லிவ்-இன் ஜோடிகளின் பதிவேடு அவசியமா? பெண்ணின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழ்
லிவ்-இன் ஜோடிகளின் பதிவேட்டை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று புதிய விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. அவ்வாறான பதிவேடு அவசியமா? லிவ்-இன் உறவில் பெண்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லையா? அந்த உறவில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
காலத்திற்கேற்ப மாறி வரும் கலாசார சூழலில், நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் தாண்டி இன்று லிவ்-இன் தம்பதியர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
திருமணம், குடும்பம் போன்றவற்றில் கிடைக்காத சுதந்திரம் 'லிவிங் டுகெதர்' வாழ்க்கையில் கிடைப்பதாக அதில் இருக்கும் ஆண் - பெண் ஆகிய இரு பாலருமே எண்ணுகின்றனர். இந்த சுதந்திரமே லிவ்-இன் வாழ்க்கையின் அடிப்படை.
90-களின் மத்தியில் காதலை வெளிப்படுத்தக் கூட தயங்கிய இளைய சமூகம் இன்று மேற்கத்திய கலாசாரமான 'டேட்டிங்', 'லிவிங் டுகெதர்' வரை வந்து விட்டது என்றால் அது நவீன மாற்றமா அல்லது கலாசார சீரழிவா? என்று பட்டிமன்றமே நடக்கிறது.
கலாசார காவலர்கள் என்று தங்களை கருதிக் கொள்ளும் ஒரு பிரிவினர், "பிடித்தால் வாழ்கிறோம், இல்லை என்றால் பிரிந்து செல்கிறோம்" என்ற பாணியிலான வாழ்க்கை முறை நமது கலாசாரத்திற்கு ஏற்றதா? என கேள்வி எழுப்புகிறார்கள்.
இவ்வாறான விவாதம் தொடந்தாலும், திருமணமாகாத 'மேஜர்' இருவர் 'லிவிங் டுகெதர்' முறையில் வாழ சட்ட அங்கீகாரம் இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது. மாறி வரும் வாழ்க்கை சூழலில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் பலரும் இருக்கின்றனர்.
திருமண உறவைப் போலவே, அவ்வாறான உறவில் எழும் முரண்பாடுகளால் சில நேரங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறுவதும் உண்டு. அதற்கான உதாரணம் தான், டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு.
இதுபோன்ற நிகழ்வுகளை குறிப்பிட்டு, லிவிங் டுகெதர் ஜோடிகளின் பதிவேட்டை உருவாக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு, விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.
"உடன்பாடே இல்லை"
இதுகுறித்து எழுத்தாளரும் பெண்ணியலாளருமான நிவேதிதா லூயிஸிடம் கேட்ட போது, "லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் விவரங்களை பராமரிக்கும் பதிவேட்டை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எனக்கு உடன்பாடே இல்லை. அதற்குத்தான் பதிவுத் திருமணம் என்ற ஏற்பாடு இருக்கிறதே. பிறகு எதற்கு லிவ்-இன் உறவில் ஒருவர் இருக்க வேண்டும்?" என்று பதில் அளித்தார்.
"திருமணம், குடும்பம் என்பது போன்ற சமூக ஏற்பாடுகள் பிடிக்காதவர்கள் தானே லிவ்-இன் உறவில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களது விவரங்களை அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்பதில் நியாயமே இல்லை. அது மட்டுமின்றி, சமூகத்தில் தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ பிரச்னைகள் இருக்க லிவ்-இன் உறவாளர்கள் பட்டியலை பராமரிப்பதா அரசின் வேலை? அரசாங்கம் கல்யாண தரகர் வேலையையும் செய்ய வேண்டுமா என்ன?
இந்த பதிவேடு என்பதே ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பது போன்றது தான். ஒருவரின் படுக்கையை அறையை எட்டிப் பார்ப்பதற்கு ஒப்பானது இது. லிவ்-இன் உறவாளர்களின் பதிவேடு என்றால் அதில் என்னென்ன விவரங்கள் சேகரிக்கப்படும்? ஒருவரின் கல்வித் தகுதி, ஊதியம், பொருளாதார நிலை போன்ற விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று மனுதாரர் விரும்புகிறாரா? அந்த விவரங்களை வைத்துக் கொண்டு அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?" என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
லிவ்-இன் உறவில் பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளதா?
லிவ்-இன் உறவில் உள்ள பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை நிவேதிதா லூயிஸிடம் முன்வைத்தோம். "லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் பலரும் கூட பிற்காலத்தில் வெளிநாட்டு வேலை, விசா போன்ற தேவைகள் ஏற்படும் போது பதிவுத் திருமணம் செய்து கொள்வதும் நடக்கவே செய்கிறது. பெண்கள் பொதுவாகவே பாதுகாப்பு நாடக் கூடியவர்கள். எந்தவொரு உறவிலும் ஈடுபடும் முன்பு, சம்பந்தப்பட்டவர் குறித்த விவரங்களை தெரிந்து கொண்ட பிறகே பெண்கள் அந்த உறவை தொடங்குவார்கள்.
பாதுகாப்பு என்ற அம்சத்தைப் பொருத்தவரை, மனுதாரரைக் காட்டிலும் லிவ்-இன் உறவில் ஈடுபடும் பெண்களுக்கு அதிக அக்கறை உண்டு. அதுதவிர, லிவ்-இன் உறவில் சேர்ந்து வாழ்வதும், திருமண வாழ்க்கைக்கு ஒப்பானதுதான், திருமணம் என்று மட்டுமல்லாது ஒரே வீட்டில் சம்மதத்துடன் லிவ் இன் உறவில் இணைந்து வாழும் பெண்களுக்கும் குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம் பொருந்தும்." என்று அவர் பதிலளித்தார்.
லிவ்-இன் உறவில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எப்படி?
ஷ்ரத்தா வாக்கர் கொலை போன்ற துயர நிகழ்வுகளைக் குறிப்பிட்டு பெண்களின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த கேள்வி எழுப்பிய போது, "இதையெல்லாம் தாண்டி கொலை, பாலியல் துன்புறுத்தல் போன்ற மோசமான நிகழ்வுகள் நடந்தால் அதுகுறித்து துப்பு துலக்க வேண்டியது காவல்துறையின் வேலை. பாரம்பரியமாக நடக்கும் திருமணங்களில் அதுபோன்ற குற்றங்கள் நடப்பதில்லையா? அந்த வழக்குகளைப் போலவே இதையும் சட்ட அமலாக்க அமைப்புகள் கையாள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அரசுப் பதிவேட்டில் சேகரிக்கப்படும் தகவல்களே, லிவ்-இன் உறவில் உள்ள ஆண்-பெண் ஆகிய இருவருக்கும் ஆபத்தாக முடியும் வாய்ப்புகளும் அதிகம்" என்று அவர் எச்சரிக்கவும் தவறவில்லை.

பட மூலாதாரம், Getty Images
உச்சநீதிமன்றத்தில் தாக்கலான பொதுநல வழக்கு என்ன?
லிவிங் டுகெதர் தம்பதியர் பதிவேட்டை உருவாக்கவும், அதற்கான விதிகளை உருவாக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மம்தா ராணி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
"லிவ்-இன் உறவில் உள்ள ஆண், பெண், அதன் விளைவாக பிறக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஆனால், லிவ்-இன் உறவை வரையறுக்க விதிகளோ, வழிகாட்டும் நெறிமுறைகளோ இல்லை. லிவ்-இன் உறவுகளில் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் கணிசமாக அதிகரித்துவிட்டது. ஷ்ரத்தா வாக்கர் வழக்கு போன்ற சில நிகழ்வுகளில் பெண்கள் தங்களது லிவ்-இன் இணையரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
லிவிங் டுகெதர் உறவை பதிவு செய்வதன் மூலம், லிவ்-இன் உறவில் உள்ள இருவருமே ஒருவர் மற்றொருவர் குறித்த மணவாழ்க்கை நிலை, குற்றப் பின்னணி உள்ளிட்ட முழு விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். லிவ்-இன் உறவுக்கு சட்ட விதிகளை வகுக்கவும், லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக அறியவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய லிவிங் டுகெதர் தம்பதியர் பதிவேட்டை உருவாக்க வேண்டும். அதில் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்" என்று அந்த மனுவில் மம்தா ராணி குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்டிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அவசர கதியில் பதிவு செய்யப்பட்ட கண்மூடித்தனமான வழக்கு என்று சாடிய நீதிபதிகள், "என்ன இது? இங்கு எதை வேண்டுமானாலும் கொண்டு வருவதா? யாரிடம் பதிவு செய்வது? மத்திய அரசிடமா? லிவ்-இன் உறவு குறித்து மத்திய அரசு என்ன செய்ய முடியும்? இதன் மூலம் லிவிங் டுகெதர் தம்பதியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கிறீர்களா? அல்லது லிவிங் டுகெதர் உறவில் அவர்கள் ஈடுபடுவதை தடுக்க விரும்புகிறீர்களா?" கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












