'ஓட்டல்' வேலைக்கு கம்போடியா சென்ற கோவை இளைஞர் என்ன ஆனார்? பரிதவிக்கும் தாய்

பட மூலாதாரம், GettyImage/BBC
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
கம்போடியாவில் ஓட்டல் வேலைக்குச் சென்ற கோவை இளைஞரை சைபர் குற்றவாளிகள் கடத்தி சித்திரவதை செய்ததில், அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, அந்த இளைஞர் அவருடைய தாய்க்கு அனுப்பியதாகக் கூறப்படும் காணொளியும் வெளியாகியுள்ளது.
இளைஞரின் சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கு கோவை மாவட்ட ஆட்சியரிடம் அவரின் தாயார் உதவி கோரியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் பேசி, அந்த இளைஞரின் சடலத்தைக் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதற்கான தொகையை தமிழக அரசே வழங்கும் என்றும் தமிழ்நாடு அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அந்த இளைஞர் யார் மூலமாக எப்படிச் சென்றார் என்று விசாரித்து, இதுபோன்று இனியும் நிகழாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அயலகத் தமிழர் நல ஆணையாளர் வள்ளலார் கூறியுள்ளார்.
கம்போடியாவில் கோவை இளைஞருக்கு என்ன நடந்தது?
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த கீதா டிசம்பர் 18-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கோரி மனு கொடுத்தார். அதில், தன்னுடைய மகன் நந்தகுமார் (வயது 22) கடந்த ஓராண்டாக கம்போடியா நாட்டில் கூலி வேலை செய்து வந்ததாகவும், ஒன்றரை மாதமாக உடல்நலக்குறைவுடன் இருந்த அவர், கடந்த 16ஆம் தேதி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, டிசம்பர் 17 ஆம் தேதி இறந்துவிட்டதாகவும் கூறியிருந்தார். மகன் உடலைக் கொண்டுவர உதவவேண்டுமென்று அவர் கோரியிருந்தார்.
செய்தியாளர்களிடம் கீதா பகிர்ந்த தகவலின்படி, "அவருடைய மூத்த மகன் நந்தகுமார் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, கம்போடியாவில் ஓட்டல் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார். அவரை, சைபர் குற்றவாளிகள் சிலர் கடத்திச்சென்று சைபர் குற்றத்தில் ஈடுபடுத்துவதற்கு முயற்சி செய்துள்ளனர். அதற்கு அவர் மறுத்ததால் அவருடைய பாஸ்போர்ட்டைப் பறித்து, ஓர் அறையில் அடைத்துவைத்துள்ளனர்.
சைபர் குற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கால் சென்டரில் பணியாற்றுமாறு கட்டாயப்படுத்தியபோது, 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதால் தனக்கு அந்த வேலை தெரியாது என்று நந்தகுமார் கூறியதால் அவருக்கு உணவும் தராமல் துன்புறுத்தியுள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கீதாவிடம் நந்தகுமார் போனில் இதைத் தெரிவித்து, அறையில் அடைத்து வைத்ததை காணொளியாகவும் கீதாவுக்கு அனுப்பியுள்ளார்."
பிபிசி தமிழிடம் பேசிய கீதாவின் இளைய மகன் கோகுல்நாத், ''எங்கள் அப்பா இறந்துவிட்டார். அம்மா வீட்டு வேலைக்குச் செல்கிறார். அண்ணனுக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை என்று போன் வந்ததும், எங்கள் உறவினர் சுதர்சன் என்பவர் அவரை அழைத்து வருவதற்காக கடந்த புதன்கிழமை அங்கே சென்றார். ஆனால் அங்கே அவர் சென்ற நாளிலேயே அண்ணன் இறந்துவிட்டார்.'' என்றார்.
"தூதரகத்தில் இருப்பவர்கள், அண்ணனின் உடலை அனுப்ப 7 லட்ச ரூபாய் செலவாகும், அதில் பாதியைச் செலுத்த வேண்டுமென்று கூறியுள்ளனர். ஆனால் எங்களுக்கு அவ்வளவு வசதியில்லை என்பதால்தான் மாவட்ட ஆட்சியர் மூலமாக உதவி கோரியுள்ளோம். இப்போதும் எங்கள் உறவினர் அங்கேதான் இருக்கிறார். ஆனால் அவர்கள் கேட்கும் பணத்தைச் செலுத்த இயலவில்லை. தமிழக அரசு தரப்பில் உதவி செய்வதாகக் கூறியுள்ளனர். இந்திய தூதரகம் இதுதொடர்பாக கேட்ட விண்ணப்ப கடிதத்தையும் நாங்கள் முறைப்படி அனுப்பியுள்ளோம்'' என்றார்.
கோகுல்நாத், கோவை அரசினர் பொறியியல் கல்லுாரியில் பி.டெக் (ஐ.டி.) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கம்போடியாவிலுள்ள தமிழ்ச் சங்கத்திலும் நந்தகுமாரின் குடும்பத்தினர் உதவி கோரியுள்ளனர். அவர்கள் உதவுவதற்குத் தயாராக இருந்தாலும், தூதரகத்துக்குப் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக கோகுல்நாத் தெரிவித்தார்.
இதுபற்றி கம்போடியா தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த ராமேஸ்வரனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, ''இறந்தவர் உடலை சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு இங்கு ஏராளமான சட்ட நடைமுறைகள் இருக்கின்றன. கண்டிப்பாக தூதரகத்தின் உதவியுடன்தான் உடலை அனுப்ப முடியும். இந்த இளைஞருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. எங்களால் இயன்ற உதவிகளை நாங்கள் செய்வோம்.'' என்றார்.

உடலை கொண்டு வருவதற்கான செலவை ஏற்பதாக தமிழக அரசு அறிவிப்பு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மூலமாக இந்தத் தகவல், தமிழக அரசின் அயலகத் தமிழர் நல ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையம் மற்றும் அயலகத் தமிழர் நல வாரியம் மூலமாக, நந்தகுமாரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, ''இந்தியாவிலுள்ள ஏதாவது ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர், வெளிநாட்டில் இறந்துவிட்டால் அந்த இளைஞரின் உடலைக் கொண்டு வருவதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்தான் நடவடிக்கை எடுக்கும். அதற்கான தொகையை இந்திய தூதரகம் செலவழிக்கும். அதன்பின்பு அந்தந்த மாநில அரசுகள் அதை வழங்கும். இந்த இளைஞரின் சடலத்தைக் கொண்டுவரவும் அதேபோன்ற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.'' என்றார்.
''இந்த தொகையை தமிழ்நாடு அரசு வழங்கும் என்ற உறுதியை முறைப்படி அமைச்சகத்துக்கு இ-மெயில் வாயிலாக தெரிவித்துவிட்டோம். அதனால் முடிந்தளவு மிக விரைவாக அந்த இளைஞரின் உடலை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறோம். இதற்காக அயலகத் தமிழர் நல ஆணையத்தின் ஆணையாளரும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.'' என்றார் கார்த்திகேய சிவசேனாதிபதி.
தமிழக அரசு சார்பில் அந்த தொகையை முன்பே செலுத்தி, அந்த இளைஞரின் உடலை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அயலகத் தமிழர் நல ஆணையத்தின் ஆணையாளர் வள்ளலார் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் மூலமாக ஆணையம் செய்து வருவதாகக் கூறிய அவர், அந்த நாட்டின் சட்ட நடைமுறைகளை முடித்த பின்பே கொண்டு வரமுடியும் என்றார்.
பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய அவர், ''உடற்கூராய்வு முடிந்த பிறகும் அரபு நாடுகள் உள்ளிட்ட சில நாடுகளில் மற்ற வழக்கமான நடைமுறைகளைப் பூர்த்தி செய்வதற்கு 10, 15 நாட்கள் கூட ஆகலாம். ஆனால் கம்போடியாவில் அத்தனை நாட்கள் தாமதமாக வாய்ப்பில்லை என்று கருதுகிறோம். அந்த இளைஞரின் உடலைக் கொண்டு வருவதற்கான தொகையை தமிழக அரசே முழுவதுமாக அளிக்கும்.'' என்றார்.
'விசாரித்து உரிய நடவடிக்கை'
இதேபோல மியான்மரில் சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிய பலரை மீட்டுள்ளதாக அயலகத் தமிழர் நல ஆணையாளர் வள்ளலார் தெரிவித்தார்.
''சமீப காலமாக நமது இளைஞர்கள் பலரையும் கம்போடியாவுக்கு வேறு வேலைக்கு என்று அழைத்துச் சென்று சைபர் குற்றங்களில் ஈடுபடுத்த முயற்சி செய்வதாகத் தெரியவந்துள்ளது. இந்த இளைஞர் உயிருடன் நாடு திரும்பியிருந்தால் அங்கே என்ன நடந்தது என்று தெரிந்திருக்கலாம். இருப்பினும் இவரை யார் மூலமாக எப்படி அனுப்பினார்கள் என்பது பற்றி விசாரித்து, காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார் அவர்.
கம்போடியாவிலுள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images
கம்போடியாவுக்கான இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கம்போடியாவில் சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடுத்துவதற்கான போலி வேலை வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலை தேடுவோருக்கான அந்த அறிவிப்பில், ''கம்போடியாவில் கவர்ச்சிகரமான வேலை வாய்ப்பு இருப்பதாக விளம்பரப்படுத்தி இந்தியர்கள் பலரையும் இங்கு கடத்தி வருவது கவனத்துக்குத் தெரியவந்துள்ளது. அவ்வாறு சிக்கும் இந்தியர்கள் ஆன்லைன் நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோதமான பிற சைபர் குற்றச் செயல்களில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கம்போடியாவுக்கு வேலைக்குச் செல்ல விரும்பும் இந்தியர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமே செல்ல வேண்டும்.'' என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் வேலை தேடி வருவது போன்ற கம்போடியா அரசு வழங்கும் விசாவின் நோக்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபட வேண்டாமென்றும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உதவி தேவைப்படுவோர், கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தை [email protected] அல்லது [email protected] போன்ற மின்னஞ்சல்களிலும், +855 92881676 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












