'15 நாட்கள் தான் வேலை' : 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் கூறுவது என்ன?

- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"30 ரூபாய் சம்பளத்தில் இருந்து வேலை பார்த்து வருகிறேன். முன்பு அதிக வேலை நாள்களைக் கொடுத்தார்கள். இந்த ஆண்டு மொத்தமே 15 நாள்கள் தான் வேலை கிடைத்தன"
" 100 நாள் வேலையை 150 நாள்களாக மாற்ற வேண்டும் எனத் தொடர்ந்து கூறி வருகிறோம். சம்பளத்தை தாமதம் இல்லாமல் கொடுத்தாலே போதும்"
"இவ்வளவு நாள் மகாத்மா காந்தி பேரில் திட்டம் இருந்தது. வேறு பெயரில் மாற்றிவிட்டதாகக் கூறுகின்றனர். அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை"
செங்கல்பட்டு மாவட்டம், தண்டலம் ஊராட்சியில் வசிக்கும் பெண்கள், பிபிசி தமிழிடம் கூறிய வார்த்தைகள் இவை. ஆனால், தங்களுக்கு ஒதுக்கப்படும் மனித நாட்களை ஒட்டியே பணிகளை ஒதுக்குவதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
100 நாள் வேலைத்திட்டத்தில் இந்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றத்தை கிராமப்புற பெண்கள் எப்படி பார்க்கின்றனர்? அவர்களின் எதிர்பார்ப்பு என்ன?
விக்சித் பாரத் - ஜிஆர்ஏஎம்ஜி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 'விக்சித் பாரத் - ஜிஆர்ஏஎம்ஜி' எனப் பெயர் மாற்றம் செய்து புதிய சட்டமாக இந்திய அரசு கொண்டு வந்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2005 ஆம் ஆண்டு ஊரகப் பகுதிகளில் 100 நாட்கள் வேலை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. அதை தற்போது 125 நாட்களாக உயர்த்துவதாக மத்திய அரசு கூறுகிறது.
எனினும் இத்திட்டத்திற்கான மத்திய - மாநில அரசுகளின் நிதி பகிர்வு விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
'இதனால் மாநிலங்களின் செலவீனம் உயரும்' எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'புதிய திட்டத்தின்படி மாநிலங்களைவிட மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தை வழங்குகிறது' எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
"ஒருநாள் வேலைக்குக் கூட இனி மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் தனது கடமையைக் கை கழுவியுள்ளது" என தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் கூறுவது உண்மைக்கு மாறானதாக உள்ளதாக பிபிசி தமிழிடம் கூறிய தமிழக பா.ஜ.க தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "எங்கெல்லாம் தொழில் முன்னேற்றம் இல்லாமல் வறுமை உள்ளதோ அங்கெல்லாம் 100 நாள் வேலைத்திட்ட பணி ஒதுக்கப்படுகிறது" என்கிறார்.
"தமிழ்நாட்டில் தொழில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறும் முதலமைச்சர், வேலை இல்லை எனக் கூறுவது முரண்பாடாக உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, டிசம்பர் 24 அன்று மாநிலம் முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திட்டம் தொடர்பாக தி.மு.க -பா.ஜ.க ஆகியவற்றுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், திட்டத்தின்கீழ் ஊதியம் பெறும் பயனாளிகளின் மனநிலையை அறிவதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.
செங்கல்பட்டில் என்ன நிலவரம்?

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டு தண்டலம் ஊராட்சி அமைந்துள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ள இந்தக் கிராமத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செவ்வாய்க் கிழமையன்று காலை (டிசம்பர் 23) பிபிசி தமிழ் அங்கு சென்றபோது 'மியாவாக்கி' எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கும் பணியில் கிராமத்துப் பெண்கள் ஈடுபட்டிருந்தனர்.
குழி தோண்டி அதில் செடியை நட்டு சுற்றிலும் முள்வேலியை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. அவர்களில் பெரும்பாலானோர் ஐம்பது வயதைக் கடந்தவர்களாக இருந்தனர்.
கணவரை இழந்து இரு பிள்ளைகளுடன் வசித்து வரும் காசியம்மாள், சுமார் 15 ஆண்டுகளாக 100 நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பணி முடிந்த பிறகு பிபிசி தமிழிடம் விரிவாக அவர் பேசினார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
'வருமானம் போதவில்லை'

"என் கணவர் இறந்துவிட்டார். வீட்டில் மாடுகள் இருப்பதால் காலையில் பால் கறந்துவிட்டு 9 மணிக்கெல்லாம் வேலை செய்ய வந்துவிடுவேன். இந்த வேலையும் இருப்பதால் தான் குடும்பத்தை நடத்த முடிகிறது" என்கிறார் காசியம்மாள்.
வேலை நாட்களை 125 ஆக உயர்த்துவது குறித்துப் பேசும் காசியம்மாள், "தேர்தல் வரும்போது 150 நாள்களாக வேலையை உயர்த்துவதாக கூறினார்கள். இப்போது 125 நாள் எனக் கூறுகிறார்கள். அவ்வளவு நாள்கள் வேலை கொடுப்பார்களா எனத் தெரியவில்லை" என்கிறார்.
கடந்த 12 ஆண்டுகளாக 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் ஏரி, கால்வாய் தூர்வாருதல், பள்ளி, கோவில் வளாகங்களை சுத்தப்படுத்துதல், சாலைப் பணிகள் ஆகியவற்றை இவர் செய்து வந்துள்ளார்.
"தற்போது 270 ரூபாய் வரை சம்பளம் தருகின்றனர். குறைவான நாட்கள் வேலை பார்ப்பதால் குடும்பத்தை நடத்துவதற்கு வருமானம் போதவில்லை. இதை உயர்த்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என காசியம்மாள் தெரிவித்தார்.
திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது குறித்து தனக்கு தற்போது வரை எதுவும் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
'வெறும் 15 நாள்கள் தான் வேலை'

இதே கிராமத்தில் வசிக்கும் 56 வயதான சரோஜாவின் குடும்பநிலை சற்று மோசமாக உள்ளது. இவர் கணவர் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
"100 நாள் வேலைத்திட்டத்தில் 30 ரூபாய் சம்பளத்தில் இருந்து வேலை பார்த்து வருகிறேன். 270 ரூபாயாக சம்பளம் உயர்ந்த பிறகு போதிய அளவு வேலை கிடைப்பதில்லை" என்கிறார் அவர்.
"இந்த ஆண்டு ஊராட்சியில் இருந்து போதிய அளவு வேலை ஒதுக்கப்படவில்லை" எனக் கூறும் சரோஜா, "கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை வெறும் 15 நாள்கள் மட்டுமே வேலை செய்துள்ளோம். இந்த வருமானத்தை வைத்து என்ன செய்ய முடியும்?" என அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஐந்து நாள் வேலை பார்த்தால் 1,300 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். இந்த வருமானம் மருத்துவ செலவுகளுக்கே போதுமானதாக உள்ளது" என்கிறார்.
கணவரை இழந்தவர்களுக்கான அரசின் ஓய்வூதியம், மகளிர் உரிமைத்தொகை ஆகியவை கிடைக்காதால் 100 நாள் வேலைத்திட்டம் மட்டுமே தனது ஒரே வாழ்வாதாரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பணியை ஒதுக்காவிட்டால் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறும் சரோஜா, "இவ்வளவு நாள் காந்தியின் பெயரில் திட்டம் இருந்தது. தற்போது வேறு பெயரில் மாற்றி உள்ளதாகக் கூறுகின்றனர். அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை" என்கிறார்.
'ஆட்களைக் குறைத்துவிட்டனர்'

தண்டலம் ஊராட்சியில் கடந்த 2024 - 25 ஆம் ஆண்டில் 505 குடும்பங்கள் வேலை பார்த்ததாக சமூக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திட்டத்தின் செலவீனங்கள், ஊதியம் ஆகியவை குறித்து கிராம மக்களே மேற்கொள்ளும் தணிக்கை முறையாக இது உள்ளது.
ஆனால், அண்மைக்காலமாக பணியாட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகக் கூறுகிறார், இதே ஊரில் வசிக்கும் லதா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கடந்த சில வருடங்களாக அதிக எண்ணிக்கையில் வேலை பார்த்து வந்தனர். தற்போது சொற்ப எண்ணிக்கையில் வேலை பார்த்து வருகிறோம். இப்படி இருந்தால் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது?" எனக் கேள்வி எழுப்பினார்.
ஏரி, கால்வாயைத் தூர்வாரும்போது பாம்பு, தேள் போன்றவற்றை எதிர்கொள்வது சவாலானதாக உள்ளதாகக் கூறும் லதா, ஒருமுறை தான் பாம்பு கடித்து தான் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். "கணவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது வருமானம் போதவில்லை. முன்பு 100 நாட்கள் வேலை கிடைத்தது. இப்போது 30 நாட்கள் வேலை கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது" என்கிறார் லதா.
வட்டார வளர்ச்சி அலுவலர் சொல்வது என்ன?

வேலை நாட்கள் குறைக்கப்படுவது குறித்து, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள் தேவியிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"ஒன்றியத்துக்கு எவ்வளவு மனித நாட்கள் வேலை கொடுக்கப்படுகிறதோ அதற்கேற்ப பணிகள் ஒதுக்கப்படுகின்றன. திட்டத்தின்படி ஒதுக்கப்படும் பணிகளுக்கு மட்டும் ஆட்கள் அனுப்பப்படுகின்றனர்" என்று மட்டும் பதில் அளித்தார்.
"தங்களுக்கான சம்பளமும் உரிய நேரத்தில் வருவதில்லை" என தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தெரிவித்தனர். திட்டத்துக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்படுவதால் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக நாளேடுகளில் செய்தி வெளியானது.
100 நாள் வேலைத் திட்டத்தில் நிதி வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் கண்டித்து கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதுகுறித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "நான்கு மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 4,034 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை" என விமர்சித்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்
இதையடுத்து, கடந்த மே மாதம் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியில் 2,999 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான காலதாமதத்தைக் குறிப்பிட்டு டிசம்பர் 23 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் பா.ஜ.க அரசு அலைக்கழித்தது' எனக் கூறியுள்ளார்.
"தற்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா?" எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், இதனை முழுமையாக மறுக்கிறார் தமிழக பா.ஜ.க தலைமை செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
'மூன்று மடங்காக உயர்ந்த நிதி' - தமிழக பா.ஜ.க

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கடந்த 10 வருடங்களுக்கு முன்பிருந்த நிலை தற்போது மாறிவிட்டது. கிராமங்களில் தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. பெண்கள் அதிகளவில் பணிக்குச் செல்கின்றனர்" என்கிறார்.
"நகர்ப்புற மாநிலமாக தமிழ்நாடு உருவாகிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். கிராமங்களில் தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளதை முன்னேற்றமாக அவர்கள் பார்க்க வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.
2014 ஆம் ஆண்டில் 33 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த திட்ட மதிப்பீடு தற்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், "புதிய திட்டத்தின்படி ஒதுக்கப்படும் 1 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாயில் மத்திய அரசு 95 ஆயிரம் கோடி ரூபாயை அளிக்க உள்ளது" என்கிறார்.
எங்கெல்லாம் தொழில் முன்னேற்றம் இல்லாமல் வறுமை உள்ளதோ அங்கெல்லாம் 100 நாள் வேலைத்திட்ட பணிகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
100 நாள் வேலைத் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் செயலில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. இதனை பா.ஜ.க மறுத்துள்ளது.
அதேநேரம், தங்களின் வாழ்வாதாரத்துக்கு இத்திட்டம் உதவியாக இருப்பதால் பணி நாட்கள் அதிகப்படுத்த வேண்டும் என்பதோடு வேலைவாய்ப்பு உத்தரவாதமும் அளிக்கப்பட வேண்டும் என்பதே கிராமப்புற பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












