டிரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவை சங்கடத்தில் தள்ளியுள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
"பொது அறிவு மற்றும் சிறந்த புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தியதற்கு வாழ்த்துகள்."
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான சண்டை நிறுத்தம் குறித்து விவரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வார்த்தைகள் இவை. மே 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு டிரம்ப் திடீரென சண்டை நிறுத்தத்தை அறிவித்த போது, அது பல வழிகளில் இந்தியாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
டிரம்ப் இந்த அறிவிப்பை சமூக ஊடகத்தில் வெளியிட்டார். சண்டை நிறுத்தம் குறித்த முதல் தகவல் இந்தியாவிடமிருந்தோ அல்லது பாகிஸ்தானிடமிருந்தோ வரவில்லை, மாறாக அமெரிக்க அதிபரிடமிருந்து அந்த தகவல் வந்தது. அமெரிக்கா இந்த தகவலை மட்டும் வழங்காமல் பல விஷயங்களை தெரிவித்தது. அத்தகவல்கள் இந்திய வெளியுறவு கொள்கையிலிருந்து முரண்பட்டதாக உள்ளன.
டிரம்ப் தன் சமூக ஊடக பதிவில், "இரவு முழுவதும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது. இதையடுத்து, இரு நாடுகளும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன." என தெரிவித்திருந்தார்.
காஷ்மீர் இருதரப்பு விவகாரம் என்பதும் எந்தவொரு மூன்றாவது நாட்டுடைய மத்தியஸ்தமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதும் இந்தியாவின் கொள்கையாக உள்ளது.
எந்தவொரு இருதரப்பு விவகாரத்திலும் மூன்றாம் தரப்பு நாட்டின் மத்தியஸ்தத்தை இந்தியா எப்போதும் நிராகரித்து வந்துள்ளது. சீனாவுடனான எல்லை விவகாரத்திலும் இதே கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜூலை 2019-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக டிரம்ப் முதன்முறையாக பதவி வகித்த போது அப்போதைய பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்தியஸ்தம் செய்வதாக கூறியிருந்தார். அப்போது இதை உடனடியாக இந்தியா நிராகரித்தது.

பட மூலாதாரம், Getty Images
மகிழ்ச்சியை வெளிப்படுத்தாத இந்தியா
அமெரிக்காவின் சண்டை நிறுத்த அறிவிப்பு குறித்த இந்தியாவின் எதிர்வினை, அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் எக்ஸ் தள பதிவிலிருந்து, இந்த அறிவிப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதும், அந்த அறிவிப்பு தொடர்பாக எல்லா விவகாரங்களையும் இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் தெளிவாக தெரிந்தது.
சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக, ஜெய்சங்கர் தன்னுடைய பதிவில் குறிப்பிடவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சர் தன் பதிவில், "ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்படுத்தியுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா சமரசம் செய்துகொள்ளாது, இந்த அணுகுமுறை எதிர்காலத்திலும் தொடரும்" என தெரிவித்திருந்தார்.
மார்கோ ரூபியோ இதை எக்ஸ் பக்கத்தில் மறுபதிவு செய்திருந்தார். ஆனால் இருவருடைய கருத்துகளிலும் தெளிவாக வித்தியாசம் இருந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் சண்டை நிறுத்தம் எட்டப்பட்டதாகவோ, நடுநிலையான இடத்தில் பிரச்னையை தீர்க்க பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்றோ ஜெய்சங்கர் எங்கும் குறிப்பிடவில்லை.

மறுபுறம் அமெரிக்காவின் அறிவிப்பு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாகிஸ்தான், டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்திய முன்னாள் ராஜ்ஜிய அதிகாரி பார்த்தசாரதியிடம், சண்டை நிறுத்தத்தை அறிவித்து இந்தியாவை அமெரிக்கா சங்கடப்படுத்தியுள்ளதா என கேள்வி எழுப்பினோம்.
ஜி பார்த்தசாரதி கூறுகையில், "டிரம்பின் மொழியை அடிப்படையாக வைத்து விவாதித்தால், அது இந்தியாவுக்கு சங்கடம் தான். ஆனால், இதை வேறொரு விதமாக பார்க்க வேண்டும். டிரம்பின் மொழி மற்றும் உரையை வைத்து அவரை எடை போடக் கூடாது. உண்மையில் என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டும். பாகிஸ்தானின் பஞ்சாபில் டிரம்பின் அனுமதி இல்லாமலா தாக்குதல் நடந்தது? டிரம்ப் அதற்கு அனுமதி அளித்தார் என்பது தெரிந்ததே. இந்தியா தன்னுடைய இலக்கை அடைந்துள்ளது, அதன் பிறகு யார் சண்டை நிறுத்தத்தை அறிவித்தால் என்ன? அதனால் என்ன வித்தியாசம் ஏற்பட்டுவிடும்?" என்றார்.
வெளியுறவு துறை முன்னாள் செயலாளரும் அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதருமான நிரூபமா மேனன் ராவ், இந்த முழு விவகாரத்திலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஒரே அளவுகோலில் வைத்திருக்க டிரம்ப் முயற்சிப்பதாக நம்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images
'ஒரே அளவுகோலில் இந்தியா-பாகிஸ்தான்'
நிரூபமா ராவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "மே 10-ஆம் தேதி டிரம்ப் தன்னுடைய கருத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை ஒரே மாதிரி பாராட்டுவது, தெற்காசியாவின் புவிசார் அரசியலின் சிக்கலான தன்மையை தெளிவாக பிரதிபலிக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானை அமெரிக்கா ஒரே அளவுகோலில் வைக்கிறது. அதேசமயம், சீனாவை எதிர்ப்பதில் இந்தியா அமெரிக்காவின் கூட்டாளியாக உள்ளது. இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் பங்கு மிகப்பெரிதாக உள்ளது." என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "அதிகாரப்பூர்வ தளங்கள் மற்றும் ஊடகங்களில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா நிராகரித்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமாகவே சண்டை நிறுத்தம் எட்டப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. பதற்றம் நிறைந்த காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதம் குறித்து இந்தியா தன் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளது. அமெரிக்கா இந்தியாவின் கூட்டாளி என நான் நம்புகிறேன், தற்காலிகமாக நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து மட்டுமே இந்த கூட்டுறவை பார்க்கக் கூடாது." என்றார்.
சிந்தனை மையமான அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் வெளியுறவு கொள்கை இயல் துறையின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் வி பண்ட்-ம் சண்டை நிறுத்தம் குறித்து டிரம்ப் அறிவித்த போது, இரு நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததை காட்டியதாக நம்புகிறார்.
அவர் கூறுகையில், "இந்தியா தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது, டிரம்பின் அறிவிப்பில் உள்ள குழப்பம் குறித்து பதில் அளித்துள்ளது. யாருடைய அழுத்தத்தின் கீழும் இந்தியா உள்ளதாக நான் கருதவில்லை. டிரம்பின் மொழியில் நிச்சயமாக பிரச்னை இருந்தது, ஆனால் அதுகுறித்து டிரம்புக்கு இதற்கு பின்னால் பெரிய சிந்தனை இருப்பதாக நான் நினைக்கவில்லை. டிரம்பின் மொழி இப்படித்தான் இருக்கும். மிகவும் ஒருசார்பாகத்தான் அவர் சில சமயங்களில் பேசுவார்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
'டிரம்பின் பேச்சை வைத்து எடை போடக் கூடாது'
பேராசிரியர் பண்ட் கூறுகையில், "யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம், அதை இந்தியா கேட்கும் என்ற நிலை இப்போது இல்லை. அமெரிக்காவில் டிரம்பின் நிர்வாகம் உள்ளது என இந்தியாவுக்கு தெரியும், எனினும் பாகிஸ்தானின் பஞ்சாபை இந்தியா தாக்கியது. தன்னுடைய பேச்சின் வாயிலாக டிரம்ப் நிச்சயமாக அதிக சிக்கலை ஏற்படுத்தியுள்ளார், இதனால் இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அரசை சூழந்து கொண்டு கேள்வி எழுப்பும். 24 மணிநேரத்தில் யுக்ரேன்-ரஷ்யா போரை நிறுத்துவதாக டிரம்ப் கூறினார், ஆனால் அதை அவரால் செய்ய முடியவில்லை. அமெரிக்கா வருவது இயல்பானதுதான், ஆனால் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை செய்ய வேண்டியிருந்தது. டிரம்ப் பாகிஸ்தானை சமாதானப்படுத்தினால், அதை ஏற்றுக்கொள்வதில் இந்தியாவுக்கு ஏன் சிக்கல் இருக்கும்?" என அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அப்படியான சூழலில் சண்டை நிறுத்தம் தொடர்பாக இந்தியா மீது அழுத்தம் இருந்தது. அதேசமயம், பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் வேண்டும், அதுதொடர்பாக அந்நாட்டுக்கும் அழுத்தம் இருந்திருக்கும். ஐ.எம்.எஃப் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை ஒரு துருப்புச் சீட்டாக அமெரிக்கா பயன்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன். இதனால், இரு நாடுகளுக்கிடையே ஒத்த கருத்து ஏற்பட்டுள்ளது. ஐ.எம்.எஃப்-ல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வக்களிக்கவில்லை." என கூறினார்.
ஆனால், சமீப ஆண்டுகளாக உலகம் முழுவதும் அமெரிக்காவின் நம்பகத்தன்மை குறித்த விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு நம்பகமான கூட்டாளியாக அமெரிக்காவை கருத முடியாது என்ற அச்சம் எழுந்தது. தாலிபன் மீண்டும் அதிகாரத்துக்கு வரலாம் என்ற பயம் நிலவிய சூழலில், அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து தன் துருப்புகளை திரும்ப பெற்றுக்கொண்டது, இதையடுத்து அந்த பயம் உண்மை என நிரூபணமானது.
பனிப்போர் காலத்திலிருந்தே அமெரிக்காவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இருந்துள்ளது, ஆனால் தற்போது அமெரிக்காவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் இருந்த போதிலும், இந்தியா மற்றும் அமெரிக்க உறவுக்கிடையே சந்தேகம் மற்றும் நம்பகமின்மை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












