கரும்பு வயலில் பிறந்து காட்டை பார்த்திராத சிறுத்தைகளால் இவர்களுக்கு என்ன அச்சுறுத்தல்? பிபிசி கள ஆய்வு

மகாராஷ்டிரா, மனிதன் - சிறுத்தை மோதல்
படக்குறிப்பு, "இன்று எனது மகள் போய்விட்டார், நாளை வேறொருவருடைய மகள் போய்விடுவார்" என்கிறார் ஷிரூரில் சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்த ஷிவன்யாவின் தாய் திவ்யா பாம்பே
    • எழுதியவர், கணேஷ் போல்
    • பதவி, பிபிசி செய்தி மராத்தி

"இன்று எனது மகள் போய்விட்டார், நாளை வேறொருவருடைய மகள் போய்விடுவார்" என்கிறார் ஷிரூரில் சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்த ஷிவன்யாவின் தாய் திவ்யா பாம்பே

"சிறுத்தைகள் சாப்பிடுவதற்காக நாங்கள் எங்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கவில்லை" என்கிறார் ஜுன்னாரில் சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்த சித்தார்த்தின் தாய் அக்‌ஷதா கேதாரி.

"நான் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு சிறுத்தை என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. நான் தனியாக அங்கு இருந்ததால், மிகவும் பயந்துவிட்டேன் " என்கிறார் ஆராத்யா பச்புட் (வட்கான் கண்ட்லி, ஜுன்னார்).

"எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் கரும்பு வயல் இருக்கிறது. இரவில் வெளியே உள்ள கழிப்பறைக்குப் போகும்போது கூட பயமாக இருக்கும்" என்கிறார் ஹவுசா முட்கே (வட்கான்-கண்ட்லி, ஜுன்னார்).

புனே மாவட்டம் ஜுன்னார் பகுதிக்கு பிபிசி மராத்தி செய்தியாளர்கள் சென்றபோது, அங்குள்ள மக்கள் தினமும் சிறுத்தை மீதான பயத்தோடு எப்படி வாழ்கிறார்கள் என்பதை எங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

கரும்பு வயல்களில் பிறந்து காட்டையே பார்த்திராத சிறுத்தைகள், கடந்த இருபது ஆண்டுகளாக ஜுன்னார் பகுதியில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.

இதன் விளைவாக, புனே மாவட்டத்தின் ஜுன்னார் வனப் பிரிவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளுக்குச் சொந்தமான 26,000க்கும் மேற்பட்ட கால்நடைகளும் அவற்றுக்கு இரையாகியுள்ளன.

தீபாவளி முடிந்ததும் மேற்கு மகாராஷ்டிராவில் கரும்பு அறுவடை தொடங்குகிறது. கரும்பு வயல்கள் வெட்டப்பட்டு, திடீரென அப்பகுதி சமவெளியாகிறது. அதனால், அதில் வாழ்ந்து வந்த சிறுத்தைகள் வாழ்விடத்தையும் உணவையும் தேடிச் செல்கின்றன.

இதனால், ஒவ்வோர் ஆண்டும், கரும்பு அறுவடை காலத்திற்குப் பிறகு, மனிதன் - சிறுத்தை மோதல் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

கிராமவாசிகள் அடிக்கடி சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைப் பற்றி பேசுகிறார்கள். நாங்கள் அந்தப் பகுதிக்கு நேரில் சென்றபோதும் , ​​சிறுத்தையின் நடமாட்டத்தை காண முடிந்தது.

நாங்கள் நாராயண்கானில் இருந்து ஜுன்னாருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​இரவு 10-10:30 மணியளவில், எங்களுக்கு முன்னால் ஒரு சிறுத்தை மாநில நெடுஞ்சாலையை கடந்து சென்றது.

மகாராஷ்டிரா, மனிதன் - சிறுத்தை மோதல்
படக்குறிப்பு, ஷிவன்யாவின் நினைவுகளால் வாடும் அவரது குடும்பம்

இந்த ஆண்டு தீபாவளி விடுமுறைக்காக புனேயிலிருந்து ஷிரூர் தாலுகாவின் பிம்பர்கெட் கிராமத்துக்கு வந்திருந்த சிறுமி ஷிவன்யா, சிறுத்தை தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த குடியிருப்பில் வசிக்கும் பம்பாய் குடும்பத்தின் வீட்டிற்கு அருகில் ஒரு பண்ணை உள்ளது. பட்டப்பகலில், அந்த வீட்டிலிருந்து சுமார் ஐநூறு மீட்டர் தொலைவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து ஷிவன்யாவின் தாய் திவ்யா பாம்பே கூறுகையில், "இதுபோன்ற சம்பவங்கள் இப்போது மிகவும் அதிகரித்துவிட்டன. தினமும் எங்கேயாவது ஏதாவது ஒன்று நடக்கிறது. இன்று இங்கு நடந்துள்ளது, நாளை வேறொரு இடத்தில் நடக்கும். முன்பு ஒருமுறை, ஷிவன்யாவின் தந்தை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அவரைத் தாக்க ஒரு சிறுத்தை முயன்றது. ஒரு வாரத்திற்கு முன்பு, ஒரு சிறுத்தை எங்கள் முற்றத்திற்குள் நுழைந்தது.

சுற்றுச்சுவர் கதவு பத்து நிமிடங்கள் திறந்திருந்தது. உடனே சிறுத்தை உள்ளே நுழைந்துவிட்டது. அது நேரடியாக வீட்டிற்குள் வந்திருந்தால், நாங்கள் என்ன செய்திருப்போம்? நாங்கள் 24 மணி நேரமும் வீட்டுக்குளேயே உட்கார்ந்து இருக்க வேண்டுமா?"என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "எல்லாரும் 'உங்கள் நிலை புரிகிறது' என்று சொல்லிவிட்டு, எங்கள் முன்னால் அழுது விட்டு போய்விடுகிறார்கள். ஆனால் இந்த வலி எங்களோடு வாழ்நாள் முழுவதும் இருக்கும். அவளுடைய எல்லா பொருட்களும் இன்னும் வீட்டில்தான் இருக்கின்றன. இன்று எந்த பொருளைப் பார்த்தாலும், அவளது நினைவு வந்து விடுகிறது"என்று கூறுகிறார்.

இந்த ஆண்டில் பருவமழை முடிந்த உடனேயே, ஷிரூர் மற்றும் ஜுன்னார் தாலுகாக்களில் சிறுத்தை தாக்குதல்களில் மூன்று குழந்தைகளும், ஒரு மூதாட்டியும் உயிரிழந்துள்ளனர்.

ஜுன்னாரின் கும்ஷெட் கிராமத்தில், சிறுத்தை தாக்கியதில் தங்கள் குழந்தையை இழந்த பிறகு, கேதாரி குடும்பம் பயத்தில் தங்கள் வீட்டை விட்டு வேறு இடத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

"சிறுத்தைகள் இப்போது மனித உயிர்களைப் பறிக்கத் தொடங்கியுள்ளன. இன்று எங்களது குழந்தை போய்விட்டது. நாளை வேறொருவரின் குழந்தையும் போய்விடும். இப்போது கிராமங்களிலும் குடியிருப்புகளிலும் சிறுத்தைகள் சுற்றித் திரிகின்றன. குடும்பத்தில் ஒருவரை இழந்தவருக்குத்தான் வலி தெரியும். அரசாங்கம் இதைப் பற்றி கவலைப்படுகிறதா இல்லையா?" என அழுது கொண்டே கேள்வி எழுப்புகிறார் இறந்த சித்தார்த்தின் தாயார் அக்‌ஷதா கேதாரி.

ஜூன்னார் வனப் பிரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், சரியான எண்ணிக்கை குறித்து அரசாங்கத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை.

அணைகள், கரும்பு வயல்கள் மற்றும் சிறுத்தைகள்

1960ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து இந்தப் பகுதியில் மொத்தம் 5 பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளன.

இதனால், விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபடத் தொடங்கினர். கரும்பு பயிரிடும் பரப்பளவு விரிவடைந்ததன் விளைவாக, அது சிறுத்தைகளின் வாழ்விடங்களையும் ஆக்கிரமித்தது.

இதனால், இரை தேடி சிறுத்தைகள் காட்டை விட்டு வெளியே வரத் தொடங்கியிருக்கலாம் என வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மகாராஷ்டிரா, மனிதன் - சிறுத்தை மோதல்
படக்குறிப்பு, ஒவ்வொரு ஆண்டும், கரும்பு அறுவடை காலத்திற்குப் பிறகு, மனிதன் - சிறுத்தை மோதல் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

"ஜுன்னார் வனப்பகுதியில் உள்ள சிறுத்தைகள் கரும்புத் தோட்டங்களை தங்களுக்கான புதிய வாழ்விடமாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கின. அதேபோல், அங்கே அவற்றுக்கு தேவையான உணவும் ஏராளமாக கிடைத்தது. தெருநாய்கள், பூனைகள், விவசாயிகளின் ஆடுகள், செம்மறி ஆடுகள், கன்றுகள் ஆகியவற்றை வேட்டையாடி அவை அங்கேயே வாழ்ந்து வருகின்றன. விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், இந்தப் பகுதியில் சிறுத்தைகளுக்கான பொருத்தமான வாழ்விடமும் இரையும் கிடைத்ததால், அவற்றின் வாழ்விடம் மேலும் விரிவடைந்தது"என்கிறார் மும்பையைச் சேர்ந்த வனவிலங்கு ஆராய்ச்சியாளர் நிகித் சர்வே.

இந்நிலையில், சிறுத்தை-மனித மோதலைத் தடுக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளில் ரோந்து சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கூண்டுகள் அமைத்து சிறுத்தைகளைப் பிடிப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிரா, மனிதன் - சிறுத்தை மோதல்
படக்குறிப்பு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வனத்துறை குழு கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளில் ரோந்து செல்கிறது.

உள்ளூர் மட்டத்தில் நடைபெற்று வரும் முயற்சிகள் குறித்து பிபிசி மராத்தியிடம் பேசிய ஷிரூர் வன சரக அதிகாரி நீலகாந்த் கவானே, "விடியற்காலையிலும் இரவிலும் சிறுத்தைகள் சுறுசுறுப்பாக இயங்கும் நேரமாகக் கருதப்படுகின்றன. அப்போது தான் அவை வேட்டையாட வருகின்றன. இதுபோன்ற சமயங்களில், வனத்துறையால் சிறப்பு ரோந்து குழுக்கள் கிராமங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அந்த நேரத்தில், கிராமவாசிகள், விவசாயிகள், பால் கறக்கச் செல்லும் மக்கள் ஆகியோரை நாங்கள் தடுத்து நிறுத்தி, சிறுத்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கிறோம்" என்றார்.

'சிறுத்தை - மனித மோதல் ஜுன்னாரில் மட்டும் இல்லை'

சிறுத்தை - மனித மோதல் ஜுன்னார் பகுதியில் மட்டுமல்லாமல், மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் காணப்படுகிறது.

இனி யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள்?

இதுதான் அங்குள்ள மக்கள் எழுப்பும் கேள்வி.

முன்னதாக, சிறுத்தை தாக்குதல்கள் ஜுன்னார் மற்றும் அம்பேகான் தாலுகாக்களில் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போது சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், கரும்பு சாகுபடியும் பெரிய அளவில் விரிவடைந்துள்ளது.

இதன் விளைவாக, ஜுன்னாரைத் தாண்டி ஷிரூர், டவுண்ட் மட்டுமின்றி பாராமதி, இந்தாபூர் ஆகிய பகுதிகளிலும் சிறுத்தைகளின் நடமாட்டம் தென்படத் தொடங்கியுள்ளது.

புனே மாவட்டத்தைத் தவிர, மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் சிறுத்தை-மனித மோதல்கள் பதிவாகியுள்ளன.

இதை விளக்கி, இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (WII) வனவிலங்கு ஆராய்ச்சியாளரான குமார் அங்கித் கூறுகையில், "கடந்த முப்பது ஆண்டுகளாக கரும்பு சாகுபடியின் விரிவாக்கம் சிறுத்தைகளுக்கு வாழவும், இனப்பெருக்கம் செய்யவும், உயிர் வாழவும் புதிய இடங்களை வழங்கியுள்ளது. கரும்பு அறுவடை காலத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிக்கிறது. இதனால் மனிதர்களுடன் தொடர்பு அதிகரிக்கிறது" என்கிறார்.

இந்திய வனவிலங்கு நிறுவனத்தைச் சேர்ந்த குமார் அங்கித் மற்றும் பேராசிரியர் பிலால் ஹபீப் ஆகியோர் பல ஆண்டுகளாக மகாராஷ்டிராவின் வனவிலங்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா, மனிதன் - சிறுத்தை மோதல்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, சிறுத்தை - மனித மோதல் ஜுன்னார் பகுதியில் மட்டுமல்லாமல், மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் காணப்படுகிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி-பதில் அமர்வின் போது கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் மனித - விலங்கு மோதலில் இருநூறுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், இதில் பெரும்பாலான இறப்புகள் விதர்பாவில் புலிகளின் தாக்குதல்களால் நிகழ்ந்துள்ளன.

ஆனால், சிறுத்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று பாதிக்கப்பட்ட குடிமக்கள் கூறுகின்றனர்.

இறந்த ஷிவன்யாவின் தந்தை ஷைலேஷ் பாம்பே கூறுகையில், "நாங்கள் பலமுறை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டோம். இது எங்கள் பகுதியில் நிகழும், ஏழாவது அல்லது எட்டாவது சம்பவம். இதுதவிர, சிறுத்தை தாக்குதலால் பலரும் காயமடைந்துள்ளனர்; கால்நடைகளை இழந்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் வருகிறார்கள், கேள்விகள் கேட்டுவிட்டு, சென்றுவிடுகிறார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. விவசாயிகளின் உயிர் இவ்வளவு சாதாரணமாகிவிட்டதா? பகல் நேரத்தில் கூட நாங்கள் பயத்தோடு வாழ்கிறோம்"என்கிறார்.

மறுபுறம், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை எண் ஒன்றில் சிறுத்தை சேர்க்கப்பட்டிருப்பதால், அதற்கு மிக உயர்ந்த பாதுகாக்கப்பட்ட இனத்தின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இப்படியான சூழ்நிலையில் சிறுத்தையை பாதுகாக்க அரசாங்கத்தால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிரா, மனிதன் - சிறுத்தை மோதல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வனத்துறை அமைச்சர் வலியுறுத்தல்

"மனித-சிறுத்தை மோதலைக் குறைக்க அவசர நிதி கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும், உலகளாவிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும்" என்று வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் வலியுறுத்தினார்.

சிறுத்தைகளுக்கு கருத்தடை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். காடுகளுக்கு அருகில் மூங்கில்கள் நடுவதன் மூலம் சிறுத்தைகளை தடுக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு நாயக் உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா, மனிதன் - சிறுத்தை மோதல்

பட மூலாதாரம், DIO, Pune

படக்குறிப்பு, புனேவில் மனித-சிறுத்தை மோதலைக் குறைக்க அரசு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் ஆய்வு செய்தார் (18 நவம்பர் 2025)

இதற்கிடையில், பிபிசி மராத்தியிடம் பேசிய குமார் அங்கித், 2014 முதல் சிறுத்தை-மனித மோதல் படிப்படியாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்தப் பகுதியில் சிறுத்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. நூறு சதுர கிலோமீட்டருக்கு 6 முதல் 7 சிறுத்தைகள் வரை காணப்படுகின்றன என்பது அவரது கூற்றாக உள்ளது.

"ஆனால் இயற்கைச் சூழலால் இத்தனை சிறுத்தைகளை தாங்க முடியாது(carrying capacity). இதுவே மனித–வனவிலங்கு மோதலை மேலும் தீவிரப்படுத்துகிறது" என்றும் அவர் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "சிறுத்தைகளின் எண்ணிக்கையை திறம்பட கட்டுப்படுத்தாவிட்டால், வரும் நாட்களில் மக்களின் மனதில் பயம் தொடர்ந்து வளரும். அதே நேரத்தில், சிறுத்தை தாக்குதல்களின் அளவும் கணிசமாக அதிகரிக்கக்கூடும். எனவே, இந்தப் பிரச்னையை தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் " என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு