ஆஸ்திரேலியாவில் ஆண்டனி அல்பனீசி அலை - தேர்தலில் அபார வெற்றி

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவின் பொதுத்தேர்தலில், தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஆண்டனி அல்பனீசி பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில், அடுத்தடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் முதல் பிரதமராக ஆண்டனி அல்பனீசி உள்ளார்.
"பிரதமராக பணியாற்றுவது எனது வாழ்வின் மிகப்பெரிய பெருமை. இந்த பூமியின் சிறந்த நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்வதற்கான வாய்ப்பளித்த ஆஸ்திரேலிய மக்களுக்கு நன்றி", என்று தனது வெற்றி உரையில் ஆண்டனி அல்பனீசி கூறினார்.
அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை இன்னும் முடியடையவில்லை, ஆனாலும் அல்பனீசி தலைமையிலான தொழிலாளர் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றுள்ளது. அதே நேரத்தில் லிபரல்- தேசிய கூட்டணி நாடு முழுவதும் படுதோல்வி அடைந்துள்ளது.
ஏபிசி செய்திகளின் கணிப்புகளின்படி, தொழிலாளர் கட்சி 85 இடங்களிலும், லிபரல்-தேசிய கூட்டணி 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது வரை 65 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளாக உலக பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்ட ஆஸ்திரேலியாவில், ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி அதிகரித்து வந்தநிலையில், தற்போது பொதுத் தேர்தலில் அல்பனீசி வெற்றி பெற்றிருப்பது முக்கிய திருப்புமுனையாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சனிக்கிழமை (மே 3) அன்று, வெற்றி உரையாற்றிய ஆண்டனி அல்பனீசி, தேர்தல் பிரசாரத்தின் சில முக்கியமான விஷயங்களை பற்றி பேசினார். மேலும், புலம்பெயர்வு, காலநிலை மாற்றம், எரிசக்தி என தனது தேர்தல் வாக்குறுதிகளையும் குறிப்பிட்டுப் பேசினார்.
"சுகாதாரப் பராமரிப்பு செலவுகள் உட்பட பொது மருத்துவ செலவுகளை குறைப்பது, குடிமக்கள் சொந்த வீடு வாங்குவதை எளிதாக்குவது, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என இன்னும் தீவிரமாக வேலை செய்வேன்", என்று அவர் உறுதியளித்தார்.
ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களுடன் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.
"குடிமக்களுக்கும், பூர்வகுடி ஆஸ்திரேலிய மக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்தால் நம் நாடு வலிமையானதாக மாறும்", என்று அவர் கூறினார்.
ஆல்பனீசியின் மிக முக்கியமான முன்னெடுப்புகளில் ஒன்றான "தி வாய்ஸ்" என்பது பூர்வகுடி மக்களின் கருத்துக்களை அரசாங்கத்திற்கு கொண்டு செல்லும் ஒரு அமைப்பு.
ஆனால், பல மாதங்களாக நடைபெற்ற தீவிரமான தேசிய விவாதத்திற்குப் பிறகு, மக்களால் நிராகரிக்கப்பட்டது. இது அவருக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க பின்னடைவாக இருந்தது.

தேர்தலுக்கு சற்று முன்னதாக, ஆல்பனீசிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறையத் தொடங்கிய நிலையில் அவர் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் அதிகமானது.
லிபரல் - தேசிய கூட்டணியின் தலைவரான பீட்டர் டட்டன், தான் போட்டியிட்ட டிக்சன் தொகுதியில் தோல்வியடைந்தது எதிர்கட்சியினருக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது.
பிரிஸ்பேனில் ஆதரவாளர்களிடம் பேசியபோது தனது தோல்வியை ஒப்புக்கொண்ட பீட்டர் டட்டன், "நான் இந்த நாட்டை நேசிக்கிறேன், அதற்காக கடுமையாகப் போராடியிருக்கிறேன்," என்று குறிப்பிட்டார்.
''நமது போட்டியாளர்கள், தேர்தல் பிரசாரத்தில் நம்மை பற்றி குறிப்பிட்டது உண்மையல்ல. நாம் மீண்டும் அடிப்படையில் இருந்து கட்டமைத்து மீண்டெழுவோம் என்று முழுமையாக நம்புகிறேன். ஏனெனில் நமது கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகள் மக்களுக்கு நன்மை பயப்பவை. எனவே அவற்றில் நாம் உறுதியாக இருப்போம்'' என்று அவர் தெரிவித்தார்.
பீட்டர் டட்டன் பிரசாரத்தில் செய்த சிறிய தவறுகளால் குழப்பத்தை ஏற்படுத்தி அவரை பின்னடைச் செய்தது. கொள்கைகள் சிலவற்றை மாற்றிச் சொன்னது, விலைவாசி போன்ற முக்கிய விஷயங்களைப் பற்றி பேசும்போது தவறான தகவல்களை சொன்னது அதிருப்தியை ஏற்படுத்தின. அதிலும் குறிப்பாக பிரசாரத்தில், ஆஸ்திரேலியன் ஃபுட்பல் லீக் (AFL) போட்டி ஒன்றில், கேமராமேனின் தலையில் பந்து அடித்தது அவர் மீதான அதிருப்தியை அதிகரித்தன.

பட மூலாதாரம், Getty Images
ஆண்டனி அல்பனீசி யார்?
மாற்றுத்திறனாளிகளுக்கான ஊதியத்தை மட்டுமே நம்பி இருந்த தனது தாயால் வளர்க்கப்பட்டதை அல்பனீசி தனது பிரசாரத்தின்போது பல முறை சுட்டிக்காட்டினார்.
எளிமையான குடும்பத்தில் வளர்ந்ததே, மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அரசியலில் நுழைய தன்னைத் தூண்டியது என்று அல்பனீசி பிரசாரம் செய்தார். 20 வயதில் தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக இணைந்த அல்பனீசி, தனது 33வது வயதில் 1996 ஆம் ஆண்டில் சிட்னியின் உள்ளூர் தேர்தலில் வெற்றிபெற்றார்.
தற்போது, ஆஸ்திரேலியாவின் நீண்ட காலம் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அல்பனீசி,"உழைக்கும் வர்க்கத்தினரின் கதாநாயகனாக" பார்க்கப்படுகிறார்.
ஆஸ்திரேலியாவின் இலவச சுகாதார சேவையைப் பாதுகாப்பவராக பார்க்கப்படும் அவர், பால் புதுமையினர் (LGBTQ+) சமூகத்தின் ஆதரவாளராகவும், ரக்பி விளையாட்டின் தீவிர ரசிகராகவும், ஆஸ்திரேலியாவின் குடியரசின் ஆதரவாளராகவும் அறியப்படுகிறார்
2007 ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, அல்பனீசி மூத்த அமைச்சராக பொறுப்பேற்றார். அல்பனீசி கட்சியில் அதிகாரம் மிக்கவராக மாறிய காலகட்டத்தில், தலைவர்கள் மாற்றப்பட்டனர். பிரதமர் கெவின் ரூட்க்கு பதிலாக ஜூலியா கில்லார்ட் மாற்றப்பட்டாலும், பின்னர் மீண்டும் பிரதமர் பொறுப்பு மாற்றப்பட்டது.
தொழிலாளர் கட்சியின் இடதுசாரி பிரிவில் முன்னணி குரலாக இருந்து வரும் அல்பனீசி, 2019 ஆம் ஆண்டு கட்சியின் தலைவரானதிலிருந்து நடுநிலைத் தன்மையை ஆதரித்து வருகிறார்.
மகன் நேதனுக்கு ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவது தனது கனவு என்று அவர் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்த அல்பனீசி, இந்த ஆண்டு இறுதியில் தனது காதலி ஜோடி ஹேடனை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய பிரதமராக அவரது கடைசி பதவிக்காலம் எப்படி இருந்தது?
2022 ஆம் ஆண்டு ஆண்டனி அல்பனீசி ஆஸ்திரேலிய பிரதமராக தேர்வு ஆனார். இது அந்த நாட்டின் லிபரல்-தேசிய கூட்டணி ஆட்சியின் ஒரு தசாப்த கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.
கோவிட் 19 கால கட்டத்திற்கு பிறகு மந்தமான பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, பணவீக்கத்தைக் குறைப்பது மற்றும் மிக முக்கியமாக, பழங்குடியினரின் உரிமைகள் குறித்த வாக்கெடுப்பை நடத்துவது ஆகிய வாக்குறுதிகளுடன் அவர் ஆட்சியை கைப்பற்றினார்.
அந்த நேரத்தில் வாக்காளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் காலநிலை மாற்றம் ஒரு முக்கிய கவலையாக இருந்தது. இதனால் அரசாங்கம் விரைவாக ஒரு பெரிய கார்பன் வெளியேற்ற குறைப்பு இலக்கை ஏற்றுக்கொண்டது.
இருப்பினும், அவர் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு தொடர்ந்து ஒப்புதல் அளித்து வருகிறார். காலநிலை மாற்றத்தை சமாளிக்க அவரது அரசாங்கம் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
லிபரல்-தேசிய கூட்டணி ஆட்சியில், சீனாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து உறவுகள் மோசமடைந்திருந்த நிலையில், அல்பனீசியின் அரசாங்கம் சீனாவுடனான உறவுகளை சீராக்கியது.
இரு நாடுகளும் அதிகப்படியான வரிகளுக்கு முடிவு கட்டியதுடன், பல ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நிலை அளவில் சந்திக்கவும் முடிவு செய்தன.
பொருளாதார ரீதியாக ஆஸ்திரேலிய அரசாங்கம் சில சிக்கல்களை எதிர்கொண்டது. கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதாரம் சிறிது காலம் மீண்டாலும், 1990 களுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது.
பல நாடுகளுடன் ஒப்பிடும்போது பொருளாதார வளர்ச்சியில் ஆஸ்திரேலியா பின்தங்கியுள்ளது, உலகளாவிய நிதி நெருக்கடியின் மத்தியில் பொருளாதார மந்தநிலையின் விளிம்பில் உள்ளது.
பணவீக்கத்தைக் குறைக்க, வரி குறைப்பு, மின்சார கட்டண தள்ளுபடி மற்றும் வாடகை மானியம் போன்ற பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.
ஆனால் இவை மக்களின் கவலைகளுக்கான தீர்வாக இல்லை என்பதால், பணவீக்கம் இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தது.
குடியேற்றத்தைக் கட்டுப்படுத்திய அல்பானீஸ் நிர்வாகம், வெளிநாட்டிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் சொத்து வாங்குபவர்களுக்கு வரம்புகளை விதித்தது. நெருக்கடியைக் குறைப்பதில் தங்கள் அரசு "குறிப்பிடத்தக்க" முன்னேற்றம் அடைந்துள்ளதாக தொழிலாளர் கட்சி குறிப்பிட்டது.
இருப்பினும், நாட்டின் மூத்தகுடி மக்கள் விரும்பாததால், நாட்டிற்குத் தேவையான சீர்திருத்தங்களை அல்பானீஸ் நிர்வாகம் தவிர்ப்பதாக விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அவர் மீதான விமர்சனங்கள்
தனக்கு முந்தைய பிரதமர் ஸ்காட் மோரிசனை விட குறைவான சர்ச்சைகளையே ஆண்டனி அல்பனீசி சந்தித்துள்ளார் என்றபோதிலும், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 'Voice referendum' தான் அவரது பதவிக்காலத்தின் மாபெரும் கறை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகளான அபொரிஜின்கள் மற்றும் டோரஸ் நீரிணைத் தீவுகளில் வசிப்பவர்களுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதும், அவர்களுக்காக ஒரு நாடாளுமன்ற ஆலோசனை அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.
இந்த வாக்கெடுப்பு, அல்பனீசியின் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், அதுவே அவரின் மிகப்பெரிய தோல்வியாக முடிந்தது. கடந்த ஆண்டு அந்த முன்மொழிவுக்குப் பெருமளவிலான ஆதரவு இருந்தபோதிலும், பல மாதங்கள் நீடித்த தேசிய விவாதத்திற்குப் பிறகு, பெரும்பான்மை ஆதாரவுடன் நிராகரிக்கப்பட்டது.
இஸ்ரேல் - காஸா போரில் நடுநிலை எடுப்பதில் ஆஸ்திரேலியா பிரதமர் அல்பனீசி தடுமாறினார். முதலில், இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை வலுவாக ஆதரித்த அவரது அரசாங்கம், காஸாவில் உயிரிழப்புகள் அதிகரித்தபோது நிரந்தர போர் நிறுத்த கோரிக்கையை ஆதரித்தது.
இஸ்ரேல் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஹமாஸ் தோல்வியடைந்த பிறகு பாலத்தீன அரசை அங்கீகரிப்பதற்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
இது, அல்பினீசி இஸ்ரேலை கைவிட்டுவிட்டதாகவும், நாட்டில் யூத வெறுப்பு தாக்குதல்கள் அதிகரித்ததற்கு அவரது அரசாங்கமே காரணம் என்றும் ஆஸ்திரேலியாவின் பழமைவாதிகள் குற்றம் சாட்ட வழிவகுத்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












