உணவுடன் சேர்த்து காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிக்கல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜூலியா கிராஞ்சி
- பதவி, பிபிசி பிரேசில்
உணவுடன் காபி அருந்துவதோ அல்லது உணவு உண்டவுடன் காபி அருந்துவதோ, உங்கள் உடலுக்கு நல்லதல்ல என எப்போதாவது எச்சரிக்கப்பட்டுள்ளீர்களா? அதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது.
காபியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசாயனக் கலவைகள் உள்ளன. அதில் கேஃபின், பாலிஃபெனால், டானின் (tannins) போன்றவை உங்கள் உடல் நீங்கள் உட்கொள்ளும் உணவில் இருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும்.
பெரும்பாலானோருக்கு இதனால் ஏற்படும் விளைவுகள் குறைவாகவே இருக்கும். குறைபாடுகளை ஏற்படுத்தும் அளவுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொண்டிருக்காது என்பது நல்ல செய்தி.
ஊட்டச்சத்துகள் என்பவை நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் இருக்கின்றன. அவை நமது உடலில் குறிப்பிட்ட முக்கியமான வேலைகளைச் செய்கின்றன. நாம் ஆரோக்கியமாக இருக்க அத்தகைய பலவிதமான ஊட்டச்சத்துகள் தேவை.

"காபி அருந்துவதால் அனைத்து விதமான சத்துகளும் உறிஞ்சப்படுவது முற்றிலுமாக 'தடுக்கப்படாது', மாறாக குறைவான சத்துகள் உறிஞ்சப்படலாம்," என்கிறார், லண்டன் காலேஜ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளரும் தி ஹெல்த் சயின்சஸ் அகாடமியின் முதன்மை அறிவியல் கல்வியாளருமான அலெக்ஸ் ருவானி.
காபி எவ்வளவு ஸ்டிராங்காக இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்தத் தாக்கம் இருக்கும் என்கிறார் ருவானி. "எவ்வளவு ஊட்டச்சத்துகள் நுகரப்படுகின்றன, வயது, வளர்சிதை மாற்றம், ஆரோக்கிய நிலை, மரபியல் ஆகிய ஆபத்துக் காரணிகளைப் பொறுத்தும் இது மாறுபடும்."
இதில் கால்சியம், இரும்புச்சத்து, பி வைட்டமின்கள் போன்றவையும் அடங்கும்.
"உங்களுக்குப் போதுமான அளவில் ஊட்டச்சத்து கிடைக்கிறது என்றால் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் ஏற்கெனவே பற்றாக்குறையுடன் உள்ளவர்களோ அல்லது குறைவான ஊட்டச்சத்து கொண்டவர்களோ, அதிகமாக காபி குடிக்கும்போது மேலும் ஊட்டச்சத்து குறைவதில் அது பங்களிக்கும்" என்கிறார் லினஸ் பௌலிங் நிறுவனத்தின் இயக்குநரும் ஓரேகான் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் சுகாதார கல்லூரியின் பேராசிரியருமான எமிலி ஹோ.
- சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடுவதால் ஆபத்தா? செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்ன?
- பஞ்சாப் அரசு பள்ளிகளில் ஆற்றல் பானங்களை தடை செய்தது ஏன்? அதில் என்ன பிரச்னை?
- சுறுசுறுப்பாக இருக்க இந்த காலை உணவு உதவுமா? எப்படி சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்?
- தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் உயிருக்கே ஆபத்து - ஏன் தெரியுமா?
காபி அருந்துவது குறித்து யாரெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
இரும்புச்சத்து குறைவாக உறிஞ்சப்படுவதில் காபிக்கு உள்ள தொடர்பு குறித்து 1980களில் இருந்தே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
"உணவுடன் நீங்கள் காபி அருந்தும்போது அதிலுள்ள பாலிஃபெனால், செரிமான மண்டலத்தில் உள்ள குறிப்பிட்ட தாதுக்களுடன் இணைந்துகொள்ளும்," என்கிறார் ஹோ.
இப்படி இணையும் நடைமுறையின்போதும், தாதுக்கள் ரத்த ஓட்டத்தில் நுழைவதற்காக குடல் செல்கள் வழியாகக் கடந்து செல்லும் என்பதால், இது நமது உடல் இரும்புச்சத்தை உறிஞ்சுவதைக் கடினப்படுத்தும் என அவர் விளக்குகிறார்.
"அவை பாலிஃபெனால்களுடன் ஒட்டிக்கொள்ளும்போது, உங்கள் உடலின் வாயிலாகக் கடந்து வெளியேறிவிடும்."
இது குறிப்பாக, 'நான்-ஹீம் அயர்ன்' (non-heme iron) எனப்படும் தாவர அடிப்படையிலான உணவுகள் மூலம் கிடைக்கும் இரும்புச்சத்துக்கு முக்கியமானதாக உள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் இந்த வகை இரும்புச் சத்து, உடல் உறிஞ்சுவதற்குக் கடினமானதாக இருக்கும்.
காபியில் உள்ள பாலிஃபெனால்கள், குறிப்பாக குளோரோஜெனிக் அமிலம் இவ்வகை இரும்புச்சத்துடன் இணைந்து, ரத்த ஓட்டத்தில் முறையாக உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. அதன் விளைவாக, செரிமான மண்டலத்தில் இந்தக் கலவைகளுடன் இரும்புச்சத்து இணையும். அதைத் தொடர்ந்து, இரும்புச்சத்தை உடல் கிரகித்துக் கொள்வதற்குப் பதிலாக வெறுமனே கழிவாக வெளியேறிவிடும்.
இரும்புச்சத்துக் குறைபாடால் ஏற்படும் ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள், இரும்புச்சத்து உள்ள உணவுகளை உண்டவுடனேயே காபி அருந்துவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
"அவர்கள் இரும்புச்சத்து கொண்ட உணவுகளை உண்பதற்குக் குறைந்தது ஒரு மணிநேரம் முன்போ அல்லது உண்டு முடித்து இரண்டு மணிநேரங்கள் கழித்தோ காபி அருந்துலாம்," என்கிறார் அலெக்ஸ் ருவானி.
தங்கள் இரும்புச்சத்தின் அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய தேவை இருக்கக்கூடிய மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்களும் கர்ப்பிணிகளும் இந்தப் பிரிவில் வருவார்கள். அவர்களுக்கு அதிக இரும்புச்சத்து தேவை. மேலும் அவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதற்கான ஆபத்தும் அதிகம். ஆகையால், அவர்கள் எப்படி காபி அருந்துகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
கால்சியம்

பட மூலாதாரம், Getty Images
கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். ஆனால் பிரிட்டனில் உள்ள 16-49 வயதுக்கு உட்பட்ட 9% பேர் உணவு வாயிலாக குறைவான கால்சியம் அளவையே (எல்.ஆர்.என்.ஐ) பெறுகின்றனர். இது எதிர்காலத்தில் அவர்களின் எலும்புகள் பலவீனமாவதற்கான ஆபத்தில் ஆழ்த்துகிறது.
நமது சிறுநீரகங்கள் நம் ரத்தத்தில் இருந்து கழிவுகளையும் அதீத நீரையும் (சிறுநீராக) வெளியேற்றுகிறது. மேலும், நமது உடலில் ரசாயனங்கள் (சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை) சமநிலையுடன் இருக்க உதவுகிறது. கால்சியம், ஹார்மோன் உற்பத்தியிலும் பங்கு வகிக்கிறது.
சிறுநீரகங்களில் கால்சியம் செயலாற்றுவதில் இடையூறை ஏற்படுத்தி, அவற்றை உடலில் தக்க வைப்பதையும் கால்சியத்தை குடல் கிரகிப்பதையும் கேஃபின் கடினமாக்கும் என ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
இருப்பினும், இந்த விளைவுகள் குறைவாகவே இருக்கும், ஆனால் கால்சியம் குறைவாக உள்ள உணவு முறையைக் கடைபிடிப்பவர்கள் அல்லது எலும்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கு அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எலும்பு வளர்சிதை மாற்றத்தில் இடையூறை ஏற்படுத்தி எலும்பு இழப்புக்கு கேஃபின் பங்களிக்கும் என ஆஸ்டியோபோரோசிஸ் இண்டர்நேஷனல் எனும் ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வு கூறுவதாக ருவானி குறிப்பிட்டார். "ஆனால், ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்புப் புரை) ஏற்படுவதில் கேஃபினின் பங்கு குறித்து உறுதிப்படுத்த இன்னும் அதிக ஆய்வுகள் தேவை" என்கிறார் அவர்.
கால்சியம் உடலில் சேகரிக்கப்படும். எனவே தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஆனால் 19-64 வயதுக்கு உட்பட்டவர்கள் சில மாதங்களில் தினந்தோறும் 700 மி.கி. அளவுக்கு கால்சியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேஃபின் அதிக சிறுநீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. "இதனால், சில பி வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இழப்பு ஏற்படும். எவ்வளவு சிறுநீர் கழிக்கிறோம் என்பது, இந்த ஊட்டச்சத்துகளின் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்கிறார் ஹோ.
பி வைட்டமின்கள்
"சிறுநீரக செயல்பாடு மற்றும் ஊட்டச்சத்து வளர்சிதை மாற்றத்தில் காபி தாக்கம் செலுத்தும் என்பதால், அதிகமாக காபி குடிப்பதால் (நாள் ஒன்றுக்கு 4 கப்கள் அல்லது அதற்கும் மேல்) கழிவுகள் அதிகமாக வெளியேறும், அதனால் பி வைட்டமின்கள் போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்களில் இழப்பு ஏற்படும்" என்கிறார் ருவானி.
பி வைட்டமின்கள் நீரில் கரையக்கூடியவை. எனவே அவை உடலில் சேகரிக்கப்படாது. இதன் காரணமாக அதிகப்படியான இந்த வைட்டமின்கள் சிறுநீராக வெளியேறிவிடும்.
ப்ரோபயோட்டிக்

பட மூலாதாரம், Getty Images
பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்டுகள் நிறைந்த ப்ரோபயோட்டிக் உணவுகள், பல்வேறு ஆரோக்கியப் பயன்களை உடலுக்கு அளிக்கின்றன.
குடலில் உள்ள பாக்டீரியாக்களை சமநிலையுடன் தக்க வைக்க இவை உதவியாக உள்ளதாக, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையான என்.ஹெச்.எஸ் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ப்ரோபயோட்டிக் குறித்துக் கூறப்படும் பல ஆரோக்கிய பலன்கள் தொடர்பாகப் போதுமான ஆதாரங்கள் இல்லை.
இருப்பினும் ப்ரோபயோட்டிக் சப்ளிமென்டுகள் அல்லது ப்ரோபயோட்டிக் நிறைந்த யோகர்ட் (தயிர்) மற்றும் கிம்ச்சி (கொரிய ஊறுகாய்) போன்றவற்றுடன் காபி போன்ற சூடான பானத்தை அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது.
"ப்ரோபயோட்டிக்கில் உள்ள பாக்டீரியாக்கள் மிகுந்த வெப்ப உணர்திறன் கொண்டவை. இதனால் காபி போன்றவற்றில் உள்ள சூடு, இரைப்பை குடலில் அந்த பாக்டீரியாக்கள் உயிர் வாழும் திறனைக் குறைத்துவிடும்" என்கிறார் ருவானி.
ப்ரோபயோட்டிக்கை எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஒரு கப் காபி குடித்திருந்தால் 30-60 நிமிடங்கள் பொறுத்திருப்பது சிறந்த பலனை தரும். சில நேரங்களில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளால் ஏற்படும் வயிற்றுப் போக்கை குணப்படுத்த ப்ரோபயோட்டிக்கை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
காபிக்கு பதிலாக தேநீர் அருந்துவது நல்லதா?
காபிக்கு பதிலாக தேநீர் அருந்துவது குறித்து நீங்கள் யோசித்தால் ஏற்கெனவே இங்கு கூறப்பட்டுள்ள சில தகவல்கள் தேநீருக்கும் பொருந்தும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
"உண்மையில் தேநீரில் உள்ள பாலிஃபெனால், ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவதில் ஒரே மாதிரியான விளைவுகளைக் கொண்டிருக்கிறது.
எனவே, ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவது குறித்து நீங்கள் கவலை கொண்டிருந்தால், எப்போது தேநீர் அருந்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதும் முக்கியம்," என எச்சரிக்கிறார் ஹோ.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












