நாய் தவிர எந்தெந்த விலங்குகள் கடித்தால் ரேபிஸ் வரும்? கடிபட்ட உடனே செய்ய வேண்டியது என்ன?

நாய், பூனை, எலி கடித்தால் உடனே செய்ய வேண்டியது என்ன? ரேபிஸ் பாதிப்பை தடுப்பது எப்படி?
    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்
மதுரையில் கடந்த வாரம், பூனைக் கடிக்கு ஆளான 25 வயது இளைஞர் ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து உயிரிழந்தார். இதுபோல நாய் மட்டுமின்றி வேறு எந்தெந்த விலங்குகள் கடிப்பதால் ரேபிஸ் ஏற்படலாம்? ஒரு விலங்கு கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்? இங்கு விரிவாகப் பார்ப்போம்.
ரேபிஸ் நோய் என்றால் என்ன? ரேபிஸ் நோய், ஒரு வகை வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இது நாய் கடிப்பதால் மட்டுமே ஏற்படுவதில்லை. பூனை, குரங்கு போன்ற பிற பாலூட்டிகள் கடித்தாலும் ஏற்படலாம்.
ரேபிஸ் நோய் மனிதர்களை எப்படி பாதிக்கிறது? “இந்த வைரஸ் எச்சில் மூலமாகப் பரவுகிறது. நாய், பூனை அல்லது குரங்கு கடித்ததும் அந்தக் காயம் வாயிலாக உடலின் நரம்பு மண்டலத்தில் கலக்கும் வைரஸ் கிருமி நேராக மூளையைச் சென்று தாக்குகிறது. சில நேரங்களில் ஏற்கெனவே உடலில் உள்ள காயங்களை பிற விலங்குகள் நக்குவதன் மூலமாகவும் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது” என்று இதுகுறித்து விளக்கினார் பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி
ரேபிஸ் அறிகுறிகள் என்ன? எந்த விலங்கில் இருந்து ரேபிஸ் நோய் பரவினாலும் அதற்கான அறிகுறிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். காய்ச்சல், தலைவலியில் தொடங்கி தண்ணீரைக் கண்டாலே பயப்படுவது வரை அறிகுறிகள் தென்படும். இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடியது. நிபுணர்களின் கூற்றுப்படி, தொண்டைப் பகுதியிலுள்ள நரம்புகள் பாதிக்கப்படுவதால் உணவு, தண்ணீரை விழுங்கவே முடியாது. அதன் காரணமாக, உடலிலுள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படும்.
ரேபிஸ் நோய், 95% வெறிநாய் கடித்து ஏற்படுவதால் அதை வெறிநாய்க்கடி நோய் எனவும் அழைக்கின்றனர். ஆனால், இந்த நோய் பிற வகைப் பாலூட்டிகள் மூலமாகவும் மனிதர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளது.
எந்தெந்த விலங்குகள் மூலம் ரேபிஸ் நோய் பரவுகிறது? பாலூட்டிகள் மூலமாக ரேபிஸ் நோய் பரவுவதாகக் கூறுகிறார் கால்நடை மருத்துவர் நிதின் குமார். நாய்கள், பூனைகள், வௌவால்கள், குரங்குகள், கால்நடைகள், குதிரைகள்
குகைகளில் வாழும் வௌவால்களிடம் இருந்து ரேபிஸ் பரவ வாய்ப்புள்ளது. வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது சாகசம் என்ற பெயரில் காட்டுப்பகுதியில் உள்ள குகைகளுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மனிதர்களின் வாழ்விடங்களைச் சுற்றி வாழும் வௌவால்கள் மூலம் ரேபிஸ் பரவியதாக இதுவரை எந்தப் பதிவுகளும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
“ரேபிஸ் நோய் அனைத்து விதமான பாலூட்டிகள் மூலமாகவும் பரவும். குறிப்பாக, பூனை மற்றும் நாய் குடும்பத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், பூனை, நாய், ஓநாய், நரி, கழுதைப் புலி ஆகியவை மூலமாகப் பரவும். அதோடு, கால்நடைகளான ஆடு, மாடு, எருமை ரேபிஸால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவற்றின் எச்சில் நமது உடலிலுள்ள காயங்களில் படும்போது, அதன் வழியாக இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்கக்கூடும்” என்று விளக்கினார் கால்நடை மருத்துவர் நிதின் குமார்.
விலங்கு கடித்தவுடன் செய்யக் கூடியவை: நாய், பூனை, குரங்கு போன்ற பாலூட்டிகள் கடித்த உடனே காயத்தைக் குறைந்தது 15 நிமிடங்களுக்கு சோப்பு அல்லது டெட்டால் போன்ற கிருமிநாசினியை பயன்படுத்தி தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். கடித்த இடத்தில் தையல் போடுவதைத் தவிர்க்க வேண்டும். விலங்கு கடித்தவுடன் செய்யக் கூடாதவை: காயத்தின் மீது சுண்ணாம்பு, எருக்கம்பால், எண்ணெய், காபித் தூள், மாட்டு சாணம், மண் மற்றும் இலைகளை வைப்பதோ, தடவுவதோ கூடாது.
ரேபிஸ் தடுப்பூசி குறித்துப் பேசியபோது, “சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஊசிகள் தொப்புளில் போடப்படுவதில்லை, கைகளிலேயே போட்டுக் கொள்ளலாம். ரத்தம் வெளியேறும் அளவுக்கு காயம் கடுமையாக இருந்தாலோ அல்லது மார்பு மற்றும் அதற்கு மேலே கடிபட்டாலோ, மருத்துவ ஆலோசனையின் பேரில் இம்யூனோகுளோப்ளின் ஊசியும் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்தத் தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும்,” என்றார் மருத்துவர் குழந்தைசாமி.
ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முறை: நாயோ அல்லது வேறு ஏதேனும் விலங்கோ கடித்துவிட்டால், சிறிதும் தாமதிக்காமல் உடனே அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இது 24 மணிநேரமும் கிடைக்கும்.
முதல் தவணை கடிபட்ட சிறிது நேரத்தில் போடப்பட வேண்டும், இரண்டாவது தவணை 3 நாட்களிலும், மூன்றாவது தவணை 7 நாட்களிலும், நான்காவது தவணை 28 நாட்களிலும் போடப்பட வேண்டும்.
வளர்ப்புப் பிராணிகளுக்கு எவ்வாறு தடுப்பூசி போட வேண்டும்?
வீட்டில் நாய், பூனை வளர்ப்பவர்கள் கண்டிப்பாக ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். தெருநாய்களுடன் வீட்டு நாய்கள் சேராமல் கவனித்துக் கொள்ள வேண்டும். வளர்ப்புப் பிராணி சோர்வாகவோ, சாப்பிடாமலோ இருந்தால், அனைவரையும் கடிக்க முற்பட்டால், உடனடியாக கால்நடை மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.
வளர்ப்புப் பிராணிக்கான தடுப்பூசி தவணைகளைப் பொறுத்தவரை, முதல் தவணையை குட்டி பிறந்து 3 மாதத்திலும், இரண்டாவது தவணை 4 மாதம் முடிந்தவுடனும் போட வேண்டும். பிறகு ஆண்டுக்கு ஒருமுறை பூஸ்டர் தடுப்பூசி அவசியம் போட வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு