இந்தியர்கள் இரான் செல்ல இனி விசா வேண்டாம் – நிபந்தனைகள் என்னென்ன?

இரான், இந்தியா, சுற்றுலா, விசா, மலேசியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பாக இரான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனி, இரான் செல்வதற்கு இந்தியர்கள் விசா பெற வேண்டியதில்லை.

இரான் தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் இதற்கு இரான் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

சுற்றுலாவுக்காக இரான் செல்லும் இந்தியர்களுக்கு மட்டும் இந்த விசா இல்லாத நுழைவு வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன் காலம் 15 நாட்கள் மட்டுமே. அதை நீட்டிக்க முடியாது.

இது தவிர, இந்த நுழைவு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே செய்ய முடியும். பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவு சேவை துவங்கியது.

கடந்த டிசம்பர் மாதம், இந்தியா உட்பட 33 நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவுத் திட்டத்தை இரான் அறிவித்தது. இதில், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனீசியா, ஜப்பான், சிங்கப்பூர், மற்றும் மலேசியா போன்ற நாடுகள் அடங்கும்.

இரான் வேறு என்ன சொன்னது?

இந்தியாவில் உள்ள இரான் தூதரகம் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் ஆறு மாதங்களுக்குள் ஒரு முறைக்கு மேல் இரான் செல்ல விரும்பினால் அல்லது சுற்றுலா விசா தவிர வேறு வகையான விசா தேவைப்பட்டால், தூதரகத்தில் விசா பெற வேண்டும்.

விமானம் மூலம் இரானுக்கு வரும் இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே விசா இல்லாத நுழைவு பொருந்தும் என்று தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த மாதம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இரான் சென்றிருந்தார். அங்கு அவர் இரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியனை சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து இரு வெளிவிவகார அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

உலக சுற்றுலா அமைப்பின் கூற்றுப்படி, 2022-ஆம் ஆண்டில், இரான் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 315% அதிகரித்திருந்தது.

2021-ஆம் ஆண்டில் 9.9 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இரானுக்குச் சென்றுள்ளதாகவும், அதுவே 2022-ஆம் ஆண்டில் 41 லட்சமாக அதிகரித்ததாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இரானின் சுற்றுலா அமைச்சகத்தின் வெளிநாட்டு சுற்றுலா சந்தைப்படுத்தல் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் தலைவர் மொஸ்லெம் ஷோஜே, 2023-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 'குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாக' கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 31,000 இந்தியர்கள் இரானுக்குச் சென்றுள்ளனர், இது 2022-ஆம் ஆண்டை விட 25% அதிகமாகும்.

ஷோஜேயின் கூற்றுப்படி, இரானுக்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் சுற்றுலா, வணிகம், மருத்துவ சிகிச்சை மற்றும் புனித யாத்திரைக்காக வருகிறார்கள்.

இரான், இந்தியா, சுற்றுலா, விசா, மலேசியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய மற்ற நாடுகள் எவை?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலேசியாவும் இந்தியக் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு சேவையை அறிவித்தது. இச்சேவை டிசம்பர் 1-ஆம் தேதி முதல் துவங்கியது. இதன்மூலம் 30 நாட்கள் வரை அங்கு தங்கவும் செய்யலாம்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் அப்போது உரையாற்றியபோது இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், இந்தியர்களுக்கு இந்த வசதி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று அவர் கூறவில்லை. இந்தியர்களுடன், சீன குடிமக்களுக்கும் விசா இலவச நுழைவு வசதியை அன்வார் அறிவித்துள்ளார்.

இப்போது இந்திய குடிமக்கள் 20 நாடுகளுக்குச் செல்ல விசா தேவையில்லை. உங்களிடம் பாஸ்போர்ட் இருந்தால், இந்த 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

இது தவிர, வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தின்படி , 25க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ‘விசா ஆன் அரைவல்’ வசதி உள்ளது.

இந்தியா மற்றும் தைவானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் ஆறு மாதங்களுக்கு தங்கள் நாட்டுக்கு வரலாம் என்று தாய்லாந்து அறிவித்திருந்தது. இந்த திட்டம் இந்த ஆண்டு மே 10-ஆம் தேதி வரை தொடரும்.

தாய்லாந்தின் பிரதமர் ஷ்ரேதா தவிசின், “இந்தியர்கள் மற்றும் தைவானியர்களுக்கு விசா இல்லா நுழைவு வழங்குவோம், ஏனென்றால் அங்கிருந்து ஏராளமான மக்கள் எங்கள் நாட்டிற்கு வருகிறார்கள்,” என்றார்.

அதேபோன்று, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாட்டினருக்கு 2024-ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை இலவச விசா வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தியா மற்றும் சீனாவின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதிப்பது குறித்தும் வியட்நாம் பரிசீலித்து வருகிறது. தற்போது, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகளின் குடிமக்கள் அங்கு விசா இல்லாமல் நுழையலாம். மீதமுள்ள நாடுகளுக்கு வியட்நாம் 90 நாட்களுக்கு இ-விசா வழங்குகிறது.

இரான், இந்தியா, சுற்றுலா, விசா, மலேசியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலேசியாவும் இந்தியக் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு சேவையை அறிவித்தது

எந்த நாடுகளில் ‘விசா ஆன் அரைவல்’ வசதி உள்ளது?

கீழ்கண்ட நாடுகளில் இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் வசதி உள்ளது.

அதாவது, இந்த நாடுகளுக்குச் சென்று அங்கு விமான நிலையத்தில் விசா பெற்றுக்கொள்ளலாம்.

  • அங்கோலா
  • பொலிவியா
  • கபோ வெர்த்
  • கேமரூன்
  • குக் தீவுகள்
  • ஃபிஜி
  • கினி பிஸ்ஸோ
  • இந்தோனீசியா
  • இரான்
  • ஜமைக்கா
  • ஜோர்டான்
  • கிரிபாடி
  • லாவோஸ்
  • மடகாஸ்கர்
  • மொரிஷியானா
  • நைஜீரியா
  • கத்தார்
  • மார்ஷல் தீவுகள்
  • ரீயூனியன் தீவுகள்
  • ருவாண்டா
  • செஷெல்ஸ்
  • சொமாலியா
  • துனிசியா
  • துவாலு
  • வனாட்டு
  • ஜிம்பாப்வே
இரான், இந்தியா, சுற்றுலா, விசா, மலேசியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியர்களுக்கு இ-விசா வழங்கும் நாடுகள் எவை?

  • அர்ஜென்டினா
  • அர்முனியா
  • அசர்பைஜான்
  • பஹ்ரைன்
  • பெனின்
  • கொலம்பியா
  • கோத் திவா (Côte d'Ivoire)
  • ஜிபூட்டி
  • ஜார்ஜியா
  • கஜகஸ்தான்
  • கிர்கிஸ்தான்
  • லெசோதோ
  • மலேசியா
  • மால்டோவா
  • நியூசிலாந்து
  • ஓமன்
  • பப்புவா நியூ கினியா
  • ரஷ்யா
  • சிங்கப்பூர்
  • தென் கொரியா
  • தைவான்
  • துருக்கி
  • உகாண்டா
  • உஸ்பெகிஸ்தான்
  • ஜாம்பியா

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)