அடுத்த போப் ஆண்டவருக்கான தேர்தல் எப்படி நடக்கும்? எளிய விளக்கம்

அடுத்த போப் ஆண்டவர் , வாடிகன் சிட்டி, ரோம், போப் தேர்தல்

போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி காலமானார். இந்நிலையில், அடுத்த போப் ஆண்டவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. அதற்கென நடத்தப்படும் பிரத்யேக வாக்கெடுப்பு செயல்முறை குறித்து இந்தப் படத்தொகுப்பு விளக்குகிறது.

போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் ஈஸ்டர் திங்களன்று (ஏப்ரல் 21, 2025) காலமானார். ரோமன் கத்தோலிக்க வரலாற்றில் போப் ஆக பொறுப்பேற்ற முதல் லத்தீன் அமெரிக்கர் போப் பிரான்சிஸ்தான்.
போப் என்பவர் யார்? போப் என்பவர் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகவும், ரோமின் பிஷப்பாகவும் இருப்பார். உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களின் நம்பிக்கை மற்றும் ஒழுக்கம் தொடர்பான பிரச்னைகள் குறித்து இவர் முடிவுகளை எடுப்பார். புரட்டஸ்டன்ட் போன்ற பிற கிறிஸ்தவ பிரிவுகள் போப்பின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதில்லை.
யார் இந்த கத்தோலிக்கர்கள்? கிறிஸ்துவ மதத்தில் பல பிரிவுகளில் ஒன்றுதான் கத்தோலிக்கம். ரோமில் இருக்கும் போப்தான், இயேசு கிறிஸ்து தனது திருச்சபையின் முதல் தலைவராக நியமித்த புனித பேதுருவின் வாரிசு என்று கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள். உலகில் ஐந்து கண்டங்களிலும் சேர்த்து ஒரு பில்லியனுக்கும் அதிகமான கத்தோலிக்கர்கள் பரவியுள்ளனர். மேற்கத்திய உலகின் மிகப் பழமையான நிறுவனமான கத்தோலிக்க திருச்சபை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையானது.
புதிய போப்-ஐ தேர்வு செய்ய ரகசிய மாநாடு: போப் பிரான்சிஸ் அணிந்திருந்த மீனவரின் மோதிரம் கார்டினல் கல்லூரி முன்பு ஓர் அலங்கார சுத்தியலால் அழிக்கப்படும். இதன் பின்னரே செதே வகான்தே என்ற காலகட்டம் தொடங்குகிறது. இது போப் இருக்கை அதிகாரபூர்வமாக காலியானதைக் குறிக்கிறது. பிறகு ஒரு ரகசிய மாநாடு நடத்தப்படும். இதில் புதிய போப்-ஐ தேர்வு செய்ய 135 கார்டினல்கள் வாக்களிப்பார்கள்.
போப்-ஐ தேர்வு செய்ய வாக்களிப்பது யார்? கார்டினல் கல்லூரியின் தலைவரிடம்தான் அடுத்த போப்பை தேர்வு செய்யும் பொறுப்பு உள்ளது. 80 வயதுக்குக் குறைவாக 135 கார்டினல்கள் உள்ளனர். இவர்கள்தான் புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிப்பார்கள்.
போப்பை தேர்வு செய்யும் கார்டினல்களில் பல கண்டங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தாலும் ஐரோப்பாவை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். கார்டினல்கள் கண்டம் வாரியாக, ஐரோப்பாவில் 53, ஆசியாவில் 23, லத்தீன் அமெரிக்காவில் 21, ஆப்பிரிக்காவில் 18, வட அமெரிக்காவில் 16, ஓசியானியாவில் 4 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர்.
போப்பின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு கார்டினல் கல்லூரியின் தலைவர் கியோவன்னி பட்டிஸ்டா ரே அனைத்து கார்டினல்களையும் ரோமுக்கு அழைப்பார். கார்டினல்கள் அனைவரும் புனித பீட்டர்ஸ் பேராலயத்திற்கு அருகிலுள்ள கசா சாண்டா மார்ட்டா விடுதியில்தான் தங்குவார்கள். மாநாடு முடியும் வரை அவர்கள் வெளி உலகுடன் தொடர்பு வைத்துக்கொள்ள முடியாது.
புனித பீட்டர்ஸ் தேவாலயம் அருகே உள்ள சிஸ்டின் தேவாலயத்தில் மூன்று நாள் மாநாடு நடைபெறும். முதல் நாள் மதியம் ஒரு சுற்று வாக்கெடுப்புதான் நடைபெறும். அதன் பின்னர் தேவைப்பட்டால் பல சுற்று வாக்கெடுப்புகள் நடத்தப்படும்.
போப்பாகத் தேர்வு செய்யப்படுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. ஒவ்வொரு கார்டினலுக்கும் 'நான் இவரைத் தலைமை மதகுருவாகத் தேர்வு செய்கிறேன்' என அச்சிடப்பட்ட அட்டை வழங்கப்படும். அதில் அவர் வாக்களிக்க விரும்புகிறவரின் பெயரை எழுதி, வயது அடிப்படையில் வரிசையாகச் சென்று வெள்ளிக் கலசத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அட்டையை வைப்பார்கள். இந்த மாநாடு மிகவும் ரகசியமாக நடைபெறுவதால் இதன் முடிவுகளைக் கணிப்பது அவ்வளவு எளிதில்லை.
மூன்று உதவியாளர்கள் ஒவ்வொரு வாக்கையும் சத்தமாக வாசிப்பார்கள். வாக்கு அட்டைகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு எரிக்கப்படும். தேவாலயத்தின் வெளியே புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் அனைவரும் முடிவுக்காகக் காத்திருப்பார்கள். தேவாலயத்தின் புகைப்போக்கியில் கருப்பு நிறப் புகை வந்தால் மறுவாக்கெடுப்பு நடைபெறும் என்றும் வெள்ளை நிறப் புகை வந்தால் போப் தேர்வு செய்யப்பட்டுவிட்டார் என்றும் அர்த்தம்.
ஒருவேளை மூன்று நாட்கள் கழித்தும் போப் தேர்வு செய்யப்படவில்லை என்றால் ஒரு நாள் இடைவேளி விட்டு மீண்டும் வாக்கெடுப்பு நடக்கும். ஒவ்வொரு ஏழு சுற்று வாக்கெடுப்புக்கும் ஒரு நாள் இடைவெளி இருக்கும். 33 சுற்று வாக்கெடுப்பு முடிந்த பிறகும் எந்த முடிவும் எட்டப்படவில்லையெனில் அதிக வாக்குகள் பெற்ற இருவரிடையே வாக்கெடுப்பு நடக்கும். ஆனால், அப்போதும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தேவை.
வரலாற்றில் 13ஆம் நூற்றாண்டில் ஒருமுறை மட்டும் போப்பைத் தேர்வு செய்ய 33 மாதங்கள் ஆனது. அதன் பின்னர் பல விதிகள் திருத்தப்பட்டு தற்போது சராசரியாக மூன்று நாட்களுக்குள் போப்பை தேர்வு செய்யும் மாநாடு முடிவடையும்.
மாநாடு நடைபெறும் தேவாலயத்தில் இரண்டு தற்காலிக உலைகள் அமைக்கப்படும். இதில் வாக்கு அட்டைகள் எரிக்கப்பட்டு முடிவுகள் வெளி உலகுக்கு அறிவிக்கப்படும். புகையை கருப்பு அல்லது வெள்ளை நிறமாக மாற்ற ரசாயனம் சேர்க்கப்படும். வெள்ளைப் புகை வெளியிடப்படும்போது அதனுடன் தேவாலய மணியும் ஒலிக்கப்படும்.
போப் ஆண்டவராகத் தேர்வு செய்யப்பட்டவர் அதிகாரப்பூர்வ உடை மற்றும் ஆபரணங்களை அணிந்து புனித பீட்டர்ஸ் பேராலயத்தின் மீதிருந்து உலகுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு