இந்தியாவுக்கு 'ஷோ' காட்டிய கவாஜா: டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு இந்தியாவுக்கு கைகூடுமா?

பட மூலாதாரம், ICC
- எழுதியவர், அஷ்ஃபாக்
- பதவி, பிபிசி தமிழ்
4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கவாஜாவும் கேமரூன் க்ரீனும் இந்தியாவுக்கு தாங்க முடியாத தலைவலியை கொடுத்திருக்கின்றனர்.
ஆமதாபாத் டெஸ்டின் 2வது நாள் ஆட்டமும் இந்தியாவுக்கு சிறப்பாக அமையவில்லை. பார்டர் - கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்டில் 480 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 2வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்துள்ளது.
2வது நாள் ஆட்டத்தை 355 ரன்களுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா. கவாஜாவும் கேமரூன் க்ரீனும் ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களை தொடக்கம் முதலே திணறடித்தனர்.
உணவு இடைவேளை வரை இந்தியாவால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. களத்தில் நங்கூரமிட்ட உஸ்மான் கவாஜா, இந்திய பந்துவீச்சாளர்களை கடுமையாக சோதித்தார். மறுபுறம் கேமரூன் க்ரீன் தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். வெறும் 144 பந்துகளில் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் கேமரூன் க்ரீன்.
இந்திய மண்ணில் 4 ஆண்டுகள் கழித்து, 6வது அல்லது அதற்கு பிந்தைய இடத்தில் களமிறங்கி சதமடித்த வீரர் எனும் பெருமையையும் க்ரீன் படைத்துள்ளார். ஆட்டம் தொடங்கியதில் இருந்தே நிதானமாக ஆடி வரும் கவாஜா, 347 பந்துகளில் 150 ரன்கள் சேர்த்தார்.
கவாஜா - க்ரீன் ஜோடியை பிரிக்க இந்தியா கடுமையாக போராடியது. ஒருவழியாக அஸ்வின் சுழலில் 114 ரன்கள் எடுத்திருந்தபோது கீப்பர் வசம் பிடிபட்டார் க்ரீன். 208 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது.
அதே ஓவரில் அலெக்ஸ் காரே டக் அவுட்டானார். அஸ்வினின் அந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது இந்தியாவுக்கு சற்று நிம்மதி அளித்தது. அடுத்து வந்த ஸ்டார்க்கும் 6 ரன்களில் அஸ்வின் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
422 பந்துகளை எதிர்கொண்டு 180 ரன்கள் விளாசி களத்தில் பலமாக வலம் வந்த ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜாவின் ஆட்டம் 2வது நாள் கடைசி பகுதியில் முடிவுக்கு வந்தது.

பட மூலாதாரம், Getty Images
அக்சர் படேல் பந்துவீச்சில் அவர் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார்.
அத்துடன் ஆஸ்திரேலியா 409 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்திருந்தது.
அடுத்த 5 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
அனில் கும்ப்ளே சாதனையை முந்திய அஸ்வின்
ஆனால் மர்ஃபியும், நாதன் லியானும் அவ்வளவு எளிதாக விக்கெட்டை கைவிடவில்லை. டாப் ஆர்டர்கள் தலைவலி கொடுத்ததைத் தாண்டி ஆஸ்திரேலியாவின் டெய்ல் எண்டர்களும் பந்துவீச்சாளர்களை சிரமப்படுத்தினர்.
20 ஓவர்களுக்கும் அதிகமாக பந்துகளை வீசி இந்திய வீரர்கள் சோர்வடைந்தனர். இறுதியாக மர்ஃபியை 41 ரன்களுக்கும் நாதன் லயானை 34 ரன்களுக்கும் ஆட்டமிழக்கச் செய்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான ஆட்டம் ஒருவழியாக 480 ரன்களில் முடிவுக்கு வந்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 6 விக்கெட்களை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்தியர் எனும் பெருமையை அனில் கும்ப்ளேவை பின்னுக்குத் தள்ளி படைத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
அடுத்ததாக, பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 10 ஓவர்கள் வரை விளையாடியது.
ரோஹித் சர்மா, சுப்மல் கில் இருவருமே தொடக்கம் முதல் அதிரடி காட்டினார். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்துள்ளது. 444 ரன்கள் இந்தியா பின் தங்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற என்ன வாய்ப்பு?
இந்த நிலையில், எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.
ஒன்று இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும். தோல்வியோ, டிராவோ ஆகும் பட்சத்தில், டெஸ்ட் இறுதிப் போட்டிக்குள் நுழைவது இந்தியாவின் கையில் இருக்காது. மாறாக, இந்தியா இலங்கையையும் நியூசிலாந்தையும் சார்ந்திருக்க வேண்டும்.
தர வரிசையில் 3ம் இடத்தில் உள்ள இலங்கை தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நியூசிலாந்தை இலங்கை வைட் வாஷ் செய்யும் பட்சத்தில் இந்தியாவின் வாய்ப்பு முற்றிலுமாக பறிபோய்விடும். ஏதேனும் ஒரு போட்டியில் இலங்கை வெற்றியை இழந்தாலும் அது இந்தியாவுக்கு சாதகமாக அமையும். ஆனால் தற்போதைய நிலவரப்படி இலங்கை வலுவான நிலையிலேயே விளையாடி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசமாக வேண்டும் எனில் நியூசிலாந்தின் வெற்றி இன்றியமையாத ஒன்று!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












