் உளப்பிறழ்வுக்கான பண்புகளை வெளிப்படுத்துவதாக மார்ஷ் கூறுகிறார். உளப்பிறழ்வுக் குறைபாடு உடையவர்கள், நெருங்கிய நட்பைப் பேண சிரமப்படுகிறார்கள். மேலும், ஆபத்தான சூழ்நிலைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலை அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

“இரக்கமற்ற நபர்களுடன் இருப்பது அவர்களுக்கு நெருங்கியவர்களைப் பாதிக்கிறது. தீவிரமான உளப்பிறழ்வுக் குறைபாடு கொண்டவர்களுடன் வாழ்பவர்கள் சோர்வடைந்துவிடுகின்றனர்” என்கிறார் மார்ஷ்.

உளப்பிறழ்வுக் குறைபாடு கொண்டவர்கள் மீதான பெரும்பாலான ஆய்வுகள் குற்றச்செயல்களில் ஈடுப்பட்டவர்கள் மீதே நடத்தப்பட்டுள்ளதாக மார்ஷ் கூறுகிறார். இதில் சில ஆய்வு முடிவுகள் சிறையில் இருக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கையோடு பொருத்தமற்றதாக உள்ளது. பொதுவாக, உளப்பிறழ்வுக் குறைபாடு பெண் கைதிகளுடன் ஒப்பிடும் போது ஆண் கைதிகளிடம் அதிக அளவில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

இது பொதுமக்களால் அதிகம் அறிந்துகொள்ளப்படாத மற்றும் பெண்கள் தொடர்பாக குறைவான ஆய்வுகள் நடத்தப்பட்ட ஒரு துறையாகும்.

பெண்களைவிட ஆண்களுக்கு மனநலக் குறைபாடு அதிகமாக இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், இதற்கு சோதனை நடத்தப்பட்ட முறை காரணமாக இருக்கலாம் என மார்ஷ் வாதிடுகிறார்.

கனடாவைச் சேர்ந்த உளவியலாளர் ராபர்ட் ஹேர், 1970களில் உளப்பிறழ்வுக் குறைப்பாட்டை உறுதிசெய்வதற்கான பட்டியலை உருவாக்கினார். தற்போது PCL-R என்று அழைக்கப்படும் இதன் திருத்தப்பட்ட பதிப்பு உளப்பிறழ்வுக் குறைபாட்டின் பண்புகளை பரிசோதிப்பதற்கான உலகளாவிய சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. இதில், ஒருவர் கொண்டிருக்கக்கூடிய பின்விளைவுகளைப் பொருட்படுத்தாமல் தான் விரும்பியதை அடையும் பொருட்டு மற்றவர்களைக் கையாளும் பண்பு, சமூக விரோத நடத்தை போன்ற உணர்ச்சிப் பற்றின்மை அளவிடப்படுகிறது.

2005ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர்களின் ஒரு பகுப்பாய்விலும் உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களின் முக்கிய பண்புகளில் வேறுபாடு இருப்பது வெளிப்பட்டது. பெண்கள் பெரும்பாலும் திட்டமிடல் இல்லாமை, உறவுகளில் சிலிர்ப்பைத் தேடுதல் மற்றும் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்துதல் போன்ற பண்புகளை வெளிப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் உளப்பிறழ்வுக் குறைப்பாடு கொண்ட ஆண்களின் பண்புகள் உடல் ரீதியான தீவிரம் மற்றும் வன்முறையுடன் வெளிப்படுவதாகவும் அவர்கள் கூறினர். இதற்கு என்ன காரணம் என்பதை அறிய போதுமான ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்று அவர்கள் அந்த நேரத்தில் தெரிவித்திருந்த நிலையில், இன்று பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த நிலை பெரிதாக மாறவில்லை.

11,000க்கும் மேற்பட்ட வயது வந்தோர்கள் உளப்பிறழ்வுக் குறைபாட்டிற்காக மதிப்பீடு செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டின் ஓர் ஆய்வை, மாட்ரிட் பல்கலைக்கழக உளவியல் ஆய்வுப்படிப்பு மாணவியான அனா சான்ஸ் கார்சியா தன்னுடைய சக மாணவர்களோடு இணைந்து பகுப்பாய்வு செய்தார். முடிவில், பெண்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்களிடம் உளப்பிறழ்வு தொடர்பான நிறைய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

“உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்களைவிட வன்முறை மற்றும் குற்றச்செயல்களில் குறைவான நாட்டம் கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் தனிநபர்கள் உறவு தொடர்பான எடுத்துக்காட்டுகள் அதிகம்” என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

ஆண்களைவிட வன்முறை மற்றும் குற்றச்செயல்களில் குறைவான நாட்டம்

பட மூலாதாரம், Getty Images

உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்களைவிட சமூக விரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஏன் குறைவாக உள்ளது என்பது குறித்து ஆராய்வது சுவாரஸ்யமாக இருக்கும் என்று கூறும் சான்ஸ் கார்சியா, இதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டால் தீவிர மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் சமூக விரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க ஒரு திட்டத்தை வடிவமைக்க முடியும் என்கிறார்.

இந்தக் காரணத்தை கண்டறிவது தொடர்பாக போதுமான ஆய்வுகள் இல்லாவிட்டாலும் கூட ஃபிரான்ஸில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வில் ஒரு சாத்தியமான பதில் கிடைத்திருக்கிறது. நட்புணர்வு இன்மை மற்றும் குறைவான உணர்ச்சி கொண்டிருந்தல் ஆண்களைவிட பெண்களின் உளப்பிறழ்வுக் குறைபாட்டில் முக்கிய பங்கு கொண்டிருக்கின்றன. ஆண்களில் காணப்படும் உளப்பிறழ்வுக் குறைபாட்டின் பண்புகளான வன்முறை மற்றும் சமூக விரோத நடத்தைகளை பெண்களும் குறைவான அளவில் வெளிப்படுத்துகின்றனர்.

தன்னுடைய சொந்த நடத்தைகள் தன்னை மகிழ்விக்கும் ஒரு வழியாக தோன்றியதாக விக்டோரியா கூறுகிறார்.

விக்டோரியா மலேசியாவில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார். அவர் தந்தையின் குடிப்பழக்கம் மற்றும் பொறுப்பற்ற தன்மை அவர்கள் வீட்டை மகிழ்ச்சியற்றதாக மாற்றியது. பள்ளியில் நன்கு படித்தாலும் அடிக்கடி சலிப்பாக உணர்ந்தார். தன்னுடைய மகிழ்ச்சிக்காக பிறர் அவரிடம் சொன்ன ரகசியத் தகவல்களை, தான் ரகசியம் காப்பதாக உறுதியளித்த விஷயங்களை வெளியில் சொல்ல ஆரம்பித்தார். தான் செய்த தவறுகளுக்கு மற்றவர்களை எவ்வாறு பொறுப்பேற்க வைப்பது அல்லது பிரச்னையில் இருந்து தப்பிக்க என்ன சொல்ல வேண்டும் என்பது விக்டோரியாவுக்கு நன்கு தெரியும். மற்ற மாணவர்கள் அழுத்தம் கொடுத்ததால்தான் உங்கள் சாக்பீஸை எறிந்தேன் என்று ஓர் ஆசிரியரை நம்பவைத்தார்.

இதைத்தான் தான் கேட்க விரும்பியதாக அவர் கூறுகிறார். புத்திசாலித்தனமான குழந்தை மோசமான குழந்தை அல்ல என்று அவர் நம்ப விரும்பினார்." சமீபகாலமாக விக்டோரியா தனது உணர்வுத் தூண்டுதல்களை கட்டுப்படுத்த உதவி பெறுகிறார். ஆனால், மற்றவர்களைவிட தன்னைப் போன்றவர்களிடமிருந்தே ஆதரவைப் பெறுகிறார்.

டிக்டாக்கில் வைரலாகி, 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற 'the psychopath challenge' (உளப்பிறழ்வுக் குறைபாடு சவால்) என்ற தலைப்பில் சமீபத்திய பல காணொளிகளைப் பற்றி அவரிடம் கேட்டேன். psychopath என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலம். அந்த ஹேஷ்டேக்கிற்கு இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் உள்ளன. சோதனையில் உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் காட்சிகள் உட்பட பல விஷயங்களைக் குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது. மேலும், மோசமான நடத்தையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே மக்கள் உளப்பிறழ்வுக் குறைபாடு மற்றும் உளப்பிறழ்வுக் குறைபாடுடையவர்களை சுவாரஸ்யமான மற்றும் வெறுக்கத்தக்க விஷயமாகக் காண்கிறார்கள்.

இந்தக் காணொளிகளை புண்படுத்தக் கூடியதாக விக்டோரியா பார்க்கவில்லை.

உளப்பிறழ்வு உடையவராக இருப்பதன் ஒரு பகுதி, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து கவலைப்படாமல் இருப்பது, அதனால் அது என்னைத் தொந்தரவு செய்யாது என்று கூறும் அவர், ஆனால் இது இந்த நிலையை மக்கள் எவ்வளவு குறைவாக புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது என்கிறார்.

‘us'என்ற அவரைப் போன்ற பெண்களுக்கான ஆன்லைன் சமூகத்தை பற்றி விக்டோரியா குறிப்பிடுகிறார். இது பெரும்பாலும் எழுத்தாளர் எம்.இ. தாமஸின் வலைப்பதிவை மையமாகக் கொண்டுள்ளது. எம்.இ. தாமஸ் மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே மிகவும் பிரபலமானவர். டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழக தடயவியல் உளவியலாளர் ஜான் ஈடன்ஸால் மனநலக் குறைபாட்டிற்காக மதிப்பிட்டபோது தாமஸ் 99 சதவிகிதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றார்.

Sociopath World என்ற தாமஸின் வலைப்பதிவு மனநோயுடன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறது. 'Psychopath' என்பதற்குப் பதிலாக 'Sociopath' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும், ஏனெனில் இது பலர் புரிந்து கொள்ளக்கூடிய சொல் என்று தான் உணர்ந்ததாகவும் தாமஸ் கூறுகிறார்.

தாமஸின் A Life Spent Hiding in Plain Sight என்ற புத்தகம் 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, 10க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு நடிகை லிசா எடெல்ஸ்டீன் நடிப்பில் தற்போது ஒரு படம் உருவாகிவருகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஜூரிச் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், உளப்பிறழ்வால் பாதிக்கப்பட்டவர்கள் பிறரைக் கையாள்வதற்கான கருவியாக சிரிப்பை பயன்படுத்துவது தெரியவந்தது. இது உரையாடலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்களுக்கு உதவுகிறது.

அவரது வலைப்பதிவில், தனது அன்றாட எண்ணங்களை தாமஸ் பகிர்ந்து கொள்கிறார். மேலும், மனநலக் குறைபாடு பண்புகளுடன் வாழும் மற்றவர்களையும் நேர்காணல் செய்கிறார். அவரது வாசகர்கள் பலருக்கு இந்தப் பதிவுகள் மற்றும் காணொளிகளில் அடைக்கலம் கிடைப்பதாக அவர் கூறுகிறார். ஏனெனில், இது தங்கள் சொந்த பண்புகளை அடையாளம் கண்டுகொண்டுள்ளவும், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான இடமாகவும் இருக்கிறது என்கிறார்.

மற்றொரு வாசகரான 27 வயது ஜெர்மன் பெண் ஆலிஸ், உளப்பிறழ்வு உடையவர்களை தீய நபர்களாக சித்தரிக்கும் கட்டுரைகளைப் படிப்பது அல்லது பார்ப்பது வெறுப்பாக இருக்கிறது, அவை அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்.

மனநலம்

பட மூலாதாரம், Getty Images

தாமஸைப் போலவே, ஆலிஸும் பலரால் உடனடியாக விரும்பப்படுகிறார். ஒருவேளை அவர் அதிகம் சிரிப்பது காரணமாக இருக்கலாம். சமூகத்திற்குப் பொருத்தமானது என்று தனக்கு தெரிந்ததைப் பின்பற்றுவதாக அவர் ஆரம்பத்திலேயே ஒப்புக்கொள்கிறார். ஆலிஸ் தனது வாழ்நாள் முழுவதும் இதைச் செய்துள்ளார். அவரது பாட்டி இறந்தபோது, தனது சகோதரியின் துக்கத்தை கவனித்து, அவரது நடத்தையை பிரதிபலித்தார்.

தாமஸ் தனது மேலாதிக்க உளப்பிறழ்வு பண்பை, பிறரைக் கையாளுதல் என்றும், விக்டோரியா தன்னுடைய பண்பை இரக்கமற்ற தன்மை என்றும் கூறுகையில், ஆலிஸ் தனது பண்பை பிறர் மனதை உணர்வுப்பூர்வமாக குறைவாக புரிந்துகொள்ளல் என்கிறார்.

“யாரேனும் காயம் அடைந்தால் அவர்களுக்காக நான் உணர்ச்சிவசமாக எதையும் உணராமல் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும், அதை நான் செய்வேன்” என்கிறார் ஆலிஸ்.

இதுதான் அவசர காலத்தில் பக்கத்தில் வைத்திருக்க வேண்டிய நபராக தன்ன மாற்றுவதாகவும் அவர் கூறுகிறார்.

"மக்கள் தங்கள் பிரச்னைகளை என்னிடம் கூறுகிறார்கள், நான் உணர்ச்சிவசப்படவில்லை. அதனால் அது என்னைப் பாதிக்காது. நான் அவர்கள் பிரச்னையை கேட்டு அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க முடியும். மற்றவர்கள் தூர விலக்கிக் கொள்ள விரும்பலாம், ஏனெனில் அது அவர்களின் சொந்த உணர்ச்சியைத் தூண்டுகிறது. ஆனால் அது எனக்கு நடக்காது" என்று ஆலிஸ் கூறுகிறார்.

தன்னுடைய பண்புகள் சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்று ஆலிஸ் மட்டும் நினைக்கவில்லை. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உளவியலாளர் கெவின் டட்டன் தனது 'The Wisdom of Psychopaths: What Saints, Spies and Serial Killers Can Teach Us About Success’ என்ற புத்தகத்தில் உளப்பிறழ்வுக் குறைபாட்டின் நேர்மறையான பண்புகளை ஆராய்ந்துள்ளார்.

"உளப்பிறழ்வு என்பது வகை அல்ல, இது ஒரு தொடர்ச்சி. இது பல்வேறு அளவுகளில் மக்களிடையே விநியோகிக்கப்படுகிறது. சிலர் தொடர்ச்சியான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். சிலருக்கு அறிகுறிகள் மட்டும் இருக்கிறது” என்று மார்ஷ் கூறுகிறார்.

உளப்பிறழ்வுக் குறைபாட்டைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் தவறான புரிதல்களை அகற்ற இது சரியான நேரம் என்று மார்ஷ் உட்பட பல வல்லுநர்கள் நம்புகிறார்கள்.

உளப்பிறழ்வுக்கான அடிப்படை காரணங்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாவிட்டாலும், வளர்ந்து வரும் நியூரோஇமேஜிங் ஆராய்ச்சி மூளையில் உள்ள சில சாத்தியமான நரம்பியல் அசாதாரணங்களைக் கண்டறிந்து அறிகுறிகளை விளக்குகிறது.

எடுத்துக்காட்டாக, உளப்பிறழ்வால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு பயத்தை கையாள்வது தொடர்பான மூளையின் பகுதிகளில் குறைவான எதிர்வினை இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. மேலும், பெண்களிலும் இதே போன்ற விளைவுகள் காணப்படலாம் என்பதற்கான சில குறிப்புகள் உள்ளன. சில ஆராய்ச்சியாளர்கள் உணர்ச்சிகளை செயலாக்குவதற்கான மூளையின் முக்கிய கட்டமைப்பான அமிக்டாலாவின் நரம்பியல் சுற்றுகளில் உள்ள வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் மனநலக் குறைபாடு தொடர்பான பெரும்பாலான ஆராய்ச்சிகளைப் போலவே, இந்தக் கண்டுபிடிப்புகளும் வலுவானவை அல்ல. இவை இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

மரபியல் மற்றும் ஒருவர் தங்களை புரிந்துகொள்ளும் சூழல் இந்தப் புதிருக்கு முக்கிய பதில்களாகும். ஆனால் அந்தப் பதில்களைப் பெற உளப்பிறழ்வு உடையவர்களுடன் உறவை சமூகம்வளர்க்க வேண்டும் என்று மார்ஷ் நம்புகிறார்.

“90களில் ஆட்டிசம் ஆராய்ச்சி சமூகம் செய்ததை நான் மிகவும் ரசிக்கிறேன். அவர்கள் தங்கள் மீதான களங்கத்தில் இருந்து விடுபட மக்களிடம் உண்மையைச் சொல்ல முடிவெடுத்தனர்” என்கிறார் மார்ஷ்.

அது போன்ற ஒன்றை நாம் செய்யாதவரை உளப்பிறழ்வு உடையவர்கள் தோற்றுக்கொண்டே இருப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

“அதாவது உளப்பிறழ்வால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய எந்தவித உதவியும் கிடைக்காது. அது அனைவரையும் பாதிக்கும்” என்கிறார்.

இந்தக் கோளாறைக் கையாள விக்டோரியா, ஆலிஸ் மற்றும் எம்.இ.தாமஸ் ஆகியோர் தியானம், உளவியல் சிகிச்சை மற்றும் அவர்களின் ஆன்லைன் சமூகத்தின் சக ஆதரவைப் பயன்படுத்துகின்றனர்.

“உளப்பிறழ்வு கொண்டவர் என்ற வார்த்தைக்கு இன்னும் களங்கம் உள்ளது. இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. நிறைய திறந்த உரையாடல்கள் செய்ய வேண்டியுள்ளது. எங்களுடைய இருப்புதான் உண்மையான உதாரணம்” என்கிறார் தாமஸ்.

காணொளிக் குறிப்பு, கருவில் இருக்கும் குழந்தையை கூட பக்கவாதம் பாதிக்குமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: