'100 நாள் வேலை' திட்டத்தில் இருந்து மோதி அரசின் புதிய திட்டம் எவ்வாறு வேறுபடுகிறது?

பட மூலாதாரம், ANI
இந்திய நாடாளுமன்றத்தில் இந்த வாரம் நிறைவேற்றப்பட்ட 'விக்சித் பாரத் - ஜி ராம் ஜி' (VB G - RAM G) மசோதா 2025, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. அது தற்போது சட்டமாக மாறியுள்ளது.
'விக்சித் பாரத் - கியாரன்டி ஃபார் ரோஸ்கர் அண்ட் அஜீவிகா மிஷன்' (வளர்ந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம்) என்பது, ஐமுகூ (UPA) அரசு காலத்தில் செயல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் (MNREGA) திட்டத்திற்குப் பதிலாக செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு 125 நாட்கள் உறுதியான கூலி வேலை வழங்க உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம், 'விக்சித் பாரத் 2047' என்ற தேசிய பார்வைக்கு ஏற்ப, கிராமப்புற வளர்ச்சிக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்று அரசு தெரிவிக்கிறது. ஆனால், இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த சட்டத்தின் பெயர், விக்சித் பாரத் - கியாரன்டி ஃபார் ரோஸ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமப்புறம்) (Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)). அதாவது விபி-ஜி ராம் ஜி (VB-G RAM G).
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐமுகூ) அரசு, 2005-ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை கொண்டு வந்தது. அதன் கீழ், கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய சட்டத்தில் மாநிலங்களை விட மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் உள்ளது என்றும், அதேசமயம் மாநில அரசுகள் முன்பை விட அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மகாத்மா காந்தியின் பெயரை உள்ளடக்கிய (MNREGA) சட்டத்தை நீக்கியதன் மூலம், மகாத்மா காந்தியை அரசு அவமதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
ஆனால் இது முந்தையதை விட சிறந்த திட்டம் என்றும், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் என்றும் அரசு கூறுகிறது.
'விபி-ஜி ராம் ஜி' சட்டம் முந்தையதை விட எவ்வாறு வேறுபடுகிறது?
இந்த சட்டம் 20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இந்த புதிய சட்டம், 'திறன் தேவையில்லாத உடல் உழைப்பில்' தன்னார்வமாக ஈடுபட முன்வரும் கிராமப்புற குடும்பங்களின் வயது வந்த உறுப்பினர்களுக்கு, ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதன்கீழ், கிராமப்புறங்களில் தண்ணீர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், அது தொடர்பான பணிகளில் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அரசு கூறுகிறது.
இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் நீர் மற்றும் பாசனத்திற்கான சிறந்த வளங்களை வழங்க முடியும்.
கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரமான சாலைகள், தண்ணீர் தொடர்பான உள்கட்டமைப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இது கிராமப்புறங்களுக்கு சிறந்த இணைப்பையும் கிராம மக்களுக்கு சிறந்த சந்தையையும் வழங்கும் என்கிறது அரசு.
இந்த புதிய திட்டம் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி விவசாயிகளுக்கும் பயனளிக்கும் என்று அரசு கூறுகிறது.
இந்த புதிய சட்டம் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் என்றும், பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்றும் அரசு கூறியுள்ளது.

பட மூலாதாரம், ANI
மத்திய, மாநில அரசுகளின் பங்கு
காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசு, கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2005-ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது.
அதன்படி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் முழுச் செலவையும் மத்திய அரசு ஏற்கும். அதேசமயம், பொருட்களின் விலை முதலியவற்றை மாநில அரசுகள் குறிப்பிட்ட விகிதத்தில் ஏற்கும்.
புதிய சட்டத்தின் கீழ் மொத்த செலவில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கும்.
வடகிழக்கு மாநிலங்கள், உத்தராகண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில், இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் செலவில் 90 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும்.
இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ஒருவருக்கு வேலை கிடைக்காவிட்டால், அவர்களுக்கு தினசரி வேலையின்மை உதவித்தொகை வழங்கப்படும், அதற்கான செலவை மாநில அரசு ஏற்கும். இந்த ஏற்பாடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலும் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் என்ன?
இதற்கான மசோதாவை மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் டிசம்பர் 16-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை ரத்து செய்வது மகாத்மா காந்தியை அவமதிக்கும் செயலாகும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை சிவராஜ் சிங் நிராகரித்திருந்தார்.
"இந்த மசோதா கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். அவர்களின் பொருளாதார நிலை மேம்படும். மகாத்மா காந்தியும் கிராமங்களின் முன்னேற்றத்தை விரும்பினார். எனவே புதிய மசோதா அவரை எப்படி அவமதிப்பதாக இருக்கும்?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.
"ஐமுகூ அரசின் திட்டத்தை விட நாங்கள் அதிக பணம் செலவழித்துள்ளோம். கிராமங்களை மேம்படுத்துவதே எங்கள் உறுதியான நிலைப்பாடு. மகாத்மா காந்தி விரும்பியதை, தீன் தயாள் உபாத்யாய் கருத்தைத்தான் நாங்கள் செய்கிறோம்" என்றும் அவர் கூறியிருந்தார்.
மத்திய அரசால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் ஒரு திட்டத்தை அரசு மறைமுகமாக அறிமுகப்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மாநில அரசுகள் அதிகமாக செலவு செய்ய, அதற்கான பெயரை மத்திய அரசு பெறும் என்று குற்றம்சாட்டுகின்றன.
மக்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரியங்கா காந்தி, "இந்த மசோதாவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். நாங்கள் எம்என்ரேகா-வை அறிமுகப்படுத்தியபோது, கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அதை ஆதரித்தன. மக்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட சட்டம் என்பதை அது நிரூபிக்கிறது. புதிய மசோதாவில், அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. எந்த மாநிலத்திற்கு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பதையும் மத்திய அரசே தீர்மானிக்கிறது. அதேசமயம் எம்என்ரேகாவில் கிராமப்புற பஞ்சாயத்துகள் கூட நிதி பற்றிய முடிவுகள் எடுக்கமுடியும்" என்று கூறினார்.
"முந்தைய அரசுகளின் ஒவ்வொரு திட்டத்தின் பெயரையும் மாற்றும் இந்த மோகம் புரிந்துகொள்ள முடியாதது" என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.

ராகுல் காந்தியும் அரசை விமர்சித்தார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், "இந்த புதிய மசோதா மகாத்மா காந்தியின் லட்சியங்களை அவமதிக்கிறது - மோதி அரசு ஏற்கெனவே இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை வேலையின்மையால் அழித்துவிட்டது. இப்போது இந்த மசோதா கிராமப்புற ஏழைகளின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வழிமுறையாகும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












