இந்தியா 'சாம்பியன்' - கடைசி நிமிட கோலால் மலேசியாவை வீழ்த்தி அபாரம்

இந்திய அணி சாம்பியன்

பட மூலாதாரம், Twitter/Asian Hockey Federation

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ரசிகர்களை சீட் நுனிக்கே வரவைத்த பரபரப்பான இறுதிப்போட்டியில் மலேசிய அணியை 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஒன்றுக்கு மூன்று என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த இந்திய வீரர்கள் பிற்பாதியில் எழுச்சி பெற்ற சமன் செய்தனர். வெற்றிக்கான கோல் கடைசி நிமிடத்தில் வந்ததது என்பது சிறப்பு. அந்த அளவுக்கு ஆட்டம் பரபரப்பானதாக இருந்தது. இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரி நடந்து முடிந்துள்ளது. அதன் இறுதிப் போட்டியில் இந்தியா - மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டம் தொடங்கியதும் இந்தியா முன்னிலை

ஆட்டம் தொடங்கியதுமே மலேசிய வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை கையில் எடுத்தனர். மலேசிய அணி வீரர்கள் ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்திய கோல் பகுதியை நோக்கி அடித்த பந்து வலைக்கு சற்று வெளியே பறந்தது. இந்திய அணியின் தற்காப்பு வீரர்கள் செய்த சிறிய பிழையை சாதகமாக பயன்படுத்தி இந்திய கோல் பகுதியை அவர்கள் முற்றுகையிட்டனர். ஆனாலும் கோல் ஏதும் விழவில்லை.

ஆனால், ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் மலேசிய தற்காப்பில் விழுந்த ஓட்டையை பயன்படுத்திக் கொண்ட இந்திய வீரர் ஜூக்ராஜ் சிங் அபாரமாக கோல் அடித்து அசத்தினார். இதனால், இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

முதல் பாதியில் மலேசியா 3-0

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மலேசிய வீரர்கள் தங்களது தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்தினர். அதற்கு அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே பலன் கிடைத்தது. அஸ்ராய் அபு கமல் அந்த அணிக்கான முதல் கோலை அடித்தார். இதனால், இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டின.

ஆட்டத்தில் இரண்டாவது கால் பகுதியில், அதாவது 18-வது நிமிடத்தில் மலேசிய அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. அந்த அணிக்காக 300-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் ஆடியுள்ள அனுபவம் வாய்ந்த ரஸி ரஹிம் இந்த கோலை அடித்து இந்திய ரசிகர்களை திகைக்க வைத்தார்.

இந்திய அணி வீரர்கள் பதிலடி கொடுக்க போராடினால் பலன் கிடைக்கவில்லை. மலேசிய அணியின் தற்காப்பு சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வருவதற்கு சற்று முன்னதாக மலேசிய வீரர் முகமது அமினுதீன் கோல் அடித்து அசத்தினார். இதனால், இந்தியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த மலேசிய அணி முதல் பாதி ஆட்டம் முடிவில் 1-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்திய அணி சாம்பியன்

பட மூலாதாரம், Twitter/Asian Hockey Federation

பிற்பாதியில் இந்திய அணி எழுச்சி

ஆட்டத்தின் பிற்பாதியில் முதல் நிமிடத்தில் இருந்தே இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. மலேசிய கோல் பகுதியை இந்திய வீரர்கள் முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். ஆனால், அந்த அணியின் தற்காப்பு மிகச் சிறப்பாக இருந்ததால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. 41-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் அடித்த கோலை நடுவர் நிராகரித்தார்.

ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் மலேசிய கோல் பகுதியில் இந்திய வீரர் சுக்ஜீத்தை அந்த அணி வீரர்கள் கீழே தள்ளிவிட, இந்திய அணிக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தது. அதனை கேப்டன் ஹர்மன்பிரீத் கோலாக்கினார். இதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான கோல் இடைவெளி 3-2 என்ற வகையில் குறைந்தது.

இரண்டாவது கோல் கொடுத்த உத்வேகத்தில் ஆடிய இந்திய வீரர்கள் அடுத்த சில விநாடிகளிலேயே மூன்றாவது கோலையும் அடித்துவிட்டனர். இந்திய அணிக்காக இந்த கோலை குர்ஜந்த் அடித்தார். இதனால் உற்சாகம் அடைந்த இந்திய ரசிகர்கள் வந்தே மாதரம் என்று ஒன்றாக பாடத் தொடங்கிவிட்டனர்.

இந்திய அணி சாம்பியன்

பட மூலாதாரம், Twitter/Asian Hockey Federation

கடைசி நிமிட கோலால் இந்தியா வெற்றி

இதையடுத்து, இரு அணிகளுமே வெற்றிக்கான கோலை அடிக்க தாக்குதலை தீவிரப்படுத்தின. இந்திய வீரர்களின் சில நல்ல முயற்சிகளை மலேசிய கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு முறியடித்தார்.

ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த போது இந்திய அணியின் வெற்றிக்கான கோலை ஆகாஷ்தீப் சிங் அடித்தார். மலேசிய கோல் பகுதியில் இருந்து பல மீட்டர் தொலைவில் இருந்து அவர் அடித்த பீல்ட் கோல் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. அதுவே இந்திய அணியின் வெற்றிக் கோலாக அமைந்தது. அதன் பிறகு இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.

முடிவில் இந்திய அணி 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் வென்று ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணி முதல் பாதியில் 1-க்கு 3 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்து, இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்று அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து கோப்பையை தனதாக்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: