தனி ஒருவன் 'ஹீரோ' திலக் வர்மா - ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்தியா

பட மூலாதாரம், Getty Images
ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.
பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 19.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது.
முதலில் இந்திய அணி மோசமான தொடக்கத்தையே பெற்றது. நான்கு ஓவர்களில் மூன்று பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்.
இந்தியாவின் வெற்றியின் நாயகனாக திலக் வர்மா 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்தார், சிவம் துபே 33 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக, குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானை 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார். இந்திய அணி ஒன்பதாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.
இந்தியாவுக்கு மோசமான தொடக்கம்

பட மூலாதாரம், Getty Images
147 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியா, நான்கு ஓவர்களில் வெறும் 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து மோசமான தொடக்கத்தைப் பெற்றது.
இந்தியா அணியில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர்.
ஆனால், இரண்டாம் ஓவரில் முதல் பந்திலே அபிஷேக் சர்மா 5 ரன்களில் அவுட்டானார் சிறந்த ஃபார்மில் இருந்த அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை ஃபஹீம் அஷ்ரப் வீழ்த்தினார்.
மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஷாஹீன் அப்ரிடி கேப்டன் சூர்யகுமார் யாதவை ஆட்டமிழக்கச் செய்தார். சூர்ய குமார் ஒரு ரன்னில் ஆவுட்டானார்.
நான்காவது ஓவரின் கடைசி பந்தில் ஷுப்மான் கில்லை ஃபஹீம் அஷ்ரஃப் அவுட்டாக்கினார். கில் 12 ரன்கள் எடுத்தார்.
நான்கு ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 20 ரன்களை எடுத்தது.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், சஞ்சு சாம்சனும் திலக் வர்மாவும் 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவின் இன்னிங்ஸை நிலைநிறுத்தினர்.
ஆனால் சஞ்சு சாம்சனால் தனது இன்னிங்ஸை 24 ரன்களுக்கு மேல் நீட்டிக்க முடியவில்லை. பின்னர் திலக் வர்மா சிவம் துபேவுடன் இணைந்து இந்தியாவின் இன்னிங்ஸை உறுதியாக முன்னோக்கி கொண்டு சென்றார்.
சிவம் துபே, 15வது ஓவரில் இருந்து அதிரடி காட்டினார். அந்த ஓவரில் இந்தியா 17 ரன்களை எடுத்தது.
மோசமான சூழலில் இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்த திலக் வர்மா, 41 பந்துகளில் அரைச்சதம் அடித்தார்.
அதிரடி சிக்ஸர்களை பறக்கவிட்ட சிவம் துபே 19வது ஓவரில் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் இந்தியாவுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் திலக் வர்மா சிக்ஸர் அடித்து அழுத்தத்தை குறைத்தார்.
மூன்றாம் பந்தில் ரிங்கு சிங் போர் அடிக்க இந்தியா வெற்றி பெற்றது.
திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 69 ரன்களும், சிவம் துபே 33 ரன்களும் எடுத்தனர்
பாகிஸ்தான் தரப்பில் பஹீம் அஷ்ரஃப் நான்கு ஓவர்களில் 29 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தடுமாறிய பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images
டாஸ் வென்ற இந்தியா முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய சொன்னது. ஃபகர் ஜமான், சாஹிப்சாதா ஃபர்ஹான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
முதல் ஓவரில் சிவம் துபே பந்து வீசினார். முதல் 4 பந்துகளில் ரன் ஏதும் அடிக்காமல் இருந்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான், 5வது பந்தில் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினார்.
பின் நிதானமாக விளையாடிய ஃபகர் ஜமான், சாஹிப்சாதா தங்களின் பாட்னர்ஷிப்பில் 50 ரன்களை சேர்த்தனர். 9 ஓவர் வரை விக்கெட்டை இழக்காமல் ஆடி வந்த பாகிஸ்தான், அந்த ஓவரின் 4வது பந்தில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.
38 பந்துகளில் 57 ரன்களை விளாசி ஃபர்ஹான் ஆட்டமிழந்தார். அவருக்கு பதிலாக சைம் ஆயுப் களமிறங்கியுள்ளார். அதன்பிறகு 12.5வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் சைம் ஆயுப். குல்தீப் யாதவ் இவரின் விக்கெட்டை எடுத்தார்.
அதன்பின் ஐந்து பந்துகளுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான்.
இதுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை நிதானமாக ரன்களை சேர்த்து வந்த பாகிஸ்தான் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தொடங்கியதால் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியது.
14வது ஓவரின் 4வது பந்தில், அக்சர் படேல் முகமது ஹாரிஸை டக் அவுட்டாக்கி பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். 15 ஓவர் முடிவில், 4 விக்கெட்கள் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்திருந்தது பாகிஸ்தான்.

பட மூலாதாரம், Getty Images
பின் மீண்டும் 16வது ஓவரை வீச வந்த குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே கேப்டன் சல்மான் ஆகாவை அவுட்டாக்கினார். 8 ரன்கள் மட்டுமே சேர்த்த சல்மான் பெவிலியன் திரும்பினார்.
அதன்பிறகு பாட்னர்ஷிப் சரியாக அமையாததால் பாகிஸ்தான் அணி ரன்களை சேர்க்க சற்று சிரமப்பட்டது.
தொடர்ந்து 16.4வது ஓவரிலேயே மற்றொரு விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். இது ஷாஹீன் அஃப்ரிடியின் விக்கெட் ஆகும். LBW முறையில் அவரை டக் அவுட் ஆக்கி திருப்பி அனுப்பினார்.
பின் ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டாக ஃபஹீம் அஷ்ரவை அவுட்டாக்கினார் குல்தீப் யாதவ்.
இந்த நிலையில் 17 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்திருந்தது.
அதன்பின் 17வது ஓவரில் பும்ரா தனது பங்கிற்கு ஹரிஸ் ரவுஃபின் விக்கெட்டை வீழ்த்தினார்.
19 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது பாகிஸ்தான்.
பின் கடைசி ஓவரில் மீண்டும் பும்ரா களமிறங்கி முதல் பந்திலேயே நவாஸ் விக்கெடுட்டை வீழ்த்தி ஆட்டத்தை முடித்தார்.
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், பும்ரா, அக்சர் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சாஹிப்சாதா ஃபர்ஹான் 57 ரன்கள் எடுத்தார்.
இறுதிப் போட்டியின் சமீபத்திய நேரடி ஸ்கோரைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
ஹர்திக் பாண்ட்யா இல்லை
டாஸின்போது வழக்கம்போல் இந்த முறையும் இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
டாஸ் பிறகு வென்ற பேசிய சூர்யகுமார் யாதவ், "நாங்கள் முதலில் பந்துவீச உள்ளோம். நாங்கள் முதலில் நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறோம். ஆனால் இன்று சேசிங் செய்ய விரும்புகிறோம். கடந்த 5-6 போட்டிகளில் நாங்கள் நன்றாகவே விளையாடியுள்ளோம்" என்றார்.
மேலும் இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.
அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் கான் ஆகியோரும் இப்போட்டியில் இடம்பெறவில்லை.
பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, "நாங்களும் முதலில் பேட் செய்ய வேண்டும் என்றுதான் விரும்பினோம்." என்றார்.

பட மூலாதாரம், Getty Images
ஆசிய கோப்பை 2025
இது 17வது சீசன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகும். ஆசிய கோப்பை வரலாற்றில் இந்த முறை முதல்முறையாக எட்டு அணிகள் பங்கேற்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் யூஏஇ, ஓமன், ஹாங்காங் அணிகள் பங்கேற்றன.
அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. அதில் இந்தியா, பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












