பணிச்சுமை, நீண்ட நேர வேலை செய்தால் இந்த நோய் வரும்

காணொளிக் குறிப்பு, ஆபிஸ் சிண்ட்ரோம் நோய்: உங்களுக்கு தெரியாமல் தாக்கத்தை ஏற்படுத்தும் குறைபாடு
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

இளைஞர்கள் பலர் ஆபீஸ் சிண்ட்ரோம் என்ற நோய் குறியீடால் அவதிப்படுவதாகவும், அமர்ந்த நிலையில் நீண்ட நேரம் பணியாற்றுவதால் இளமை காலத்தில் முதுகெலும்பு தேய்மானம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர் பி.ஆர்.அஸ்வின் விஜய் கூறுகிறார்.

'ஆபீஸ் சிண்ட்ரோம்' பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகக் கூறும் அவர், அலுவலகங்களில் எர்கோனாமிக் நாற்காலி தேவை என்றும் அத்துடன் பணியாளர்களும் எளிய உடற்பயிற்சிகளை செய்தால்தான் ஆபீஸ் சிண்ட்ரோம் பிரச்னையில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறுகிறார் மருத்துவர் அஸ்வின் விஜய்.

ஒரு வாரத்தில் 55 மணி நேரம் வேலை செய்யும் நிலையில் இருப்பவர்கள் அதிக பணிச்சுமையால் இறப்பதற்கான வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் தொடக்கப்புள்ளியாக 'ஆபீஸ் சிண்ட்ரோம்' அமைகிறது என்கிறார் மருத்துவர் அஸ்வின் விஜய். பேட்டியில் இருந்து...

ஆபீஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன? அதன் தாக்கம் எப்படி இருக்கும்?

அலுவலக பணிகளில் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது, வங்கி அல்லது பிற அலுவலகங்களில் சரியான முறையில் அமராமல் வேலைசெய்வதால் ஏற்படும் அதிகப்படியான வலிகள் ஆபீஸ் சிண்ட்ரோம் எனப்படும்.

ஆபீஸ் சிண்ட்ரோம் என்பது நோய் அல்ல. அது பிற எலும்பு, நரம்பு தொடர்பான நோய்களுக்கு வித்திடும் நோய்குறியீடு. ஆபீஸ் சிண்ட்ரோம் அறிகுறிகளை கவனிக்காமல் போனால், தண்டு வட பாதிப்பு, மூட்டு பாதிப்பு, தசைநார் வலி மற்றும் ஆபீஸ் சிண்ட்ரோம் முதுகு எலும்பு அலர்ஜி என்று சொல்லப்படும் ஸ்பாண்டிலைட்டிஸ் உள்ளிட்டவை ஏற்படும். கவனிக்காமல் போனால், இளமை காலத்தில் ஒரு நபர் நடமாட முடியாத நிலை ஏற்படும் என்பதால்தான் இதன் அவசியத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆபீஸ் சிண்ட்ரோம் அறிகுறிகள் என்ன?

எட்டு மணி நேரத்திற்கு அப்பால், 14 மணிநேரம் வரை அமர்ந்த நிலையில் வேலை செய்வது போன்றவற்றால் அதிகப்படியான முதுகு, கழுத்து, தோள்பட்டை வலி மற்றும் முழங்கால் வலி, விரல்கள், கைகள் மற்றும் கால்களின் உணர்வின்மை ஏற்படும். தசை வலி, டென்னிஸ் எல்போ போன்ற தசைநார் பகுதியில் வலி, தலைவலி, வறண்ட கண்கள், தலைசுற்றல், மனச்சோர்வு, தூக்கமின்மை, தீராத உடல்சோர்வு உள்ளிட்டவை ஆபீஸ் சிண்ட்ரோமின் அறிகுறிகள்.

ஆபீஸ் சிண்ட்ரோம் வராமல் தடுப்பது எப்படி?

நம் வேலை நேரத்தையும், நம் உடல்நலத்திற்கான நேரத்தையும் நாம் முதலில் முடிவு செய்து விட வேண்டும். அலுவலக வேலைக்கு செல்லாமல் இருக்கமுடியாது. ஆனால் நாம் பணிபுரியும் இடத்தில் சரியான முறையில் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது அவசியம்.

முதலில் நீங்கள் அமரும் நாற்காலி சரியான முறையில் உள்ளதா என்று பாருங்கள். கணினியில் வேலை செய்வது அல்லது அமர்ந்து செய்யும் பணியில் இருப்பவர்கள் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் எழுந்து சில நிமிடம் நிற்பது, சிறிய தூரம் நடப்பது அவசியம்.

ஆஃபிஸ் சிண்ட்ரோம்

பட மூலாதாரம், Getty Images

கண்களை மூடி சில நொடிகள் கழித்து விழிப்பது, கை,கால்களை அசைக்கும் எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

நாற்காலியில் அமர்ந்து கொண்டு செய்யும் உடற்பயிற்சிகளும் உள்ளன. சில நிமிடங்களில் நீங்கள் புத்துணர்ச்சி அடைய அவை உதவலாம்.

அலுவலகத்தில் எந்த வாய்ப்பும் இல்லை என எண்ணுபவர்கள், வேலைக்கு செல்வதற்கு முன்னர், கட்டாயம் சிறிய உடற்பயிற்சிகளை குறைந்தபட்சம் 40 நிமிடங்கள் செய்ய வேண்டும். மிகவும் எளிமையான யோகா பயிற்சிகள் செய்தால் கூட உங்களுக்கு பலன் நிச்சயம். தொடர்ந்து ஒரு மாதம் யோகா பயிற்சிகளை செய்தால் நீங்களே மாற்றங்களை உணர முடியும்.

நாம் பணி செய்வது நமக்கான பொருளாதாரத்தைத் தருகிறது, அதே சமயம், அந்த பணியை தொடர்ந்து செய்வதற்கு, 'நம் உடல்' என்ற இயந்திரம் வேலை செய்ய, உடற்பயிற்சிகள் நாம் செய்ய வேண்டும்.

ஆஃபிஸ் சிண்ட்ரோம்

பட மூலாதாரம், Getty Images

இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படும் நோய் குறியீடாக ஆபீஸ் சின்ட்ரோம் மாறியுள்ளது. இதற்கான சிகிச்சைகள் என்ன?

என்னிடம் சமீபத்தில் ஒரு இளைஞர் வந்தார். அவருக்கு வயது வெறும் 24 தான். தினமும் 14 மணி நேரம் வேலை செய்தவர். அவருக்கு முதுகு,கழுத்து பகுதிகளில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு முதுகு எலும்பு தேய்மானம் ஆகியுள்ளது என்பதை எக்ஸ்ரேவில் உறுதி செய்தோம். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. 60 வயதில் வரும் நோயாளிகளிடம் தான் இதுபோன்ற தேய்மானத்தை நான் பார்த்திருக்கிறேன்.

டாக்டர் அஸ்வின் விஜய்

பட மூலாதாரம், Dr. Ashwin Vijay

படக்குறிப்பு, டாக்டர் அஸ்வின் விஜய்

24 வயதில் ஒரு இளைஞருக்கு தேய்மானம் இருந்ததை நம்ப முடியவில்லை. முதலில் ஒரு மாதம் அவர் வேலைக்கு விடுப்பு எடுத்தாக வேண்டும் என்று சொல்லி விட்டேன். அவரை குணப்படுத்துவதற்கு சில மாதங்கள் தேவை. ஆனால் அவர் தொடர்ந்து கணினி வேலையில் இருந்தால், சிகிச்சை அளிப்பது பலனிக்காது என்பதால் ஓய்வு எடுப்பதை தான் தற்போது அவர் வேலையாக செய்யவேண்டும்.

சிகிச்சை என்றால், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் அல்லது இரத்த பரிசோதனைகள் மூலம் பாதிப்பு எந்த அளவில் உள்ளது என்பதை பொறுத்துதான் பிற சிகிச்சைகளை முடிவு செய்வோம். முதலில் எளிமையான உடற்பயிற்சிகளை சொல்லித் தருவோம், உணவு பழக்கத்தில், ஊட்டச்சத்து மிகுந்த, பழங்கள், பச்சை காய்கறிகள்,மாமிசம் போன்றவற்றில் எதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வோம்.

ஓய்வும், உடற்பயிற்சியும் ஆபீஸ் சிண்ட்ரோம் பிரச்னையில் இருப்பவர்களுக்கு தீர்வைத் தரும். ஆனால் நீண்ட நாட்கள் கவனிக்காமல் இருப்பவர்களுக்கு ஒருவேளை வாழ்நாள் முழுவதும் சிகிச்சைகள் தேவைப்படலாம், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

காணொளிக் குறிப்பு, மழை நீரைப் பருகுவது உடலுக்கு நல்லதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: